சிறுவயது முதலே பெண்களுக்கு நகைகளாக தங்க வழங்கப்படுகிறது. இது அவளுக்கு வழங்கப்படும் அசையும் சொத்து. நிறைய இடங்களில் ஒரு பெண் தன் காதலனுடன் ஓடி விடும் போது இந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓடுவதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில பெண்கள் பெற்றோர்கள் தொந்தரவு பண்ணக்கூடாது எனும் எண்ணத்தில் இந்த நகைகளை வீட்டில் வைத்துவிட்டு ஓடுவதும் உண்டு. ஆனால் எந்த ஆணும் தன் காதலியுடன் ஓடிப் போகும் போது கையில் 30-40 லட்சத்தை தங்கமாக எடுத்துக் கொண்டு ஓடுவதில்லை. எந்த பெற்றோரும் தங்கள் மகனுக்கு அந்தளவுக்கு பணத்தை அவன் இளமையில் அளிப்பதில்லை. ஆனால் பெண்கள் பிறப்பில் இருந்தே சிறுக சிறுக தங்கத்தால் அலங்கரிக்கப்படுகிறார்கள் வயதுக்கு வந்து சில வருடங்களில் அவர்களிடம் கணிசமான தங்கம் சேர்ந்துவிடுகிறது. ஒரு மத்திய-மேல் மத்திய வர்க்க குடும்பத்தில் 50-100 பவுன் தங்கம் ஒரு பெண்ணுக்கு அவளுடைய திருமணத்தின் போது அளிக்கப்படுகிறது என்றால் இந்த அசையும் சொத்தை அவள் தன் கணவனின் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. நிறைய பெண்கள் இப்போது ரொம்ப உஷாராக இந்த நகைகளைப் பாதுகாத்து வைத்துக் கொள்கிறார்கள். “நீயா நானா” நிகழ்ச்சி ஒன்று நினைவிருக்கும் - அதில் பெண்கள் தம் குடும்ப நகைகளையும் பரிசாக வந்த நகைகளையும் அணிந்து வந்திருந்தார்கள். ஒவ்வொரு பெண்ணிடமும் சராசரியாக ஒரு கோடியாவது இருந்திருக்கும் அன்று. அவர்கள் சம்பாதித்த பணம் அல்ல இது, அவர்களுக்கு அளிக்கப்பட்ட சொத்து என்பதை கவனியுங்கள். நகரும் நகைக்கடையாக சில ஆண்களும் வந்தார்கள். ஆனால் அவர்கள் அந்நகைகளை தம் பெற்றோர்கள் தந்ததாக தெரிவிக்கவில்லை என்பதை கவனியுங்கள் - அவர்களாகவே உழைத்து சம்பாதித்த நகைகள் அவை. இதில் இருந்து ஒன்று தெரிகிறது - நமது அறிவுஜீவிகளும் பெண்ணியவாதிகளும் பெண்கள் சிறுவயதில் இருந்தே அபலைகள், ஆதரவற்றவர்கள் என்று சொல்லுவது உண்மை அல்ல. அவர்கள் ஆண்களை விட பணக்காரர்கள். அதாவது உழைத்து சம்பாதிக்குமுன்பே பணக்காரர்கள்.
சரி அசையா சொத்தை தர மாட்டார்கள் என்பதால் தானே இந்த அசையும் சொத்தான தங்கத்தை கல்யாணத்தின் போது ஒரு பெண்ணுக்கு கொடுக்கிறார்கள்? அது பழைய காலம். இன்றைய பெண்கள் நிச்சயமாக தங்கள் குடும்ப சொத்தில் உரிமை கோருகிறார்கள். குறிப்பாக என்னுடைய ஊரில், என்னுடைய உறவுகள் இடையே இது வெகுசாதாரணம். திருமணத்தின் போது நகையும், வரதட்சிணையாக நிலமும் வாங்கிக் கொடுப்பார்கள். தாத்தா காலமானால் சொத்து பாட்டிக்குப் போகும். அவர் காலமான பிறகு மீதமுள்ள சொத்துக்களை பேரன்களும் பேத்திகளும் சமமாகப் பிரித்துக் கொள்ளுவார்கள், ஏற்கனவே பெண்ணுக்கு நிலம் வாங்கிக் கொடுத்திருந்தால் மட்டுமே ஆணுக்கு அசையா சொத்தில் கூடுதலாகக் கொடுப்பார்கள். என் ஊரிலும் இதுவே நடைமுறை. என்னுடைய நட்பு வட்டத்திலும் சில பெண்கள் சொத்தை சமமாக தம் சகோதரர்களுடன் பிரித்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். நான் விசாரித்தவரையில் பெரும்பாலான படித்த மத்திய, மேல்மத்திய வர்க்க குடும்பங்களிலும் நிலை இதுதான். பெரும்பணக்கார வணிகக் குடும்பங்கள் மட்டுமே விதிவிலக்கு - வியாபாரம் சார்ந்த சொத்துகள் முழுக்க பையனுக்கே போய் விடுகின்றன. (ஆனால் இவற்றிலும் விதிவிலக்காக சில குடும்பங்களில் பெண்களும் வணிகப்பொறுப்பை எடுத்துக் கொள்வதுண்டு.) விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த குடும்பங்களைத் தவிர்த்தால் இன்று நிலைமை முழுக்க மாறிவிட்டது. பெண்கள் கமுக்கமாக இந்த இரட்டை லாபத்தை அனுபவிக்கிறார்கள்.
சரி அவளுக்கான அசையா சொத்தை தர மறுத்தால்?
1956 இந்திய சொத்துரிமை சட்டத்தின் 14வது பிரிவு மற்றும் 2005 இந்து வாரிசுரிமை திருத்தச்சட்டத்தின் படி ஒரு பெண் தன்னுடைய பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோர முடியும். அதாவது சில குடும்பங்களில் இந்த தங்கத்தை காரணம் காட்டி சொத்தைக் குறைத்துக் கொடுப்பதுண்டு. ஆனால் சற்று சாமர்த்தியம் உள்ள பெண்கள் என்றாலும் நீதிமன்றத்துக்கு சென்று சுலபத்தில் சொத்தையும் பிரித்து வாங்க முடியும். அவளுக்கு பெற்றோர் அளித்த பரிசான நகைகளை அவர்களுடைய சகோதரர்கள் உரிமை கோரவோ பிரித்து வாங்கவோ அவற்றைக் காட்டி சொத்தைக் குறைக்க கோரவோ முடியாது.
இதிலும் ஒரு விதிவிலக்கு உள்ளது: அப்பா தன் சொத்துக்களை தன் மகன்களுக்கு மட்டும் தருவதாக உயில் எழுதி வைத்துவிட்டால் அதை மகள்கள் கோர முடியாது. அதாவது ஒருவர் தன் வாழ்நாளில் தன் சொத்துக்களையும் பணத்தையும் யார் பேரிலும் எழுதி வைக்க முடியும், மகனையும் சேர்த்து. ஆனால் அப்பா உயிலெழுதாமலே இறந்துவிட்டால் அச்சொத்துக்கள் அம்மாவிடம் போகும். அப்போது அம்மா நினைத்தால் சொத்துக்களை தன் மகன்களுக்கு மட்டும் எழுதி வைக்க முடியாது. அது அப்பாவின் சொத்து என்பதால் மகளும் சட்டப்படி உரிமை கோர முடியும்.
ஆக அப்பா என்பவர் மிகவும் கண்டிப்பாக இருந்து தன் மகன்களுக்கே அதிக சொத்து / மொத்த சொத்துக்களும் போக வேண்டும் என உயில் எழுதினால் ஒழிய சொத்துக்களையும் நகைகளையும் பெண்கள் வாங்கிக் கொள்ள முடியும். மூன்று நிபந்தனைகள் தாம் - 1) பெண்களுக்கு படிப்பும் புத்திசாலித்தனமும் இருந்து சொத்தை கேட்டு வாங்க வேண்டும். 2) அப்பா தன் மகளுக்கு எதிராக உயிலெழுதாமல் இருக்க வேண்டும்.
ஆனால் இதற்குள் இன்னொரு விதிவிலக்கு: அப்பா தன் சொத்துக்களை மகனுக்கு மட்டும் எழுதி வைத்தாலும் அது தாத்தா, பாட்டி வழி சொத்தென்றால் அதில் மகளுக்கு உரிமை உண்டு. வழக்குத் தொடுத்து சுலபத்தில் வாங்கலாம்.
நம் ஊரில் இப்படித்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்ணுக்கு சொத்து மறுக்கப்படுகிறது என்று சொல்ல முடியாது. ஓரளவுக்கு புத்திசாலித்தனமும் நடைமுறை அறிவும் இருக்கும்பட்சத்தில் ஒரு பெண்ணால் தனக்கான சொத்தையும் நகையையும் ஒரே சமயம் பெற்றுவிட முடியும். சொத்து என்று வந்துவிட்டாலே நம் ஊரில் சாமர்த்தியம் உள்ளவர்களே பெற முடியும் என்பது தானே நியதி! அதுவும் எத்தனை குடும்பங்களில் சொத்து முழுக்க அப்பா சம்பாதித்ததாக இருக்கப் போகிறது?
இன்று பெரும்பாலும் படித்த மத்திய வர்க்க குடும்பங்களில் “உனக்குத் தான் நகை போட்டோமே, ஏன் சொத்தை வேறு கேட்கிறாய்?” எனக் கேட்பதில்லை. ஒரு பெண்ணை படிக்க வைக்கிறார்கள் என்றாலும் அவளுக்கான சொத்துரிமையையும் கொடுப்பார்கள் என்றே புரிந்துகொள்ள வேண்டும். சொத்தைத் தருவோம் என்று தங்கத்தை யாரும் கொடுக்காமலும் இருப்பதில்லை. அது பெண்களுக்கேயான ஒரு தனித்துவமான உரிமை என்றாகி விட்டது. மேலும் அதை ஒரு கௌரவம் என்று கருதுகிறார்கள். ஆனால் இதனால் ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை.
இப்போது ஒரு ஆணின் நிலைமைப் பார்ப்போம். குறைவான நிலம் கொண்ட விவசாயத்தில் ஈடுபடாத மத்திய, மேல்மத்திய வர்க்கம் என்றால் அங்கு ஆணுக்கு கிடைக்கும் ஒரே முதலீடு அவனுடைய படிப்பு மட்டுமே. அவனுக்கு வீடு கட்டவோ தொழில் தொடங்கவோ பணம் வேண்டுமென்றால் தன் பெற்றோர்களைக் கேட்க முடியாது. “நாயே நீயே உழைச்சு சம்பாதிச்சுக்கோ” என்பார்கள். (சண்டை போட்டு வாங்கினால் தான் உண்டு.) அவன் தன் மனைவியின் நகையை விற்று செலவழித்தால் அது பல பிரச்சினைகளை குடும்பத்தில் ஏற்படுத்தும். என்னை எடுத்துக் கொள்ளுங்கள் - நான் 20 வருடங்களாக வேலை செய்கிறேன். ஆனால் திடீரென்று ரெண்டு லட்சம் எடுத்து வை என்றால் என்னிடம் பணம் இருக்காது. கடன் தான் கேட்க வேண்டும். நான் சேர்த்து வைக்கவில்லை. அது என் தவறு தான். சென்னையில் என்னுடைய நண்பர் ஒருவர். அவரும் என்னைப் போல பல ஆண்டுகளாக வேலை பார்த்தும் பணத்தை சேர்த்து வைக்காதவர். அவரது அப்பாவுக்கு திடீரென மாரடைப்பு வந்தது. ஆஸ்பத்திரியில் சேர்க்க பணமில்லை. மகள் (நண்பரின் சகோதரி) உயர்படிப்பு படித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு நல்ல நிலையில் இருக்கிறார். ஆனால் மகளிடம் கேட்க முடியாது. அவருக்கு என்னதான் நகைபோட்டு அனுப்பியிருந்தாலும் கேட்கக் கூடாது என்பது சமூக எதிர்பார்ப்பு. ஆகையால் மகனான என் நண்பர் தான் செலவு செய்ய வேண்டிய நிலை. அவர் அங்கிங்கே கேட்டு மூன்று லட்சத்தை கடன் வாங்கி செலவு செய்தார். இது போல பல குடும்பங்களில் நடப்பதை அறிவேன்.
ஆனால் என்னுடைய வேலையிடத்தில் சுத்தம் பண்ணும் வேலையில் உள்ள பெண்கள் என்னை விட மிகக் குறைவாகப் படித்தவர்கள், சம்பாதிக்கிறவர்கள், அவர்களுக்கு ரெண்டு லட்சம் என்ன ஐந்து, பத்து லட்சங்கள் கூட அவசர செலவுக்கு தேவையென்று வந்தால் நகையை விற்றுக் கொடுத்துவிட முடியும். என்னை விட, என் நண்பரை விட அவர்களே பணக்காரர்கள். உங்களுக்கே தெரியும் - பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போக தங்கத்தின் மதிப்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது.
மத்திய வர்க்கம் தான் என்றில்லை - சொந்தமாக வீடோ நிலமோ இல்லாத ஏழைக் குடும்பங்களில் கூட பெண்ணுக்கு நகையைப் போட்டு விடுகிறார்கள். ஆண் வெறுங்கையோடு போக வேண்டியது தான்.
நமது சமூக அமைப்பில், குறிப்பாக மத்திய, மேல்மத்திய வர்க்கங்களில் ஆண்கள் பெண்களை விட அதிக அதிகாரத்துடன், உரிமைகளுடன் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அசையும் சொத்தை எடுத்துக் கொண்டால் பெண்கள் ஒரு படி மேலான இடத்தில் இருக்கிறார்கள். பழைய சமூக அமைப்பில் பெண்களின் நகைகள் கணவனின் கையில் போய்விடும் என்பதால் சகோதரிக்கு அளிக்கப்படும் அசையும் சொத்து அவனுக்கு மனைவி மூலம் ஈடாகக் கிடைத்துவிடும் என்று கூற முடிந்தது. ஆனால் இன்று பெண்கள் கல்வி பெற்று வேலையில் இருக்கும் பல குடும்பங்களிலும் ஒரு கௌரவத்துக்காகவும், மரபை மறுக்க முடியாமலும் பெண்கள் கொடுக்கும் அழுத்தத்தினாலும் அவர்களுக்கு நகையை இடாமல் அனுப்ப முடிவதில்லை. இந்த பெண்கள் இந்நகைகள் தமது பிறப்புரிமை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இப்போது பெண்கள் இரட்டிப்பு சொத்துக்களைப் பெற்றவர்களாக மாறிவிட்டார்கள். ஆண்கள் ஏமாந்து நிற்கிறார்கள். ஒவ்வொரு சின்ன செலவுக்கும் தாமாகவே சம்பாதித்து வைக்க வேண்டும். வம்சாவளி சொத்தைப் பார்ப்பதற்காக அவர்கள் தம் முதிய வயது வரை, தம் பெற்றோர்கள் மரணிப்பது வரை காத்திருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல பெண்கள் கல்யாணத்தின் போது வாகனம், வீட்டுக்கான பொருட்கள், கட்டில் என அத்தனையையும் வாங்கிப் போகிறார்கள். “நீயா நானா” நிகழ்ச்சியில் சில பெண்கள் தமது திருமணத்திற்கு மிக அதிகமாக செலவு பண்ணும்படி தம் பெற்றோரை வலியுறுத்தி கடன்காரர்களாக்குவதைப் பார்க்கலாம். இந்த பணத்தையும் பொருட்களையும் ஒரு ஆண் தன் பெற்றோர்களிடம் கேட்டால் செருப்பால் அடித்து துரத்தி விடுவார்கள். இதனாலே நமது பெண்ணியவாதிகளும் பெண்களும் வரதட்சிணைக் கொடுமையை எதிர்க்கும் அதே வேளையில் (அதாவது நகைகளை கணவன் வீட்டார் கேட்பதை எதிர்க்கும் அதே வேளையில்) வரதட்சணை அளிப்பதை துளி கூட எதிர்ப்பதில்லை. ஏனென்றால் இதில் பெண்களே அதிகமாக பலனடைகிறார்கள் என்று அவர்கள் அறிவார்கள். வரதட்சணை என்று பேச்சு வந்தாலே அது “ஆணாதிக்கத்தினால் நிகழும் கொடுமை” என்று முதலைக்கண்ணீர் வடிப்பார்கள். எனில் நீங்கள் வரதட்சணை நகையாகவும் பரிசுகளாகவும் ஏன் ஏற்றுக்கொள்கிறீர்கள், வரதட்சணை இல்லாமல் தான் மணம் புரிவேன் என்று போராட வேண்டியது தானே என்று கேட்டால் மூச்சு விட மாட்டார்கள். இன்று பெரும்பாலான குடும்பங்களில் வரதட்சணைக்காக தன் 12 வயது முதலே பெண் குழந்தைகள் தம் பெற்றோரை அரிக்கத் தொடங்குகிறார்கள் என்பதே நிதர்சனம்.
இதனாலே வரதட்சணை வழக்கம் நம் ஊரில் எந்த எதிர்ப்பும் இன்று தொடர்கிறது. அதே நேரம் இந்த வரதட்சணையின் மீதுள்ள சமூகக் கோபத்தையும் குறிப்பிட வேண்டும். அதாவது நம் ஊரில் மட்டுமே வரதட்சணை கொடுப்பதை ஒரு பெருமையாகவும் வாங்குவதை ஒரு வெறுக்கத்தக்க செயலாகவும் பார்க்கிறார்கள். வரதட்சணை கொடுப்பதை சமூகக் கட்டாயமாகவும், சட்டவிரோத செயலாகவும், அதே நேரம் பெண்ணின் பிறப்புரிமையாகவும் பார்க்கிறார்கள். வரதட்சணையை கேட்டு வாங்கிப் போகும் இப்பெண்களே புகுந்த வீட்டில் மாமியார், கணவனின் சகோதரி மற்றும் கணவருடன் பிரச்சினை வந்தால் எந்த தயக்கமும் இன்றி வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் எல்லார் மீது சரமாரியாக புகார் அளித்து விடுகிறார்கள். இதில் எந்த விசாரணையும் இல்லாமல் 6 மாத குழந்தையில் இருந்து 100 வயது பாட்டி வரை 2 வருடங்கள் சிறையில் வைக்கலாம். நான் கற்பனையாக சொல்லவில்லை - இந்தியாவில் குழந்தைகள் வரதட்சிணை வழக்கில் கைதாவது சாதாரணம். Martyrs of Marriage ஆவணப்படத்தில் ஒரு 90 வயதுப்பாட்டி தன்னை பொய் வழக்கில் கைது பண்ணி பின்னர் பிணையில் வெளிவந்த பின்னர் ஐந்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் அலையவிடுவதாக கூறுகிறார். வழக்கில் இருந்து வெளிவரும் முன்னரே அவர் இறந்து போயிருக்கவே வாய்ப்பதிகம். இந்தியாவில் இந்த பிரிவின் கீழ் 10 லட்சத்துக்கும் மேல் பொய் வழக்குகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
பெண்ணியவாதிகளும் இதற்கும் முட்டுக்கொடுப்பார்கள். இதைப் படித்துவிட்டு ‘எல்லா பெண்களும் அபலைகள், அவர்களுடைய நகைகளை கணவனின் குடும்பத்தார் பறித்து விடுகிறார்கள், நகையும் பணமும் அளிக்காமல் திருமணமே நடக்காது எனும் நிலையே உள்ளது, எங்குமே பெண்ணுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதில்லை’ என்று ஒப்பாரி வைப்பார்கள் பாருங்கள்!
சரி அவர்களை விடுங்கள் - நான் இதை எழுதியதன் நோக்கம் வேறு: இதைப் படிக்கிற உங்கள் வயது இருபதுகளில் இருந்தால், உங்கள் சகோதரிக்கு நகையிட்டு அனுப்பும் போது நான் சொல்லியுள்ள பாயிண்டுகளைக் குறிப்பிட்டு அந்நகைகளுக்கு ஈடாக உங்களுக்கும் பணம் தர வேண்டும் என்று கேளுங்கள். அதே நேரம், சொத்தைப் பிரிக்கும் போது உங்கள் சகோதரிக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கோருங்கள்! ‘உன் பொண்டாட்டி கொண்டு வர நகையை நீ எடுத்துக்கோ’ என்று அவர்கள் சொல்வார்கள். அதெல்லாம் பழைய காலம், இன்றைய பெண்களிடம் இருந்து எதுவுமே பெயராது என்று சொல்லுங்கள். அப்படி உங்களால் சாமர்த்தியமாக கேட்டு வாங்க முடிந்தால் எனக்கு எழுதுங்கள்!
Comments