முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனைவிக்கு ஊதியம் கொடுக்கலாமா?


கேள்வி: தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கூட unpaid work என்று பெண்கள் சொல்கிறார்களே. இது ஏன்? நீங்கள் இதை ஏற்கிறீர்களா? இந்த unpaid என்கிற வார்த்தை ஆண்களை வம்புக்கு இழுக்கிறது.


பதில்: ஆம், பெண்ணியவாதிகள் சொல்வது சரி தான். குடும்பம் என்பது ஒரு தொழிற்சாலை, அங்கு பெண்கள் உழைக்கிறார்கள், அதற்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மனைவியாக இருப்பதற்கான ஊதியம் கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கை அரசின் முன் இருக்கிறது. ஆனால் அரசு இதை சட்டமாக்காமல் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் நான் அதை முழுமையாக ஆதரிப்பேன்.


அதே நேரம் எனக்கு சில நிபந்தனைகள் உண்டு:


  1. இதை ஒரு உழைப்பாக அன்றி கடமையாகவும், புனிதமான சேவையாகவும் கண்டு, இதற்கு ஆண்கள் தம் மனசாட்சிக்கு உகந்து ஊதியம் அளிக்க வேண்டும் என்று அரசு கூறக் கூடாது. இதை ஒரு பணியாக வரையறுக்க வேண்டும். இது மிக முக்கியம்.
  2. வீட்டிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு, மனைவியின் உழைப்பால் யாரெல்லாம் பயனடைவார்கள், என்னென்ன பணிகள் குடும்பத்தை நடத்துவதில் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும், அவற்றில் எவையெல்லாம் செய்ய ஒரு மனைவி தயாராக உள்ளார் என்பதைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். இந்த பட்டியலை ஒரு ஆவணமாக அரசு நிறுவனம் ஒன்றிற்கு மனைவி சமர்ப்பித்து தன் ஊதியத்தை கோரும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். நியாயமாக கணவனின் ஊதியம் அல்லது வியாபாரம் என்றால் மாத வருமானத்தில் இருந்து 30-35% இருக்க வேண்டும்.
  3. உணவை சமைக்க, உணவை விளம்ப, துணி துவைத்து காயப்போட, வீட்டை சுத்தம் பண்ண, குழந்தையை பார்த்துக்கொள்ள, குழந்தைக்கு உணவளிக்க, ஆடை அணிவிக்க, குளிப்பாட்ட ஒரு மனைவி தயாரா என்பதை அறிந்து அதற்கு ஏற்ப ஊதியத்தை தீர்மானிக்க வேண்டும். இன்னின்ன பணிக்கு இவ்வளவு சம்பளம் என வரையறுக்க வேண்டும்
  4. நியாயமாக செக்ஸையும் இந்த பட்டியலில் கொண்டு வர வேண்டும் - ஆனால் நம்முடையது ஒரு ஒழுக்கவாத சமூகம், இதைப் படிக்கிறவர்கள் என்னை செருப்பால் அடிப்பார்கள் என்பதால் வேண்டாம்.
  5. ஆனால் கணவனிடம் பிரியமாக இருப்பதை நிச்சயமாக உழைப்பாக வகைப்படுத்த வேண்டும். ஏனென்றால் () எல்லா கணவர்களுக்கும் இது இன்று கிடைப்பதில்லை; ஏனென்றால் () பிரியம் இன்று taken for granted ஆக இருப்பதனால், சட்டமும் இதைப் பொருட்படுத்தாதாலே விவாகரத்தின் போது கூட பிரியமின்மையை காரணமாகக் காட்ட முடிவதில்லை. கத்துவது, மிரட்டுவது உள்ளிட்டு மனரீதியாக கொடுமைப்படுத்துவது என போலி காரணங்களை நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டி இருக்கிறது. இன்னொரு விசயம் () இன்றைய கடுமையான வேலைச் சூழலில், நேர நெருக்கடியில் அன்பு காட்டுவதற்கு தனியாக நேரம் ஒதுக்கி அக்கறை காட்டாவிட்டால் உழைக்காவிட்டால் அது நடக்காது. அன்பு இல்லாமல் போவதும் ஒரு துயரம், ஒரு இழப்பு தானே? ஆக, அன்பு செலுத்த ஒரு மனைவி தயாரா இல்லையா என்பதை அறிந்து அதற்கு எவ்வளவு ஊதியம் என்பதையும் வரையறுக்க வேண்டும்.
  6. அடுத்து முக்கியமாக குழந்தைப் பேறு. () ஒரு பெண் குழந்தைப் பேறில், வளர்ப்பில் பங்கேற்றால் அதையும் உழைப்பாக கருதி ஊதியத்தை தீர்மானிக்க வேண்டும். பின்னர் மணவிலக்கின் போது ஒரு ஆண் தன் குழந்தையை வளர்ப்பதற்கான உரிமையை இதை வைத்து கோர வேண்டும், அதை சட்டம் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் அவன் ஊதியம் செலுத்தாவிடில் அவள் குழந்தையைப் பெற்றிருக்கவோ வளர்த்திருக்கவோ மாட்டாள் தானே? அவ்விடத்தில் சட்டம் தாய்மையை மிகைப்படுத்தி புனிதப்படுத்தாமல் அதை ஒரு உழைப்பாக கருதுவதே நியாயமாகவும் இருக்கும், ஆணுக்கும் தன் தந்தைமையை ஒரு உரிமையாக முன்வைக்க உதவும். () பத்து மாசம் சுமந்து பெறுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணுவதை நிறுத்த உதவும். அதற்கு ஒரு கட்டணத்தை கொடுத்து விட வேண்டும்.
  7. அடுத்து மிக முக்கியமாக, குழந்தை வளர்ப்பு: குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும், உணவளித்து குளிப்பாட்டி வளர்க்கவும் வேறு ஆட்கள் இருந்தால் இதற்கு ஊதியம் இல்லை.
  8. இப்போது மிக முக்கியமான நிபந்தனை வருகிறது - சம்பளம் கொடுப்பதால் இது ஒரு வேலை என்பதால் கணவன் ஒரு வேலை கொடுக்கிற முதலாளி ஆகிறான். இதை சட்டம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நடைமுறையில் உள்ள விதிகள் குடும்பத்துக்கும் பொருந்த வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை performance review meeting நடத்தி மனைவியால் தன் பணியை கணவனுக்கு திருப்தியளிக்கும் விதம் பண்ண முடிந்திருக்கிறதா என விசாரித்தறிய, உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் தன் பணியையும் ஊதியத்தையும் இழக்கிறார் (ஆனால் மனைவியின் அந்தஸ்து போவதில்லை.) குறைகள் இருந்தால் அவற்றை களைவதாக அவர் உத்தரவாதம் அளித்து வேலையில் தொடரலாம். கணவன் தன் எதிர்கால எதிர்பார்ப்புகளை முன்வைக்கலாம். இதை ஆவணப்படுத்தி அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  9. எந்த வேலையிலும் உள்ளதைப் போல மனைவிக்கு விடுப்பெடுக்க உரிமை உண்டு. இத்தனை நாட்களுக்கு இன்னின்ன விடுப்புகள் என்பதை ஆவணப்படுத்தி மனைவியின் ஒப்புதல் பெற வேண்டும். விடுப்பை முன்கூடியே சொல்லி கணவனின் ஒப்புதலுடன் பெற வேண்டும். எந்த வேலையிலும் உள்ளதைப் போல வேலை நீக்கம் செய்யும் ஒரு மாதத்திற்கு முன் கணவன்  அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
  10. இதில் பாலின பாகுபாடு கூடாது - மனைவி வேலைக்கு செல்கிறவர் எனும் பட்சத்தில், கணவன் வேலைக்கு சென்றாலும் இல்லாவிடினும் இந்த பணிகளை அவன் எடுத்து நடத்த முன்வந்தால் அதையும் மேற்சொன்ன நடைமுறைகளின் படி ஆவணப்படுத்தி, அவனுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அங்கு மனைவி முதலாளியாகவும், கணவன் ஊழியனும் ஆவான்


இப்படி ஊதியத்தை அரசு முறைப்படுத்தி ஆவணப்படுத்தாமல் பொத்தாம் பொதுவாக ஒரு தொகையை சொல்லி அதை ஊதியமாக கொடுக்க சொன்னால் அது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். முக்கியமாக இன்று தமிழில் ஆண் பெண்ணியவாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்பவர்கள் பெண் பெண்ணியவாதிகளை விட அதிகம். இவர்கள் கதி அதோகதியாகும். அது மட்டுமல்ல ஆண்கள் திருமண அமைப்பில் இருந்தே தப்பி ஓடிவிடுவார்கள். அல்லது சம்பளத்தில் இருந்து 25% என குறைந்த பட்ச தொகையை ஊதியமாக அறிவித்தால் அது வீட்டு செலவிக்கான பணத்தில் ஒரு முக்கியமான பகுதியை எடுத்துவிடும் என்பதால் அப்பணமும் மனைவியிடம் இருந்து பறிக்கப்படும். மனைவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கணவர்களுக்கு அது பெரும் தொந்தரவாகும், அவர்கள் கொடுக்க மறுப்பார்கள், மனைவி நீதிமன்றத்துக்கு சென்றால் அது குடும்பத்தை உடைக்கும். ஆக மனைவிகள் தமக்கு அளிக்கப்படும் பணத்தை திரும்பக் கொடுப்பார்கள். இப்படி இந்த சம்பளம் ஒரு சடங்காக மட்டும் சுருங்கும். 10% என்றால் அது இப்பெண்களுக்கு நியாயமான ஊதியமாக இருக்காது. வங்கிக்கடன் போன்ற சிக்கல்களில் உள்ள குடும்பங்களில் 10% கூட பெரிய ஓட்டையை ஏற்படுத்தும். மனைவி மீது கசப்பு அதிகமாகும். ஆனால் இதற்கு ஒரு விருப்பத்தேர்வை தந்து, அதை ஒழுங்காக ஆவணப்படுத்தினால் அது கணவனுக்கோ மனைவிக்கோ நெருக்கடியாக மாறாது. அதனாலே மேற்சொன்ன முறைமையை பரிந்துரைக்கிறேன்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...