முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேசி அழியும் தமிழ் சமூகம்


"நான் யார்?" எனும் தலைப்பில் சுந்தர ராமசாமி குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் துவக்கத்தில் சு.ரா ஐந்து நிமிடங்கள் எழுத்தாளனின் வாழ்க்கை இலக்கு பற்றி பேசுகிறார். மிக மிக மெதுவாக, மென்மையாக, நுட்பமாக அதே நேரம் அழுத்தமாக ஒவ்வொரு கருத்தாக ஒரு நட்சத்திரம் நகர்வதைப் போல பேசிக்கொண்டு போகிறார். சு.ரா நேரிலும் அப்படித்தான் பேசுவார். மிக ஊன்றி கவனிக்காவிடில் அவர் குறிப்புணர்த்துகிற சங்கதிகளை மிஸ் பண்ணிவிடுவோம். இன்ன பொருளில் தான் சொன்னாரா அதை என பின்னர் குழம்புவோம். அடித்து சொல்வது, மீள மீள சொல்வது, விளக்குவது, சுவை பட சொல்வது, பல கதைகள், தாம்தூம் டாம்பீகங்களுடன், சுயபிரதாபங்கள், பிறரை இழித்துரைத்தலுடன் பேசுவதை அவரிடம் பார்க்கவே முடியாது. சு.ரா இன்றைய காலத்தில் இப்படி ஒரு மேடையில் இவ்வாறு பேசினால் என்னாகும் என யோசித்துப் பார்த்தேன். பார்வையாளர்கள் இடையே ஒரு சலசலப்பு இருக்கும், சிலர் வெட்கமே இல்லாமல் எழுந்து போவார்கள், பலர் போனில் மூழ்குவார்கள், பரஸ்பரம் பேசுவார்கள், மெல்ல மெல்ல அரங்கில் பாதி காலியாகி கலங்கித் தெளிந்த குளத்தைப் போலாகும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கவலையுடன் நெற்றியில் கடன் அட்டை எண்கள் வரிசை வரிசையாக ஓட அமர்ந்திருப்பார்கள். அது ஒரு தோல்வி உரையென்று சமூக வலைதளத்தில் யாராவது எழுதுவார்கள். ஆனால் முன்பு இது போன்ற ஆழமான பேச்சுக்களை கேட்க மக்கள் தயார்நிலையில் வந்தார்கள். இன்று கேளிக்கையை விரும்பும் ஒரு பெருங்கும்பல் இலக்கிய தளத்துக்குள் நுழைந்துவிட்டார்கள் (கும்பல் என்று சொன்னதற்காகவே என்னை வந்து திட்டுவார்கள் பாருங்களேன்.) 


எனக்குத் தெரிந்து இந்த மாற்றம் கடந்த 15 ஆண்டுகளாக இங்கு தோன்றிய ஒன்று தான். இன்று சிறந்த பேச்சாளர்களாக உருவாகியிருக்கும் சில இலக்கிய படைப்பாளிகள் ஆரம்பத்தில் மேடையென்றாலே அசௌகர்யமாக உணர்ந்தவர்கள் தாம். தமிழ் சூழலில் ஏற்பட்ட மாற்றத்துக்கு உகந்தபடி அவர்கள் தம்மை தகவமைத்துக் கொண்டார்கள். இன்றைய இளம் படைப்பாளிகளில் பெரும்பாலானோருக்கு பேச்சுக்கலை நுட்பங்கள் தெரியாதென்றாலும் சரளமாக துணிச்சலாக மைக் முன் நின்று ஆற்றோ ஆற்றென்று ஆற்ற வருகிறது. இவர்களில் ஓரளவுக்கு ஒழுங்குடன் சுவாரஸ்யத்துடன் பேசுகிறவர்களுக்கு ஒரு தனி மவுசு உருவாகி நவம்பர் துவங்கி ஜனவரி வரை மாதத்திற்கு பத்து முறைகளாவது பேசுகிற நிலை ஏற்படுகிறது. கூடவே இலக்கிய திருவிழாக்கள் வேறு மாநிலம் தோறும் நடக்கிறதா எழுத்தாளன் இன்று பேசிக்கொண்டே இருக்க வேண்டியது தான். ஆனால் எனக்கு இந்த பேச்சுக் கலாச்சாரத்துடன் ஒப்புதல் இல்லை - ஏனென்று சொல்கிறேன்.


எழுத்தாளனின் பணி எழுதுவது, பேசுவது அல்ல. தொடர்ந்து ஆற்றொழுக்காக பேசும் எழுத்தாளர்களின் எழுத்தில் அந்த பேச்சுத்தன்மை, அரட்டைத்தன்மை வந்துவிடுவதைப் பார்க்கிறேன். எதையும் விரித்து சளசளவென எழுதுவது, ஒரு கருத்தை கதை வடிவில் தகவல்களுடன் எழுதுவது, மேம்போக்காக சொல்லிப் போவது எனஏனென்றால் எப்படிப் பார்த்தாலும் நம் மனதின் மொழியே நம் எழுத்து மொழியாகிறது, நம் மன மொழியின் தாள லயம் மேடைப்பேச்சு மொழியின் தாளலயத்துடன் இணையும் போது நம் எழுத்து மொழி சீர்குலைகிறது என நினைக்கிறேன். அதனாலே ஒரு எழுத்தாளன் பேச்சுக்கலையின் திறனைப் பெறுவது அவனுக்கு நல்லதல்ல என்று சொல்கிறேன். சிலர் இதை எழுத்து லகுவாக சரளமாக மாறுவது என்று பார்க்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் இது ஒரு வீழ்ச்சியே!


சரி இதனால் பலனே இல்லையா என்றால் எழுத்தாளன் பிரபலமாக, அவன் புத்தகங்கள் விற்க இது நிச்சயமாக உதவும். அடிப்படையில் எழுத்தாளன் தன் புத்தகத்தை தானே சந்தைப்படுத்த தன்னை சந்தைப்படுத்தும் செயல் இது. தன்னை, தன் ஆளுமையை, தன் குரலை சந்தைப்படுத்தி அதற்கு நிகராக தன் எழுத்தை வைக்கும் உத்தி இது. ஆனால் இது தமிழுக்கே உரித்தான கலாச்சாரம் - மலையாளத்தில் பிரசித்தமான எழுத்தாளர்கள் பலர் மேடைக்கூச்சம் மிக்கவர்கள் மட்டுமல்ல சமூகத்தில் இருந்து விலகி இருப்பவர்களும் கூட, ஆனாலும் அது அவர்களுடைய புகழை குறைக்கவில்லை. தமிழின் வணிக எழுத்தாளர்களும் அப்படியே. எனக்கு பாஷா பரிஷத் விருது கிடைத்த போது அதை வாங்க கொல்கொத்தா சென்றிருந்தேன். மற்றொரு முறை சாகித்ய அகாடெமி யுவ புரஸ்காருக்காக வடகிழக்குக்கு சென்றிருந்தேன். இரண்டு மேடைகளிலும் என்னுடன் மேடையில் இருந்து பிறமொழி எழுத்தாளர்களை விட நானே அதிக சரளமாக உற்சாகத்துடன் பேசினேன். பொதுவாக இந்திய ஆங்கிலத்தில் எழுதுவோர் மற்றும் தமிழ் எழுத்தாளர்களே எம்.ஜி.ஆருக்கு சரோஜா தேவி போல பேச்சை பாவிக்கிறார்கள், மற்ற மொழிக்காரர்கள் அதற்கும் தமக்கும் பெரிய சம்மந்தம் இல்லையென நினைக்கிறார்கள் என்பது என் அனுபவம்.


ஆங்கிலத்திலும் உலக அளவிலும் இதுவே நிலைமை - எழுத்தாளன் எந்தளவுக்கு பிரசித்தமாக இருக்கிறானோ அந்தளவுக்கு அவன் சமூகத்தில் இருந்து விலகியே இருக்கிறான். முராகாமி தன் சொந்த நாட்டில் இருந்து ரசிகர்களின் தொல்லை தாங்காமல் அமெரிக்கா சென்று வாழ்கிறார். அங்கு எந்த புகழ் வாய்ந்த படைப்பாளியும் இலவசமாக ஆட்களைத் திரட்டி வைத்து உலக இலக்கியத்தை எப்படி வாசிப்பது, பெட்ரோலிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் உப பொருட்கள் எவை என்றெல்லாம் ஊர் ஊராக சென்று பேசுவதில்லை. யுடியூபில் கண்ணீர் மல்க கதை சொல்வதில்லை. மாறாக அங்கு புத்தகம் வெளியாகும் போது மட்டும் எழுத்தாளன் மேடை போட்டு தன் நாவலின் அத்தியாயம் ஒன்றை வாசித்துக் காட்டி வாசகர்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறான். அதைத் தாண்டி வாசகனை நோக்கிஅன்பானஎன்றெல்லாம் அழைப்பதில்லை. இப்படி ஊராராக வண்டியைத் தள்ளிக்கொண்டு போய் வாசித்துக் காட்டுவதையும் பதிப்பகத்தினரே ஒருங்கிணைத்து விடுவார்கள். அதுவும் மிகவும் பிரசித்தமானவர்கள் இத்தகைய அத்தியாய வாசிப்பு நிகழ்ச்சிக்கு கூட வருவதில்லை.


சரி, இப்படி நாம் மேடையை ஆக்கிரமிப்பதால் மட்டுமே நம்முடைய எழுத்தோ பிறருடைய எழுத்தோ அதிகமாக விற்பதாகவும் நான் நினைக்கவில்லை. இது ஒரு பண்பாட்டு வெற்றிடத்தை நிரப்பும் பணி மட்டுமே. இதனால் எழுத்தாளனின் நேரம் கணிசமாக வீணாகிறது என்பதே பிரச்சினை


இந்த பின்னணியில் தான் இலக்கிய திருவிழாக்களில் பட்டிமன்ற பேச்சாளர்களை வைத்து இலக்கியத்தை முன்னெடுக்கும் அபத்தத்தை நாம் பார்க்க வேண்டும். எழுத்தாளன் பேசியே இலக்கியம் வளராத போது சுகி சிவம் பேசினால் மட்டும் என்னவாகிடப் போகிறது? அது இலக்கியத்தை வளர்க்கவோ, பொதுமக்களுக்கு இலக்கிய வாசிப்பு ருசியை கொடுக்கவோ அல்ல பேச்சுக்கலையை மேலும் வளர்க்க மட்டுமே உதவும். தில்லி அப்பளத்துக்காக வருகிறவர்களைப் போல இவர்களுக்காக திரளும் மக்கள் இலக்கிய வாசகர்களாகவும் இருக்கப் போவதில்லை


இதற்கு பதிலாக ஹிந்து லிட் பார் லைபில் ஆங்கில எழுத்தாளர்களுடன் உரையாடலை நடத்துவதைப் போல தமிழ் எழுத்தாளர்களுக்கும் பண்ணலாம். எழுத்தாளர்கள் பற்றின அறிமுகங்களை தொடர்ந்து வெகுஜன ஊடகங்களில் பண்ணுவது, எழுத்தாள பிம்பத்தை உருவாக்குவது, எல்லா இடங்களிலும் புத்தகங்கள் இடம்பெற வைப்பது, சமூகத்தில் உயர்நிலையில் உள்ளோர் புத்தக வாசிப்பை பிரதானமாக காட்டுவது போன்ற செயல்களின் மூலமே மேற்கில் வாசிப்பு பிரசித்தமானது. தற்போதைய திமுக அரசு இதை நோக்கிய முயற்சிகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது. அதே நேரம் எழுத்தாளனை ஊர் ஊராக அழைத்துப் போய் பேச வைப்பது, பேச்சாளர்களை அழைத்து பேச வைப்பது போன்ற அபத்தங்களை இந்த திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பேச்சைக் கேட்பவர்கள் அமைதியாக உட்கார்ந்து வாசிப்பவர்கள் அல்ல. பேச்சு பேச்சுக்கான சுவையையே வளர்க்கும், எழுத்தும், எழுத்து குறித்த சித்திரங்களுமே எழுத்துக்கான சுவையை வளர்க்கும். பேச்சு ஆரவாரத்தில் இருந்தும் எழுத்து மௌனத்தில் இருந்தும் பிறக்கிறது. வாசிப்பை நேசிக்க வைக்கிறோம் என்று நாம் பேச்சு பேச்சு என திசை திருப்பும் அபத்தத்தை புரிந்து கொண்டு வேறு விதங்களில் இவ்விழாக்களை நடத்த வேண்டும் என்பதே என் வேண்டுகோள். அதுவும் பேச்சாளர்களுக்கு ரூ 30,000இல் இருந்து ஒரு லட்சம் வரை ஆளுக்கு கொடுக்க வேண்டும் எனும் போது சரக்கடிக்கும் அளவுக்கு கூட ராயல்டி கிடைக்காத எழுத்தாளனுக்கு கடுப்பாகுமா ஆகாதா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...