Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எழுத்தாளன் - யுகபுருஷன் - குற்றவாளி



ஜெயமோகனுடைய கட்டுரையில் (“எழுத்தாளன் , புனிதன், மனிதன்”) நான்கைந்து பகுதிகள் வருகின்றன (எழுத்தாளனின் ஒழுக்கப்பிறழ்வு, அதற்கான நியாயப்பாடுகள், எழுத்தாளன் வழிகாட்டியாக இருக்க முடியுமா? ஒரு சமூகத்தில் உள்ள வழிகாட்டியும் உருக்கு மனிதனுமான லட்சியவாதிகள் vs நுண்ணுணர்வு மிக்க சுயக்கட்டுப்பாடு இல்லாத எழுதாளன், தான் எப்படி ஒரு பலவீனமான எழுத்தாளனாகவும் பலமிக்க வழிகாட்டியாகவும் ஒரே சமயம் இருக்கிறேன் எனும் விளம்பர சுயபிரகடனம்). இவற்றில் எழுத்தாளனின் மன அமைப்பு பற்றின பகுதியுடன் மட்டும் உடன்படுகிறேன். ஆனால் ‘கலைஞனின் நுண்ணுணர்வு’. உண்மையிலே அப்படி ஒன்று இல்லை என்பதையே நான் என் வாசிப்பிலும் உலக அனுபவத்திலும் எழுத்தனுபவத்திலும் கண்டறிந்தது. நுண்ணுணர்வு என்று அவர் குறிப்பிடுவது ஒரு நரம்பியல் சிக்கலே - இதை நான் அல்ல கண்டுபிடித்தது, நவீன அறிவியல் சொல்வதையே நான் சொல்கிறேன். இந்த நரம்பியல் அமைப்பு ஒரு சிலருக்கு மட்டுமே வாழ்க்கையை ஒரு முழுக்க மாறுபட்ட கோணத்தில் பார்க்கவும், status quoவுக்கு எதிராக யோசிக்கவும் தூண்டுகிறது. அவர்களுடைய கற்பனையை சற்று விசித்திரமானதாக ஆக்குகிறது, மொழி / இசை / ஓவியம் / படக்கருவி / வெகுஜன கலைகள் என ஏதோ ஒரு வடிவத்தில் தன் வெளிப்பாட்டை இந்த நரம்பியல் அமைப்பு காணும். இவர்களுக்கு இந்த வடிவங்களுக்குள் செயல்படுகையில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி, மனத்திளைப்பு, சுதந்திரம் அனுபவப்படும். கற்றல் திறன் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் (learning disability) கொண்டோரை ஊன்றி கவனித்தால் இது உங்களுக்குப் புரியும். அவர்களுடைய உலகம் நம்மில் இருந்து முழுக்க மாறுபட்டது.
தத்துவார்த்தமாக பார்த்தால் மொழியின் இடைவெளிகளின் ஊடே நம் இருத்தலை அறிய கலைஞர்களுக்கு சாத்தியப்படும் (தெரிதா / ஹைடெக்கரின் கருதுகோள் - இருவரும் மொழியை இருவிதங்களில் அர்த்தம் கொண்டார்கள்.) - இதுவே கலைஞனின் சுதந்திரம் என்று நான் கருதுகிறேன். கையைப் பிடித்து இழுப்பதோ குடித்து கலாட்டா பண்ணுவதோ திருடுவதோ கொலை செய்வதோ அல்ல. அதற்கு பின்னால் வருகிறேன்.
மொழியின் இடைவெளிகளை அறிய ஒரு சாமான்ய மனிதனாலும் முடியும் - ஆனால் அதை தீவிரமாக அறிய மொழிக்குள் யாருமே யோசிக்காத வகையில் சில விளையாட்டுகளை நிகழ்த்த வேண்டும் (இதையே படைப்பூக்கம் என்கிறோம்). இந்த வேலை தான் ஒரு எழுத்தாளனை தனித்துக் காட்டுகிறது என்றாலும் சாமான்யர்களாக அறியப்படுபவர்கள் மொழிக்கு வெளியே தம் இருத்தலை இன்னும் இயல்பாக கண்டடைகிறார்கள் (இப்படி சும்மா இருக்க முடிவதையும் ஹைடெக்கர் மொழி என்றே கூறுகிறார்.). அன்றாட உலகில் இருந்து - உலகம் என்றால் உடலால் புலன்வழியாக அறியத்தக்க உலகம் - வெகுவாக விலகி வந்துவிட்ட ஒரு ‘பண்பட்ட’ சமூகத்திற்கு என்றே கண்டடையப்பட்ட கருவி தான் மொழி, அதற்குள் தம் இருத்தலை அவர்கள் உணர வசதிப்படுத்திக் கொண்டதே கலை. இப்படி இருவகையான மொழிகள் உள்ளதால் - தத்துவார்த்தமாக நோக்கினால் - உங்கள் இருத்தலை அறிய உங்களுக்கு கலைகள் கட்டாயமல்ல, கலையனுபவத்தை துய்ப்பது ஒரு விருப்பத்தேர்வு மட்டுமே.
ஜெயமோகனின் “நுண்ணுணர்வு” எனும் சொல் ரொம்ப காலமாக தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் புழக்கத்தில் இருப்பதுதான். ஆனால் அது சற்று பூடகமாக, விருப்பப்படி கற்பனை செய்ய வழிவகுப்பதாக இருப்பதால் அது பல குழப்பங்களுக்கு வழிகோலுவதுடன், சமூகப் படிநிலையாக்கத்துக்கும் பாதையமைக்கிறது. ஆனால் என் தத்துவ, இலக்கிய வாசிப்பும், வாழ்வனுபவமும் இந்த படிநிலை - எழுத்தாளன் வழிகாட்டுபவன், ஆசான், உயர்ந்தவன், நுண்ணுணர்வு கொண்டவன், அவனுக்கு கீழே அவனுடைய வாசகர்களும், அவர்களுக்கு கீழே படிக்காத சாமான்யர்களும் உள்ளனர் என்பதை - பருவுலகில் எங்குமே இல்லாத ஒரு அபத்தம் எனப் புரிய வைக்கிறது. தமிழில் இதை தீவிரமாக முன்வைப்பவர்கள் சில இருக்கிறார்கள் (ஜெயகாந்தன், ஜெயமோகன்). பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரசித்தமாக இருந்த கற்பனாவாத மரபில் தான் முதன்முதலாக ஜெயமோகன் தன் கட்டுரையில் சொல்லும் கருத்துக்கள் தோன்றி பிரசித்தமாகின. அவர்கள் மேதைமை எனும் கருத்தாக்கத்தை பரவலாக்கினார்கள். யார் மேதையாக இருக்க முடியும், யார் சாதாரணமான படைப்பாளிகள் எனும் விவாதம் அங்கு ஏற்பட்டு அண்மையில் தான் அடங்கியது. அதன் பிறகு நவீன இலக்கியம், பின்நவீன சிந்தனைகள் வந்த பின்னர் எழுத்தாளன் குறித்த சித்திரமே உலகம் முழுக்க மாறிவிட்டாலும் அந்த பழைய ரொமாண்டிக் பார்வை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. பாலகுமாரன் ஒரு எழுத்தாளனை சித்த புருஷனாக முன்வைத்து இன்னொரு மரபை தமிழில் உருவாக்கினார்; கடைசி வரை அவர் மட்டுமே அதில் குருவாக இருந்தார் என்பதொரு வேடிக்கை. (இன்று ஜெயமோகன் இதே சித்த புருஷனை பண்பாட்டு நுண்ணுணர்வு அதிமனிதனாக முன்வைக்கிறார்.) என்னுடைய பார்வையில் இவையெல்லாம் கற்பனைகள். எழுத்தாளர்கள் தம்மை ஒரு நீர்க்குமிழுக்குள் அடைத்துக்கொண்டு தமது படைப்பாற்றலை காப்பாற்றிக் கொள்ள இக்கற்பனைகள் உதவலாம். ஆனால் இவை அடிப்படையில் கற்பனைகளே. (கூடுதலாக உருட்டி மிரட்டி புத்தகங்களை வாங்க வைக்கவும் இந்த பிரச்சாரம் உதவும் என்பதை நான் மறுக்கவில்லை.)
‘நுண்ணுணர்வு’ எனும் சொல்லில் உள்ள ‘கருவில் திரு’ ஒளிவட்டத்தை நான் ஏற்கவில்லை என்பதாலே ‘விசித்திரமான மன அமைப்பு கொண்டவன்’ எழுத்தாளன் எனும் விளக்கத்தை பரிந்துரைக்கிறேன். இவ்வகை மன அமைப்பு கொண்ட எழுத்தாளாராக வலுவான சாத்தியம் கொண்ட சிலரை நான் இளமையில் இருந்தே கண்டிருக்கிறேன். இவரால் நிச்சயமாக படைப்பாளியாக முடியும் என்று நினைத்து, அவர்களிடமே போய் சொல்வேன். ஆனால் அவர்களுக்கு ஆர்வமோ, ஆர்வமிருந்தால் உழைக்கும் முனைப்போ இருக்காது. இப்போதெல்லாம் நான் இத்தகையோரைக் கண்டால் பொருட்படுத்தாமல் நகர்ந்து விடுகிறேன். திறமை என்பதே ஒரு அபத்தம் எனும் இடத்துக்கு வந்துவிட்டேன். செயலே திறமை. அதைத்தாண்டி ஒன்றுமே இல்லை. ஜெயமோகன் ரொம்ப சாமர்த்தியமாக ‘உழைப்பு’, ‘முனைப்பு’, ‘திட்டமிடல்’ ஆகிய பதங்களை பயன்படுத்துவதில்லை பாருங்கள் - ஒரு கட்டற்ற ஆற்றல் கொண்ட மகாபுருஷனாக எழுத்தாளனை சித்தரிக்கிறார். ஆனால் அப்படி யாரும் இல்லை. தமிழின் மகத்தான படைப்புகள் கடுமையாக உழைத்து திட்டமிட்டு தினம் தினம் படிப்படியாக எழுதப்படுகின்றன. அவற்றின் பின்னால் ஒரு பித்து நிலை உள்ளது. ஆனால் பித்து நிலை மட்டுமே படைப்பாகாது. பித்து நிலை மட்டுமே இருந்தால் அது உங்களை குடிகாரனாகவோ மனநோயாளியாகவோ பெண் பித்து மிக்கவனாகவோ ஆக்கும். சாகும் போது ‘நான் ஒரு யுகபுருஷன், ஆனால் ஒன்றுமே எழுதவில்லையே’ என்று தோன்றும். விடிய விடிய கண்விழித்து எழுத வேண்டும், சின்னச்சின்ன தியாகங்கள் பண்ண வேண்டும், மனக்கட்டுப்பாடு இருக்க வேண்டும் - 98% இவையே உங்களை சிறந்த படைப்பாளி ஆக்குகின்றன. மன அமைப்பில் உள்ள பிழைகள் 2% உங்கள் படைப்புக்கு ஒரு தனித்த ஒளியைக் கொடுக்கலாம். ஆனால் அந்த ஒளியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கொசுவைக் கூட அடிக்க முடியாது.
நான் இப்போது நாற்பது மாணவர்களுக்கு வாரம் சில மணிநேரங்கள் நாவல் எழுதும் கலை வகுப்பெடுக்கிறேன். அவர்களிடம் இதையே திரும்பத் திரும்ப சொல்கிறேன் - எழுத்தில் அதிரூபர்கள் என யாரும் இல்லை. தனித்திறமையும் தேவையில்லை. எல்லாராலும் ஒரு நாவல் எழுத முடியும். அதற்கு எழுதும் கலை, மொழியை பயன்படுத்தும் உத்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும். எழுதிப் பயிற்சி செய்தோ படித்தோ இதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் முக்கியமாக தினசரி எழுதும் ஒழுக்கம் வேண்டும். செயலே திறமை. செய்யத் தெரிவதே திறமை. சோம்பேறிகள் கவிஞன் ஆகலாம், ஆனால் நாவலாசிரியன் ஆக முடியாது. எழுதுவதற்கான மன ஊக்கத்தையும் அன்றாட பழக்க வழக்கங்கள் மூலமாக நாம் உருவாக்கிக் கொள்வது எளிதே (விலகி இரு, தனித்திரு, ஒன்றையே செய் எனும் சூத்திரம்). எழுதுவது நம் இருத்தலின் ஒரு பகுதி. எழுத்து மட்டுமே உலகம் அல்ல. இவ்வளவு தான்.
தமிழில் ஊக்கம் இல்லாதவர்களும், ஊக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். எழுத்தாளன் - சாமான்யன் எனும் இருமை தவறானது.
கடைசியாக, குற்ற மனப்பான்மைக்கும் பிறழ்வுக்குமான உறவுக்கு வருகிறேன் - நுண்ணுணர்வு எனும் குடைக்கு கீழே ஜெயமோகன் படைப்பாற்றல், ஆளுமைப் பிறழ்வு, குற்ற மனப்பான்மை என சம்மந்தமில்லாத சங்கதிகளை போட்டுக் குழப்பி விட்டார். குற்ற மனப்பான்மைக்கு (ஒழுக்கப்பிறழ்வு நடவடிக்கைகள்) படைப்பாற்றலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உதாரணமாக சிறையில் இருக்கும் எந்த குற்றவாளியும் தன்னளவில் படைப்பாளி அல்ல. ஆளுமைப்பிறழ்வில் இருந்து குற்றம் செய்ய மனநிலை வருகிறது என்று வேண்டுமெனில் சொல்லலாம். எழுத்தாளன் மட்டுமல்ல சமூகத்தில் பலருக்கும் இந்த சமூக விதிமுறைகளை மீற வேண்டும் எனும் விருப்பம் உண்டு. இது ஒரு வேட்டை மனநிலை. நாம் பூர்வீகத்தில் வேட்டைக்காரர்கள் தானே. வேளாண் சமூகமாக நாம் மலர்ந்த பின்னர் வேட்டை மனநிலையைக் கட்டுப்படுத்தும் கட்டாயம் சமூகத்துக்கு உண்டாகிறது. அப்படியே குற்றம் என ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை, தண்டனை எல்லாம் வருகிறது. ஒருவேளை வினோதமான நரம்பியல் அமைப்பு கொண்டவர்களுக்கு சமூகம் குறித்த பயம், பிரக்ஞை குறைவாக இருக்கலாமே ஒழிய அவர்கள் இயல்பிலேயே பிறழ்ந்தவர்கள் அல்ல. இப்படி இல்லாத படைப்பாளிகளையும் நிறைய பார்த்திருக்கிறேன். நீங்கள் அசோகமித்திரனிடம் ஒரு இளம் நங்கையை பக்கத்தில் விட்டுப்போனாலும் அவர் அவள் கையைப் பிடித்து இழுக்க மாட்டார் என உறுதியாக சொல்வேன். படைப்புத் திறனே இல்லாத இன்னொருவர் அதைச் செய்யலாம். அதனால் அவர் அசோகமித்திரனைப் போல ஆக மாட்டார். குற்றம் என்பது மிக மிக இயல்பான ஒரு செயல். அது நம் கண்ணுக்கு சுலபத்தில் புலப்படுவதில்லையே தவிர குற்றம் என்பது எல்லா மட்டத்திலும் அன்றாட உலகில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. குற்றத்துக்கு ஒரு தனி ஆளுமைத்திறன் தேவையில்லை. மனிதன் மட்டுமல்ல, மிருகங்கள் கூட குற்றங்களை செய்கின்றன. விலங்குகளை நுட்பமாக கவனித்தவர்களுக்கு தெரியும். விலங்கு குற்றவியல் சட்டம், நீதிமன்றம் எல்லாம் உருவாக்கினால் ஆயிரக்கணக்கான விலங்குகள் தினமும் அணிவகுத்து நிற்கும். விலங்கு சட்ட வக்கீல்களும் தோன்றுவார்கள். இதற்கும் எழுத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேண்டுமென்றால் இதைக்குறித்த தன்னுணர்வு எழுத்தாளனுக்கு சற்று அதிகம் என்று சொல்லலாம். இப்போதைக்கு இது போதும். குற்றம் என்றால் என்ன என மற்றொரு பதிவில் சொல்கிறேன்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...