முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறழ்வின் பாவக்கணக்கு


நான் குடும்பநல நீதிமன்ற அனுபவங்களை எழுதும் போது எப்போதும் ஆண்களின் தரப்பையே முன்னிலைப்படுத்துகிறேன் என் சில தோழிகள் வருத்தம் தெரிவித்ததால் நான் அண்மையில் சந்தித்த ஒரு தோழி சொன்ன கதையையும் பகிர்கிறேன். அவர் ஒரு பெண் என்பதால் கூச்சப்பட்டு என்னிடம் மொத்த கதையையும் சொல்லவில்லை என்பதால், நான் கற்பனை கிற்பனை எல்லாம் மிக்ஸ் செய்வது இல்லையென்பதால் இது சுருக்கமாகவே இருக்கும். இப்போது எழுத்தாளர்களின் ஆளுமைப்பிறழ்வு, சறுக்கல், பாலியல் குற்றம் பற்றின விவாதம் நடப்பதால், வக்கீல்களும் எழுத்தாளர்களே என சில நண்பர்கள் சொல்லுவதால் இக்கதை இங்கு பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்.
இத்தோழி அண்மையில் தன் கணவனை விட்டுப்பிரிந்தவர். குழந்தையையும் இவரே வளர்க்கிறார். படித்தவர். ஆனால் நல்ல வருமானமுள்ள வேலை இல்லை. ஏதோ ஒரு சிறிய தொகைக்கு ப்ரீலேன்ஸிங் பண்ணி அன்றாட செலவுகளை கவனிக்கிறார். காதல் திருமணம் என்பதால் பெற்றோருடன் ஆரம்பத்தில் இருந்தே மோதல். அவர்களிடம் திரும்ப சென்று உதவி கேட்கவும் இவருக்கு மனமில்லை. குடும்ப நல நீதிமன்றத்துக்கு வரும் இவர் ஒரு வக்கீலை நாடிப் போகிறார். வக்கீல் முதலில் நான் ஜெய்பீம் சூர்யாவைப் போல, எனக்கு எல்லாமே ஒடுக்கப்பட்டோரை காப்பாற்றுவது தான், உங்கள் கணவனை இழுத்து வந்து மண்டியிட வைக்கிறேன், நீதி பெற்றுத் தருகிறேன், மாதம் 30,000 ஆவது ஜீவனாம்சம் வாங்கித்தருகிறேன் என பில்ட் அப் கொடுத்து சில மாதங்கள் வழக்கை ஓட்டிவிட்டு “சரி நீங்க இன்னும் பீஸ் கொடுக்கலையேம்மா” என இழுத்திருக்கிறார். “நீங்க கேட்கவே இல்லையே சார், நானும் வாழ்க்கையை நடத்த ரொம்ப சிரமப்படுகிறேனே.” “அது எனக்குத் தெரியுமேம்மா. அதுக்காகத் தான் போராட வந்திருக்கேன். ஆனா எனக்கும் ஒரு பீஸ் இருக்குதே. அதை நீங்க கொடுத்துதான் ஆகணும்.” தோழி ஒரு கணம் ஜெய்பீமில் சூர்யா பீஸே கேட்கலையே என குழம்புகிறார். சுதாரித்துவிட்டு சரி எவ்வளவு தான் வேணும் எனக் கேட்கிறார். நம் ஜெய்பீம் சூர்யாவோ ஒரு லட்ச ரூபாய் எடுத்து வையுங்க என்கிறார். இவரிடம் அக்கவுண்டில் பத்தாயிரம் தான் இருக்கிறது. “சரி பரவாயில்ல, நான் ஹெல்ப் பண்றேன்” என்று சொல்லிட தோழி ‘ஹப்பாடா’ என மூச்சுவிடுகிறார். ஆனால் அடுத்தடுத்த மாதங்கள் நம் வக்கீல் கட்டணம் கேட்டு அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே போகிறார். ஒரு கட்டத்தில் என்னால் சத்தியமா முடியல, முடிஞ்ச தொகையை கொடுத்த்திர்ரேன் என்று தோழி ஜீபே பண்ணிவிடுகிறார். வக்கீல் அவரிடம் வந்து நீங்க எனக்குத் தர வேண்டிய ரெண்டு லட்சத்தில 10% கூட இன்னும் தரல. என்று முகத்தை பக்கத்தில் போய் காட்டி மிரட்டியிருக்கிறார். என்ன ஜெய்பீம் சூர்யா இப்படி பேசுகிறாரே என தோழி மீண்டும் நெஞ்சைப் பிடித்துக் கொள்ள வக்கீல் “சரி பரவாயில்லம்மா, என்னைத் தேடி ஹெல்ப்புன்னு வந்திட்டீங்க. உங்களை கைவிடவும் மனசில்ல. எனக்கும் பீஸ் வாங்காமல் அடுத்து வேலை பண்ண முடியாது. நீங்க ஒண்ணு பண்ணுங்க, என் கூட வந்திருங்க, நான் உங்களைப் பார்த்துக்கிறேன்” என்று ஒரே போடாக போட்டுவிட்டார். அவர் சொல்லியதன் பொருளென்ன என்று தோழிக்கு விளங்கவே பத்து நிமிடம் எடுத்திருக்கிறது. தோழி அதற்கு பதில் சொல்லாமல் வந்துவிட “நான் கேட்ட பீஸ் என்னாச்சு?” எனக் கேட்டு தினமும் போனில் தொந்தரவு. அவர் இப்படி ஒரு வக்கீலே வேண்டாம் என கடைசியில் தப்பித்து ஓடி வந்துவிட்டார்.
இந்த வக்கீல் ஏன் இப்படி நடந்து கொண்டார் என எனக்கு குழப்பமாக இருந்தது. இப்போது எழுத்தாளன் என்றால் அவனுக்குள் குற்றம் செய்யும் மனநிலை இருக்கும் தானே, அவன் அடிப்படையில் பிறழ்ந்தவன் தானே என்று சில நண்பர்கள் ஒரு பக்கமும், வக்கீலும் எழுத்தாளன் தானே என வேறு சில நண்பர்கள் இன்னொரு பக்கமும் வாதிடுவதைப் பார்க்கும் போது எனக்கு விடை கிடைத்து விட்டது: இந்த வக்கீல் ஒரு உன்னத படைப்பாளியாகவும் வக்கீலாகவும் ஒரே சமயம் இருந்திருக்கிறார்! உன்னத படைப்பாளி என்றால் கையைப் பிடித்து இழுப்பார், வக்கீல் என்றால் பீஸ் கேட்பார். இவர் ரெண்டுமே என்பதால் பீஸாக கையைப் பிடித்து இழுத்துவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...