முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வக்கீலும் எழுத்தாளன் தானோ?



பாவேல் சக்தி தன் பதிவில் ஒரு வக்கீல் எழுதும் வழக்குரைகளும் எழுத்து தானே என்கிறார். வக்கீல்கள் எப்படி ஒரு கதையை படிப்படியாக உருவாக்குவார்கள் என்று நேரடியாகவே பார்த்திருக்கிறேன்; இந்த சம்பவம் வந்து நம்பத்தகுந்ததாக ஆவதற்கு அதற்கு முன்னால் வழக்குரையில் என்னென்ன காட்சிகளை புனைந்து சரியான கால ஒழுங்கில் அடுக்கி வைக்க வேண்டும் என அவர்கள் சொல்லும் போது என்னடா நமக்கே நாவலெழுதும் craft பற்றி பாடமெடுக்கிறார்களே என எனக்குத் தோன்றியிருக்கிறது. இந்த கேஸ்கட்டில் நீங்கள் ஒரு want, ஒரு crisis, சில திருப்பங்கள், ஒரு சில சிக்கல்கள், ஒரு தத்துவம் (values) சேர்த்து சரியான முடிவையும் அளித்தால் அது ஒரு நாவலாகி விடும் தான், நான் மறுக்கவில்லை. ஆனால் வக்கீல்கள் அதற்கு மெனெக்கெட மாட்டார்கள். ஏன் என்று சொல்கிறேன்.
அரைகுறையாக ஒரு வழக்குரையை எழுதியே (அதில் முக்கால்வாசியை நம்மை எழுத வைப்பார்கள்) அவர்கள் சில லட்சங்களை சம்பாதித்து விடுவார்கள். நாவல் எழுதி ராயல்டியாக பத்தாயிரம் வாங்குவதே பெரிய காரியம். பணம் அதில் இல்லையென்பதால், வக்கீல்கள் 99% நான் பார்த்தவரையில் தூங்கி எழுந்ததில் இருந்து உறங்கும் வரை யார் முன்னாலாவது தோன்றி பணம் கொடு, பணம் கொடு என மிரட்டும் பூதங்கள் என்பதால், பணம் வராத செயலொன்றில் ஈடுபட அவர்களுக்கு மன ஊக்கம் இருப்பதில்லை, அவர்கள் அத்திறனையும் வளர்த்துக் கொள்ள மாட்டார்கள், அதனாலே அவர்கள் கலைஞனும் ஆவதில்லை. ஒருவேளை நாளையே சென்னையை சேர்ந்த வக்கீல்கள் நாவலாசிரியர்கள் ஆனால் 500 பக்க நாவலுக்கு 10 லட்சத்துக்கு குறைவாக ஒரு பைசா ராயல்டியாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். என்னது 10 லட்சமா என வாயைப் பிளக்காதீர்கள். அந்த நாவல் ஒரு பிரதி கூட விற்கவில்லை என்றாலும் கேட்பார்கள்.
ஒரு வழக்குரைக்கு 80 பக்கங்களுக்கு ஒன்றரை லட்சம் என்பதே சென்னையில் உள்ள ரேட்டு. அதை நீங்கள் ஆறாகப் பெருக்கினால் நான் சொன்ன தொகை வந்துவிடும். (சில அப்பாவி வக்கீல்கள் மட்டுமே இதில் விதிவிலக்கு.) சில்லறை காசுக்கு புனைவெழுத்தாளர்கள் நாம் செய்யும் அதே வேலையை வக்கீல்கள் சற்று மோசமான அமைப்பில், மோசமான மொழியில் எழுதி பல லட்சங்களை வருடத்திற்கு சுலபத்தில் சம்பாதிக்கிறார்கள் என்பதே விசித்திரம் (அதில் ஆயிரெத்தெட்டு இலக்கணப் பிழைகள் வேறு). கடந்த மாதம் நான் வழக்காடு மன்றத்திற்கு சென்றிருந்த போது அங்கு பழுப்பு நிறத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கேஸ்கட்டுகளை ஒரு அரசு ஊழியர் எடுத்து தூசுதட்டி அங்க வகை பிரித்து ஒரு பெஞ்சில் அடுக்கி வைப்பதைப் பார்த்தேன். மதிப்பிழந்து போய் விட்ட இந்த தாள்களை வைத்து நம் வக்கீல்கள் மொத்தமாக எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார்கள் என்று நான் வியந்தேன். அவை ஒட்டுமொத்தமாக ஒரு அபத்தக் குவியல் என்றாலும் அவற்றுக்கு உள்ள பணமதிப்பு ஆச்சரியப்பட வைக்கக் கூடியது.

நம் வக்கீல்களிலும் நடைமுறை அறிவுகுறைவானவர்கள் இருப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பெரும்பாலான வக்கீல்கள் நம்மை விட அதிபுத்திசாலிகள். எழுதி சம்பாதிப்பதை விடுங்கள், காட்சி கொடுத்து சம்பாதிப்பதே வக்கீல் தொழிலில் தான் சாத்தியம். Appearance fees என ஒன்றிருக்கிறது. ஒரு சென்னை வக்கீல் பத்து நிமிடங்கள் நீதிபதி முன்னால் போய் நின்று சில வார்த்தைகள் சொல்லிவிட்டு கிளம்பினால் அதற்கு 2000 ரூ குறைந்தது வாங்கி விடுகிறார். வேறெந்த தொழிலில் இது சாத்தியப்படும் யோசியுங்கள். நானெல்லாம் ஒருநாள் முழுக்க வகுப்பில் நின்று நான்கு மணிநேரங்கள் கத்திப் பேசினால் மட்டுமே 2000 ரூ வாங்க முடியும். அதற்கு வேறு எட்டு மணிநேரங்கள் படிக்க வேண்டும். இங்கு யுவர் ஆனர், மை கிளயண்ட் என்று தப்புத்தப்பான ஆங்கிலத்தில், வரிக்கு ஐம்பத்தெட்டு இலக்கணப்பிழைகளுடன் பத்து வார்த்தைகள் பேசினால் போதும். கடந்த வாரம் ஒரு ஊடக நண்பர் ஒரு கதை சொன்னார். அவருக்கு ஒரு ஆவணம் தேவைப்பட்டிருக்கிறது. அதை நீதிமன்றத்தில் மனு போட்டு வாங்க வேண்டும். ஒரே ஒரு தாளில் எழுதி போட்டால் போதும். அவரது நண்பர் ஒருவர் வக்கீலாக இருக்கிறார் என்பதால் நாடியிருக்கிறார். அவர் இதை செய்துவிட்டு 30,000 ரூ கட்டணமாக வாங்கிவிட்டார். ஒரே ஒரு பக்கம் எழுதிக் கொடுத்ததற்கு இவ்வளவு பணமாடா என்று கேட்டால் “ஆமாடா இங்கேல்லாம் இதுதான் நடைமுறை, நீங்கிறதுனாலே 30,000. வேற யாராவதுன்னா 50,000” என்று ஒரு போடு போட்டிருக்கிறார். இந்த உலகிலேயே மிக காஸ்டிலியான எழுத்தாளர்கள் என்றால் அது நம்மூர் வக்கீல்கள் தாம். 

ஆனால் கேட்டால் பஞ்சப்பாட்டு பாடுவார்கள். பஞ்சப்பாட்டு பாடுவதில் நம் பதிப்பாளர்களை விட்டால் வக்கீல்கள் தான் முன்னோடிகள்.

அதனால் பாவேல் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். வக்கீல்களே சிறந்த எழுத்தாளர்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...