Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அரசு இந்த 12 மணிநேர வேலை மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!

ஏனென்றால்,


முதலில், பொருளாதார வளர்ச்சி என்பது முதலீட்டாளர்களர்கள் லாபத்தை பெருக்கும் போது நிகழ்வதல்ல, சந்தைக்கு பணம் வந்தாலே அது நிகழும். அதற்கு மக்களிடம் அதிக பணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக பணப்புழக்கம் இல்லாவிடில் பணவீக்கம் ஏற்படும். அதற்கு முதலில் எல்லா மக்களுக்கும் கையில் பணம் வரும்படி தொழிலோ வேலையோ இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் அதானி, அம்பானி ஆகியோரின் லாபம் பல நூறு மடங்கு அதிகரித்தது, ஆனால் இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைப் பார்த்தோம். பொருளாதாரம் நொடித்தால் இதே முதலீட்டாளர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிடுவார்கள். இதை நான் சொல்லவில்லை, ஜி.எஸ்.டியை எதிர்த்து பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் சொன்னது.  
8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக உயர்த்தும் போது இரட்டை ஷிப்ட் பணி ஒன்றரை ஷிப்ட் ஆகும். இரண்டு பேர் பண்ணின வேலை ஒருத்தர் செய்வதாகும். இருவரது சம்பளம் ஒருவரது சம்பளம் ஆகும். இது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, நமது பொருளாதாரத்துக்கே கேடு. ஏனென்றால் பணமானது முதலாளியின் ஜேப்புக்குப் போனால் அது அங்கேயே கிடக்கும், நுகர்வுக்கு பயன்படாது. தாராளமய சந்தையானது நுகர்வின் அடிப்படையிலானது என்பதால் இப்பணத்தினால் ‘சந்தைக்கு லாபம்’ இல்லை. சந்தையின் லாபம் வேறு, முதலாளியின் லாபம் வேறு என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தெருவில் போகிறவரின் சட்டைப்பையில் உள்ள பணமே சந்தையின் லாபம், முதலாளியின் பணம் பின்னர் பிலிப்பைன்ஸ், மெக்ஸிக்கோ ஷெல் கம்பெனி கணக்கில் சேர்க்கப்படும் கறுப்புப் பணமாகும். ஏனென்றால் பொருளாதார வீக்கம் ஏற்பட்டால் முதலாளி மீண்டும் இங்கே முதலீடு பண்ணப் போவதில்லை. அதனால் 12 மணிநேர வேலை மசோதா நம் பொருளாதாரத்தை மேலும் வீங்க வைத்து அழிக்கப் போகிறது.
பொருளாதாரம் குறித்து சுத்தமாகப் புரியாத ஒருவரே இதை ஆதரிக்க முடியும்.

இன்னொரு பிரச்சினை 50 பேர்கள் 8 மணிநேர வேலை செய்வதை, 18 மணிநேரமாக மாற்றினால் 16 பேர்களுக்கு வேலை போகிறது என்பதை ஒரு எளிய கணக்கிட்டுப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். உடனே அரசாங்கம் இப்படியான பணி இழப்பு நேராமல் பார்த்துக்கொள்ளும், நிர்வாகம் கனிவாக நடந்துகொள்ளும் என்றெல்லாம் முட்டுக்கொடுப்பது நியாயம் அல்ல. அப்படியான நம்பிக்கை ஏற்படுத்தும்படியாக சட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அப்பொறுப்பை தனிநபர்களின் நல்லுணர்வின் மீது சுமத்தக் கூடாது.

இதற்குப் பதிலாக குறைந்தபட்ச வேலை நேரத்தை 8இல் இருந்து 5ஆக குறைக்க வேண்டும், வாரத்திற்கு 48இல் இருந்து 30ஆக குறைக்க வேண்டும், மீத 18 மணிநே வேலையை ஒரு புதிய ஆளை பணியில் அமர்த்தி அவருக்கு கொடுக்க வேண்டும், அப்படி வேலையில்லாதவர்களுக்கு பணியளித்து நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்கள் வழங்கும் தீர்வு. ஏனென்றால் வேலையற்றோரை பணியில் அமர்த்துவது அவர்களைக் காப்பாற்ற அல்ல, நமது நிதி நிலைமையை மேம்படுத்தவே. இதை பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே முன்னெடுத்துள்ளன. அங்கெல்லாம் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகும் போது வேலை நேரத்தை குறைத்து, வேலையில்லாதோருக்கு வேலை கிடைக்கும்படி பண்ணுகிறார்கள், நிதி நிலைமையை சீர் செய்து, பணவீக்கத்தை குறைக்கிறார்கள். ஆனால் இங்கோ வேலை நேரத்தை அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்து, பொருளாதார வீக்கத்தை அதிகரித்து, அதனாலே விலைவாசியையும் எகிற வைக்கிறார்கள். ஏன் இவ்வளவு அபத்தமாக யோசிக்கிறார்கள்?

கேட்டால் தொழில் வளர்ச்சிக்காக, நெகிழ்வான தொழில் சூழலுக்காக என்றெல்லாம் நாக்கில் விளக்கெணெய் போட்டுக்கொண்டு பேசக் கூடாது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல தொழில் வளர்ச்சியானது பண்டங்களின் அதிக உற்பத்தியிலோ, அதில் இருந்து கிடைக்கும் லாபத்திலோ இல்லை, அப்பண்டங்களை வாங்குவதற்கான பணம் மக்களிடம் இருந்தாலே தொழில் வளர்ச்சி ஏற்படும். அதனாலே ஜப்பானில் மக்கள் சிரமம் பார்க்காமல் 24 மணிநேரமும் வேலை செய்யவில்லையா என உளறக் கூடாது. ஏனென்றால் மக்கள் தம் உடல், மன நலனுக்கு கேடான அளவுக்கு வேலை செய்தால் அதனால் எந்த வளர்ச்சியில் ஒரு நாட்டில் ஏற்படாது. மேலும் இந்தியா ஒரு ஏற்றுமதி சார்ந்த நாடு அல்ல. இங்கு உற்பத்தி அளவுக்கு நுகர்வும் அவசியம். அந்த சமநிலையிலே இந்த பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஏற்கனவே 8 மணிநேரம் எனும் பெயரில் 12 மணிநேரங்கள் மக்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் போது இந்த சுரண்டலையே சட்டபூர்வமாக்குவது தவறு அல்லவா எனக் கேட்பது ஒரு நியாயமான கேள்வியே. 9-9 கடைகளிலும், ஆலைகளிலும் நின்றுகொண்டே ஆணும் பெண்ணும் வேலை செய்தல் கட்டாயம் எனும் நிலை ஏற்பட்டால் அவர்கள் எப்படி வீடு திரும்பி குடும்பத்தை கவனிப்பார்கள், ஓய்வெடுப்பார்கள், சமூகமாக்கல் செய்வார்கள்? 

நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் ஓய்வு என்பதும் கூட சட்டத்தில் எங்கும் குறிக்கப்படவில்லை. அதுவும் நிர்வாகம் முடிவு பண்ணுவதே என அரசு சொல்லுகிறது. எந்த நிர்வாகம் மூன்று நாட்கள் ஓய்வுகொடுக்கும்? அவர்களுக்கு அதில் என்ன லாபம்? இப்படி பொறுப்பைத் தூக்கி நிர்வாகம் மீது போடுவது அவலமானது. 

அதே போலத்தான் ஒரு தொழிலாளி தான் எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என முடிவெடுக்கலாம் எனக் கூறுவதும் - அதற்கான உரிமையை, வேலைப் பாதுகாப்பை ஏன் இச்சட்டம் உறுதிபடுத்தவில்லை? அந்த அதிகாரம் இல்லாத போது அவனால் எப்படி முடியாது எனக் கூற முடியும்? ஓவர் டைமாக இந்த உபரி நேரத்தை எடுத்துக்கொண்டு அரை நாள் சம்பளம் கொடுக்கப்படுமா? அதையும் இந்த மசோதா சொல்ல மறுக்கிறது. அதன் பொருள் இனி அதே மாத சம்பளத்துக்கு நாம் 104 மணிநேரங்கள் ஒரு மாதம் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதே.  

இது எல்லாரையும் பாதிக்காது எனும் வாதத்தையும் நான் ஏற்கவில்லை. ஏனென்றால் தனியாரிலும் லாக் டவுனுக்குப் பிறகு வேலை நேரம் அதிகரித்துக் கொண்டு போவதை பார்க்கிறேன். வெள்ளைக்காலர் வேலைகளிலேயே கூடுதலாக அரை மணிநேரம், ஒருமணிநேரம் என்று அலுவல்ரீதியாகவும், 4-6 மணிநேரங்கள் வேலை நேரத்துக்கு வெளியேவும் அதிக வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள் மக்கள். இப்போது இந்த திருட்டுத்தனங்கள் இன்றி நம்மை நேரடியாகவே 9-9 வேலையிடத்திலே இருக்க சொல்லி அதிக பொறுப்புகளையும் சுமத்துவார்கள். ஒரு வார்த்தை எதிர்த்து கேட்க முடியாது. 

இது நம் மக்களின் உடல், மனநலத்தை முழுக்க சூறையாடப் போகிறது. நம் ஆயுளைக் குறைக்கப் போகிறது. நம் பிள்ளைகளின் கல்வியை பாதிக்கப் போகிறது. போதைப்பழக்கத்தை அதிகப்படுத்தப் போகிறது. தொழிற்சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் சொன்னதைப் போல அடுத்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கில் புதிய மருத்துவமனைகளை இலவசமாக அரசு திறக்கும் நிலை வரப் போகிறது. அந்தளவுக்கு நோயாளிகள் பெருகப் போகிறார்கள்.

இந்த திமுக அரசு இதுவரை நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களின் நற்பெயரை ஒரேயடியாக சூறையாடும் மசோதாவாக இது இருக்கிறது. இது எதிர்ப்பின் மத்தியில் நிறைவேற்றப்பட்டால் அது இந்த அரசை வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லும், அதிமுக-பாஜகவுக்கு சாதகமாகும். ஆகையால் திமுகவின் தோல்வியை உள்ளூர விரும்புகிறவர்கள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை, கூடுதல் வேலை இழப்பை விரும்புவோர் மட்டுமே - அதாவது இந்நாட்டின், இம்மாநிலத்தின் வளர்ச்சியை, இந்த அரசின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி முழுமையாக ஒழிக்க விரும்புவோர் - இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படை.  

இதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்!


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...