Skip to main content

ஒரு புலம்பல் பதிவு


என் மாணவர் ஒருவர். முதுகலை படித்துக் கொண்டிருந்தார். படிப்பின் பகுதியாக அவர் ஒரு ஆய்வுக்கட்டுரையை முடித்து சமர்ப்பிக்க வேண்டும். அவர் “பிரேமம்” படம் குறித்து ஆய்வு பண்ணினார். அப்போது நான் அதே படம் பற்றி முன்பு தமிழில் எழுதிய கட்டுரையில் இருந்து ஐடியாக்களை எடுத்து தன் ஆய்வை செய்தார். அதற்கும் நான் தான் நிறைய விளக்கங்களை அளித்து அவரை வழிநடத்தினேன். ஆனால் ஆய்வுக்கட்டுரையில் என்னைப் பற்றி எதையும் குறிப்பிடாமல் அவர் நழுவிட பார்க்க நான் அவரைப் பிடித்து நிறுத்தி “தம்பி நீ என்னை மேற்கோள் காட்டியே ஆகணும்” என நான் கண்ணை உருட்டியதால் அவர் அதை செய்தார். அதன் பிறகு அவர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் ஆன போது திரைப்படவியலில் ஒரு பாடத்தை எடுத்தார். அதில் அவர் இந்த ஆய்வைப் பற்றி பேசிட நிறைய மாணவர்கள் அதை பாராட்டியதாகவும், தான் அக்கல்லூரியில் ஒரு ஹீரோ ஆகிவிட்டதாகவும் என்னிடம் பின்னர் வந்து சொன்னார். அட நாம சும்மா எழுதினதுக்கு இவ்வளவு மதிப்பிருக்கா என்று நான் வியந்தேன். அதன் பிறகு என்னிடம் அடிக்கடி வந்து ஆலோசனைகள் கேட்பார். இம்முறை தான் லண்டனில் உள்ள ஒரு பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வு பண்ணவிருப்பதாகவும், அதற்கு சில தலைப்புகளும் ஒரு முன்மொழியும் வேண்டும், நான் உதவி பண்ண முடியுமா எனக் கேட்டார். நாங்கள் அதைப் பற்றி விவாதித்தோம். அப்போது எனக்கு ஒன்று தோன்றியது - நான் எழுதியவற்றை விட செறிவான கோட்பாட்டு ஆய்வுகள் தமிழில் நடந்துள்ளன. பல நல்ல கட்டுரைகள் சிறிய இதழ்களில் எழுதப்பட்டு சில நூறு பேர்களால் படிக்கப்பட்டு கடந்து செல்லப்படுகின்றன. என்னுடைய கட்டுரையையே ஒருவர் பட்டப்படிப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி வேலையிடத்திலும் ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள முடியுமெனில் தமிழில் உள்ள மற்ற எழுத்தாளர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைத்தால் என்னென்ன செய்வார்கள்? மற்றொரு ஏக்கமும் எனக்குள் எழுந்தது: என்னை ஒரு ஏணியாக வைத்து ஒருவரால் இவ்வளவு உயரத்துக்கு செல்ல முடியும் என்றால் என்னால் ஏன் முடியவில்லை? நான் ஏன் யாருமே பார்க்காத மூலையில் கறுப்புவெள்ளைக் காலத்து மேஜர் சுந்தர்ராஜன் போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? திறமைக்கு மதிப்பில்லையா? இல்லை என்பதே கசப்பான உண்மை.
நான் நினைத்தால் இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முனைவர் பட்ட ஆய்வுக்கான முன்மொழிவை சுலபத்தில் எழுதிட முடியும். இன்று வெளிநாட்டு பல்கலைகளில் சுலபமாக இடமும் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் அங்கே விண்ணப்பித்து போக முதலில் பணம் வேண்டும். அதை வைத்து அங்குள்ள அடிப்படை செலவுகளை பார்த்துக்கொள்ள முடிந்தால் மிச்ச செலவுக்கு உதவித்தொகை பெற முடியும். அரிதாக 100% செலவுகளுக்கு உதவித்தொகையும் கிடைப்பதுண்டு. ஆனால் முதலில் முதலீடு செய்ய பணம் இருந்தால் சட்டென கிளம்பிப் போய்விடலாம். அங்கே படித்துக்கொண்டே வேலை செய்யலாம். ஒருவேளை அங்குள்ள பல்கலை ஒன்றில் விரிவுரையாளராகவும் ஆகலாம். நான் சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு அங்கு போய் படிக்க முயன்ற போதும் நிலைமை இதுவே - ஆனால் அப்போது என் பெற்றோரால் என்னை சென்னைக்கு படிக்க அனுப்பவே முடியவில்லை. வீட்டில் பணப்பிரச்சினை மிக மோசமாக இருந்தது. அவர்கள் சிரமப்பட்டு அனுப்பும் பணத்தை விடுதிக் கட்டணத்துக்கு செலுத்தவே எனக்கு குற்றவுணர்வாக இருக்கும். ஆனால் நான் இன்று பாடமெடுக்கும் மாணவர்களில் பாதிக்கு பாதி பேர் வெளிநாட்டு பல்கலைகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஆட்டோ பிடித்து பப்புக்கு போவதைப் போல விமானம் பிடித்து வெளிநாட்டுக்குப் போகிறார்கள். இன்று நம்முடன் பேசிகொண்டிருந்தவர் அடுத்த வாரம் ஆக்ஸ்போர்டில் இருக்கிறார். இத்தனைக்கும் அவர்கள் மிகச்சிறந்த, மிகத்திறமையான மாணவர்கள் அல்ல. சிறந்தவர்களே வெளிநாட்டுக்கு படிக்கப் போக முடியும் எனும் பிம்பம் இப்போது கலைந்து வருகிறது. அவர்கள் அங்கு போனதும் தற்சமயத்தில் உச்சத்தில் இருக்கிற சிந்தனையாளர்களுடன் விவாதிக்க, ஆய்வு செய்ய முடிகிறது. அவர்களுடைய ‘தகுதி’ பலமடங்கு உயர்கிறது. இங்குள்ள ஒரு ஆய்வாளர் ஒரு பெயர்பெற்ற பதிப்பகத்தில் கட்டுரையை பதிப்பிக்க நிறைய பிரயத்தனம் செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ இருந்தால் இந்த கதவுகள் சுலபத்தில் திறந்துவிடும் என்பது மட்டுமல்ல, ஆய்வுத்தொகுப்புகளை நீங்கள் எடிட் செய்யக் கூட முடியும். முன்பு இருபதாண்டு உழைப்பால், தகுதியால் பெற்ற வாய்ப்பை இன்று ஒருவர் “ஹலோ” சொன்னவுடன் எடுத்துக் கொடுத்துவிடுகிறார்கள். வெள்ளையர்களுடன் வெள்ளையர்களின் நிறுவனம் ஒன்றில் நீங்கள் படித்தாலோ வேலை செய்தாலோ போதும்.
ஒரு கட்டுரையை நீங்கள் இந்தியாவில் இருந்து உள்ளூர் மொழியில் எழுதினால் நாயும் சீந்தாது. அதையே லண்டனில், நியூயார்க்கில் இருந்து ஆங்கிலத்தில் எழுதினால் அதன் மதிப்பே வேறு. அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக ஹிந்துவில் நடுப்பக்க கட்டுரை எழுதுவீர்கள். அதை (நிங்கள் அயல்நாட்டு ஆய்வாளர் என்பதாலே) ஊன்றி கவனிப்பார்கள். நானும் என்னுடைய சக எழுத்தாளர்கள் பலரும் சற்று வேறொரு சமூகத்தட்டில் பிறந்து இங்கெழுதுவதை ஆங்கிலத்தில் எழுதினால் நாங்கள் நாங்கள் சொல்வதை ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் வைன் கோப்பைகளை கிளிங் என முட்டியபடி வெள்ளையர்கள் விவாதிப்பார்கள், இந்தியர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள். வி.எஸ் நைப்பாலின் முன்னோர்கள் கூலிகளாக மே.இ தீவுகளுக்கு செல்லாமல் இருந்திருந்தால் அவர் ஏதாவது ஒரு மாநில மொழியில் எழுதி பேருந்து ஏறி வீட்டுக்குப் போய் டிவி பார்த்துக்கொண்டு மனைவியின் பொருமல்களைக் கேட்டுக்கொண்டு இருட்டில் இருந்திருப்பார். ஆனால் அவர் நோபல் பரிசை வென்று, மூன்று பெண்களை மணந்து உலகப்புகழுடன் வளமாக வாழ்ந்தார். சல்மான் ரஷ்டியின் பெற்றோர் இங்கிலாந்துக்கு இடம்பெயரால் இருந்திருந்தால் அவர் ஒரு மாடல் உட்பட ஐந்து பெண்களை மணந்து 20 மில்லியன் நிகர மதிப்புடன் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்திருக்க மாட்டார். அங்கே அவரை யாராவது கத்தியால் குத்தினால் உலகமே ஒரு நொடி ஸ்தமிக்கிறது. இங்கே நம்மை அதே போல் ஒரு இஸ்லாமிய படைப்பாளி ஒரு இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டால் பெரும்பான்மைவாதத்துக்கு விலை போன துரோகி என முத்திரை குத்தப்பட்டு “கத்திக்குத்து கந்தன்” என சக எழுத்தாளர்களும் சமூகவலைதள போராளிகளும் அவருக்கு பட்டம் சுமத்தி கலாய்ப்பார்கள். நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசம் கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்பு, சமூகத்தொடர்புகள் மற்றும் பணம். திறமையும் உழைப்பும் இரண்டாம் பட்சமே!
சாரு சொன்னதைப் போல இந்த *** கூடாரத்தில் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டு நாம் இருப்பதற்கு காரணமே இந்த தப்பான நாட்டில் நாம் வாழ்வது தான்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...