முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொப்பை ரகசியம்

 எப்படீங்க தொப்பையை குறைக்கிறது என ஒரு நண்பர் கேட்டார். எனக்கும் தெரியவில்லை. சொல்லப் போனால் யாருக்கும் தெரியாது. அறிவியல் என்ன சொல்லுகிறதென்றால் வயிற்றில் திரளும் கொழுப்பானது எடை குறைப்பின் போது கடைசியில் தான் போகும். அது உண்டியல் காசு, தங்கம் போல. ரொம்ப தேவைப்பட்டால் தான் உடைப்போம், அடகு வைப்போம் என்பது உடலின் முடிவு. அதனால் தனியாக வயிற்றுக்கு பயிற்சி செய்வது பெரிதாக உதவாது. எடை குறைய குறைய உடலின் வடிவம் மாறிக்கொண்டே வருவதைப் பார்ப்போம். எங்கு முதலில் கொழுப்பு சேர்ந்ததே அதுவே கடைசியாகப் போகும் என அறிஞர்கள் சொல்கிறார்கள். அதாவது எடையேற்றமும் எடைகுறைப்பும் ஒன்றுக்கு மற்றொன்று தலைகீழாக நடக்கும். அதனால் பொறுமை அவசியம் - ஹீரோ அடியாட்களில் ஒவ்வொருவராக அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் வருவதைப் போல நாம் கடைசியில் தொப்பையிடம் வந்து "வாடா இப்போ" என சொல்வோம். ஒரு விளையாட்டு என நினைத்தால் அது ஜாலியாக இருக்கும்.


நான் என்ன செய்தேன் என்று கேட்டால் இரண்டு விசயங்களை சொல்வேன். இது அனேகமாக எல்லாருக்கும் உதவும்:
1) ஒருவேளை தான் உணவு - 18 மணிநேர உண்ணாநோன்பு.
2) விரதத்தை இரண்டு ஸ்பூன் நெய் சாப்பிட்டு முடிப்பது. அடுத்து இரவுணவுக்கு காய்கறி - புரோட்டீன் + நல்ல கொழுப்பு - மாவுச்சத்து ஆகியவற்றை 60-30-10 எனும் விகிதப்படி சாப்பிட்டேன். ஒரு பெரிய குவளை நிறைய வேகவைத்த காய்கறி என்றால் சிறிய கிண்ணத்தில் வேக வைத்த சிக்கன் / மீன் / இரண்டு மூன்று முட்டைகள் போன்ற உணவு. கூடவே கொஞ்சம் சீஸ் அல்லது ஒரு ஸ்பூன் வெண்ணெய். அடுத்து மற்றொரு சிறிய கிண்ணத்தில் வேகவைத்து நொதிக்க வைக்கப்பட்ட சிறுதானிய உணவு. கூடவே தயிர். ஒருநாள் சிறுதானியம் வேண்டாம் என்றால் 150 கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கு. வாரம் மூன்று நாட்கள் இப்படி எனில் அடுத்த 3-4 நாட்கள் இந்த மாவுச்சத்தை தவிர்த்து விட்டு புரதத்தை அதிகமாக எடுத்துக் கொள்வது (150 கிராம் சிக்கன் / 200 கிராம் மீன் / ஐந்து முட்டைகள்). கூடவே தயிரையும் அதிகமாக்குவது. இது ஒரு சமச்சீரான உணவு. இதில் உடம்புக்கு தேவையான புரதம், காய்கறியில் இருந்து கிடைக்கும் சத்துக்கள், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, கொஞ்சம் மாவுச்சத்து, நொதித்த உணவில் இருந்து நல்ல கிருமிகள் என ஏராளமான பயன்கள் உள்ளன. முக்கியமாக சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏகத்துக்கு எகிறாது. இதற்கும் சர்க்கரை நோய்க்கும் சம்மந்தம் இல்லை. இயல்புடல் கொண்டவர்களுக்கும் 70% மாவுச்சத்து + 30% புரோட்டீன் என சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும். (பின் இன்சுலில் சுரந்து அடங்கும்). இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் பெருங்குடலில் உள்ள நல்ல கிருமிகளும் இறந்து போகின்றன. இதெல்லாம் சேர்ந்தே நம் உடலை காங்கிரஸ் கட்சியைப் போல ஆக்கி விடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...