முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரு நகல் சித்தாந்தங்களுக்கு மத்தியில்


இன்று என் நண்பரான ஒரு சமூகவியல் பேராசிரியருடன் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கருத்துக்கள் நாட்டில் திரண்டு வருவதாகவும், தென்னிந்தியா - வட இந்தியா என ஒரு பிரிவினை தோன்றி வருவதாகவும் விரைவில் உள்நாட்டுக் கலகம் தோன்றக் கூடும் என்றார். நான் அவரிடம் எனக்கு வேறொரு பார்வை இது குறித்து உள்ளதாக சொன்னேன். இன்று பாஜகவின் சித்தாந்தத்துக்கு சார்பாகவோ எதிராகவோ மக்கள் சிந்திப்பதாகத் தோன்றவில்லை, மாறாக மக்களுக்கு சிந்திப்பதில் நம்பிக்கை போய்க்கொண்டிருக்கிறது என்றேன். நான் இதை என்னைச் சுற்றி உள்ளவர்களின் உளவியல், போக்குகள், நான் கற்பிக்கும் இளைஞர்களிடம் தென்படும் இயல்புகள், நாட்டுநடப்பு ஆகியவற்றை வைத்து சொல்கிறேன். ஜெயமோகன் சொல்வதைப் போல இதை ஒரு எழுத்தாளனின் உள்ளுணர்வு எனலாம். என்னுடைய உள்ளுணர்வு இதுதான்: பொதுவாக சிந்திப்பதன் நோக்கம் அறிவைப் பெறுவது, அறிவைப் பெறுவதன் நோக்கம் தெளிவு, மகிழ்ச்சி, வெற்றி, சமூக அங்கீகாரம் ஆகியவை. துரதிஷ்டவசமாக பின்நவீன காலத்தில் அறிவு என்பதே வெறும் தகவல், தகவல் என்றாலே அதிகாரத்திற்கான கருவி, அறிவென்றாலே நாம் வாங்கித் துய்க்கிற ஒரு பண்டம் என்றாகி விட்ட பின்னர், மக்கள் சிந்திப்பதை கூட ஒரு பயன்மதிப்பு உள்ள செயலா என வினவத் துவங்குகிறார்கள்.
அதாவது இதைக் குறித்து சிந்தித்தால், கற்றுக்கொண்டால், இதைப் பொருட்படுத்தினால் எனக்கு என்ன பயன் என்பது முக்கியமான கேள்வி இன்று. ஒரு புத்தகம் படித்தால் என்ன பயன்? ஒரு கவிதை படித்தால் என்ன பயன்? அரசியல்படுவதால் என்ன பயன்? நாட்டுக்காக உழைத்தால் எனக்கு என்ன பயன்? அன்பு பாராட்டினால் என்ன பயன்? யோசித்தால் என்ன பயன்? பேசினால் என்ன பயன்? நான் தூங்கினால் எனக்கு என்ன பயன்? ஒழுங்காக சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா? அதனால் எனக்கு என்ன பயன்? உன்னுடன் வாழ்ந்தால் என்ன பயன்? உன் குழந்தையைப் பெற்றால் என்ன பயன்? உன்னைப் பிரிந்தால் என்ன பயன்? இப்படி மனிதர்கள் சிந்திப்பது இயல்பாகி விட்டது. இது இயல்பானது, அதனால் இப்படி இருப்போம் என்பது இன்று ‘இயல்பற்றது’. எதுவும் அதன் பயன்மதிப்பின் படியே ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இலக்கியம் படித்தால், புத்தகம் வாசித்தால் அது வாழ்க்கையில் முன்னேற உதவும் என்று வாசிப்பை இன்று சந்தைப்படுத்த வேண்டி இருக்கிறது. ஜெயமோகன், செல்வேந்திரன் ஆகியோர் புதிய வாசகர்களை நோக்கி அடிக்கடி இவ்வாறே பேசுகிறார்கள். ஆனால் இது உண்மையில்லை என நமக்குத் தெரியும் - புத்தக வாசிப்பு அதிகமாகும் போது மக்கள் உலகியல் வெற்றியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். ஆனால் இந்த உண்மையை சொன்னால் இன்று யாருமே வாசிக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் பயன்மதிப்பில்லாத பொருளும் வேண்டும் என நினைத்தார்கள், இன்று கண்ணை மூடிவிட்டு அதை தூக்கி கடாசி விடுவார்கள்.
அரசியல்வயப்படுவது ஒரு பொதுநல நோக்கிறாகவே. அதற்கு தர்க்க சிந்தனையும் சமூக அக்கறையும் அவசியம். இவை இரண்டுமே ஒரு தனிமனிதனுக்கு நேரடி பயன்மதிப்பற்றவை. அதனாலே இன்றைய இளைஞர்களிடம் நீங்கள் இந்த இரண்டையும் ‘விற்க’ முடிவதில்லை. தனக்கு பொருளீட்டித் தராத, உலகியல் பயனளிக்காத தர்க்க சிந்தனையை அவர்கள் ஏற்க மாட்டார்கள். இதை நான் வணிகவியல், நிர்வாகவியல் படிக்கும் மாணவர்களிடம் அதிகமாக பார்க்கிறேன். அவர்களிடம் நீங்கள் சமூக முன்னேற்றம், அறம், தர்க்கம், அரசியல், இலக்கியம் என எதைப் பற்றி பேசினால் அலுப்பாகி அந்நியமாகி விடுகிறார்கள். அறிவியல் கற்கும் மாணவர்களோ இதனால் எனக்கு என்ன பயன் என யோசிக்கிறார்கள். மானுடவியல் மாணவர்களோ இந்த கருத்துக்களுடன் உறவாடினாலும் ஆழமான நம்பிக்கையற்றிருக்கிறார்கள். மாணவர்களே இப்படி என்றால் பொதுமக்கள் மேலும் மேலும் அந்நியப்பட்டிருக்கிறார்கள்.
இந்த போக்குடன் பாசிச சிந்தனை கைகோர்க்கும் போது ஒரு ஆபத்தான மனப்பான்மை தோன்றுகிறது - இந்துத்துவ கருத்தியல் குறித்த எந்த புரிதலும் இன்றி, மேலோட்டமான கருத்துக்களை கேள்விப்பட்டதை வைத்து அக்கருத்தியலுடன் இணங்கிப் போகிறவர்கள், எதிர்க்கருத்தியல், எதிர்முகாமை சேர்ந்தோரை கடுமையாக வெறுக்கும், தாக்கும் மக்களை இன்று அதிகமாக பார்க்கிறேன். நான் இவர்களை போலி இந்துத்துவர்கள், போலி வலதுசாரிகள் என்பேன். நகல் இந்துத்துவர்கள் என்றும் கூறலாம். அசல் இந்துத்துவர்களை விட இன்று நகல் இந்துத்துவர்களே பெருகி வருகிறார்கள். வலதுசாரி சிந்தனை இவர்களுக்கு வசீகரமாக இருப்பதற்கு இரு காரணங்கள்:
வலதுசாரி சிந்தனை இன்று அதிகாரம் பெற்றிருக்கிறது. தன்னை நோக்கி வருவோருக்கு மட்டுமீறின அதிகாரத்தை அது அள்ளி வழங்குகிறது. தன் கதவுகளை இச்சிந்தனை ‘திறந்து’ வைத்திருக்கிறது. ஆனால் இதற்கு எதிர்முகாமை சேர்ந்த இடதுசாரி, மையவாத சிந்தனையோ சற்று ‘மூடி’ இருக்கிறது, நீ உழைத்து என்னைப் புரிந்து கொள், நீ பயன்மதிப்பு கோராமல் என்னை ஏற்றுக்கொள் என்கிறது. அது இவர்களுக்குப் பிடிக்கவில்லை.
இன்று மனிதர்கள் - வெற்றி பெற்றவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் என எல்லாருமே - தம்மை பாதிக்கப்பட்டவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் கருதுகிறார்கள். இது ஒரு மிகை கற்பனை. இவர்கள் இந்த மிகை கற்பனைக்கு சான்றாக எதையும் வைத்திருப்பதில்லை. மாறாக ஒரு மிகை வெறுப்பே இந்த மிகை கற்பனையை செலுத்துகிறது. இந்த மிகை வெறுப்பு ஒரு கற்பனையான மற்றமை மீது செலுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. தனது துயரத்துக்கு யார் காரணம் என இவர்களுக்கு தெரிய வந்தாலும் அவர்கள் அதை ஏற்கவோ அதைக் குறித்து சிந்திக்கவோ தயாரில்லை. ஏனென்றால் அச்சிந்தனை அவர்களுக்கு அதிகாரத்தை தராது. அதனால் அவர்கள் கற்பனையே ஆனாலும் தமக்கு ஒருவித சமூக அதிகாரத்தை அளிக்கும் மிகை வெறுப்பின் மீது நின்று சிந்திக்கவும், கொந்தளிக்கவும், போலி அரசியல் செய்யவுமே விரும்புகிறார்கள்.
இந்த நகல் வலதுசாரிகளிடம் நீங்கள் எதையும் சொல்லி புரிய வைக்கவோ திருத்தவோ முடியாது. என்ன பிரச்சினை என்றால் இன்று இன்னொரு பக்கம் இடதுசாரிகள், மையவாதிகளும் ஒருவித நகல்களாக மாறி வருகிறார்களோ என்பதே. தேவைப்படும் போது தேவையான அளவுக்கு அரசியல் பண்ணிக்கொள்ளலாம், தமது எதிர்ப்பரசியலையும் பயன்மதிப்பு கொண்டதாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் போதம் அவர்களுக்கு அதிகமாகி விட்டது. ஒருவர் ஆவேசமாக சமூக பிரச்சினைகளைப் பற்றி பேசினால் உணர்ச்சிவசப்படாமல் மற்றமை மீதான கோபமாக மட்டும் அதை மாற்றி ஒரு சுய பொழுதுபோக்காக அதை மாற்றிக்கொள்கிறோம். முற்போக்காளர்களின் அரசியலும் இப்படி சமூக பிடிப்பற்றதாக மாறி வருகிறது. அவர்களுக்கும் தாம் நடப்பு உலகில் இருந்து, சமூகத்தில் இருந்து அந்நியப்படுகிறோமோ எனும் ஐயப்பாடு வலுவாகி வருகிறது.
ஒரு உதாரணம்: புதிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்து நான் ஒரு புத்தகம் எழுதினேன் (“நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?”). ஆனால் இன்று ஒரு கல்வியாளனாக அதே கல்விக்கொள்கையை ஏற்று அதன்படி கல்வித்திட்டத்தை நான் வரையும் போது எனக்கு அந்த ‘கோபம்’ இருப்பதில்லை. அதில் உள்ள சௌகரியமாக பகுதிகளை மட்டும் கருதி, மிச்சத்தை மறந்து நான் என் பணியை ஆற்றுகிறேன். இது புதிய கல்விக்கொள்கைக்குள் ஒரு புத்தம் புது கல்விக்கொள்கையாக என் மனதுக்குள் உருக்கொள்கிறது. நான் என்னையே ஏமாற்றிக் கொள்கிறேன். எனக்கு வேறு வழியில்லை தான். ஆனால் இப்படித்தான் நாம் ஒவ்வொரு வரும் அதிகாரவயப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட சிந்தனையை நம் வயப்படுத்தி அதற்கேற்ப ஒழுகுகிறோம். எனக்கு இதை நினைக்கவே மிகுந்த அவநம்பிக்கையாக இருக்கிறது.
இப்படி இடதும், வலதும் நகலாகிப் போன ஒரு உலகில் நாம் என்னதான் செய்ய முடியும் என்று நான் என் நண்பரைக் கேட்டேன். எனக்கு ஆனால் ஒன்று தோன்றுகிறது - பாசிசம் குறித்து கூடுதலாக ஆய்வு செய்து ஒரு சிறிய நூலை எதிர்காலத்தில் எழுத வேண்டும். இந்த ஆரண்ய காண்டத்தில் மரவுரி தரித்த பஞ்ச பாண்டவர்களான நமக்கு வாய்த்ததெல்லாம் அந்த 'சிறிய சலுகை' மட்டுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...