முதலில் இக்கேள்வியை எதிர்கொள்வோம்:
புர்காவை நான் ஆதரிக்கிறேனா?
முதலில், ஒரு பெண் நைட்டி அணிவது, சேலை கட்டுவது, சட்டை பேண்ட், நிக்கர் டிஷர்ட் அணிவதை நான் எப்படி ஆதரிப்பதோ எதிர்ப்பதோ இல்லையோ அதே போல இதையும் ஆதரிப்பதில்லை, எதிர்க்கவும் இல்லை. மேற்சொன்ன ஆடைகளைப் போலவொன்று தான் புர்காவும். இரண்டாவதாக, பெண்கள் இதைத்தான் அணிய வேண்டும், அணியக் கூடாது என்று முரண்டுபிடிப்பது என் இயல்பு அல்ல.
நான் கவனித்த வரையில் புர்காவை தமக்குப் பிடிக்காமல் அணிவதாக, தம் மீது அது திணிக்கப்படுவதாக இஸ்லாமிய பெண்கள் சொல்வதில்லை. அது அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதி. அது அவர்களுடைய சூழல், அதில் நடக்கும் பல சமரசங்களில் ஒன்று இது.
எனக்கு இந்த ஆடை ஒடுக்குமுறைவாதத்தைப் பொறுத்தமட்டில் சில சந்தேகங்கள் உள்ளன:
சில பள்ளி / கல்லூரி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வேலை செய்ய விரும்பினாலும் சேலையே அணிய வேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் ஒடுக்கப்படுவதாக நாம் ஏன் கோருவதில்லை?
சரி, கன்னியாஸ்திரிகள் தம் தலையை மூடிக்கொண்டு ஒருவித சீருடை அணிவதில்லையா? அது அவர்கள் மீது திணிக்கப்படுவதில்லையா? சில இந்து ஆசிரமங்களில் பெண்கள் மொட்டையடிக்குமாறு வற்புறுத்தப்படுவதில்லையா? அதை ஏன் நாம் கண்டிப்பதில்லை?
ஏனென்றால் பிரச்சினை ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாக ஒரு ஆடையைத் திணிப்பது அல்ல பிரச்சினை, அது பொதுசமூகத்தின், நவதாராளவாத சந்தையின் நுகர்வுக்கு தடையாக இருக்கிறதா எனப்தே பிரச்சினை. சேலை அணியும் ஒரு பெண்ணால் அழகு சாதனப்ப்பொருட்கள், ஆடை அலங்காரங்கள், ஷாப்பிங், பொழுதுபோக்கு வியாபாரம், பப் கலாச்சாரம், ஊடகம் ஆகிய வியாபாரங்களுக்கு பாதிப்பில்லை. லாபமே. இஸ்லாமிய பெண்கள் என்னதான் மேற்சொன்ன பண்டங்களை பயன்படுத்தினாலும், அவர்கள் தாராளவாத சந்தையின் அத்தனை கொடுக்கல் வாங்கல்களின் பங்கெடுத்தாலும் அவர்களுடைய புர்கா அணிந்த உடலானது ‘சந்தைக்கு’ தடையாகவே உள்ளது. இங்கு தான் நாம் நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்ட பாலியல் நோக்கு (gaze) எனும் விசயத்தை கவனிக்க வேண்டும். இந்த ‘நோக்குக்கு’ சந்தை பொருளாதாரத்தில் ஒரு பெரிய முக்கியத்துவம் உள்ளது.
ஒரு அழகியாக ஒருவள் இருப்பது அவ்வாறு அவள் முழுமையாக நோக்கப்படும் (gaze) போதே நிறைவடைகிறது; அதற்கு அவளை நோக்கும் நோக்காளர்களின் பங்களிப்பும் அவசியம். இந்து, கிறித்துவ பெண்ணுடல் இச்சந்தையின் மேற்சொன்ன வணிக பரிமாற்றங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதைப் போல நோக்கின் அடிப்படையில் இஸ்லாமிய உடல் தன்னை அர்ப்பணிப்பதில்லை. அது மூடுண்டிருக்கிறது. இதை நாம் அப்படியே வேலை, வேலையிடத்தில் உள்ள பரிவர்த்தனைகள், பயணம், டிரெக்கிங், அதை ஒட்டிய விளம்பரங்கள், சமூகவலைதளங்கள், அங்குள்ள வணிக பரிவர்த்தனைகள், பெண்கள் நேரடியாக செய்ய வேண்டிய தொழில்கள் என நீட்டித்து யோசித்தால் புர்காவின் சிக்கல் என்னவென்று விளங்கும். நீங்கள் எத்தனையோ டிவி விளம்பரங்களைப் பார்க்கிறீர்கள். அவற்றில் ஒன்றிலாவது ஒரு புர்கா அணிந்த பெண் மாடலாக வருகிறாளா? அவர்களும் தானே ஷாம்பூ பயன்படுத்துகிறார்கள்? ஆனால் ஏன் அவர்கள் அவ்விளம்பரங்களில் வருவதில்லை? ஏன் ஒரு பெண் துப்பட்டி அணிந்து கொண்டு போலீஸ் அதிகாரியாக வலம் வர முடிவதில்லை? ஏன் அவளால் புர்கா அணிந்து கொண்டு வரவேற்பாளினியாக, தொகுப்பாளினியாக இருக்க முடிவதில்லை?
இவ்விவாதத்தில் நம் ஆட்கள் உடனே மத பெரும்பான்மைவாதம், முற்போக்கு சிந்தனை, மதசார்பின்மை என குழப்புவார்கள். மிகுந்த மதசார்பின்மை கொண்ட பிரான்ஸில் இவ்விசயத்தில் என்ன நடந்ததென நாம் பார்க்கவில்லையா? என்னதான் பொதுவான ஆடை என சீருடை காட்டப்பட்டாலும் அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருவிதங்களில் அமைக்கப்படுவதை கவனியுங்கள். பள்ளிச்சீருடையை எடுத்துக்கொண்டால் தனியார் பள்ளிகளில் பெண் சீருடைகள் உடலழகை முன்வைப்பவனவாகும், ஆணின் சீருடை ஏதோ சோளக்கொல்லை பொம்மைக்கு போட்டதைப் போல இருக்கிறது. எந்த பொதுத்தொடர்பு பணியிலும் பெண்களுக்கான சீருடையையும் கவனியுங்கள். சாதாரண ஆடைகளை, செருப்பு போன்ற பொருட்களில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பெண்களின் உடல் ஒரு நுகர்வுக் களமாக இருப்பது வெளிப்படையாகப் புரியும். எல்லாவற்றிலும் ஒரு நுகர்வு இருக்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட பாலியல் நோக்கு செயல்படுகிறது. ஆனால் பாசாங்கு என்னவென்றால் இதை ஒரு ‘சமத்துவமாக’, ‘முற்போக்காக’ நாம் முன்வைப்பது தான்.
பெண்கள் தம் பாலியல் கவர்ச்சியை மறைக்க வேண்டும் என்பதல்ல என் கோரிக்கை. அவர்களை நவீன சமூகம் கையாள்வதில் ஒரு தெளிவான சந்தைப் பொருளாதாரத் திட்டம், நோக்கம் உள்ளது, அதில் தெளிவாக பாலியல் ஒரு கவர்ச்சி அம்சமாக செயல்படுகிறது.
இது ஆண்களுக்கு இருப்பதில்லை கவனியுங்கள் - இத்தனைக்கும் இன்று மிகப்பெரிய அளவில் பெண்களின் சந்தை உருவாகி உள்ளது. ஆனால் எத்தனை ஆண் மாடல்கள் குட்டி குட்டி ஆடைகளில் டிவியில் தோன்றுகிறார்கள், சாலையில் கவர்ச்சியாக எத்தனை ஆண்கள் வலம் வருகிறார்கள்? முன்பு கிராமங்களில் ஆண்கள் சட்டையில்லாமல் லுங்கியுடன் திரிவது ‘கண்கொள்ளா’ கட்சியாக இருந்தது. இன்று நகரங்களில் ஆண்கள் தம் உடலை பெரும்பாலும் பொத்தி மூடிக்கொண்டு ரொம்ப கௌரவமாக நடமாட பெண்கள் அந்த கால ஆண்களைப் போல அதிரிபுதிரியாக திரிகிறார்கள்.
பெண்ணுடலை மையப்படுத்திய ஏராளமான விளம்பரங்களையும் தன்னையே சதா ரசித்து படங்களையும் காணொளிகளையும் பதிவேற்றுகிற, கிடைக்கும் அவகாசத்தில் எல்லாம் தன் தோற்றம் பற்றின பிரக்ஞையுடன் இருக்கும் பெண்களையும் பார்க்கையில் பெண்ணுடல் மீதுலவும் பாலியல் நோக்கானதை சில நேரம் பெண்களே துய்க்கிறார்களோ (தன்னையே ரசித்து நுகரும் தன்னிலை) எனத் தோன்றுகிறது. “அவளோட கேசம் எவ்வளவு பளபளப்பா இருக்கு பாரு” என தன்னை மறந்து சிலாகிக்கும் பெண்கள் அவளிடத்தில் தம்மையே வைத்துப் பார்க்கிறார்கள், அப்போது அவர்கள் தம்மையே நுகர்கிறார்கள். இந்த விளம்பரங்களில் பயனர்கள் தம்மைத்தாமே ரசிப்பதாக, சிலாகிப்பதாகவே வருகிறது. ஒரு சோப்பை, ஷாம்பூவை, கண்டிஷனரை, செருப்பை பயன்படுத்திய பெண்ணை ஒரு ஆண் ரசிப்பதாக வருவதில்லை.
இந்த சந்தை நம்மையெல்லாம் எவ்வளவு பைத்தியமாக மாற்றி வைத்திருக்கிறது பாருங்கள். Self-reflexivityயின் உச்சகட்டம் இந்த காலம் தான். தன்னுடலின் பல்வேறு நகல்களை உருவாக்கி உலவ விட்டு அதையே கண்டு ரசிப்பவர்களாக, அந்த நிழலாட்டங்களைத் தாண்டி மற்றொரு உலகை அறியாதவர்களாக நம்மை இந்த சந்தை மாற்றி வைத்திருக்கிறது. இதில் ஆணுடல் விளிம்புக்கு நகர்ந்து பெண்ணுடல் மையத்துக்கு வந்து மூன்று பத்தாண்டுகள் கடந்துவிட்டன (ஐஸ்வர்யா, சுஷ்மிதா சென்னுக்கு உலக, பிரபஞ்ச அழகிப் பட்டங்கள் கொடுத்து இந்தியாவை லட்சம் கோடி மதிப்புள்ள பெரும் அழகுப்பொருள் சந்தையாக கட்டமைக்க உலக பணக்காரர்கள் தீர்மானித்ததே துவக்க கட்டம்.) இதற்குள் பெருமளவில் வராதவர்கள் இஸ்லாமிய பெண்களே.
இது பெண்ணுடல் மீதான ஆணாதிக்க சமூகத்தின் வெறியீர்ப்பு, ஆதிக்க எண்ணம் என்று நீங்கள் கூறுவீர்கள் எனில் அது நிலப்பிரபுத்துவ சமூகத்தின் கூறு அல்லவா, இன்றைய நகரமைய சமூகங்களில் பெண் சுதந்திரம் அல்லவா இருக்க வேண்டும், பெண் சுதந்திரத்தின் லட்சிய உலகமான நவதாராளவாத சந்தையில் அதே ஆணாதிக்கம் எப்படி செயல்பட முடியும், அப்படி இருக்கிறதெனில் பெண்ணுடலை நுகர்வுப்பொருளாகவும், சுயநகர்வுப்பொருளாகவும் மாற்றுகிற ஆணாதிக்க சிந்தனையை நீங்கள் ஏற்கிறீர்களா எனத் திரும்ப கேட்பேன். ஏனெனில் இந்த சந்தை பொருளாதாரம் சார்ந்த நகரவாழ்வை முன்னேற்றமாக, முற்போக்காக கருதுகிறவர்களே இஸ்லாமியர் புர்காவை வைத்து பெண்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என கூவுகிறவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்ணை அவலப் பாத்திரமாகவும் கவர்ச்சிப் பொருளாகவும் ஒரே சமயம் மாற்றி படமெடுக்கிறவர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் இதே சந்தைப் பொருளாதாரத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கிறார்கள், அவர்கள் அதிகமாக விருதுகள் கொடுத்து, ஊடகங்களில் புரொமோட் செய்து தூக்கிவிடுவதும் இதே கார்ப்பரேட்டுகளாக இருக்கிறார்கள். இதுவே உச்சகட்ட முரண்!
ஆக, பெண்ணுடல் மீதான பாலியல் நோக்கு என்பது பால்நிலை பேதமற்று ஆணிடமும் பெண்ணிடமும் செயல்படுகிறது. நம் தாராளவாத சந்தையின் மையமே பெண்ணுடல் தான். சந்தை பெண்ணுடல் மீதான இச்சையை அடக்கவும், தள்ளிப்போடவும் சொல்லி, அதை சந்தையில் பண்டங்களின் மீதான இச்சையாக இடம் மாற்றி வைக்கிறது. இதை வைத்து இங்குள்ள மொத்த வியாபாரத்தின் அச்சின் சுழல்கிறது. அதற்கு ஒரு காட்சிபூர்வமான எரிச்சலூட்டியாக (visual irritant), ஒரு சந்தை எதிர்ப்பு உருவகமாக புர்கா அணிந்த பெண்ணுடல் இருக்கிறது.
பெண்ணுடலானது நவீன சந்தையில் ஒரு பாலியல் பண்டம் மட்டுமல்ல, அது ஒரு உருவகமும் தான். ஒரு பெண் ஒரு பங்கு சந்தை பற்றிய உயர்மட்ட பொருளாதார விவாதத்தில் கலந்துகொள்ள போகிறார். அங்கு அவர் ஒன்று சட்டை, பேண்ட் அணிந்து நவீனத் தோற்றத்தில் போகிறார். அங்கு அவர், இரண்டாவதாக, புர்காவால் தன்னை முழுக்க மூடிக்கொண்டு போகிறார். இரண்டுமே ஒரே நபர் தான். அங்கு அவர் செய்யும் அறிவார்ந்த பங்களிப்பு ஒன்றே தான். ஆனால் அவர் தன்னை மூடிக்கொண்டு அங்கு பங்களிக்க முடியாது. ஏனென்றால் தன்னுடலை அவர் அதிகமாக மூடிக்கொள்ளும் போது இந்த பொருளாதார அமைப்பின் விழுமியங்களுக்கு நேரெதிரான ஒருவராக தன்னைக் காட்டிக்கொள்கிறார். உடலெனும் இந்த உருவகம் விடுக்கும் சேதிகளும் இன்றைய சூழலில் மிக முக்கியம். ஒருவர் பேசுகிற கருத்துக்கள், அதன் பின்னுள்ள சமூகப்பொருளாதார அரசியல், அவரது தோற்றம் எனும் உருவகம் உணர்த்தும் கருத்தியல் இன்று ஒரே நிலையில் இருந்தாக வேண்டும்.
இப்படி பாலியல் பண்டமாக்கல், நுகர்வு, உடலை ஒரு சந்தைப்பொருளாதார கருத்தியலின் உருவகமாக்கல் என எல்லா அலகுகளின் படியும் இஸ்லாம் முழுமையாக இடைஞ்சலாக இருக்கிறது. இஸ்லாமிய பாரம்பரியவாதம் மற்ற மதங்களைப் போலன்றி முழுமையாக இன்னும் இந்த சந்தைப் பொருளாதார வாழ்க்கைக்கு குடும்பங்களைத் திறந்துவிடவில்லை. (இதையே நம் முற்போக்காளர்கள் எனும் சந்தைப் பொருளாதார அடிபொடிகள் பிற்போக்குவாதம் என்கிறார்கள்.) மரபார்ந்த இஸ்லாம் - ஒரு உதாரணத்திற்கு - ‘நீ கேசத்தை கழுவ ஷாம்பூ பயன்படுத்து, ஆனால் அதை பப்பரப்பே எனத் திறந்து போட்டுக்கொண்டு இலவசமாக சந்தைக்கு விளம்பரம் பண்ணாதே’ எனத் தடுக்கிறது. ஆனால் நாம் கேச பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவதே நமது உடலழகைக் காட்டி சுயமுன்னெடுப்பை செய்யத்தானே! அது சரி, தப்பு எனும் கருத்துக்குள் நான் வரவில்லை - ஆனால் நாம் ஒரு தோள் பையை வாங்கும் போது அதன் பயன்களை மட்டுமே தான் கருதுகிறோம், ஆனால் அதை வாங்கிய பின்னர் அது ஒரு அலங்காரப் பொருள் ஆகிறது. நாம் இப்போது அந்த பிராண்டுக்காக இலவச விளம்பரத்தை பண்ணுகிறோம். அப்போது நமக்கும் சமூகத்தில் மரியாதை அதிகமாவதாக நம்புகிறோம். என்ன சுவாரஸ்யம் என்றால் தோள் பை மட்டுமல்ல நமது கேசம், கை, கால்கள் என ஒரு இடம் விடாமல் நாம் ஒரு விளம்பர பலகையாகவே - வியாபார நிறுவனங்களுக்கான இலவச விளம்பரம் - மாற்றி வைத்திருக்கிறோம். ஆனால் இதை உணராமல் நமது தேவைக்காகவே பயன்படுத்துவதாக சொல்லிக் கொள்கிறோம். ஏனென்றால் சந்தைக்கும் நமக்கும் இடையில் ஒரு மறைமுக ஒப்பந்தம் இருக்கிறது - உன் பண்டங்களின் நுகர்வோனாகி விட்டால் உனக்கான விளம்பர மாடலும், புரோமோட்டரும் நானே, நான் மேலும் பலரை உனக்காக புதிதாக சேர்த்துவிடுவேன் என்பது அது. என்ன பிரச்சினை என்றால் கடந்த சில பத்தாண்டுகளில் நாம் கண்மூடித்தனமான நவதாராளவாத ஆதரவாளர்களாகி விட்டதால் அதன் தாக்கம் நம் சிந்தனைகளில் ஏற்பட்டுவிட, நம்மை அறியாமல் ஒரு முதலாளியைப் போலவே யோசிக்கத் துவங்கிவிட்டோம். நவீனமாக ஒருவர் தோன்றினால், சந்தையில் உற்பத்தி-நுகர்வு என ஈடுபட்டால் அவர் சமத்துவத்துக்கு ஆதரவானவர், ஒருவர் இதற்கு இடைஞ்சலாக இருந்தால் அவர் ஏற்றத்தாழ்வை பின்பற்றுகிறவர்கள், அவர் பழமைவாதி என சாடுகிறோம்.
சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு உபவிளைவாக நமக்கு சமத்துவம் கிடைத்துவிட்டது என கற்பனை செய்துகொள்கிறோம் - ஆனால் நாம் முன்பை விட அதிகமாக வேலை செய்கிறோம், செலவு செய்கிறோம், கடனாளிகளாக இருக்கிறோம், மிகக்குறைவாக தூங்குகிறோம், நிம்மதியற்று தவிக்கிறோம், ஒருவர் வேலை செய்து நடந்த குடும்பங்கள் இன்று இருவரது சம்பளத்தால் கூட நடக்கத் திணறுகிறது என்பதே எதார்த்தம். ஆனால் கையில் பையுடன் ஷாப்பிங் போனால், அமேஸானில் ஒரு புதிய ஷூவை வாங்கி அணிந்தால், போன் வைத்திருந்தால் அதை பெரும் சமூகநீதி, சமத்துவம் என நாம் நம்புகிற அவலம் இன்று நேர்ந்திருக்கிறது. மத்திய வர்க்கம் மேல்மத்திய வர்க்கம் ஆனதால் எப்படி சமத்துவம் வரும்? சரி அதனால் கூட பிரச்சினை இல்லை - முன்பு வர்க்கரீதியாக, பொருளாதார அளவுகோலின் படி மாற்றங்களை பரிசீலித்த சிந்தனைப்பாங்கு இன்று முழுக்க காணாமல் போய் சில எலைட் போலி இடதுசாரி சிந்தனையாளர்கள் கூட கார்ப்பரேட் மார்க்கெட்டிங் மேலாளர்களைப் போல பேசத் துவங்கியிருக்கிறார்கள். இந்த மேற்தட்டு முற்போக்கு கும்பலே புர்கா எதிர்ப்பு கதையாடலின் பிதாமகர்கள் என்று தோன்றுகிறது.
கவனித்துப் பாருங்கள், இஸ்லாமிய பெண்ணுடலை விடுவிக்கிற பிரச்சாரத்தைப் பொறுத்தமட்டில் பாஜகவினரின் கதையாடலும் எலைட் பெண்ணியவாதிகள், எலைட் முற்போக்காளர்கள், போலி இடதுசாரிகளின் வாதங்களும் பல இடங்களில் பொருந்திப் போகின்றன என்பதை கவனியுங்கள். இதே புர்காவை ஆண்கள் அணிந்தால் அவர்கள் உண்மையில் கண்டுகொள்ளவே மாட்டார்கள். கேட்டால் ஆண்களே தம்மைத்தாமே ஒடுக்க இயலாது என்பார்கள். ஆனால் நிஜம் என்னவென்றால் ஆணுடலுக்கு நுகர்வுக் கலாச்சாரத்தில் எந்த மதிப்பும் இல்லை. ஆனால் பெண்ணுடலுக்கு பெரும் மதிப்பு உள்ளது.
நாம் நினைப்பதை போல இஸ்லாமியர் மீது பொதுசமூகத்துக்கு உள்ள வெறுப்பின் வடிகால் அல்ல புர்கா எதிர்ப்பு. மாறாக, இது சந்தைப் பொருளாதாரத்திற்கு இஸ்லாமிய பெண்ணுடல் முழுக்க தன்னை கையளிக்காததன் சிக்கலே ஆகும். மற்ற மதத்தவர்கள் இஸ்லாமியரிடம் போய் “நீ மட்டும் ஏன் உன் பெண்களின் உடலை பூட்டி வைக்கிறாய்? அதில் எங்கள் சந்தைக்கு பங்குள்ளது” என்று கேட்க நினைத்து “நீ மட்டும் ஏன் ஆணாதிக்கவாதியாக இருக்கிறாய்? நீ ஏன் பெண் முன்னேற்றிற்கு தடைபோடுகிறாய் கொடுமைக்காரா?” எனக் கேட்கிறார்கள். ஒரு வணிக கதையாடல் இங்கு முற்போக்கு பெண்ணிய கதையாடலாக வேஷம் போட்டு “ஓ ரசிக்கும் சீமானே வா” என நடனமாடுகிறது.
இங்கு நாம் கடைசியாக புர்கா அணியும் இஸ்லாமிய பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்க வேண்டும். நாம் எங்குமே இதைக் கேட்பதில்லை என்பதை கவனிக்க வேண்டும். புர்கா ஒடுக்குமுறையைப் பற்றி ஆவேசமாக பரவலாகப் பேசுகிறவர்கள் இந்து சமூக ஆண்களும், இந்து சமூக மேற்தட்டு பெண்ணியவாதிகளும், இஸ்லாமிய சமூக எலைட்டுகளுமாக இருக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்தமாக தாராளவாத சந்தையின் முகமாக நம் முன் வருகிறார்கள். ஆனால் ஏன் இப்பெண்களை நாம் பேசவிடுவதில்லை என்றால் நம் வேஷம் கலைந்துவிடும் எனும் அச்சத்தினாலே. எனக்கு என் பதின்வயது முதலே இஸ்லாமிய தோழர்களும் தோழிகளும் உண்டு. இவர்களில் குறிப்பாக புர்கா அணியும் இஸ்லாமிய பெண்களிடம் உரையாடும் போது அவர்கள் இதை ஒரு அரசியல் அடையாள செயல்பாடாக கருதுகிறார்கள் என்பதைக் காண்கிறேன். அவர்கள் சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் இதை வெளிப்படையாக முன்வைக்காமல் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட உரையாடலில் கேட்டால் சொல்வார்கள். இன்னொரு விசயம் - நான் ஏற்கனவே சொன்னதைப் போல - நைட்டி, சேலை அணிவதைப் போலத்தான் இதுவும். அவர்கள் இதனுள் இருந்தபடியே இந்த வாழ்க்கை தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி வளர்கிறார்கள், படிக்கிறார்கள், இயன்றால் வேலை பார்க்கிறார்கள், சமூகமாக்கல் செய்கிறாரக்ள், நாம் நினைப்பதைப் போல, சினிமாக்கள் சொல்வதைப் போல அவர்கள் ஒன்றும் கூண்டுக்கிளிகள் அல்ல. அது அவர்களுடைய கலாச்சாரத்தின் பகுதியான ஆடை என்பதைத் தவிர அவர்களுடைய கழுத்தில் தொங்கும் பாறாங்கல்லோ கால்களின் பிணைக்கப்பட்ட சங்கிலியோ அல்ல. ஒரு மாற்றுத்திறனாளியைக் கண்டதும் “ஐயோ பாவம்” என எப்படி சொல்ல தலைப்படுகிறோமோ, அந்த சொல்லைக் கொண்டு அவரை மற்றமையாக்கி இடைவெளியை உண்டுபண்ண தலைப்படுகிறோமோ அதையேதான் புர்கா அணிந்த பெண்களிடத்தும் நாம் பண்ணுகிறோம் எனத் தோன்றுகிறது. இந்த “ஐயோ” தான் புர்காவை விட ஆபத்தானது. ஏனென்றால் இந்த “ஐயோ” அந்த புர்காவின் பின்னுள்ள மனுஷியைக் கொன்றுவிடுகிறது. அவளை பேச்சற்ற ஒரு பொம்மையாக்கி விடுகிறது. அவளுக்கு வசனங்களைக் கொடுத்து பேச வைக்கும் பொறுப்பை நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. நான் சொல்கிறேன், நீங்கள் முதலில் இப்பெண்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்துங்கள். அவர்களில் பெரும்பாலானோர் உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டால் புர்காவை எதிர்த்தாடுங்கள். ஆனால் அந்த முகமையை ஒருபோதும் அவர்களுக்கு அளிக்க மாட்டீர்கள்.
என்னிடம் ஒரு இஸ்லாமிய மாணவி படங்களில் இஸ்லாமியர் குறித்த தேய்வழக்குகளைப் பற்றி ஆய்வு செய்கிறார். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது குறித்த சர்ச்சை கர்நாடகாவில் பற்றி எரிந்த மாதங்களில் அவர் மேற்தட்டு வர்க்கத்தினர் படிக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியையாக சென்றார். அங்கு மாணவர்கள் அவரது ஹிஜாப்பை கடுமையாக கேலி செய்தும், கேள்விக்குட்படுத்தியும் கடும் நெருக்கடி கொடுத்தனர். “என்னிடம் பள்ளி நிர்வாகம் ஹிஜாப் அணியக் கூடாது என நேரடியாக சொல்லவில்லை என்றாலும் அங்குள்ள சூழலை எதிர்கொள்வது மிகக்கடினமாக இருந்தது” என்று அவர் சொன்ன போது அவரது கண்கள் தளும்பி விட்டிருந்தன. இத்தனைக்கும் அவர் ஒரு நவீனப்பெண்ணே, ஆனால் ஒரு தெளிவான அரசியலைக் கொண்ட பெண். இந்த பின்னணியில் ஹிஜாப்பை பார்த்தால் அதன் இடமானது மிக மிக சிக்கலாக இருக்கும். ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணுக்கும் இப்படி விதவிதமான அர்த்தங்களை இந்த ஆடை அளிக்கும். சிலர் இதை அரசியல்படுத்தாமல் தம் வாழ்வின் பகுதியாக மட்டும் மாற்றிக்கொண்டிருப்பார்கள். இதை ஒரு பிரச்சினையாக்குவது அவர்கள் அல்ல, மாற்று மதத்தவர்களே. ஒரு மாற்றுத்திறனாளி நொண்டி நொண்டி சாலையைக் கடந்து போகையில் “ஐயோ எவ்வளவு கஷ்டம், முடியாம எவ்வளவு வலியோட போறாங்கல்ல” என்று சொல்லுபவரே அதை ஒரு பிரச்சினையாக்குகிறார். அந்த மாற்றுத்திறனாளிக்கு தான் நொண்டுவதாகவே தோன்றாது. (இஸ்லாமியரை நான் ‘நொண்டிகள்’ என்று சொல்லவில்லை. என் உதாரணத்தின் நோக்கமே வேறு.) ஒரு மாற்றுத்திறனாளிக்கு தன் உடல் எல்லா விதங்களிலும் இயல்பானது, அதற்கு ஒத்துவராத, பல இடைஞ்சல்களைத் தரும் உலகம் மட்டுமே பிரச்சினையானது, ஆனால் அவனைப் பார்க்கிறவர்களுக்கோ அவனிடம் மட்டுமே எல்லா பிரச்சினைகளும் உள்ளது, தம் உலகத்தில் பிரச்சினைகள் இல்லை என்று தோன்றும். புர்கா விசயத்திலும் இதுவே நடக்கிறது.
நல்லவேளை இந்த நாட்டில் நான் ஒரு இஸ்லாமியனாக இல்லை என்று நான் பல சந்தர்பங்களில் உணர்வதுண்டு. இப்போது மிக அதிகமாக அவ்வாறு தோன்றுகிறது - என்னை எந்த விதத்திலும் புரிந்துகொள்ளாது என்னைத் திருத்துகிறேன் எனத் துன்புறுத்துகிற பல்லாயிரம் எலைட்டுகள், போலி முற்போக்காளர்கள், போலி போராளிகள், கலைஞர்கள், சினிமாக்காரர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், வலதுசாரி அரசியல்வாதிகள் இவர்களுக்கு நிதியளிக்கும் கார்ப்பரேட்டுகளின் நடுவே நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தால் பெரும் மனநல மருத்துவமனையின் வார்டில் முழுமையான மனநலத்துடன் ஒருவர் இருப்பதைப் போன்ற அனுபவமாக அது இருக்கும். கடைசியில் எனக்கும் பைத்தியம் பிடித்துவிடும். நல்லவேளை நான் இஸ்லாமியனாக இல்லை!

Comments