முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

90களின் தமிழ் சினிமா: சமூக மாற்றங்களின் அடையாளம் - அரவிந்த்


 




உலகின் பெரும்பாலோரின் பொழுதுபோக்கான சினிமாவை வெறும் மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சக ஊடகமாக ஒதுக்கிச் செல்ல முடியுமா என்ற கேள்வி என் மனதில் வெகு நாள் இருந்தது. 

”அக்காலத்தில் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் என்றால், எனக்கு இன்று சினிமா’” என எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் பலமுறை கூறியதிலிருந்து அனைத்துக் கலைகளின் சங்கமமான சினிமாவின் முக்கியத்துவம் புரிகிறது. 

நம்மால் மாற்ற முடியாத சமூகப் பிரச்சனைகளுக்கு அடுத்தவரைக் குறை சொல்லும் நம் உளவியல் அனைத்து தவறுகளுக்குமான ஊற்றுக் கண்ணாக சினிமாவையே எண்ணுவதால் அதை என்னால் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 

நம்மையும், நம் பண்பாட்டையும் அறிய முயலும் வெளி நாட்டாருக்கு எளிய சாதனமாக இருப்பது சினிமா என்ற நிலையில், அதைப் பற்றி மேலும் சிந்திக்கவும் ஆராயவும் ஒரு ஆரம்பக் கட்டமாகத் திகழ்வது யுவபுரஸ்கார் விருது வென்ற எழுத்தாளரும், ஆங்கிலப் பேராசிரியருமான திரு ஆர். அபிலாஷ் அவர்களின் ”90களின் தமிழ் சினிமா” நூல். 

சினிமா என்பது வெறும் மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என எண்ணும் நமக்கு, 90 களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் முதல் நம் உளவியலிலும், நம்பிக்கைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் திரைப்படங்களிலும் இன்று வரை பிரதிபலிப்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. காதலை, சாதிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் ஒரு அருமருந்தாகக் காட்டிய தொண்ணூறுகளின் சினிமா, பின்னர், காதலர்களுக்குக் காதலே சிக்கலாகவும், சுதந்திரமான சிந்தனைகள் உடைய இன்றைய தலைமுறைப் பெண்களிடம் பழகும் முறைகளைப் புரிந்து கொள்ளாத ஆண்களின் இடர்பாடுகளைக் காட்டும் கண்ணாடியாகவும் பல திரைப்படங்கள் இருப்பதை அறிய இந்நூல் உதவுகிறது. அதற்கும் மேல், காதலை ஒரு கிடைத்தற்கரிய பொருளாகக் காட்டிய இதயம், காதலன் போன்ற படங்களில் இருந்து, காதலை வெறும் வீடியோ கேம் போல மலிவானதாகக் காட்டும் ”ஓ காதல் கண்மணி” போன்ற படங்கள் வரை, படங்களில் காட்டப்பட்டவை இச்சமூகத்திலும் பிரதிபலிப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். 

இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குடும்ப அமைப்பைக் கடந்து காதலை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையே வெற்றி பெற்ற அமர காதல் படங்களும், இயக்குனர் சேரனின் மகள் காதல் விவகாரம் போன்ற நடைமுறைச் சம்பவங்களும் காட்டுவது மூலம், குடும்ப அமைப்பின் குறையாத வலிமையும், அவ்வமைப்பின் அங்கமாகவே பெரும்பாலான இன்றைய இளைஞர்கள் சார்ந்து இருப்பதையும் உணரலாம். நாயகர்களின் காதலுக்கு உதவும் நண்பன் என்ற உறவு முறை, தொண்ணூறுகளுக்குப் பிறகு பிணக்கும் ஊடலும் நிறைந்த ஆண்களின் நட்புறவாகப் பரிணமித்திருப்பதை சுவாரசியமாகக் காட்டும் இயக்குனர் பாலா, ராஜேஷ், வெங்கட் பிரபு போன்றோரின் புரோமான்ஸ் படங்கள்; ஆண்கள், உண்மையான சுதந்திரத்தை உணர்வது பெண்கள் அருகில் உள்ள போதா, அல்லது தன் நண்பர்களோடு உள்ள தருணங்களா என ஆரம்பித்து ஆண்மைக்குள் பெண்மையையும், பெண்மைக்குள் ஆண்மையையும் சித்தரிக்கும் திரைப்பட நுட்பங்களை நடைமுறை எதார்த்தங்களோடு சுவையாக பொருத்தி சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

சினிமாவின் ஜனரஞ்சகமான வெற்றிக்கு மற்றொரு காரணமான வன்முறையைச் சித்தரிக்கும் தேவர் சாதி வரிசைப் படங்களும், அதற்கு ஒப்பீடாகக் காட்டப்பட்ட மலையாள நாயர் சமூக வீரப் படங்களும் பாலிவுட்காட்ஃபாதர் படங்களைப் பற்றிய தகவல்கள் நூலின் சுவாரசியமான பகுதிகள். நிலப் பிரபுத்துவக் காலத்தைக் கடந்து வெவ்வேறு துறைகளில் களம் புகுந்தும், இவ்வகை பழைய வன்முறை விழுமியங்கள் ரசிக்கப்படுவதற்கானக் காரணங்கள்; வன்முறைக்கு எதிராகப் பேசுவதாகச் சொல்லும் இப்படங்கள், வன்முறையையே நாயகன் ஆண்மையின் சின்னமாகப் பிரதிபலித்தல் போன்ற வியக்கத்தக்க சுவாரசியமான விவாதங்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன. 

இன்னொரு பக்கம், நாயகனைக் கவர்ச்சிகரமாகவும், நாயகனின் ஆண்மையை விட வில்லன்களின் ஆண்மையையும் அவர்கள் தரப்பு நியாயங்களையும் பெரிதாகக் காட்டி வெற்றிபெற்ற இயக்குனர் திரு கௌதம் மேனன் படங்களில் கையாளப்பட்ட அதிசய நுட்பங்கள் நம்மை அறியாமலே நம்மை வியக்கச் செய்கின்றன. இவற்றிற்கு அப்பால், இக்காலத்தில் பெரும் வெற்றி பெற்ற பிரம்மாண்ட இயக்குனர் திரு சங்கர் அவர்களின் படங்களில் உபயோகிக்கப்பட்ட நவீன யுக்தி பற்றிய விவரணங்கள் எல்லாம்; வாசகர்களே வாசித்து, அனுபவிக்க வேண்டியவை. 

இவ்வாறு, நாம் பார்த்த திரைப்படங்கள் குறித்த பல புது சுவாரஸ்யமான தவல்களையும் நம் ரசனையின் பல சிடுக்குகளையும் அனுபவிக்க இந்நூலை பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 


இரா. அரவிந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...