முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொருள் வயின் வாழ்க்கை




PS II முதல் பாகத்தை விட பார்க்கும்படியாக இருக்கிறது. சில காதல் காட்சிகள் “காற்று வெளியிடையை” நினைவுபடுத்தின. அப்படத்தில் வரும் காதலின் வதை, சரணடைதலின் துன்பம், தன்னை இழத்தலின் திளைப்பு எனக்குப் பிடித்திருந்தது. இதிலும் தான். வேறு சில காட்சிகள் பரபரப்பாக இருந்தன. “பொன்னியின் செல்வனை” காட்பாதர் பாணியில் எடுக்கும் மணிரத்னத்தின் முயற்சி புன்னகையை வருவித்தது. முதல் பாகத்தைப் போல சில இடங்களாவது துண்டுத்துண்டாக அல்லாமல் ஒருமித்த தன்மையைக் கொண்டிருந்தன. சில பாடல்கள் பிடித்திருந்தன.

ஆனால் இதை மீறி நூறு குறைகளை என்னால் சொல்ல முடியும். இரண்டு பாகங்களையும் பார்க்கையில் இப்படத்தின் கதையமைப்பிலும் எழுத்திலும் உள்ள கோளாறுகள் எனக்கு மட்டுமல்ல பல்லாயிரம் மக்களுக்கும் புரிந்திருக்கும். ஏனென்றால் இதன் கோளாறு மிக மிக அடிப்படையானது: சினிமாவில் இரு மணிநேரங்களில் நீங்கள் ஒரு பெருங்கூட்டத்தின் கதையை பல பார்வைகள் வழி சொல்லக் கூடாது. ஒருவருடைய பார்வையில், அவரது மன அமைப்பின் பிழையின் அடிப்படையில் தோன்றும் தேடலின் போக்கில் ஒரு பெருங்கூட்டத்தின் சித்திரத்தை வழங்கலாம். இதுவே PSஇன் மிகப்பெரிய பிழை. பத்து கல்யாணங்களில் ஒரே சமயம் ஒரே இடத்தில் நடக்க அதில் திடீரென அமளி ஏற்பட்டு யார் மணப்பெண் எனத் தெரியாமல் தாலி கட்டி குழப்பம் வருவதைப் போல் ஒரு மனநிலை. இது நமக்கே புரியும் போது சினிமாவுக்குள் மூன்று பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கிற இயக்குநருக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரிந்திருக்கும். எனில் அவரது நோக்கம் வேறு - அது என் மரமண்டைக்கு இப்போதுதான் புரிந்தது.

இயக்குநர் இந்த படத்தின் வணிக இலக்கை துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்: (1) பொன்னியின் செல்வனை அப்படியே திரையில் அளிப்போம்; (2) நிறைய நட்சத்திரங்களை பங்களிக்க வைப்போம். இந்த இரண்டும் சேர்ந்தால் அது பெரும் கவனம் பெறும், வசூலும் கிடைக்கும். இப்படி எடுக்கையில் என்னென்ன குறைகள் நேரும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும். எனில் இதை ஒரு கச்சிதமான திரும்பத் திரும்ப பார்க்கக் கூடிய வணிகப் படமாக எடுக்க முடியாது. எடுக்கவும் கூடாது. இவ்வகை படத்தை அதன் வணிக கட்டமைப்புக்கு வெளியே இப்படத்தை யாரும் பெரிதாக ரசிக்கவோ கொண்டாடவோ மாட்டார்கள். ஆனால் ஒன்றைப் பெற இன்னொன்றைக் கொடுத்தாகத் தான் வேண்டும். 

கேள்வி: இதை ஏன் ஒரே படமாக எடுத்தார், இதில் 5 படங்களேனும் இருக்கின்றனவே? 

அப்படி எடுத்தால் ஒருவேளை பெரும் பொருட்செலவோ பரபரப்போ தொடர்ந்து இருக்கப் போவதில்லை. வந்தியத்தேவனின் கண்ணோட்டத்தில் மட்டும் விரியும் கதை, கரிகாலனின், பொன்னியின் செல்வனின் கதைகள் என எடுத்தால் அதை அப்படங்களின் தரத்தின் அடிப்படையில் மட்டுமே ஓட வைக்க வேண்டும். அதன் லாபம் இந்தளவுக்கு பெரிதாக இருக்காது. இயக்குநருக்கு இப்படி ஒரு வெற்றி தேவைப்பட்டது. அதை அவர் பெற்றுவிட்டார்.

கேள்வி: PS 1 அளவுக்கு PS 2 கவனிக்கப்படவில்லையே? இத்தனைக்கும் பின்னது முன்னதை விட நன்றாக இருக்கும் போது? அது தோல்வி அல்லவா?

அதையும் இயக்குநர் எதிர்பார்த்திருப்பார். பரபரப்பு அடங்கிய நிலையில் இவ்வளவு தான் போகும். இப்போது இயக்குநர் “நாயகனை” எடுத்திருந்தால் அது PS போலத்தான் அமைந்திருக்கும். ஏனென்றால் காலமும், அவரது துறையின் தேவைகளும் வியாபார இலக்கும் மாறிவிட்டது.

இந்த கோணத்தில் பார்க்கையில் PSஇன் குறைகள் எவையும் குறைகளே அல்லவெனத் தோன்றுகிறது. 
சில நேரங்களில் ஒரே ஒரு கோணத்தில் இருந்து ஒரு படத்தைப் பார்ப்பது தவறு என நினைக்கிறேன் - பல நோக்கங்கள், இலக்குகள் ஊடுபாடுகிற பெரும் வணிக முயற்சி ஒன்றில் மிகச்சிறிய அங்கம் தான் நாம் எதிர்பார்க்கிற ஒன்றாக இருக்கும்.

எனக்கு இதில் தவறு இல்லை எனத் தோன்றுகிறது. தன் குறிக்கோள் குறித்து மணிரத்னம் கொண்டிருக்கிற தெளிவைப் பாராட்டவே தோன்றுகிறது. பொருள் வயின் வாழ்க்கை. கலை வயின் அல்ல. (இதில் எந்த கிண்டலும் இல்லை. சீரியஸாகத் தான் சொல்கிறேன்.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...