முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெயரொட்டு

 என்னுடைய முழுப்பெயர் அபிலாஷ் சந்திரன். அந்த பெயரொட்டு என் அப்பாவின் பெயரொட்டும் தான். அப்படியே எனக்கு கையளித்துவிட்டார்கள். என்னுடைய தாத்தாவின் காலத்தில் அது பிரசித்தமாக இருந்திருக்க வேண்டும். என்னுடைய சித்தப்பாவுக்கும் அந்த பெயரொட்டு உண்டு. என்னுடைய அப்பாவின் பெயரின் பின்னுள்ள சாதிப் பெயரொட்டு எனக்கு என் அப்பா அளிக்கவில்லை. சொல்லப்போனால் என்னுடைய ஊரில் என் தலைமுறையில் யாருக்கும் சாதிப் பின்னொட்டை அவர்களுடைய பெற்றோர் அளிக்கவில்லை. அவ்விதத்தில் நாங்கள் குமரி மாவட்டத்தினர் என்றாலும், என்னதான் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ் தாக்கம் அதிகமாக இருந்தாலும் நல்லவேளையாக திராவிட அரசியலின் நீட்சியாகவே எங்கள் பண்பாடும் இருந்தது. இன்னொரு விசயம், சாதியைப் பின்னொட்டாக வைப்பது நவீன விழுமியம் அல்ல, அது நவீன வாழ்க்கையை வாழப் போகும் பிள்ளைகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என ஒரு நம்பிக்கை அன்று இருந்திருக்கலாம். ஆனால் 90களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, ரெண்டாயிரத்தில் நிகழ்ந்த அடுத்த பொருளாதார அலையினால் சாதிப்பெருமை, மதப்பெருமை என் தலைமுறையினரிடம் மேலெடுத்தது. ஒருவித பதற்றம், அடையாளக் குழப்பம், அவர்கள் சாதி, மதத்தின் பின்னால் போய் ஒளிந்துகொண்டனர் என நினைக்கிறேன். என்னுடைய சமகாலத்தவர்களில் சிலர் சாதிப்பின்னொட்டை புதிதாக வைத்துக் கொண்டதை கவனித்தேன். தமிழகம் முழுக்கவும் கடந்த பத்தாண்டுகளில் இது ஒரு தனி அலையாக உருவாகியது - சாதிப் பின்னொட்டை சமூகவலைதளங்களிலும், சாதியின் பின் திரளும் முயற்சிகளையும் முன்னெடுத்தனர் என்னுடைய மற்றும் அடுத்த தலைமுறையினர்.

இந்த அலைகளால் நனைக்கப்படாதவனாகவே நான் இருந்தேன். ஆனால் எனக்கு மற்றொரு பிரச்சினை இருந்தது. பெயரின் பொருள் - இந்த 'சந்திரன்'. 'அபிலாஷ்' என்றால் அபிலாஷை. அது என் அடிப்படையான குணத்திற்கு ஒத்துப் போனது. ஆனால் சந்திரன் எதற்காக என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் எனப் புரியவில்லை. அதற்காக என் அப்பாவை மனதுக்குள் நான் வையாத நாளில்லை. அதனாலேயே நான் பிரசுரிக்கத் துவங்கியதும் 'ஆர். அபிலாஷ்' என்று மட்டுமே வைத்துக் கொண்டேன். வேலையிடங்களில் சான்றிதழ் காரணமாக முழுப்பெயருடன் விளங்கினேன். அங்கு இப்பெயர் காரணமாக உள்ளுக்குள் நான் என்னை மற்றொருவனாகவே உணர்ந்தேன். பேஸ்புக்கிலும் இரண்டாம் பெயராக யோசிக்காமல் 'சந்திரனை' அளித்துவிட்டதால், அதை இப்போது மாற்றினால் குழப்பம் வரும் என்பதாலும் இங்கு சிலர் என்னை 'அபிலாஷ் சந்திரன்' என்று அழைக்கும் போது அட இந்த கொசுத்தொல்லை விடாது போல என கடுப்பாகும்.

இந்த பெயர் பற்றி பேச்செழும் போது என் அம்மா 'உனக்கு நாங்க அஜய் கோஷ் எனப் பெயரிடலாம் என நினைத்திருந்தோம்' என்பார். அதென்ன கோஷ் என்றால் அப்போது அது பேஷனாகத் தோன்றியது என்றார். ஒருவேளை அப்பெயரை இட்டிருந்தால் என்னைப் பலரும் வங்காளி என நினைத்து உள்ளூரில் நான் இந்திக்காரன் என்றும், வெளியூரில் நான் வங்காளி என்றும் நினைக்கப்பட்டிருப்பேன். அதற்கு சந்திரனோடே குடும்பம் நடத்தித் தொலைக்கலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...