முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாருக்காக அழுதான்?


எனக்கு முன்பு விவாதிக்கும் சுவாரஸ்யத்துக்காகவே எதையாவது விவாதிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் விவாதப் பொருளில் ஆர்வம் இழந்து தர்க்க பிரயோகத்தில் மட்டும் ஆர்வம் வந்தது. எதிர்த்தரப்பை எந்த இடத்தில் தர்க்கரீதியாக வீழ்த்துவது என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். அண்மையில் என்னுடைய வாழ்க்கைப் பார்வையே 360 பாகையில் திரும்பி விட்டது - மனிதர்களின் பிரச்சினையேஇல்லாதவிசயங்களில் மூக்கை நுழைப்பது எனத் தோன்றுகிறது. .தா., வரலாற்றை எடுத்துக் கொள்வோம். வரலாறு அதனடிப்படையில் ஒரு சுவாரஸ்யமான கதையாடல். அதில் ஒரு திகைப்பும் கிளர்ச்சியும் உண்டு, ஆனால் சோழர்கள் ஒடுக்குமுறையாளர்களா தமிழர் புகழை நிலைநாட்டியவர்களா எனும் கேள்வியில் எந்த பொருளும் இல்லை. ஏனெனில் சோழர்கள் நம் முன் இல்லை. நம் முன் என்றல்ல, யார் முன்னும் இல்லை. அவ்விதத்தில் பார்த்தால் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன செய்தார்கள் என்பது ஒரு சிறுகதையில், நாவலில் என்னவுள்ளது என்பதற்களவே முக்கியமானது. எப்படி கதைகள் நம் கண்முன் இல்லையோ, அதைப் போன்றே வரலாறும் இல்லை. நம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் உள்ளதைப் போல சந்திராயன் நம்மிடம் இல்லை (நம்மிடம் என்றல்ல யாரிடமும் இல்லை). இதையே நம்மைக் கடந்து நிகழும் அரசியலுக்கும் சொல்வேன் - மோடியோ நாடாளுமன்ற விவாதங்களோ இல்லை. இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்பது, விவாதிப்பது போர்னோகிரபி பார்த்து கிளர்ச்சியடைவதற்கு சமானமானது


நாகரிக சமூகத்தின் இன்னொரு பிரச்சினை தம் இருத்தலை பருவுலகில் இருந்து மொழியின் உலகுக்கு மாற்றிவிட்டார்கள் என்பது. இருத்தலை நாம் வெளியிலும் காலத்திலும் அறிகிறோம். ஆனால் மொழிக்குள் சென்றுவிட்ட பின்னர் இரண்டுமே அருவங்கள் ஆகின்றன. ஒரு உதாரணத்திற்கு என்னுடைய நாயிடம் நான் ஒரு தட்டில் சிக்கன், ஒரு தட்டில் சிக்கனின் வரலாறு பற்றின புத்தகம், இன்னொரு தட்டில் சிக்கன் சாப்பிடும் நாய்களின் உலகம் பற்றின ஒரு அதிரிபுதிரியான மிகவும் பிரசித்தமான படமொன்றை வைத்தால் என்னுடைய நாய் ஒரு கணம் கூட யோசிக்காமல் சிக்கனையே எடுக்கும். ஆனால் மனிதர்களிடம் நீங்கள் ஒரு தட்டில் பிரியாணியும், மற்றொரு தட்டில் பிரியாணி பற்றின சினிமாவையும், இன்னொன்றில் பிரியாணி பற்றின சமூகவலைதள பதிவுள்ள போனையும், இன்னொரு பக்கம் பிரியாணி சிலாகித்துப் பற்றி பேசுகிற அழகியையும், கடைசியாக அடுத்து வரும் நாட்களில் அவர்கள் எங்கெங்கு போய் என்னென்ன பிரியாணிகளை ருசிக்கப் போகிறார்கள் என ஒரு கால அட்டவணையையும் ஒரே சமயம் காட்டினால் குழம்பி விடுவார்கள். ஆனால் பிரியாணியைத் தவிர பிரியாணியைப் பற்றின எதுவும் நிஜத்தில் இல்லை என அவர்களுக்கு உடனடியாகப் புரியாது. இதனாலே நாம் விலங்குகள் நம்மை விட புத்திசாலிகள், தெளிவான உயிர்கள் எனத் தோன்றுகிறது. சில அடிப்படையான விசயங்களில் அவை தம் பருவுலகைத் தாண்டி எதையும் தேடி இருந்து வாழ்க்கையை வீணடிப்பதில்லை


இன்று காலை ஒரு நண்பர் நீட்சேயின் ஒரு மேற்கோளைக் காட்டினார். அதில் நீட்சே மேற்கத்திய கலாச்சாரங்கள் போலியாக துயரப்படும் கலாச்சாரங்கள் என்கிறார்கள். எப்படி என்றால் கர்த்தர் மனிதகுலத்துக்காக துயரப்பட்டார். அவர் போன பிறகு மனித குலம் (அதாவது கிறித்தவர்கள்) கர்த்தருக்காக துயரப்பட்டார்கள். ‘துன்புறுகிறவர்களுக்காக மனம் கசிவதே உங்களை பாவத்தில் இருந்து விடுவிக்கும், அதுவே உங்களை என்னை நோக்கி செலுத்தும், கடைசியில் சொர்க்கத்தை அடைய வைக்கும்என்று அவர் போதித்தார். இப்போது மக்கள் கர்த்தருக்காக துயரப்படவில்லை, அவர்கள் சொர்க்கத்தை அடைவதற்காக துயரப்பட்டார்கள். இதையெல்லாம் செய்யும் போது கர்த்தர் முன்னாலும் மனிதகுலம் இல்லை, மனிதகுலம் முன்னால் கர்த்தரும் இல்லை, சொர்க்கமும் இல்லை. இல்லாத ஒன்றுக்காக துக்கப்பட சொல்லித் தந்து பல ஆயிரம் ஆண்டுகளாக மொத்த ஐரோப்பிய சமூகமும் ஏமாளிகளாகி விட்டது என்கிறார் நீட்சே


இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல இன்று உலகில் வாழும் அனைத்து (படித்த, பண்பட்ட) மக்களுக்கும் பொருந்தும். நமக்கு நம்மைப் பார்க்க, நம்மைச் சுற்றியுள்ள பருவுலகைப் பார்க்க, இது மட்டுமே நாம், இதைத்தாண்டி ஒன்றுமில்லை என்று ஏற்றுக்கொள்ள அதிர்ச்சியாக இருக்கிறது. இது மேஜைப் பந்தை சுவருக்கு எதிராக அடித்து ஆடுவதைப் போன்றது. பந்து உங்களுடன் இருக்க வேண்டுமெனில் அதை எதற்கு சுவர் மீது அடிக்க வேண்டும்? ஆனால் அதை நிறுத்தினால் பந்து எங்கும் போகாது, நாம் ஏமாளியாகி விடுவோம் என்பதாலே அடித்துக்கொண்டே இருப்போம். அது திரும்பத் திரும்ப வர வர நமக்கு மகிழ்ச்சி அதிகமாகிக் கொண்டே வரும். ஆட்டம் முடியும் போது எதையோ சாதித்ததாக திருப்தி கொள்வோம். இந்த சுவரை நீங்கள் உலகம், கடவுள், வரலாறு, அரசியல், சமூகம், உறவுகள் என்று எதுவாகவும் வைத்துக் கொள்ளலாம். நம்மை சிறுவயதில் இருந்தே இப்படி வாழ்க்கையை வீணடிக்கப் பழக்குவதால் மொத்த வாழ்க்கையையும் மொழியிலே வீணடித்துவிடுகிறோம்.


அதற்காக அவரவர் தத்தமது அறைக்குள், வீட்டுக்குள் முடங்க வேண்டும் என நான் கூறவில்லை. அண்மையில் கர்நாடக ஊபர், ஓலா ஓட்டுநர்கள் சேர்ந்து ஒரு சங்கம் உருவாக்கி அதன் மூலம் முதல்வருக்கு ஒரு சில வேண்டுகோள்களை வைத்ததாக செய்தியைப் படித்தேன். அவற்றில் சில மிகவும் தெளிவாக, அவர்களுடைய வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புள்ளவையாக இருந்தன. அவற்றில் ஒன்று ரேப்பிடோவை தடை செய்ய வேண்டும் என்பது. ஏனெனில் அது அவர்களுடைய வாழ்க்கைப்பாட்டை நேரடியாக பாதிக்கிறது. இப்போது இப்பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ளாத ஒரு அறிவுஜீவியிடம் கேளுங்கள். அவருக்கு இரண்டு பக்கமும் நியாயம் உள்ளதாகத் தோன்றும். இதைப் படிக்கிற உங்களில் பலருக்கும் கூட அப்படித்தான் மேளத்தின் ரெண்டு பக்கமும் நல்லாத்தான் சத்தம் வருது எனத் தொன்றும். ஒரு ரேப்பிடோ வாடிக்கையாளரிடம் கேளுங்கள். அவர் அந்த கோரிக்கையே தப்பானது என்பார். இதில் அந்த ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் அரசியல் மிகவும் சரியானது. அறிவுத்தரப்பு மற்றும் இந்த பிரச்சினையால் நேரடியாக பாதிக்கப்படாத மற்ற எல்லாருடைய அரசியலும் மிகவும் தவறானது. ஏனென்றால் உங்கள் கண்முன்னால் இல்லாத ஒன்றுக்காக யோசிப்பதே அபத்தமானது. என்னை மிகவும் கவர்ந்தது இந்த ஓட்டுநர்கள் இமாச்சல பிரதேச வெள்ளத்துக்காக இரங்கியோ நிலவில் இன்னொரு முறை நாம் சந்திராயனை அனுப்ப வேண்டும் எனக் கேட்டோ முதல்வரை சந்திக்கவில்லை என்பது. நீங்கள் எங்காவது பொறியியல் மாணவர்களோ, .டி ஊழியர்களோ இப்படி தம் பிரச்சினைகளைப் பற்றி ஒன்றுகூடி யோசித்து அவற்றை சரிபண்ண நடவடிக்கை எடுத்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ம்ஹும், அதைத் தவிர உலகில் உள்ள எல்லாவற்றைப் பற்றியும் யோசிப்பார்கள். உட்கார்ந்து பணி செய்கிற எல்லாருக்கும் இல்லாதவற்றைப் பற்றி சிந்திக்கும் நோய் உள்ளது. .தா., இடதுசாரிகள், வலதுசாரிகளின் வரலாற்றில், நடைமுறையில் பிரச்சினை உள்ளது என பேஸ்புக்கில் மோதிக்கொள்கிறவர்களைப் பாருங்கள். இவர்களும் கர்த்தருக்காக துயரப்படுங்கள் கோஷ்டிதான். இவர்களுக்கு ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் ஆயிரம் மடங்கு மேல்.


எனக்குப் பிரியமான நண்பர் என்னிடம் வந்து எது முதலில் வந்தது, பௌத்தமா, வைதீகமா என விவாதிக்கத் தொடங்கினார். நான் அவரிடம் கேட்டேன், “நம் முன் இல்லாத விசயங்களுக்காக ஏன் நேரத்தை வீணடிக்கிறோம் நண்பா?” “என்னது நம் முன் இல்லையா? இது இப்போதும் நம்மை பாதிக்கும் பிரச்சினையாகும்.” நான் சொன்னேன், “பாதிக்கிறதெனில் அதை எங்கே என்னிடம் காட்டேன். முடியாது எனில் அது இல்லை எனப் பொருள். நான் இந்த மேஜை, இந்த செல்பேசி பற்றி விவாதிக்கத் தயார். கரப்பான்பூச்சியைப் பற்றி பேசத் தயார். அவை என் முன் உள்ளன. இல்லாதவற்றைப் பற்றி நான் எப்படிப் பேச முடியும்?” அவருக்கு அதற்கு மேல் என்னிடம் விவாதிக்கவே முடியவில்லை. ஏனெனில் இருப்பவற்றைப் பற்றி விவாதிக்கவே முடியாது. ஒரு அருமையான நடனத்தைப் பார்த்துவிட்டு சிலாகிக்கலாம், விவாதிக்கலாம், ஏனெனில் அது நிகழ்வதை நிறுத்திவிட்டது. அது நிகழ்கையில் நம அதைப் பற்றி பேசவே முடியாது. பேசினால் அதை கவனிக்க முடியாது. காலத்தில் இல்லாமல் போகும் ஒன்றைப் பற்றி பேசி காலத்தை வீணடிப்பதற்கே மொழி எனும் டில்டோவை நாம் பயன்படுத்துகிறோம்.


ஆனால் ஒரு சிக்கல் உள்ளது - இந்த மொழியே ஒரு முடிவுறாத சறுக்குப்பாதை. இதில் சறுக்காமல் எப்படி நடப்பது எனத் தெரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...