Skip to main content

துண்டு எங்கே?


என்னிடம் அந்த நண்பர் போனில் பேசும் போது அவரது குரலின் நடுக்கத்தை நான் உணர்ந்தேன். பொதுவாக குடும்பநல வழக்குகளில் ஆட்படும் ஆண்களிடம் ஒருவித தாழ்வுணர்வும் கூச்சமும் வந்துவிடுகிறது. இதை நான் என் கடந்த சில ஆண்டு கால அனுபவங்கள் வழி உறுதியாகக் கூற முடியும். மற்றொரு நண்பர் தான் வழக்கு, காவல்துறை, சச்சரவு என துன்பங்களை அனுபவிக்கத் தொடங்கி சில மாதங்களில் திக்குவாயனாக மாறிவிட்டதாக சொன்னார். பொதுவாக ஆண்கள் ஆதிக்கவாதிகள், கோபத்தில் ஆவேசமாகப் பேசுபவர்கள், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது இடத்தையும் நிலையையும் பொறுத்து மாறும். குடும்ப நல சட்டங்களும், நடைமுறைகளும் ஆண்களை மிகுந்த தாழ்வுணர்வும் இயலாமையுணர்வும் கொண்டவர்களாக்கி விடுகிறது. அது எப்படி திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது என்பதை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இந்த நண்பர் குறிப்பிட்ட நிகழ்வுகள் அதை மேலும் நிரூபிப்பவனவாக இருந்தன.


இவர் வெளிநாட்டில் வேலை செய்து கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் ஊரில் நிலபுலன் வாங்கி வீடு கட்டினார். இவரது பெற்றோர் இவரை நம்பியே இருக்கிறார். இந்த இடத்தில் தான் சனி புகுந்து விளையாடியது. கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தினார்கள். இசைந்தார். மணப்பெண்ணையும் இப்படி வற்புறுத்தியே இசைய வைத்திருக்கிறார்கள். அவருக்கு தனியார் வங்கியில் நல்ல வேலை. அவரைப் போன்ற ஒருவருக்கு தனக்கு விருப்பமில்லாத ஒருவருக்காக திருமணம் வாழ்க்கையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சூழ்நிலை அவரை வலியுறுத்த அவர் டாக்ஸிக்கான மனைவியாக, மருமகளாக மாறுகிறார். அவர் கொடுத்த மனவதையால் தன் அப்பாவுக்கு இதய அறுவை சிகிச்சை பண்ணும் நிலை ஏற்பட்டு விட்டதாக அந்த நண்பர் கூறினார். அவர்களுடைய கல்யாண வாழ்க்கையின் தொந்தரவுகளுக்குள், அவர்கள் இடையிலான மோதல்களுக்கு நிஜக்காரணம் யார் யார் என்பதற்குள் நான் போகவில்லை. அவர் சொல்லுவதுபடி அவரது மனைவியே காரணம். நான் புரிந்துகொண்டது படி விருப்பமில்லாமல் அப்பெண்ணை இவ்வாழ்க்கைக்குள் தள்ளிய அவளது பெற்றோரும், தப்பான பேருந்தில் அவசரத்தில் பயணி ஏறிய போல அவர்கள் அந்த வாழ்க்கைக்குள் நுழைந்ததுமே தான் காரணம். ஒரு நியாயமான சமூகத்தில் இவர்கள் சுமூகமாகப் பிரிந்து அவரவர் வாழ்க்கையைப் பார்த்துப் போக அனுமதிக்க வேண்டும். ஆனால் நம் இந்திய சமூகத்தில் தான் இது போன்ற சந்தர்பங்களில் ஒரு டாக்ஸிக்கான பெண்ணை பெரும் வதையாளராக மாற்றுவதற்கான அத்தனை ஆயுதங்களையும் அவரிடம் கொடுத்துவிட்டு அதை சமத்துவம், நீதி என சல்ஜாப்பு பேசுவார்களே. இவர் விசயத்திலும் அதுதான் நடந்தது


இவர் விவாகரத்துக்கான மனுவைப் போடுகிறார். உடனே மனைவி தன் சொந்த ஊரான சேலத்துக்குப் புறப்பட்டுப் போய் அங்கிருந்து வழக்கை தன் ஊருக்கு மாற்ற வேண்டும் என மனு ஒன்றைப் போடுகிறார். பெண்ணின் ஊரிலேயே வழக்கு நடத்தப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. இந்த சட்டமானது பெண்களுக்கு பயணிக்கவோ சுயமாக சம்பாதிக்கவோ எந்த வாய்ப்பும் இல்லாத மாட்டுவண்டி கட்டிவிட்டு ஊர் பார்க்க செல்லும் காலத்தில் இயற்றப்பட்டது. கடந்த சில பத்தாண்டுகளில் உலகம் தலைகீழாக மாறிவிட்டது. ஆனால் சட்டம் இன்று வெள்ளையனே வெளியேறு, கொடியேந்திய குமரன் காலத்திலே இருக்கிறது. அது மட்டுமல்ல, சட்டம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வர்க்கத்தையோ சாதியையோ பார்ப்பதில்லை. பெண் பிராமணர், ஆண் தலித் என்றால் எதார்த்த சமூக நிலைமை படி அங்கு ஆணே தாழ்த்தப்பட்டவன். பெண் நன்கு படித்தவர், நல்ல வேலையில் இருக்கிறார், ஆண் குறைவாகப் படித்து வேலையில்லாமல் இருக்கிறார் என்றாலும் அங்கும் ஆண் தன் மனைவியையே சார்ந்திருக்க நேரிடும். ஆனால் சட்டத்தின் முன்னால் மனைவி மத்திய அமைச்சராக இருந்தாலும் அவர் அதிகாரமற்றவர், அவருடைய செருப்பைத் துடைத்து வைக்கும் கணவனே ஆதிக்கவாதி. மத்திய அமைச்சராக இருந்தாலும் பெண் பயணிக்கவோ செலவுசெய்யவோ முடியாத அபலை. இந்த அபத்தமான பாரபட்சமான சட்டத்தை பயன்படுத்தி இன்றைய படித்த பெண்களும் அவர்களுடைய நாரதமுனி வக்கீல்களுமாக செய்கிற முதல் காரியமே வழக்கை பெண்ணின் ஊருக்கு மாற்றுவது. ஏனென்றால் வழக்கு இடமாற்றப்பட்டதுமே ஆண் பலவீனமாகி விடுவான். அவன் ஏற்கனவே வக்கீலுக்கு பணம் கொடுத்திருப்பான். இப்போது அந்த வக்கீலைக் கொண்டு இந்த ஊருக்கு வர வேண்டுமென்றால் ஒவ்வொரு அமர்வுக்கும் 10,000 சராசரியாக வக்கீலுக்கு மட்டுமே ஆகும், அது போக பயணம், விடுப்பு, செலவுகள் என அவன் நொந்துவிடுவான். இந்த நண்பர் சென்னையில் ஒரு வக்கீலைப் பார்த்து 70,000 கொடுத்துவிட்டார். சேலத்துக்கு வழக்கு மாற்றப்பட்டதும் இவர் மேற்படி வக்கீலிடம் போய்க் கேட்டால்அது உங்க பிரச்சினை. நானே சேலத்துக்கு வரேன், எனக்கு மாதாமாதம் கூட 10,000 ரூ நீங்க கொடுத்தாகணும்என்றுவிட்டார். அதாவது 70,000 + மாதம் தலா 10,000 என்றால் 70,000 + 1,20,000 = 1, 90,000. ஐந்து ஆண்டுகளுக்கு இது கிட்டத்தட்ட 10 லட்சம். எவ்வளவு பெரிய தொகை என யோசியுங்கள்.

ஏங்க முதல்லயே பணத்தைக் கொடுத்தீங்க?” என்று நான் கடிந்துகொண்டதும் தனக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை என்றார். அதுவும் உண்மைதான். ஒரு வழக்கில் எப்படி வழக்கறிஞரைக் கண்டடைவது, அவருக்கு எவ்வளவு கட்டணத்தைக் கொடுப்பது, எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றி எங்குமே தகவல்கள் இல்லை. தன் வாழ்நாள் சேகரிப்பை ஜேப்பில் வைத்துக் கொண்டு ரங்கநாதன் தெரு கூட்டத்தில் நசுங்கிப் போய் பணமில்லாமல் மீள்வதைப் போல ஆகிறது வக்கீல் ஆபீசுக்குப் போகிறவரின் நிலை. அடுத்து, வக்கீல் இல்லாமல் நீதிமன்றத்துக்கு வரக் கூடாது என நீதிபதி எச்சரிப்பார். இப்படி ஏதோ அறுவை சிகிச்சைக்கு சர்ஜனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும் வாங்கணும் என்று எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு அரைத்தூக்கத்தில் ஒரு கசாப்புக்கடைக்காரரை அழைத்து வருவதைப் போல போல வக்கீலுக்கு மதிப்பை ஏற்றுவார்கள்.


மேலும் சென்னை வக்கீல்கள் ஒரு ஆண்டுக்கான மொத்த பணத்தில் பாதியையாவது வாங்காமல் (சுமாராக 50,000) ஆஜராக மாட்டார். அவர் ஆஜராகாவிட்டால் இவர் மிரட்டுவார். இந்தப் பக்கம் போனால் இவர் குத்துவார், அந்தப் பக்கம் போனால் அவர் கத்துவார்.

 சரி இவ்வளவு கட்டணம் வாங்கும் அளவுக்கு என்ன வேலை இருக்கிறதென்றால் குடும்பநல வழக்குகளில் வக்கீலின் வேலை மிக மிக குறைவு. ஒரு அரசாங்க அலுவலக குமாஸ்தாவின் வேலை மட்டுமே. அதிலும் குடும்ப நல வழக்கில் ஒரு வக்கீல் என்னதான் திறமைசாலியாக இருந்து நீதிமன்றத்தில் அவர் தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும் ஆணுக்கு இரண்டு சாத்தியங்கள் தான் - விவாகரத்து கிடைக்கும், குழந்தையை வருடத்தில் சில முறைகள் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த இரண்டையும் ஒரு ஆமை வடை வக்கீலையோ ஜூனியர் வக்கீலையோ வைத்தே சாதித்துவிடலாம். (ஆமை வடை வக்கீல்கள் சிறுநகரங்களில் மட்டுமே இருப்பார்கள்.) ஆனால் பெண்ணுக்கோ தன் கணவனை ஓட விட்டு பழிவாங்கலாம், செட்டில்மெண்ட் எனும் பெயரில் பெரிய தொகை ஒன்றை வாங்கலாம், குழந்தை இருந்தால் அதையும் தன்னுடன் வைத்துக் கொள்ளலாம். ஆக, பெண் தரப்பு தம் வக்கீலுக்கு ஐந்தாண்டுகளில் ரெண்டு லட்சங்கள் கொடுக்கிறது என்றால் (சேலம் என்பதால் வக்கீல் கட்டணம் குறையும் என நினைக்கிறேன்) அவர்களுக்கு செட்டில்மெண்டாக ஒரு பெரிய தொகை வந்ததும் அதில் இருந்து 10%யும் கொடுப்பார்கள். ஆனால் ஆண் தரப்போ பணத்தை மட்டுமே கொட்டிக் கொடுப்பார்கள், வழக்கை முடித்தாலும் எந்த லாபமும் அவர்களுக்கு இருக்காது. ஆணுக்கு செலவு மட்டுமே வரவு இல்லை. அதனாலே பெண்களுக்கே நல்ல வக்கீல் - வழக்கை மேலும் மேலும் சிக்கலாக்கி நீட்டியடித்து எதிர் தரப்பை ஓட விட்டு பணத்தை கொண்டு வந்து கொட்ட வைக்கிற வக்கீல் - தேவை.


 இதனாலே இப்படி ஊரை மாற்றுவது, வகைதொகையில்லாமல் சில பெண்கள் கணவனின் பெற்றோர், உறவினர் மீது பொய் வழக்குத் தொடுப்பது என செயல்படுகிறார்கள். அப்போது தான் கணவன் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டு அவர் தன்னிடம் மனைவி கேட்ட தொகையை உடனே கொடுத்துவிடுவார். கட்டப்பஞ்சாயத்திலும், கடத்தல் பேரத்திலும் செயல்படும் அதே முறைதான். நான் இதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால் கடந்த சில ஆண்டுகளாக நான் இதற்கு மாறாக ஒரு வழக்கைக் கூட காணவில்லை. எல்லா ஆண்களும் ஒரே கதையைத் தான் சொல்கிறார்கள். நான் பெண்களைக் கூட குற்றம் சொல்லத் தேவையில்லை எனும் இடத்துக்கு வந்துவிட்டேன் - பிரச்சினை சட்டத்திலும் நடைமுறையிலுமே உள்ளது. நீங்கள் அடித்துப் பிடுங்குவதற்கான ஆயிரம் வசதிகளையும் கொடுத்து சித்தாந்த நியாயத்தையும் வழங்கினால் அவர்கள் அதை பயன்படுத்தத் தான் செய்வார்கள். சம்மந்தப்பட்ட பெண்ணிடம் நிறைய பணமும், குறைவான பணத்தாசையும் இருந்து, அவர் நேர்மையானவராகவும் இருந்து, வக்கீலின் அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருந்தால் மட்டுமே இந்த சாத்தியங்களை நிராகரிப்பார். துரதிஷ்டவசமாக அனேகமாக எல்லாருக்கும் இன்று பணத்தேவை உள்ளது.


நான் நண்பரிடம் அந்த வக்கீலிடம் எப்படியாவது மன்றாடி தான் கொடுத்த 70,000 திரும்ப வாங்கும்படி கேட்டேன். ஒரு அமர்வு கூட நடக்கவில்லை என்றாலும் வாங்கிய காசை அவ்வளவு சீக்கிரம் திரும்பத் தர மாட்டார்கள். அதற்கு பல நியாயங்கள் சொல்வார்கள். எனக்கு இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டது. நான் ஒரு ஆண்டுக்கு கட்டணம் பேசி ஒருவரை அமர்த்தினேன். இது போக ஒவ்வொரு அமர்வுக்கும் ரெண்டாயிரம் ரூ வேறு நான் கொடுக்க வேண்டும். ஆனால் மூன்றே மாதங்களில் கடன் வாங்கி சமரசம் பேசி முடித்துவிட்டேன். அதனால் நான் வக்கீலிடம் ஒரு வருடப் பணத்தை திரும்பக் கேட்டேன். அவர் தான் எந்த வேலையும் செய்யவில்லையே! அவர் அதற்கு கொரோனா காலத்தில் தனக்கு வேலையே இல்லை, அதனால் பணத்தை திரும்பத் தர முடியாது என்றார். அதற்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? நானா கொரோனாவைக் கொண்டு வந்தேன்? உடனே அவர் என்னிடம்நான் கோப்பைத் திறந்து படித்தாலே ஒரு ஆண்டு கட்டணத்தை தரணமுங்கஎன்றார். “அது மட்டுமல்ல, ஒரு ஆண்டு வழக்கு நடந்தால் எனக்கு வந்திருக்க வேண்டிய பணத்தையும் நீங்க தந்தாகணும்என்று என்னிடம் மூன்று மணிநேரங்கள் வாதிட்டார். நீங்கள் இதை எங்காவது பார்க்க முடியுமா? நீங்கள் ஒரு ஓட்டலுக்குப் போகிறீர்கள். மெனுவைக் கேட்டுவிட்டு சொன்னால் சர்வர் சற்று நேரம் கழித்து வந்து சார் எல்லாம் முடிஞ்சுருச்சு, ஆனால் எடுத்த ஆர்டருக்கு பணம் கொடுத்தால் தான் ஆச்சு எனப் பிடிவாதம் பிடித்தால் எப்படி இருக்கும்? எனக்குத் தெரிந்து பார்த்து பேசி கேஸ் கட்டை வாங்கினால் மொத்த பணத்தையும் கொடுத்துவிட்டுத் தான் போக வேண்டும் எனும் கட்டாயம் இரண்டே தொழில்களில் தான் உண்டு. ஒன்று வக்கீல் தொழில்.


நண்பர் இப்படி மொத்தமாக மாட்டிக் கொண்டுவிட்டார். அவர் தன்னுடைய பெரிய பயம் தன் பெற்றோர் மீதும் பொய் வழக்குப் போட்டுவிடுவார்களோ என்பதுதான் என்றார். அவர் சமரசத்துக்குப் போகத் தயங்கினால் விரைவில் அதுவும் நடக்கும் என்றேன். நான் அவருக்கு ஒரு கணக்குப் போட்டுக் காட்டினேன். எப்படிப் பார்த்தாலும் மூன்றாண்டுகளாவது இழுத்தடிப்பார்கள். நான்காவது ஆண்டு அவர் சமரசத்துக்குப் போகும் போது அவருக்கு குறைந்தது 5-10 லட்சங்களாவது செலவாகிவிடும். அது போக பல உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படும். போலி வரதட்சிணை புகார் கொடுத்தால் அதையும் தனியாக சமாளிக்க வேண்டி இருக்கும். அதனால் இப்போதே சமரசம் பேசுங்கள் என்றேன். ஆனால் மனைவி ஒரு கோடி கேட்கிறார், தான் வெளிநாட்டில் பாடுபட்டு சம்பாதித்த மொத்த சொத்தையும் ஆட்டயப் போடப் பார்க்கிறார், தன்னால் அவ்வளவு பெரும் தொகையைக் கொடுக்க முடியாது என்றார். எனக்கு நெட்பிளிக்ஸில் வீரப்பன் இணையத்தொடர் நினைவு வந்தது. அதில் ராஜ்குமாரை திருப்பி அனுப்புவதற்காக 100 கோடி பிணைத்தொகையாக வேண்டும் என்று வீரப்பன் கேட்கிறார். ஆனால் காங்கிரஸ் அரசோ இழுத்தடிக்கிறது. கடைசியில் வீரப்பன் 5 கோடிக்கே ஒப்புக் கொள்கிறார். இவ்வளவுதான் வரும் என அவருக்கே தெரியும். ஆனால் அவர் ஆரம்பத்திலே 5 கோடி கேட்டால் அது அவருக்கும் ராஜ்குமாருக்கும் அசிங்கம். அரசாங்கம் 50 லட்சத்துக்கு அதை இழுக்கும். எதற்கு எல்லாருக்கும் அசிங்கம் என யோசித்தே அவர் கம்பீரமாக பேரத்தை 100 கோடியில் துவங்கினார். அதனால் ஒரு கோடி கேட்டால் அதை பேசிப் பேசி இழுத்து இழுத்து 5-10 லட்சத்துக்கு கொண்டு வந்துவிட இயலும். அதுவரை ராஜ்குமாரைப் போல நம்மையும் காடு, மலை என இழுத்துப் போவார்கள். என்ன யாரும் நமக்காக போராடவோ பேச்சுவார்த்தை நடத்தவோ மாட்டார்கள். நாம் தான் பேச வேண்டும்.


நீங்கள் உங்கள் மனைவியிடம் வக்கீல் அல்லாத ஒரு மூன்றாவது நபரை வைத்து பேச்சுவார்த்தை நடத்துங்கள்என்றேன். “மெல்ல மெல்லப் பேசி ஒரு குறைந்த தொகைக்கு ஒப்புக்கொள்ள வைக்கலாம்என்றேன். அவர் தன் மனைவி ஆரம்பத்தில் விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும், இவரை விண்ணப்பிக்க சொல்லிவிட்டு இப்போது தனக்கு சேர்ந்து வாழவே விருப்பம் என்று அவர் கூறுவதாகவும் சொன்னார். அப்போது அவர் திட்டமிட்டே இவரை மாட்ட வைத்திருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது. கடைசியில் நாங்கள் யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தோம்:


வழக்குத் தொடுத்த கட்சிக்காரர் நண்பர் தானே, அவராக தனக்கு விவாரகத்து தேவையில்லை, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் என மனுவை ரத்து செய்வதாக நீதிபதியிடம் ஒரு கோரிக்கை வைத்தால் போதுமேமனைவி அவரது மனுவுக்கு பதில் போடாதவரையில் அவர் மனைவியிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.

அவர் சேலத்துக்கு அலையவோ வக்கீலுக்கு படியளக்கவோ தேவையில்லை. மனைவியிடம்உன்னுடன் நான் சேர்ந்து வாழ பிரியப்படுகிறேன்என்று சொன்னால் அவர் கடுப்பாகிவிடுவார். அதன் பிறகு அவரிடம் மீண்டும் பேசி டார்ச்சர் செய்து ஒரு தொகைக்கு சம்மதிக்க வைத்துவிட்டு மியூச்சுவலாக விவாகரத்துக்கு விண்ணப்பிடிக்கலாம். பிரச்சினையே இருக்காது.


தீர்வு அவர் பக்கத்திலேயே இருந்தது. சில நேரங்களில் தோளில் போட்டுக் கொண்டு துண்டு எங்கே துண்டு எங்கே என்று தேடிக்கொண்டிருப்போம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...