Skip to main content

கொள்ளிக்கட்டைகள் நடுவே வெண்ணெய்க் கட்டி மனிதர்




பவா சொன்ன அந்த மற்றொரு கதையான பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின்வெண்ணெய்க் கட்டிகதைக்கு வருகிறேன். விடலை பருவத்தினனின் சாகசங்கள், சாமியாரின் குற்ற மன்னிப்பு, இலக்கியவாதியின் மிகை தளும்பல்கள் கொண்ட அதைப் போன்ற வேறு சில கதைகளும்சிதம்பர நினைவுகளில்உண்டு. ஆனால் எல்லா போலித்தனங்களுக்கும் அப்பால் ஒருவித நிர்வாணம், நேர்மை அந்த எழுத்தில் உள்ளதாலே அது நம்மைத் தொடுகிறது. பவா சொன்ன கதையில் பாலச்சந்திரன் தன் வீட்டில் தனியாக இருக்கிறார். அப்போது வீடுதோறும் பொருட்களை விற்கும் அழகான பெண்ணொருத்தி கையில் ஊறுகாய் பாட்டில்களுடன் வாசல் கதவைத் தட்டுகிறாள். பார்த்தால் சேலையில் வந்த தேவதையைப் போல இருக்கிறாள். பவாவின் மொழியில் சொல்வதானால் அவளது வெண்ணெய்க் கட்டி இடுப்பு வேறு இன்னொரு பக்கம் கண்களை ஈர்க்கிறது. பாலச்சந்திரன் சும்மாவே ஒருமாதிரி ஆள் (யார் தான் இல்லை?). அவர் அப்பெண்ணை உள்ளே அழைத்துப் போய் இடுப்பில் கைவைக்கிறார். அப்பெண் அவரை அறைந்துவிட்டுபடுத்து சம்பாதிக்கிறதுன்னா நான் ஏன் ஊறுகாய் விற்கப் போகிறேன்?” எனக் கேட்கிறாள். ஆனால் அவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்பதை உடனே கண்டுகொள்ளும் அவள் மன்னிப்புக் கேட்டு இவர்இல்லையெம்மா நான் தான் மன்னிப்புக் கேட்கணும்என்று சொல்ல சபல மன்னிப்பு, பாவ மன்னிப்பு, பாச மன்னிப்பு என மன்னிப்பு மேளாவாகிறது. அப்பெண் பின்னர் வாழ்க்கையில் முன்னேற பாலச்சந்திரன் உதவவும் செய்கிறார் எனக் கதை போகிறது. இக்கதை இயல்பாகவே அங்கு கேட்டிருந்த ஹாப்பாயில் பெண்ணியவாதிப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. அதென்ன தப்பு செய்வதை காறித் துப்பாம ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்துறாங்க எனத் துணுக்குறுகிறார்கள். அவர்களுக்கு ஒன்று புரியவில்லை - கிறித்துவ இறையியலில் இருந்தே பாவ மன்னிப்புக் கதைகள் உலகமெங்கும் பரவுகின்றன. அதை காந்தி அற்புதமாக தன்சத்திய சோதனையில்பயன்படுத்துகிறார். காந்தியவாதியான எம்.ஜி.ஆர் தன் படங்களில் வரும் வில்லன்களை காந்தியைப் போன்றே காட்சிப்படுத்துவார். அவர்கள் கிளைமேக்ஸுக்கு முன்பு அடிவாங்கித் திருந்தி எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாகிஅண்ணனுக்காக உயிரையும் கொடுப்போம்எனும் ரேஞ்சுக்கு உயர்வார்கள். இக்கதைகளின் டெம்பிளேட் ஒன்றுதான் - ஒரு ஆண் மனக்கட்டுப்பாடு இல்லாமல் குற்றம் செய்வார், உடனே அதை உணர்ந்து வருந்துவார், பாவத்தைப் போக்க துன்புறுவார், கடைசியில் ஹீரோவாக உயர்வார். இதையே தான் பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் தன் ஆத்ம கதையில் எழுதுகிறார். குற்றம் புரிந்ததாலோ குற்றத்துக்காகவோ அல்ல குற்றத்தை அங்கீகரித்து பாவத்தைக் கழுவ முயல்வதாலே பாவி ஹீரோவாகிறான். அது வெண்ணெய் எடுப்பைத் தொடுவதோ கொதிக்கும் அடுப்பைத் தொடுவதோ, மன்னிப்புக் கேட்டால் முடிந்து போய் சம்மந்தப்பட்டவர் ஓரடி மேலே உயர்ந்து நிற்பார்


இது ஒரு கதை. எதார்த்தம் அல்ல. இக்கதையின் முடிவில் அந்த ஆளை நிறுத்தி செருப்பால் அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீதேற்றி அனுப்ப வேண்டுமெனில் அது பழங்குடி வழக்காற்றியல் (குழு வெளியேற்றத் தண்டனைக்) கதையாகிவிடும். மீ டூ கதையாடல்கள் முழுக்க உலகை தனிமனிதனை கண்காணித்து தண்டனை அளிக்கும் ஒரு பழங்குடி சமூகமாகப் பார்க்கவும், அதன் வழியாக அதிகாரப் படிநிலையில் ஏறி வரும் பெண்களுக்கு சாட்டையைக் கொடுக்கவும் விரும்பியது. இரண்டும் இருவேறுக் கதைச் சட்டகங்ககள் - முன்னதில் ஒழுக்கச் சட்டகம் ஆன்ம மேம்பாட்டுக்கும், பின்னதில் அதுவே தண்டனைக்கும், அதிகார ஈடேற்றத்துக்கும் பயன்படுகிறது


என்ன பிரச்சினையென்றால் இன்று இலக்கிய, சினிமாக் கதைகள் என எதை எடுத்தாலும் படித்த இளம்பெண்களில் ஒரு பகுதியினர் தம் அதிகார ஈடேற்றத்துக்கு அவற்றை அரசியல்படுத்தவும் விவாதிக்கவும் விரும்புகிறார்கள். அதுதான் பவா கதை சொல்லி முடித்த பின்னரும் நடந்தது - ‘பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டை கொள்ளிக்கட்டையால் நாலு சாத்தி சாத்தி பொறுக்கி நாயின்னு சொல்ல மாட்டீங்களா, மாட்டீங்களாஎன ஒவ்வொருவராக வந்து பவாவின் மென்னியைப் பிடித்துக் கேட்டார்கள். அவர் முடியாதென்று தீர்மானமாக சொல்லிவிட்டார். முதல் சில நாட்களில்கொள்ளிக்கட்டை பெண்ணியவாதியாகநின்றெரிந்த பவா சக-இலக்கியவாதியாக எனக்குத் தென்பட்டது அப்போதுதான்.


இன்னொரு விசயம் பவாவின் மொழியில் உள்ள ஆண் நோக்கு (male gaze). அங்குள்ள பல பெண்களுக்கு இந்த கலைச்சொல் தெரியவில்லை; ஆகையால்அந்த வார்த்தை நெருடலா இருந்தது, ஒரு மாதிரி இருந்ததில்ல, ஆங்?’ எனத் திரும்பத் திரும்ப தமக்குள் கேட்டுக்கொண்டார்கள். ஆண் நோக்கு என்றால் பெண்ணுடலை பார்வையால் தன் காமத் துய்ப்புக்கு பயன்படுத்தும் ஒரு ஆண் அதையே தன் மொழியிலும் செய்வது (“உசிலம்பட்டி பெண்குட்டிஇடுப்பு சேல இடை வெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு”). ஆண் நோக்கு பெண்ணின் உடல் செயல்பாட்டை, அதை ஒட்டிய சமூக அதிகாரத்தை பாதிக்கும் என்பதால் பெண்ணியத்தில் இது விரிவாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அதில் வேறொரு பிரச்சினை உள்ளது - அது நம் மொழியை மலட்டுத்தனமாக மாற்றிவிட்டது.

 காமம் என்பது வெறுமனே தனிமனித, சமூக அதிகாரம் மட்டுமல்ல. நிஜ வாழ்வில் காமமே அரசதிகாரத்தை, சமூகப்பொருளாதார கண்காணிப்பு அதிகாரத்தை உடைக்க உதவுகிறது. காமமே மனிதனை எந்திரத்தில் இருந்து மீண்டும் மனிதனாக்குகிறது. கடந்த சில பத்தாண்டுகளில் பெண்ணிய உரையாடல்கள் ஹாப்பாயில் வடிவில் மிக அதிகமாகப் புழங்குவதால் ஆண்களுக்கு தமது இச்சையைப் பெண்ணிடம் காட்டவே பயமாக இருக்கிறது. எந்த புற்றில் எந்த பெண்ணியவாதி இருப்பாரோ என பயம் மிகுந்துவிட்டது. அவர்கள் பெண்களை ஆண்களைப் போலவே நடத்தத் தலைப்படுகிறார்கள். பெண்களுக்கு இத்தகைய ஆண்கள் ஆண்மையற்றவர்களாகத் தோன்ற அவர்களை ஒருவிததோழிகளாகநடத்துகிறார்கள். ‘மச்சான்’, ‘புரோஎன அழைக்கிறார்கள். இது நகரத்து ஆண்கள் இன்று பரவலாக எதிர்கொள்ளும் பண்பாட்டு மலட்டுத்தன்மை. இன்றைய இலக்கியக் கவிதைகள், கதைகள், சினிமாக்கள், திரைப்பாடல்களில் எல்லாம் இந்த மலட்டுத்தன்மை, அரசியல் சரித்தன்மை புற்றுநோயைப் போல பரவிவிட்டது. அதனாலே நமக்கு மீண்டும்ஆண் நோக்குதேவைப்படுகிறது என நினைக்கிறேன். ஆண் நோக்கை மொழியிலும் உடலிலும் நாம் வலுவாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஒரு பெண்ணைபுரோவாகஅல்லாமல்பெண்ணாகப்பார்ப்பதே அப்பெண்ணுக்கு நாம் செய்யும் மரியாதை. அதுவே பெண்களுக்கும் நல்லது. அல்லாவிடில் ஆண்கள் எல்லாம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியதுதான். அதனாலே பவாவின் கதையாடலில் வந்தவெண்ணெய்க் கட்டி மாதிரி இடுப்புஎனும் உவமையை நான் ரசித்தேன். அதற்குப் பதிலாகஒரு அழகான பெண்என சொல்லியிருக்கலாமே என்று ஒரு தோழி என்னிடம் கேட்டார். ஆனால் அதுமலட்டு மொழிஆகிவிடும்.


உங்க கதையோட முடிவில ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுது. இதைக் கேட்கிற சின்னப்பசங்களை தப்பா வழிநடத்துற மாதிரி இருக்குஎன கொள்ளிக்கட்டை பெண்ணியவாதிகள் சுற்றி நின்று கேட்கும் போது பவாஅதுதான் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டோட கதை, அதில் சரி தப்புன்னெல்லாம் சொல்ல முடியாது, அது என் இயல்பு இல்லஎன கெத்தாக மறுத்தது அவர் அந்த காலத்து ஆண் என்பதாலே, அவருக்குள் ஜெயகாந்தன் காலத்து கெத்து மீதமிருக்கிறது எனத் தோன்றுகிறது. இதுவே 2க்கே கிட் எழுத்தாளர் என்றால்சரிதாங்க தோழி, நீங்க சொல்ற மாரி அந்த ஆளு பண்ணுனது ரொம்ப தப்பு தோழிஎன பக்ரீத் ஆட்டைப் போல தலையைத் தலையை ஆட்டியிருப்பார்கள்.


மீண்டும் கோகிலாபற்றி சுஜாதா எழுதும் போது ஶ்ரீதேவியைக் குறிப்பிட்டுஅந்த இடுப்பைப் பார்த்தால் யாருக்கு கிள்ளத் தோன்றாதுஎன்று சொல்லியிருப்பார். இன்று சுஜாதா அப்படி எழுதியிருந்தால் பெரிய கலவரமாகிப் போயிருக்கும். அவருக்கு விஷம் வைத்துக்கொன்றிருப்பார்கள். எனக்குப் பின்னர் ஶ்ரீதேவியை மட்டுமல்ல, அவரது சாயலுள்ள எந்த பெண்ணைப் பார்த்தாலும் சுஜாதாவின் குறும்பு வசனம் நினைவுக்கு வரும். ஆனால் நான் எந்த இடுப்பையையும் கிள்ளியதில்லை. ஒரே காரணம் தான் - மின் தூக்கியில் நான் போகும் போது என்னைச் சூழ்ந்திருக்கும் கூட்டங் கூட்டமாக சேலை கட்டிய இடுப்புகளை என் சக்கர நாற்காலியில் இருந்து பார்க்க சுண்ணாம்படித்த சுவரைப் போலவே இருக்கும். கொஞ்சம் நகர்ந்து நம்மை ஒரேயடியாக இடித்து விடுவார்களோ என ஒரு பயம் வரும். ஆனால் தனியாக இருக்கையில் சுஜாதா சொன்னகிள்ளாமல் இருக்க முடியுமா இடுப்புநினைவுக்கு வரும் போது அழகாகத் தோன்றும். அது மொழியின் பாய்ச்சல். அதற்கும் முரட்டு சுண்ணாம்புச் சுவர் இடுப்புகளுக்கும் நடுவில் தான் உண்மை எங்கேயோ இருக்கிறது.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...