முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்வி எனும் மோசடி




கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்கிறார்கள். சரி. உயர்வு என்றால் என்ன? உயர்ந்த வாழ்க்கைத்தரம், சமூக மரியாதை. இரண்டும் பணத்தினால் கிடைப்பன. எனில் கல்வி நம்மை உயர்த்தும் எனும் போது கல்வியினால் நாம் நிறைய பணத்தைப் பெறலாம் எனக் கூறுகிறார்கள் எனப் புரிந்துகொள்கிறேன். இப்போது நான் கேட்க விரும்பும் கேள்வி எந்த விதமான கல்வி பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பது

எண்பது, தொண்ணூறுகள் வரை அரசு வேலை, அதன் பிறகு தனியாரில் .டி வேலை, வெளிநாட்டு வாழ்க்கை. இதன் நடுவே சொற்பம் பேருக்கு மருத்துவ, ..எஸ் வேலைகள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது - பணம் அதன் மதிப்பை இழந்துவிட்டது. நான் என் முதல் வேலையில் பெற்ற சம்பளத்திலிருந்து 25 மடங்கு அதிகப் பணத்தை தம் முதல் சம்பளமாக என் மாணவர்கள் வாங்குகிறார்கள். ஆனால் அப்பணத்தை வைத்து அவர்களால் சேமிக்கவோ அவசர மருத்துவ செலவுகளை சமாளிக்கவோ முடிவதில்லை. ஒருவருடைய சம்பளத்தில் முன்பு ஒரு மத்திய வர்க்க குடும்பமே நன்றாக வாழ முடிந்தது. குழந்தைகளைப் படிக்க வைப்பதில் இருந்து மருத்துவ செலவு, வீடு கட்டுவது, சேமிப்பது எல்லாம் சாத்தியமானது. இன்று இருவர் சம்பாதித்தாலே விழி பிதுங்குகிறது. ஏனென்றால் இன்று நாம் உச்சா போனால் கூட அதைப் பிடித்து அளந்து இவ்வளவு மில்லிக்கு இவ்வளவு வரி என அரசு பிடுங்குகிறது. கக்கா போனால் அதையும் கிராமுக்கு இவ்வளவு ஜி.எஸ்.டி என எடைக்கு எடை வரி போடுகிறது. வாடகை கன்னா பின்னாவென எகிற, வங்கியில் சேமிப்புத் தொகைக்கான வட்டி வெகுவாக குறைந்துவிட்டது. பண வீக்கம் எங்கோ எகிறுகிறது. மக்களுக்கு நிலத்திலோ வங்கியிலோ சேமிக்கும் நம்பிக்கை போனதால் தங்கத்தில் பணத்தைப் போடப்பார்க்க அரசு அதைத் தடுக்க வழிபார்க்கிறது. எல்லாரும் பங்குச்சந்தை பின்னால் ஓடுகிறார்கள். சரியாகப் புரியாமல் முதலீடு பண்ணுகிறவர்கள் ஒருவேளை இச்சந்தை சரியும் நிலை ஏற்பட்டால் எங்கு போவார்கள்? கடுமையாக உழைத்துப் படித்து வேலைக்குப் போய் அங்கும் மாடு மாதிரி உழைக்கும் பலர் வெளியே பார்க்க பளபளப்பாக இருக்கிறார்கள். ஆனால் போய் விசாரித்தால் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்


உழைப்பை எடுத்துக் கொள்வோம். இணையம் பரவலாகி திறன்பேசி வரும் வரை, மடிக்கணினிகளில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வரை நாம் உழைப்பது அளவாக நியாயமாக இருந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில்எங்கெங்கு காணினும் உழைப்படாஎன புற்றுநோய் போல உழைப்பு சுரண்டல் பரவிப்பரவி இப்போது நள்ளிரவு ஒருமணிக்கு கூட ஏதாவது ஒரு மின்னஞ்சல் வேலைத் தொடர்பாக வர நாம் அரக்க பரக்க விழித்து அதற்கு பதிலிடவும், அவ்வேலையை செய்துமுடிக்கவும் தலைப்படும் அளவுக்கு ஜோம்பிகளாக மாற்றப்பட்டிருக்கிறோம். ஓய்வே இல்லாமல் 20 மணிநேரம் நம்மையே அறியாமல் வேலை பார்க்கிறோம், ஆனால் சம்பளம் மட்டும் அதே 8 மணிநேரத்திற்குத் தான்.

 எவ்வளவு வேலை பார்த்தாலும் கையிருப்பு பணம் போதாமல் போய்விடுமோ, தெருவுக்கு வந்துவிடுவோமோ எனும் அச்சம் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்று பட்டப்படிப்பு முடித்த எத்தனையோ பேர்கள் ஸ்விக்கியில் டெலிவரி பாயாக இருக்கிறார்கள். 50% பேர் பொறியியல் படித்தவர்கள் என்றொரு சேதியை அண்மையில் படித்தேன். பொறியியல் படிக்க முடியாத எத்தனையோ பட்டதாரிகள் உளர். அவர்களுடைய நிலைமை?

 வெளிநாட்டை எடுத்துக்கொண்டால் இங்கிலாந்து போன்ற சில மேற்கத்திய தேசங்களிலும் மத்திய வர்க்க வாழ்க்கை இவ்வாறுதான் உள்ளதென சொல்கிறார்கள். கனடாவுக்கு புலம்பெயர்ந்து வேலை வாங்கி செல்வோர் வாடகைக்கு வீடு கிடைக்காமல், நோய்க்கு மருத்துவர் இல்லாமல், எந்த அடிப்படை வசதியும் இன்றி அலைவதாக, அப்படி வாடகைக்கு வீடு கிடைத்தாலும் சம்பளத்தில் 50% அதற்கே போய்விடுவதாகவும் கேள்விப்பட்டேன். ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே படித்து நல்ல வசதியாக இருக்கிறார்கள். அதுவும் கொரோனாவுக்குப் பிறகு உழைப்பு சுரண்டல், வரியின் பெயரிலான பணத்திருட்டு, உழைக்கும் நேரம் கடுமையாக அதிகரித்துவிட்டது. வேலை நீக்க பயம் ஒரு கத்தியைப் போல எல்லார் தலைமேலும் தொங்க அதைக் காட்டியே இரட்டிப்பு நேரம் நம்மை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். என்ன விசித்திரம் என்றால் பாதி வேலை நேரம் நேரடியானதாகவும், மிச்ச நேரம் மாயமாகவும் உள்ளது. அது ஏற்படுத்தும் பதற்றம், நெருக்கடியால் உடல், மனநோய்கள் அதிகரிக்க, அந்த அவதிகளைக் கடப்பதற்காக அதிகமாக குடித்து, புகைப்பிடித்து, முறைகேடான உறவுகளில் ஈடுபட்டு, இணையத்தில் சூதாடி, உறக்கம் ஒழிந்து இளமையிலேயே வயோதிகம் பெற்று சீரழிகிறோம். இதை எப்படி முன்னேற்றம் என்பது?


 நாம் தமிழகத்தில் தொடர்ந்து படிப்பின் மகத்துவத்தைக் கொண்டாடிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் அதன் இன்னொரு இருண்ட பக்கத்தைப் பற்றி பேச மாட்டோம் என்கிறோம். கல்வி ஒரு சம்பாதிக்கும் மார்க்கமாக இன்றொரு பெரிய மோசடியாகி விட்டது என்பதே உண்மை.


அதற்கு காரணம் கல்வி அல்ல, பொருளாதார அமைப்புதான். கடுமையாக உழைப்பவர்களுக்கு ஓய்வு நேரம், சேமிப்பு, எதிர்கால பாதுகாப்பு, மனநிம்மதியை அளிக்க வேண்டியது ஒரு சமூகத்தின், அரசின் கடமை. முக்கியமாக மாத ஊதியத்தில் 40% மேல் செலவு செய்யத் தேவையிராத வேலையே நல்ல வேலை. (அப்போதே சேமிக்கும் பணத்தை வைத்து சொத்து, வீடு, அடுத்த தலைமுறைக்கான முதலீடு எனப் பண்ணி முன்னேற முடியும்.) அதுவே ஆரோக்கியமான பொருளாதாரம். ஆனால் நாம் சீனாவைப் போல அடிமை தேசமாக மாறிக்கொண்டிருக்கிறோம். எந்த அடிப்படைத் தேவையையும் உத்தரவாதம் செய்யாத ஒரு அரசின் கீழ் வாழும் நாம் கல்வி கல் என குழந்தைகளை பிடிவாதமாகத் தள்ளிவிடுவது அடிமைக்கப்பலுக்கு விலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு சமம். இதன் பொருள் யாரும் படிக்காதீர்கள் என்பதல்ல. நம் நிலைமை ஏன் இப்படி இருக்கிறது எனக் கேளுங்கள் என்கிறேன். அதற்குப் பதிலாக சினிமா பேட்டிகளையும் குக் வித் கோமாளியையும் பார்த்து கெக்கேபிக்கேவென சிரித்து கவனம் திருப்புகிறோம் என்கிறேன். நியாயமாக நமக்கு கோபம் வர வேண்டும், ஆனால் இன்று இம்மாதிரி திசைதிருப்பும் சூழ்ச்சிகள் நம்மை சுரணையற்றவர்களாக மாற்றுகின்றன.


 இன்று ஏழைகளின் நிலை இன்னும் மோசம் - முன்பு ஏழைகளால் சமாளித்து வாழ முடிந்தது. இன்று அவர்கள் மேலும் மேலும் நசுக்கப்படுகிறார்கள்.


இவ்வளவு படித்து ஸ்விக்கியில் வண்டி ஓட்டாமல் படிக்காமலே ஓட்டலாமே என்பதே என் கேள்விபடிப்பிற்கு மதிப்பு குறைந்துவிட்டே போகிறது எனில் அது ஏன்?


 நாம் படிப்பை வழிபடுவதை சற்று நிறுத்தி விட்டு இந்த பொருளாதார அமைப்பைப் பற்றி சிந்தித்து அதைக் கேள்வி கேட்க வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...