முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பை 2023 ஏன் சோபிக்கவில்லை?



அ) 2019 50 ஓவர் உலகக்கோப்பை ஜாலியாக இருந்தது. இந்தியா, நியுசிலாந்தின் சிறப்பான ஆட்டம், ஆஸ்திரேலியாவின் பின்னடைவு என எதிர்பாராமைகள் இருந்தன. அதுவும் அந்த இறுதிப்போட்டி ஒரு கிளாஸிக். நியுசிலாந்து கடைசியில் இங்கிலாந்துடன் மோதும், அதுவும் இரண்டு ஓவர் அடிதடியாக மாறும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிலும் ஒரு திருப்பம், ஒரு அநீதி இருந்தது, அதுவும் அந்த முடிவை கிளாஸிக் ஆக்கியது. ஆனால் 2023 உலக்கோப்பையில் பெரிய ஜாம்பவான்கள் ஆதிக்கம் செய்ய பலவீனமான அணிகளின் பின்வாங்கின. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் அரை இறுதியை எட்டும் என எதிர்பார்த்தார்கள். நடந்தது. தென்னாப்பிரிக்காவின் எழுச்சியே ஆச்சரியப்படுப்பத்தியது. ஆனால் அதையும் ஒரு முற்றிலும் எதிர்பாராத அதிசயம் எனக் கூற முடியாது. மிக வலுவான அணி அவர்களுடையது. சுந்தரேசா எனக் கூப்பிட்டதும் ஓடி வந்து எண்ணெய்யைப் பார்க்காமல் வழுக்கி விழுந்துவிடுவார்கள் என்பதைத் தவிர.

ஆ) பல போட்டிகள் ஒருதலைபட்சமாக இருந்தன. முதலில் மட்டையாடிய அணியை வெகு நெருக்கமாக விரட்டி சென்று போட்டியை விறுவிறுப்பாக்கியது நியுசிலாந்து மட்டுமே (ஆஸிக்கு எதிராக). மற்ற போட்டிகளில் ஒரு அணி முதலில் மட்டையாடி 350க்கு மேல் அடித்தால் எதிரணி 100 ரன்களுக்கோ அதற்கு மேலான ரன்களுக்கோ தோற்கும் என்பது நியதி. அதே போல எதிரணி 250க்கு சுருண்டு அடுத்து மட்டையாடுபவர்கள் 40 ஓவர்களுக்குள் அதை அடித்துவிடுகிறார்கள். இப்படி புரூஸ் லீயின் சண்டைக் காட்சி போல கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்து போகின்றன. மைதானத்துக்கு சென்ற பார்வையாளர்களைக் கண்டால் பரிதாபமாக இருந்தது.

ஈ) ஆல்ரவுண்டர்களால் ஜொலிக்க இயலவில்லை. ஆல்ரவுண்டர்களின் எழுச்சிக்கும் ஒரு போட்டித்தொடர் பரபரப்பாவதற்கும் ஒரு தொடர்பு உள்ளது. சட்டென ஒரு போட்டியை திசைதிருப்புவார்கள். தோற்கும் அணியை மட்டையாடி ஜெயிக்க வைப்பார்கள். ஆனால் இம்முறை உலகக்கோப்பை முழுக்கவே நிபுணர்களின் ஆதிக்கமாக இருக்கிறது. அதற்கு ஆட்டச்சூழலும் ஒரு முக்கிய காரணம் - ஆட்டங்களில் பந்து போகப் போக திரும்புவதில்லை. சில போட்டிகளில் போகப்போக மட்டையாட்டம் சுலபமாகிறது. சில போட்டிகளில் பனித்துளிகள், வேறு சில போட்டிகளில் சீதோஷ்ணம், ஆனால் பொதுவாகவே ஆடுதளங்கள் மட்டையாட்டத்துக்கே உதவின. ஆகையால் முதல் 5 மட்டையாளர்கள் சற்று பொறுமை காட்டினால் கடைசி 20 ஓவர்களில் வெளுத்து வாங்க முடிந்தது. அடுத்து ஆடும் மட்டையாளர்கள் ஒன்று நல்ல ஆட்டநிலையில் இருந்தால் இலக்கை நெருங்கி வந்தார்கள். இல்லாவிடில் விரைவில ஆட்டம் இழந்தார்கள். என்ன நடந்தாலும் கடைசி வரை இழுத்துக்கொண்டு போகலாம் என்பது 50 ஓவர் போட்டிகளின் இலக்கணம். வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்பது டெஸ்ட் மேட்ச் மனநிலை. இம்முறை உலகக்கோப்பையில் 50 ஓவர் போட்டிகள் டெஸ்ட் மேட்ச் போல் ஆகி விட்டன. இது ஒரு ஏமாற்றம்! இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹர்த்திக்கின் காயம் கூட அவர்களை அசர வைக்கவில்லை. ஹர்த்திக்கை மிஸ் பண்ணவே இல்லை, இதுவரையிலும். இது ஒரு அதிசயம். அஷ்வினையும் இதனாலே ஆட வைக்கத் தேவைப்படவில்லை.

உ) பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து போன்ற முதன்மையான அணிகளின் வேகவீச்சாளர்களால் பந்தை ஸ்விங் செய்யவோ ரிவர்ஸ் ஸ்விங் செய்யவோ முடியவில்லை. அது ஏனென்று தெரியவில்லை. பந்தின் அமைப்பில் ஏதோ கோளாறு என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்திய வீச்சாளர்களால் அற்புதமாக ஸ்விங் பண்ணி முதல் பத்து ஓவர்களிலே விக்கெட்டுகளை வீழ்த்தவும் மத்திய ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் (ஷமி, சிராஜ்) பண்ணவும் முடிந்தது. இது நிச்சயமாக ஒரு ஏற்றத்தாழ்வை உண்டாக்கியது. ஆட்டங்கள் ஒருதலைப்பட்சமாக ஆகின.
நம்மால் முடிந்தது ஏன் பிறரால் முடியவில்லை? நான் கவனித்த வரையில், நம்மவர்கள் சரியான நீளத்தில் வீசுகிறார்கள். என்ன நடந்தாலும் முதல் பத்து ஓவர்களுக்குள் முழுநீளத்திலோ சற்று இழுத்து நல்ல நீளத்திலோ வீசுகிறார்கள். குறைநீளத்துக்கு பெரும்பாலும் போவதே இல்லை. மேலும் பந்தின் தையல் நேராக இருக்க வீசுகிறார்கள். நல்ல தாள லயத்துடன் ஓடி வருகிறார்கள். வசீம் அக்ரம் சொல்லும் ஒரு காரணம் இந்திய வேக வீச்சாளர்கள் பந்தின் நடுவே தையல் நேராக அவரும் படி பற்றிக்கொண்டு வீசுகிறார்கள் என்பது.

பிற நாட்டு வேகவீச்சாளர்களால் இது முடியவில்லை. அவர்கள் இதற்குத் தயாராக வரவில்லை, தடுப்பாட்ட மனநிலையுடனே வந்தார்கள், சுழலர்களே அதிகமாக வீசுவார்கள் எனத் தவறாக கணித்தார்கள் என நினைக்கிறேன். ஆனால் இந்தியாவோ இந்த ஆடுதளங்களில் வேகவீச்சாளர்களுக்கு முக்கிய இடமிருக்கும் என கணித்து அதிகமாக வேகவீச்சாளர்களைக் கொண்டு வந்ததுடன் அவர்களுடைய பயிற்சிக்கும் ஆட்டநிலைக்கும் முக்கியத்துவம் அளித்தது. பும்ரா, ஷமிக்காக தவமிருந்தார்கள், ஹர்த்திக்கை அவரது பந்துவீச்சுக்காகவே பாதுகாத்தார்கள், ஷர்துலுக்கு இடமளித்தார்கள், சிராஜை ஓராண்டுக்கு மேலாக வளர்த்தெடுத்தார்கள். இந்தியா சரியாக திட்டமிட்டு நிறைவேற்றியதைப் போல மற்ற அணிகள் பண்ணவில்லை. பாகிஸ்தான் வீச்சாளர்கள் இங்கு பந்துவீசி அனுபவமில்லாதது அவர்களை பாதித்தது. இலங்கைக்கோ வேகவீச்சாளர்களின் காயங்கள் பின்னடைவாயின.

ஊ) இந்தியாவின் குல்தீப், ஜடேஜாவையும் ஆஸ்திரேலியாவின் ஸாம்பாவையும் தவிர வேறு முதன்மை அணிகளின் சுழலர்கள் சோபிக்கவில்லை. அவர்கள் டி20 மனநிலையிலே பந்துவீசியதும் காயம் மற்றும் வேறு காரணங்களால் சிறந்த ஆட்டநிலையில் இல்லாததும் உதவவில்லை. பந்து மெதுவாக வரும் ஆடுதளங்களில் தூக்கிப் போடுவதை விட ஸ்டம்புக்குள் வீசுவதும், வேகத்தை மாற்றுவதும், சில நேரங்களில் சற்று கூடுதல் வேகத்தில் வீசுவதும் முக்கியம். அதை இந்தியர்கள் சரியாக செய்தார்கள். ஆனால் யார் சுழற்றிப் போட்டாலும் பந்து திரும்பவில்லை. நல்ல சுழலர்களுக்கு மட்டுமே திரும்பியது. இதனாலே இரண்டுக்கு மேல் சுழலர்களே சுபிட்சம் என்றாகியது. 30 ஓவர்களுக்கு மேல் வேக, மிதவேக வீச்சாளர்களின் உள்-ஸ்விங், பவுன்சர், யார்க்கர் பந்துகளே எடுபட்டன, சுழல் அல்ல. அதனாலே இந்தியா அஷ்வினை - அவர் என்னதான் நன்றாக வீசியிருப்பார் என்றாலும் - ஆடவைக்கவில்லை.

எ) ஆக்ரோஷமான துவக்க மட்டையாட்டம் + மத்திய வரிசை நிதானமான சதங்கள். அல்லது துவக்க மட்டையாட்ட நிதானமான சதங்கள் + மத்திய வரிசையின் அதிரிபுதிரி ஆட்டம். இப்படி எதாவது ஒரு பார்முலா அவசியம். இந்தியா முதல் திட்டத்தை மேற்கொண்டது. இது இலங்கை 1996 உலகக்கோப்பையில் மேற்கொண்ட உத்தி. பந்து 20 ஓவர்களுக்குப் பிறகு மெதுவாகி நின்று வரும் போது உதவக்கூடியது. எல்லாரும் தூக்கி அடித்தாடும் டி20 ஆட்ட பாணியை பின்பற்றிய அணிகள் துவண்டன. நான் கவனித்த வரையில் பல அணிகளுக்கு டி20 ஹேங் ஓவர் அதிகமாக இருக்கிறது.

ஏ) உடற்தகுதி. நீண்ட தொடர் இது. நிறைய பயணம் இருக்கும். அதனால் உடற்தகுதி முக்கியம் என ரோஹித் துவக்கத்திலே சொன்னார். இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவைப் போல பிற அணிகள் உடற்தகுதியை கவனிக்கவில்லை. அதனாலே அங்கங்கே பஞ்சராகி நின்றார்கள்.

ஒ) இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்தைத் தவிர பிற அணிகள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு காயம் காரணமாக பல பிரச்சினைகள் இருந்தன. நல்ல இரண்டாவது சுழலர் (ஆஷ்டன் அகார்) இல்லை. ஆனால் ஒரு கையை, காலை வெட்டிவிட்டாலும் நின்று சண்டையிடும் வீரனைப் போன்ற அணி ஆஸ்திரேலியா. அவர்களை கணக்கிலே எடுக்க முடியாது. இது தயாரின்மை பல அணிகளின் சொதப்பலுக்கு முக்கிய காரணம்.

ஓ) இரண்டாம் நிலை அணிகள் (பாகிஸ்தான், இலங்கை) சொதப்பின, மே.இ தீவுகள் வரவேயில்லை, அவர்களுடைய இடத்தில் மூன்றாம் நிலை அணிகள் நன்றாக ஆட முயன்றன (அப்கானிஸ்தான், நெதர்லாந்து). ஆனாலும் அனுபவமின்மை அவர்களுக்கும் முதன்மை அணிகளுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. ஆஸி-அப்கானிஸ்தான் போட்டி ஒரு நல்ல உதாரணம். ஒரே ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால் அப்கானிஸ்தான் ஜெயித்திருக்கும். அவர்களுக்கும் தோல்விக்கும் நடுவே 200 ரன்களும் மூன்று விக்கெட்டுகளுமே இருந்தன. என்ன பிரச்சினை என்றால் மேக்ஸ்வெல் அடிக்க ஆரம்பித்ததும் அப்கானிஸ்தானுக்கு எந்த நீளத்தில், திசையில் வீசி எப்படியான ஆடுகளத்தை அமைக்க வேண்டும் எனத் தெரியவில்லை. தூக்கிப் போடுவதைத் தவிர அவர்களுடைய சுழலர்களுக்கு ஆட்டத்தை மெதுவாக்கி தடுத்தாடி மேக்ஸ்வெல்லை எரிச்சலாக்கத் தெரியவில்லை. ஒரு வேகவீச்சாளரைக் கொண்டு வந்து பந்தை வைடாக வீசி அவரது லயத்தை குலைத்து கால்பக்கமாக தூக்கி அடிக்க வைக்கத் தெரியவில்லை. நான் அந்தப் போட்டியைப் பார்க்கும் போது இந்தியா இந்த இடத்தில் இருந்திருந்தால் என்னவெல்லாம் பண்ணி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியிருப்பார்கள் என்றே யோசித்தேன். அவ்வளவு அடிவாங்கியிருக்கிறார்கள், அதனாலே அதை எதிர்கொள்ளும் உத்திகளும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் அப்கானிஸ்தானுக்கு இதுவே முதல் அனுபவம். எனக்கு அவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. இதைத் தான் நான் பெரிய இடைவெளி என்றேன்.

2023 உலக்கோப்பை சிறந்த பாடல்கள் இருந்தும் சொதப்பிப் போன கவுதம் மேனன் படத்தைப் போல் ஆகிவிட்டது. அரை இறுதி, இறுதிப்போட்டிகளாவது காப்பாற்றுமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.