முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எது நீதியுணர்வு?


பிரதீப்பை வைரல் கண்டெண்ட் ஆக்கியது எது? நீதியுணர்வு. அவர் அநீதிதாக வெளியேற்றப்பட்டார் எனத் தோன்ற வைக்கப்பட்டதால் வெர்ச்சுவல் வெகுஜனத்தின் நீதியுணர்வு தூண்டப்பட்டது. இந்த நீதியுணர்வு வெகுகாலமாக நம் இலக்கியவாதிகளின் கண்டெண்டாக இருந்து வந்து, பின்னர் சிலப்பதிகார மேடையுரை, திராவிட கழக மேடை உரை, அண்ணா, கலைஞர் என ஒரு சமூக சக்தியாக வளர்த்தெடுக்கப்பட்டது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் மக்கள் திரளின், சாதிய திரளின், மதவாத திரளின் நீதியுணர்வு இவ்வாறு திரட்டப்பட்டிருக்கிறது. நிர்பயாவுக்கான நீதியுணர்வு திரட்டப்பட்டதில் பாஜக ஆட்சிக்கு வந்தது. (நான் அண்ணாவையும் மோடியையும் சமப்படுத்தவில்லை.)
ஆனால் நீதியுணர்வில் இருந்து ஒன்று உருவாகும் போது அது மற்றொன்றாக உள்ளது. அது அப்படியே இருக்க முடியும். நடப்புலகில் எதுவும் நீதியின் படி நடப்பதில்லை. பொருளியல், அதிகாரத் தேவைகளின் படியே நடக்கிறது உலகம். ஆனால் அத்தேவைகளின் படி மக்களைத் திரட்டினால் முதலீட்டியத்தால், அதிகார வர்க்கத்தால் நம்மை ஆள முடியாது. எதையும் அதுவாக பார்க்க அனுமதிக்காததே தேர்தல் அரசியல். 

நீதியுணர்வின் பெரிய சிக்கல் அது அரூபமானது, காண இயலாதது, அது ஒரு நவீன மாற்றுக் கடவுள் என்பது. கடவுளுக்கான எல்லா ஏமாற்று சங்கதிகளும் வெகுஜனத் திரளைப் போய் சேரும் நீதியுணர்வுக்கும் உண்டு. இந்நீதி உணர்வின் மற்றொரு பெரிய சிக்கல் அது நம்மை அன்றாட உலகில் அநீதியை எதிர்க்க விடாமல் பண்ணுகிறது என்பது. நாம் இன்று காணும் நீதியுணர்வு மத்திய வர்க்கம் தன் அன்றாட உடனடி உலகில் உள்ள பல்வேறு அநீதிகளை கண்டும் காணாமல் கடந்துவிட செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அது ஒரு மாயக்களிம்பு. குழந்தை இல்லாத ஒருவர் பள்ளிக்கூடத்தின் முன் போய் நின்று குழந்தைகளை நோக்கி ஆறுதலாவதைப் போன்றது. அதுவே அவர்களை குழந்தையே இனி வேண்டாம் என நினைக்க வைத்தால்? ஆம் அதுதான் நவீன நீதியுணர்வின் விசயத்தில் நடக்கிறது. அது நம்மை அநீதியாளர்கள் ஆக்குகிறது. இதை நான் கருத்தளவில் அல்ல அனுபவ ரீதிதாக கண்டே மனிதர்களின் நடத்தையை கவனித்தே சொல்கிறேன். நாய் வளர்ப்பின் போதும் பார்த்திருக்கிறேன் - பிஸ்கட் எனும் சொல் ஒரு நாயை தன் பிஸ்கட்டை மறக்கச் செய்கிறது. சொற்கள் ஆபத்தானவை என அதனாலே நினைக்கிறேன். அதனாலே நீதி விவாதமே நம் ஊரின் பெரிய மோசடி என நினைக்கிறேன். ஒன்று டிராமாவாக, கருத்தாக, தர்க்கமாக சுருக்கியதும் அதை இழந்து அதன் தோற்றத்துடன் சமாதானமாகிறோம். அசல் உலகில் அதன் தோற்றத்திற்கும் கருத்தளவில், பேச்சில், சிந்தனையில் அதன் உருவத்துக்கும் தொடர்பே இல்லாதிருப்பதைக் காண்கிறோம். மிக அதிகமாக அறவுணர்வு பற்றி பேசுகிறவர்கள் தம் நடைமுறையில் எந்த அறவுணர்வும் இல்லாதிருப்பதைக் காண்கிறோம். இதன் உளவியலே அப்படித்தான் போல - பேசப் பேச நாம் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். சற்றும் கூச்சமற்றவர்களாக பொய் சொல்கிறோம், ஏமாற்றிப் பறிக்கிறோம், துன்புறுத்துகிறோம், ஆனால் பேச்செல்லாம், மனமெல்லாம் நீதியுணர்வு கமழ இருக்கிறோம்.

 இது ஒரு பிராமணியமும் தான். பிரம்மத்தின் இடத்தில் நீதி.

அசல் நீதியுணர்வைப் பெற நாம் புலனுலக வாழ்தலுக்குத் திரும்ப வேண்டும். சின்னச்சின்ன நீதிகளுக்கு, உடனடியாக நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன் தரும், நம்மால் அனுபவிக்க முடிகிற நீதிக்குத் திரும்ப வேண்டும். பெரும் நீதிகளை உதற வேண்டும். நம் நீதியான அனுபவங்களை உடனடியாக சொல்லுக்குத் திருப்பி மீண்டும் அரூபமாக்காதிருக்க வேண்டும். அநீதியின் குடியிருந்த கோயிலே மொழி தான். 

சரி, மொழி இல்லாவிடில் நமக்கு எது நீதியென எப்படித் தெரியும்? எது நம் புலனுலகில் போதாமையை ஏற்படுத்துகிறதோ அதுவே அநீதி. அதை பௌதீகமாக அறிய முடியும். பணம் போதவில்லையா? ஊதியம் கிடைக்கவில்லையா? தண்ணீர், சாப்பாடு, சூழல் மாசாதல், சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்படுதல், அவமதிக்கப்படுதல் இப்படி நம்மால் காண முடியும் எதுவும் அநீதியே. ஆனால் அதற்கு எதிர்வினையாற்றாமல் பக்கத்து தெருவில், ஊரில், நாட்டில், கிரகத்தில் நடப்பதற்கு கண்ணீர் வடிப்பது சுய-எமாற்று, சுயமோசடி. அவ்விதத்தில் நம் நாட்டில் மத்திய, மேல் வர்க்கத்தினர் நீதியுணர்வற்றவர்களாகவும், தண்ணீர் வரவில்லை, அநியாயமாகக் கொன்று விட்டார்கள் என்றால் குடத்துடன், பிணத்துடன் தெருவில் வந்து நிற்கிறார்களே அவர்களே அசல் நீதியாளர்கள். அவர்கள் பாலஸ்தீனம் பற்றி பேசிக்கொண்டு பொறுப்பை இன்னொருவர் தலையில் போட மாட்டார்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...