Skip to main content

காசே தான் ‘கடவுளடா’


மார்க்ஸின்மூலதனத்தின்சில பகுதிகளை இலக்கியக் கோட்பாட்டு பாடத்தின் பகுதியாக மாணவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன். மார்க்ஸ் தத்துவத்தில் இருந்து பொருளாதாரக் கொள்கைக்கு வந்தவர் - ஒரு காலத்தில் இளம் ஹெகலியர்கள் குழுவில் தீவிரமாக இயங்கியவர். அதனால் நமது உழைப்பு ஏன் நேரடியாக பொருளியல் வளமாக, நடப்புலகில் மதிப்பாக மாறுவதில்லை எனக் கேட்கிறார். அந்த உழைப்பின் பலன் நடுவே சிலரால் ஆட்டையப் போடப்படுகிறது. அது யாரால் என நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மார்க்ஸ் அத்துடன் நிற்பதில்லை - இந்தஇன்மைபணத்தில், உழைப்பில், தொழில் கட்டமைப்பில் எப்படியெல்லாம் இயங்குகிறது, அந்த ஏமாற்று உத்தி எங்கிருந்து வருகிறது என விசாரிக்கிறார். அதுதான்மூலதனத்தின்மிக சுவாரஸ்யமான பகுதி. துவக்கத்திலேயே அவர் பணத்தில் பணத்தின் மதிப்பு இல்லை என நிறுவிவிட்ட பிறகு அது உழைப்பிலும் உழைக்கும் நேரத்திலும் கூட இருப்பதில்லை, அது சமூக உறவாடல்களால் (ஒரு பண்டம் பல்வேறு தரப்பினரிடம் கொண்டு செல்லப்பட்டு அவர்களுடைய தேவைக்கும் பண்டத்தின் இருப்பையும் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுவது) தோன்றுகிறது எனப் பூச்சாண்டி காட்டப்பட்டு நாம் ஏமாற்றப்படுகிறோம் என்றும் சொல்கிறார். எனக்கு இதில் மிகவும் பிடித்தது இதன் அடிப்படையாக இருக்கிற கடப்புநிலைவாதத்தை அவர் அம்பலப்படுத்துவது தான்.


கடப்புநிலைவாதம் என்றால் ஒன்று அதனளவில் அல்ல, அதைக் கடந்து செல்கையிலே அதுவாகிறது எனும் கொள்கை. அதாவது உங்களிடம் ஒரு செல்பேசி / திறன்பேசி இருக்கிறது. அது அதுவாக (அதன் பருப்பொருள் அளவிலான பகுதிகள்) ஒரு திறன்பேசி அல்ல; அது தன் பயன்பாட்டின் போதே அதுவாகிறது. அது தனிப்பட்ட பயன்பாட்டில் மட்டுமே அதுவாவதில்லை, அது சமூகத் தொடர்புவலையின் பகுதியாகும் போதே (தகவல் பரிமாற்றம்) அதுவாகிறது. தகவல் கூட பரிமாறப்படும் போதே தகவலாகவும் பண்டமாகவும ஆகிறது. சரி இப்போது உங்கள் உழைப்பால் நீங்கள் ஒன்றை திறன்பேசியாக்குகிறீர்கள், உங்கள் உழைப்பால் இல்லாத ஒன்றை தகவல் ஆக்குகிறீர்கள், உங்கள் உழைப்பால் அதற்கான பண்ட மதிப்பை உண்டு பண்ணுகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் எப்போதாவது உணர்கிறீர்களா? அதற்கான ஊதியத்தைக் கோருகிறீர்களா? (சோம்பேறிகளே விதிவிலக்கு. அவர்களே நிஜமான ஞானிகள். சோம்பலைப் பற்றியும் மார்க்ஸ் எழுதுகிறார்.)

 இதை நாம் அன்புக்கு எடுத்துக் கொள்வோம். அன்பு அதனளவில் மதிப்பு கொள்வதில்லை. அதை நிகழ்த்தும் போதே (உழைப்பு) அது பண்டமாகிறது. ஆனால் எங்காவது நம் உழைப்பின் பயன்மதிப்பு எங்கே நாம் கேட்டிருக்கிறோமா? அதாவது அது பொருண்மையாக எங்கே எனக் கேட்டிருக்கிறோமா? அன்பு நிகழ்த்துதலின் போது தோன்றுகிறது, ஆனால் அது எங்கே போகிறது எனக் கேட்டிருக்கிறோமா? இது அபத்தமான கேள்வி அல்ல. இதை அபத்தம் என நாம் நினைத்தால் நாம் உண்மையை சந்திக்க விரும்பவில்லை என்றே பொருள்.


 சில கற்பனாவாதிகள் இந்த கேள்வியால் அருவருப்படைந்து பேரன்பு, பெருங்கருணை என்றெல்லாம் பேசுகிறார்கள். அது எங்கய்யா என்று கேட்டால்அனுபவிக்கணும்என்பார்கள். சரி அனுபவிக்கிறேன். ஒரு தோசையைக் கொடுத்தால் தின்று அனுபவிக்கிறேன். ஒரு ஊதுபத்தியைக் கொடுத்தால் அதைக் கொளுத்தி அனுபவிக்கிறேன். உங்கள் பேரன்பையும் பெருங்கருணையையும் அப்படியே கொடுங்கள் என்றால் கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவை எங்குமே இல்லை. நான் என் உழைப்புக்கான பயன்மதிப்பையே கேட்கிறேன் என்றால்செண்டிமெண்ட் முதலீட்டாளர்கள்எஸ்கேப் ஆகிவிடுவார்கள்


இன்றுஒருவருக்கு அன்பு செலுத்துவது’, ஒருவரிடம் அவர் விரும்புகிறபடி பேசுவது, உழைப்பாகப் பார்க்கப் படுகிறது, அன்பு அதன் வழி பண்டமாக்கப்பட்டு விட்டது.

 இது கடந்த சில பத்தாண்டுகளில் நம்மையே அறியாமல் நமக்குள் நிகழ்ந்த உளவியல் மாற்றம். இது அரசாங்கத்தாலும் சட்ட அறிஞர்களாலும் முதலீட்டாளர்களின் கூட்டணியின் அடிப்படையில் இங்கு சிறுக சிறுக கொண்டு வரப்பட்ட மாற்றம். இன்று நமக்கு ஏன்அன்பின் போதாமைஇருக்கிறது. இதுஉபரி மதிப்பின் இன்மையாகவும்’, மூலதனத்தின் போதாமையாகவும் இருக்கிறது.


அதாவது நாம் இன்று அன்பு எனும் பண்டத்தை உற்பத்தி செய்கிறவராகவும், வாங்கித் துய்க்கிறவராகவும் மாறுகிறோம். நாம் உருவாக்கும் பயன்மதிப்பை உபரிமதிப்பாக்கி இன்னொருவரிடம் கொடுத்து அவர் அதை அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்த்து அந்த அங்கீகாரத்தை திரும்பப் பெற்று நம் உழைப்புக்கான ஊதியம் கிடைத்துவிட்டது என மகிழ்கிறோம். இப்படி சுயமோசடியில், சுய-ஏமாற்றுதலில் ஈடுபடுகிறோம். இது அடிக்கடி நமக்கு உறைக்கும் போது அன்பின் போதாமை குறித்து அங்கலாய்க்கிறோம். ‘அன்பு’ ‘அன்புஎனப் புலம்பிக் கொண்டே இருக்கிறோம். நாம் செலுத்தும் உழைப்பின் பயன்மதிப்பின் இன்மையையே நாம் பேசுகிறோம் என நாம் புரிந்து கொள்வதே என்பதே அபத்தம். அதனாலே நாம்அந்நியமாகிறோம்’. அந்த வேதனையைப் பொறுக்க இயலாமல் பரஸ்பரம் வதைக்கிறோம். அதாவது அடிமைல் கப்பல்களில் சாட்டையால் அடித்து அடிமைகளைகளை வேலை வாங்குவார்களே அப்படி குடும்பத்துக்குள்ளும், உறவுக்குள்ளும் வேலை வாங்குகிறோம். இன்று ஆண்-பெண் உறவுக்குள் இந்தமென் வன்முறைஅதிகமாகிக் கொண்டே வருகிறது. ஏனென்றால் நாம் அன்பை உழைப்பாக வாங்கும் முதலாளியாகவும், அதைப் பண்டமாக வாங்கும் நுகர்வோராகவும், அதை உழைப்பாகக் கொடுக்கும் பணியாளராகவும் ஒரே சமயத்தில் நினைத்துக் குழப்பிக் கொள்கிறோம். ‘இதைக் கொடு, அதைக் கொடு, இப்பவே கொடு, நீ கொடுத்தது தரமாக இல்லை, வேறுவிதமா கொடுஎனக் கேட்டுக் கேட்டு வதைக்கிறோம். அவர்கள் கேட்பது எங்குமே இல்லை, அவர்களுக்கு கிடைக்காதது அவர்களே கற்பனை பண்ணிக்கொண்டுள்ள கடப்புநிலை உபதிமதிப்பே என அவர்களுக்குப் புரிவதில்லை. இந்த வதையை சித்தரித்த முதல் தமிழ் நாவல் சாரு நிவேதிதாவின்அன்பு: ஒரு பின்நவீனத்துவ மறுசீராய்வு மனு”. அன்பு எனும் பண்டத்தை வைத்து குடும்பத்தில் நடக்கும் அடிமைக் கப்பல் சுரண்டலை அந்நாவல் அம்பலப்படுத்தியது. அந்நாவலில் முதலாளியே தன்னை உழைப்பாளியாகவும் கருதுவார். மனைவி நான் உனக்காக இவ்வளவு செய்கிறேனே, எனக்கான ஊதியம் (அன்பு தான், வேறென்ன?) எங்கே என மென்வன்முறை செய்துகொண்டே இருப்பார். ஆனால் அவர் ஏன் பணத்தையோ பொருளையோ கேட்பதில்லை? ஏனெனில் அதைக் கேட்டுப் பெற்றால் அவர் தொழிலாளி ஆகிவிடுவார். அவர் முதலாளியாகவும் இருக்க ஆசைப்படுகிறார். ஒருவர் தொழிலாளியாகவும் முதலாளியாகவும் ஒரே சமயம் இருக்கும் அபத்த நாடகமே நவீன குடும்ப அமைப்பு மற்றும் காதல் உறவு.

 

 அந்நியமாதல் இன்றைய சமூகத்தில் மனிதனுக்கும் எந்திரத்துக்குமான நேரடி உறவில் அல்ல, அதுதனிமையாகவேபுரிந்துகொள்ளப்படுகிறது. அதாவது கணினியில் இருந்து தோன்றும் அந்நியமாதல் கடந்து கடந்து பல்வேறு அனுபவங்களில் வெளிப்படுகிறது. நூறு பேர்கள் நடுவே இருந்தாலும் நாம் தனியாக இருப்பதாக உணர்கிறோம். .ஆர் ரஹ்மானிடம் ஒரு பேட்டியில் உங்களுடைய சிறந்த நண்பர் யாரெனக் கேட்ட போது முதலில் தன் கார் ஓட்டுநரைக் குறிப்பிட்டுவிட்டு தனது சிறந்த நண்பர் உண்மையில்தனிமையேஎன்கிறார். எனக்கு அப்பதில் மிகவும் பிடித்திருந்தது. அவர் ஒரு கலைஞர் என்பதால் அவரது நுண்மனம் இதைக் கண்டுபிடித்துவிட்டது - நாம் தனிமையாக இல்லை, தனிமையுடன் இருக்கிறோம். தனிமை என்பது கடவுளின் இன்னொரு வடிவமே. கடவுள் எப்படி நம் உபரிமதிப்பை ஒருவர் நம்மிடம் இருந்து திருடும் போது உருவாகிறாரோ அவ்வாறே தனிமையும் தோன்றுகிறது. கடவுள் எப்படி நாம் உழைக்கும் படி (பக்தி, விசுவாசம், மனம் உருகுதல், வழிபடுதல்) வற்புறுத்தப்படும் போது உபரிமதிப்பாகத் தோன்றுகிறாரோ அன்பும் நம் நண்பர்களாலும் காதலர்களாலும் கணவன், மனைவி, பெற்றோராலும், பேஸ்புக் நண்பர்களாலும் (வாசிப்பது, விருப்பக்குறியிடுவது) நாம் உழைக்கும்படி வற்புறுத்தப்படும் போது தோன்றும் உப-கடவுளே. சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சிலர் அடிக்கடி திரையைஇழுத்துவிட்டுபுத்துருவாக்கி புதிய மாற்றங்கள் வந்துள்ளனவா எனப் பார்ப்பதை கவனித்திருக்கிறேன். அந்த புதிய பின்னூட்டங்கள், உணர்ச்சிக்குறிகள் அல்ல, அவை வரவில்லையே என்பதுதான் அவர்களைப் பதற்றமாக்கும். நாம் சமூகவலைதளங்களில் தனிமையைப் போக்கும் போது கூடுதல் தனிமையாகவும் உணர்கிறோம். கடவுளை நினைக்கும் போது நாம் பக்தனாகவும் தனிமனிதனாகவும் ஒரே சமயத்தில் இருப்பதைப் போன்றது இது. இந்த முப்பரிமாண உறவு இல்லையெனில், நாம் நினைத்ததும் கடவுள் எனும் உபரிமதிப்பு நம் முன் வந்துவிட்டால் அவர் அத்துடன் காலியாகிவிடுவார். அடச்சீ என்று சொல்லிவிடுவோம். அந்நியமாதலே கடவுள் பக்தி ஆகிறது. கடவுள் பக்தியே காதலும், அன்பும், சமூகவலைதள நடவடிக்கையும் ஆகிறது.

 நாம் அந்நியமாதலைப் புரிந்துகொண்டால்தனிமைகாணாமல் போய்விடும். நாம்உழைப்பதைநிறுத்தினால் தனிமை காணாமல் போய்விடும்.


இன்று சிலர் அன்பும், மரியாதையும் தராவிடில் கணவன், மனைவியிடையிலான உறவு முறிந்துவிடும் எனப் பேசுகிறார்கள். இப்படிப் பேசுவதை ஒரு முன்னேற்றம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் இது ஒருஅந்தரங்கமான முதலீட்டியம்என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சொல்வதுஎங்கள் ஊழியர் நாங்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு, நேரத்துக்கு பணியாற்றவில்லை எனில் அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்என்பதே. (அதாவது அவரிடம் உள்ள எல்லாவற்றையும் பறித்து வெளியேற்றி விடுவோம்.)


இந்த இல்லாத உழைப்பை விட சமையலறை உழைப்பு மேலானது என நினைக்கிறேன். சமையலறையில் தோசை சுட முடியவில்லை, இன்று அலுப்பாக இருக்கிறது என நினைத்தால் அந்த அப்பண்டத்தை நீங்கள் வெளியே ஓட்டலுக்கு சென்றோ ஸ்விக்கி மூலம் வீட்டிலிருந்தோ வாங்கிக் கொள்ளலாம். அதில் உண்மையில்சுரண்டல்மிகவும் குறைவு. (இதை நான் ஒரு ஆணாக சொல்லவில்லை.) ஏனெனில் அங்கு பண்டம் பொருண்மையாக உள்ளது. நவீன முதலீட்டியம் அங்கும் கடவுளைக் கொண்டு வந்துபொருண்மையான பண்டங்களை நாங்களே மலிவாகத் தருகிறோம், நீங்கள் அரூபமான பண்டங்களை உருவாக்குங்கள்நம்மை புதிய திசையில் திருப்பிவிட்டார்கள். இப்போது காதலர்கள் இடையே கசப்பு அதிகமாகிறது, கணவன் மனைவி இடையே வெறுப்பு மிகுகிறது. ஏனென்றால் இல்லாத ஒன்றுக்காக உழைத்து, உற்பத்தி செய்து, அதன் பயன்மதிப்பை, உபரிமதிப்பின் இருப்பையும் இல்லாமையையும் ஒரே சமயத்தில் கற்பனை பண்ணி அந்நியமாகித் தவிக்கிறோம். அந்த தவிப்பை வன்முறையாக உற்பத்தி பண்ணுகிறோம். முன்பு இல்லாத அளவுக்கு மாற்றுப் பாலுறவுகளை நாடுகிறோம், பரஸ்பரம் வதைக்கிறோம்; கொலை, அடிதடி, வாடகைக் கொலையாளியை அமர்த்துவது போன்ற குற்றங்கள் இன்று அதிகமாகி வருகிறது. குடும்பம் இப்படி ஒரு முடிவற்ற சுழற்சியில் மாட்டிக் கொண்டுவிட்டது. இதன் ஆரம்பம் நவீன முதலீட்டியம் அன்பு எனும் ஒரு பொருண்மையான பண்டத்தை மீபொருண்மையான பண்டமாக மாற்றியது தான். வரலாற்றில் நீங்கள் இதை பொருண்மையான நாட்டார் தெய்வங்களை மீபொருண்மையான வைணவ, சைவ வழிபாடாக, கோவில் பண்பாடாக மாற்றம் பெற்றதன் அடுத்த கட்டமாகப் பார்க்கலாம். மீபொருண்மையான தெய்வத்தின் (பரமாத்மா) இடத்தில் மீபொருண்மையான அன்பு (நவீன பரமாத்மா) வந்துவிட்டது


இதை நவீன மனிதர்கள் எதிர்க்கவும் செய்தார்கள். எப்படி? அவர்கள் அன்புறவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில் பொருண்மையான பண்டங்களை பரிசாகவும், பெரும் பணமாகவும் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். இன்று ஒரு மத்திய / மேல்மத்திய வர்க்க நபர் காதலிப்பதற்கு நிறைய செலவழிக்க வேண்டும். இதிலும் பாலினம் வருகிறது. ஆணே அதிகமாக செலவழிக்க வேண்டும். வங்கியில் பல லட்சங்களும் கையில் நிறைய பணமும் இல்லாமல் இன்று திருமணம் செய்து வாழ்வது அசாத்தியமாக மாறிவிட்டது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை. யாருக்கு? நமக்கா? இல்லை, அடுத்தவர்களுக்கு. ஏன் அவர்களுக்குப் போதவில்லை என்றால் அன்பு மீபொருண்மையாக மாற்றப்பட்டு அது குறித்த பதற்றம் அதிகமாகிவிட்டது. நாம் இதை ஒரு சீரழிவாக அல்லாமல் இதன் காரணத்தை நாட வேண்டும்.


செக்ஸ் இன்று நேரடியான உழைப்பாக, ஒரு சேவையாக பார்க்கப்படுகிறது. செக்ஸ் முடிந்த பிறகு நாம் நமது பார்ட்னரிடம்உங்களுக்கு திருப்தியாக இருந்ததா?” எனக் கேட்க வேண்டும் (ஒரு மசாஜ் பண்ணும் சேவையாளரைப் போல) என முற்போக்காளர்கள் சொல்கிறார்கள். சரிதான், செக்ஸின் பயன்மதிப்பு அதன் இன்பம் தானே? எனில் அந்த இன்பத்தின் பயனர் யார் நாம் தானே? உழைப்பாளி யார்? அதுவும் நாம் தானே? நாமே உழைத்து ஒரு பண்டத்தை உற்பத்தி பண்ணிவிட்டு நம்மிடமே நாம்உங்களுடைய ரெய்யூவைக் கொடுங்கள், அஞ்சு ஸ்டார் கொடுங்க ப்ளீஸ்எனக் கெஞ்சுவதன் பின்னுள்ள பயம் தான் என்ன? அது எங்கிருந்து வருகிறது? அது செக்ஸ் உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா எனும் குழப்பத்தில் இருந்து வருகிறது. அது இன்பத்தின் மீதான மிதமிஞ்சிய பதற்றத்தில் இருந்து வருகிறது. அது உடலையும் உடலின்பத்தையும் இருகூறாகப் பிரித்ததில் இருந்து, உடலின்பத்தை உழைப்பின் மதிப்பாகவும், அது உபரியாக எங்கோ திருடப்பட்டு விடுகிறது எனும் உணர்வில் இருந்து வருகிறது. அதனாலே இருவரும் படுக்கையில் இருந்து எழுந்ததும்உன் உபரி மதிப்பை நான் திருடவில்லை, அது உனக்கே முழுக்க கிடைத்தது தானே?” எனக் கேட்டு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என முற்போக்காளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


இந்த பதற்றத்தின் மற்றொரு விளைவே விவாகரத்துகள். நாம் விவாகரத்துகளை அன்பின் போதாமையால் விளையும் கோளாறு, மனமுறிவு, பொருத்தமின்மை எனப் பார்க்கிறோம். ஆனால் அதெப்படி ஒரு சமூகம் நவமுதலீட்டியம் நோக்கி குதிரைப்பாய்ச்சல் பாயும் போது மனமுறிவும் மணமுறிவும் அதிகமாகிட முடியும், இரண்டுக்குமான தொடர்பு என்னவென நாம் கேட்பதில்லை. விவாகரத்து என்பது அடிப்படையில்வேலை நீக்கமே’. உங்கள் உழைப்பு எனக்கு பண்டமாக வரும் போது அது போதுமானதாக இல்லை, அதனால் என்னால் லாபமீட்ட முடியவில்லை என நம் இணையர் சொல்வதே மனமுறிவு. இது முதலாளியின் குரல். ஆனால் நமது சட்டமும் சமூகமும் பெண்களை நிரந்தர ஊழியர்களாகப் பார்க்கிறது. இன்னொரு பக்கம் நவீன முதலீட்டிய உளவியல் நம்மை அன்புறவில் உழைக்கும், உழைப்பை வாங்கி உபரிமதிப்பை ஆட்டையப் போடும் முதலாளியாகவும் ஒரே சமயத்தில் யோசிக்க வைக்கிறது. (அசைப்பவனும் நானே, அசைவதும் நானே என சிவாஜி கணேசன்திருவிளையாடலில்சொல்வதை நினைவுகொள்ளுங்கள் - “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே…”. ஆனால் அகிலமே சிவன் என்றால் அகிலம் எப்படி அகிலத்தையே அசைக்க முடியும்? அப்போது அகிலம் அசைகிறதா அசைக்கப்படுகிறா? நீங்கள் உங்களையே அசைக்க முடியுமா?) ஆனால் ஒருவர் இருவராக இருக்க முடியாது என்பதாலே தனக்குள் முதலில் பிரிவு தோன்றி அது அடுத்தவர்களுடனான பிரிவாகி அதை சரிசெய்யத் தெரியாமல் குடும்பங்கள் உடைகின்றன. அப்படி உடையும் போதும் பணம் வாங்கிக் கொண்டே உடைக்கிறோம் என்பதை கவனியுங்கள்.


என் நண்பர் ஒருவர் இக்கதையை சொன்னார். அவருக்கு நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சமரசத்தின் மூலம் விவாகரத்து உத்தரவாகியது. ஆனால் அதற்கு முன்பு நீதிபதி அவரையும் அவரது மனைவியையும் வக்கீல்கள் சகிதம் தன் அறைக்கு அழைத்து நிற்க வைத்துஅவரு செட்டில்மெண்ட் பணம் கொடுத்திட்டாராம்மா? உங்களுக்கு திருப்தியாம்மா, எதாவது குறை இருக்காமா?” எனக் கேட்டதாகவும் அப்போது நீதிபதி, மனைவி, வக்கீல்கள் முகத்தில் ஒருசேரத் தோன்றிய மகிழ்ச்சியை தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது, தன்னை நீதிமன்றத்தில் பார்க்கும் போதெல்லாம் கொலைவெறியுடன் முறைக்கும், கிடைத்த வாய்ப்பில் எல்லாம் நீதிபதியிடம் புகார் சொல்லும் மனைவி இப்போது தன்னை மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடத்தியதாகவும், இந்த முரணைத் தன்னால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றும் சொன்னார். இதில் எந்த முரணும் இல்லை என்று நான் சொன்னேன்.


இது ஊதியம் கிடைக்கும் போது ஊழியருக்கும், ஒரு ஊழியரின் உழைப்பைத் திருடி அதைக் கொண்டு பலமடங்கு பணத்தைப் பெருக்க இயலும் போது முதலாளிக்கும் வரும் மகிழ்ச்சி. அன்பில் இதைத் தேடித் தேடி கிடைக்காமல் நீதிமன்றம் மூலமாக சமரசப் பணமாக அதைப் பெறுகையில் கிடைக்கும் மகிழ்ச்சிஎன்றேன். “இப்பணத்தை ஆரம்பத்திலே கேட்டிருந்தால் நான் கொடுத்திருப்பேனே, என் கூடயே குடும்பத்தை நடத்தியிருக்கலாமே. இப்போது நான் கொடுத்த பணத்தால் அவங்களுக்கு பயன் இருக்கும் போது, என்னால் பயனுள்ளது என்று தானே பொருள்?” என்று அவர் கேட்டார். நான் சொன்னேன், “அப்படி பணமாகவோ பொருளாகவோ பிரியத்தையும் மரியாதையையும் கொடுக்க முடிந்தால் நம் உலகம் மிக எளிதாக நிம்மதியாக இருக்கும். ஆனால் நவீன முதலீட்டியம் அதை அனுமதிக்காது. அது பொருளின் இடத்தில் அன்பைப் போன்ற இல்லாத விசயங்களைக் கொண்டு வந்து நம்மை ஏமாற்றுகிறது, அதற்குத் தெரியும் நம்மால் அன்பில் திருப்தி கொள்ள முடியாது என, நாம் அன்புக்கு வெளியே எதையெதையோ தேடி செலவழித்துக் கொண்டிருப்போம் என்று, அதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று. உங்கள் பணத்தை லம்ப் சம் செட்டில்மெண்டாக நீங்கள் கொடுத்தது எங்கு போகிறது சந்தைக்கு அல்லாமல்? சந்தையில் அது நுகர்வுக்கும் பண்டப்பெருக்கத்துக்கும் உதவும். நவீன முதலீட்டியம் இதற்காகத் தான் விவாகரத்தைக் கொண்டு வந்தது என்பதை குடும்ப நலச்சட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் தலைவர்களே முன்பு பேசியிருக்கிறார்கள். ஆனால் நிஜமான பிரச்சினை பணப்பரிமாற்றத்தில் இல்லை, அரூபங்களின் அடிப்படையில் நவீன குடும்பங்கள் நடக்க வேண்டியிருப்பதுதான் பிரச்சினையே.”  “இல்ல சார், என் கிட்டே என்னதான் இல்ல?” “உங்க மனைவி கிட்டே கேட்டால் உங்களிடம் அன்பு இல்லைன்னு சொல்வார். அன்புக்குப் பதிலாக பணத்தை அவரால் குடும்ப உறவுக்குள் இருந்து வாங்க முடியாது. ஆனால் வெளியில் இருந்து மகிழ்ச்சியாக வாங்க முடியும். சிலர் விவாகரத்துக்குப் பின்னர் நல்ல நண்பர்களாக நீடிக்கிறார்கள், இன்னும் சிலர் பாலுறவும் வைத்துக் கொள்கிறார்கள். கேட்டால் குடும்பத்தில் உள்ள இறுக்கம் இப்போது இல்லை என்பார்கள். அந்த இறுக்கம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் குடும்ப அமைப்பே ஒரு இறுக்கமான ஆணாதிக்க சட்டகம் என்று ஜல்லிடிப்பார்கள். உண்மை என்னவென்றால் அந்த இறுக்கம் அருவமான அன்பில் இருந்து வருகிறது. குடும்பத்திற்கு வெளியே அன்பு இல்லை. குடும்பத்திற்குள் அன்பு உள்ளது. அருவமான அன்பைக் கண்டு தான் நாம் அஞ்சுகிறோம். ஏனெனில் அதன் இன்மை நம்மை பயமுறுத்துகிறது. இன்றுஅனுகூலங்களுடன் கூடிய நட்புறவுஎன்று பாலுறவு அனுமதிக்கப்படும் நட்பை அழைக்கிறோம். அந்த அனுகூலம் அன்பில்லாமல் இருப்பது. எனில் நாம் ஏன் அன்பைக் கைவிடாமல் இருக்கிறோம்? ஏனென்றால் நவமுதலீட்டியம் நம்மை அப்படி கட்டமைக்கிறது. குடும்பத்துக்குள் அதிருப்தியாகவும் வெளியே திருப்தியாகவும் நுகர்வில் ஈடுபடுகிறோம்.”


இன்றைய நவீன குடும்பங்கள் சிதைவது இந்தஅன்பினால்தானே ஒழிய அன்பில்லாததால் அல்ல என நான் அவருக்கு விளக்கினேன். நான் அவருக்கு மற்றொரு உதாரணத்தை சொன்னேன்: குடும்பத்திற்காக ஒரு மனைவி செலுத்தும் உழைப்புக்கு கூலி வழங்க வேண்டும் என்று இன்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் ஒரு குடும்பத்தில் சமையற்காரர், வேலைக்காரர்கள் இருந்தாலும், மனைவி உழைக்கவே வேண்டாம் என்றாலும் அது உழைப்பு தானா என்று கேட்டால் அவர்கள் ஒரு மனைவி சும்மா குடும்பத்தை நடத்துவது தான் உண்மையான உழைப்பே என்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் ஒரு நிறுவனத்தின் முதலாளியும் தானே அந்நிறுவனத்துக்காக உழைக்கிறார், அவர் நிர்வகிக்கிறார், தன் நேரத்தை செலவழிக்கிறார், சில நிறுவனங்களில் அவர் தனக்காக ஒரு தனி சம்பளத்தையும் போட்டு எடுத்துக் கொள்வதுண்டு. குடும்ப நிர்வாக உழைப்பும் இப்படியானதே. எனில் மனைவி ஒரு சி.. தானே? இதைக் கேட்டால் இல்லை பணம் கணவனிடம் உள்ளது என்பார்கள். “மனைவி வெளியே வேலைக்குப் போகிறவர், கணவனுக்கு ஈடாக சம்பாதிக்கிறார் எனில்?” என்று கேடால்அப்போதும் அவர் குடும்பத்துக்காகத் தானே ஓசியில் உழைக்க வேண்டும்என்பார்கள். “சரி இந்த குடும்பம் என்பது யார்?” “அது கணவனையும் மனைவையியும் அடக்கியதுஎன்பார்கள். சி..ஓவிடமும் தான் பணமில்லை, நிர்வாகத்திடம் இருக்கிறது. ஆனால் சி..ஓவிடம் பணமும் இருக்கிறது. சி..ஓவின் சொந்த நிறுவனத்திலே அவர் உழைக்கிறார், ஆனால் அது அவரது நிறுவனமும் தான், அவரது நிறுவனமும் இல்லைதான் என்பதைப் போன்றது இது


இந்த உண்மையை அவர்களோ நமது நீதிமன்றமோ சட்டமோ ஒப்புக்கொள்ளாது. ஏனென்றால் அதை ஒப்புக்கொண்டால் நாம் குடும்பத்தை அரூபமாக கற்பனை பண்ணுகிறோம், நாமே குடும்பமாகவும், குடும்பம் அல்லாமல் தனிமனிதர்களாகவும் இருக்கிறோம் என்று தன்முரணுடன் இருக்கிறோம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல ஒரு குடும்பத்துக்காக ஒரு வேலைக்காரி உழைக்கிறார், ஆனால் அவர் அக்குடும்பத்தின் பகுதியாவதில்லை. அவரால் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்துக்குப் போக முடியாது. ஏனெனில் குடும்பம் அவருக்கு பொருண்மையானது (வீடு). நமக்கோ குடும்பம் அரூபமானது (குடும்பம்). குடும்பத்தை பொருண்மையாகப் பார்த்தால் நாம் கடவுளில் ஆரம்பித்து, சாதி, சம்பிரதாயமான சடங்குகள், பணம், அரசு, இறையாண்மை என பல கட்டமைப்புகளை எதிர்த்துக் கேள்வி கேட்போம். அவை நிலைகுலைந்து போகும். அதனாலே கணவனுக்கு மனைவி தேநீர் தயாரித்துக் கொடுப்பதற்கு இன்ன ஊதியம் எனக் குறிப்பிட்டுக் கேட்காமல்குடும்பத்தை நடத்துவதற்காகதன்னைத் தியாகம் செய்வதற்கான ஊதியம் எனக் கேட்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். இந்த தந்திரம் நவ முதலாளித்துவத்தின் தந்திரம் என மார்க்ஸ் தெளிவாகவே காட்டுகிறார். (இல்லாத உபரிமதிப்பின் புலப்படாத வடிவமாக பணம் உள்ளதைப் போல அருவமான குடும்பம் வருகிறது; உழைப்பின் விளைவான பண்டம் கடப்புநிலைப் பொருளாக உள்ளதைப் போல நவீன குடும்பமும் இருக்கிறது.)


குடும்பமும், நவீன காதல் உறவுகளும் மட்டுமல்ல, கல்வியும் தான் ஒரு மோசடி வேலையாக இன்று மாறிவிட்டது. அதனாலே உறவுகளில் போல கல்வியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. நான் என் மாணவர்களிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி - “நீங்கள் கல்வி கற்கிறீர்களே அக்கல்வி எங்கிருக்கிறது? உங்களால் அதை எடுத்துக் காட்ட இயலுமா?” அவர்கள் முடியாது என தலையாட்டுவார்கள். “நீங்கள் இங்கிருந்து போகும் போது நீங்கள் பெற்ற எதனை எடுத்துச் செல்வீர்கள்?” “சான்றிதழை.” “அச்சான்றிதழின் பயன்மதிப்பு என்ன?” “எங்களுக்கு அதைக் கொண்டு வேலை கிடைக்கும்.” “சரி, ஆனால் நீங்கள் வேலையைக் கொண்டு செல்லவில்லையே, வெறும்இல்லாத வேலையைத்தானே கொண்டு போகிறீர்கள்?” அவர்கள் ஆமாம் என தலையசைப்பார்கள். சிலர்சார் நாங்கள் திறனைக் கற்கிறோம்என்பார்கள். “சரி அத்திறனை எடுத்துக் காட்டுங்கள்என்றால் கையை விரிப்பார்கள். “நீங்கள் ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக பதினெட்டு ஆண்டுகள் உழைப்பை செலுத்துகிறீர்கள் என்பதே நிஜம். சரி நீங்கள் உழைக்கிறீர்களா இல்லையா?” “ஆமா சார், நிறைய படிக்கிறோம்.” “படிப்பு மட்டுமல்ல உழைப்பு. நீங்கள் கொடுக்கும் நேரத்தினால் தான் ஒரு கல்வி நிறுவனம் நடக்கிறது. ஒரு வேலையிடத்தைப் போன்றே இங்கும் உங்களுக்கு கால அட்டவணையும் இடுபணிகளும் உள்ளன. நீங்கள் வெறுமனே கட்டணத்தை செலுத்திவிட்டு இந்நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்தால் இந்நிறுவனங்கள் தகர்ந்து போகும். ஆசிரியர்களை விட அதிகமாக பணி செய்வது உண்மையில் நீங்களே. அந்த பணிக்கான ஊதியத்தை வாங்குகிறீர்களா?” “இல்லை, நாங்கள் கட்டணம் செலுத்துகிறோம்.” “அப்போ நீங்க ஊழியர்களா முதலாளிகளா?” அவர்கள் சிரிப்பார்கள். நான் சொல்வேன், “இதுவே நீங்கள் தோட்டத்தில் ஒரு விதையைப் போட்டு அது செடியாக வளரும் போது நான் உங்களுடைய உழைப்பின் பெறுமதி எங்கே என்று கேட்டால் உங்களுக்கு குழப்பம் இருக்காது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி ஆகி நவீன சந்தையில் இணைந்துவிட்டால் உங்கள் உழைப்பின் உபரிமதிப்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாதபடி மறைந்து போகும்.”


குடும்பத்துக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய மோசடி வித்தை கல்வியை போதிப்பது. அன்புக்கு அடுத்தபடியாக முதலீட்டியம் கல்வியைக் கொண்டு வந்தது. அதற்கு அவர்கள் தேவாலயத்தை ஒரு மாடலாக பயன்படுத்தினார்கள். தேவாலயத்தில் கடவுளும், போதனையும், சாமியாரும் என்றால் இங்கு புத்தகங்கள், கல்வி, கல்வி போதனை, கல்வியாளர். அங்கு பக்தர்கள் என்றால் இங்கு மாணவர்கள். தேவாலயத்தில் ஒரு பக்தர் உழைப்பையே செலுத்துகிறார், ஆனால் அவர் தன் பங்குப் பணத்தையும் செலுத்துகிறார். உழைப்பாளியாகவும் முதலாளியாகவும் இருக்கிறார். அப்படி நம்ப வைக்கப்பட்டு அவரது உழைப்பின் உபரி மதிப்பை சாமியாரும் மதமும் எடுத்துக்கொண்டு பங்குப்பணத்தை வேறு பிடுங்கிக் கொள்கிறது. இப்படி இருகூறாகவும் அவர் சுரண்டப்படுகிறார். தான் வழிபடாவிடில் கடவுள் மறைந்து போவார், கடவுள் இல்லாவிடில் தேவாலயம் நடக்க இயலாது, அதனால் தேவாலயமே தனக்கு ஊதியம் தர வேண்டும் என யாரும் கேட்க முடியாது (இதை நீங்கள் இந்து, இஸ்லாமிய வழிபாட்டிடங்களுக்கும் சொல்லலாம்.) இதை பிரிட்ஸ் கேரிந்தி தனது Refund எனும் குறுநாடகத்தில் மரண கலாய் கலாய்த்திருப்பார் - ஒருவர் வேலையை இழந்ததும் தன் பள்ளிக்கு சென்று கல்வி தனக்கு வேலை செய்யும் திறனை அளிக்கவில்லை என்று கூறி தன் கல்விக் கட்டணத்தை திரும்பக் கேட்பார். மொத்த பள்ளியுமே மோசடி வேலைகள் பண்ணி அவர் தகுதியானவரே என நிரூபிக்க முயல்வார்கள், அவரோ அவர்கள் வைக்கும் எல்லா தேர்வுகளிலும் தோற்று கட்டணத்தைப் பெற முயல்வார்.


இதை நீங்கள் நவீன உடற்பயிற்சி நிலையங்களில் இன்னும் அப்பட்டமாகப் பார்க்கலாம் - அங்கு நீங்களே சென்று எந்திரங்களில் வியர்வை சிந்தச் சிந்தஉழைத்துவிட்டுஉடற்பயிற்சி நிலைய முதலாளியிடம் பணமும் கொடுக்க வேண்டும்.

நவீன மருத்துவத்தை எடுத்துக் கொள்வோம் - உங்களுக்கு என்ன நோய் வந்தாலும் ஒரு மருத்துவரிடம், மருத்துவமனைக்குப் போகிறோம். அங்கு உங்கள் நோய்க்குறிக்கே சிகிச்சை அளிக்கிறார்கள், நோய்க்கு அல்ல. நோயை உடல் தானே சரி செய்கிறது. அதனாலே உங்களைஓய்வெடுக்கசொல்கிறார்கள். அல்லது உள்நோயாளியாகபடுத்துக் கொள்ளசெய்கிறார்கள். கடைசியில் நம் உடலை நாமே சரிசெய்து விட்டுக் கிளம்பும் போது மருத்துவமனைக்கு கட்டணமும் செலுத்துகிறோம். நான் அதற்காக யாரும் மருத்துவரிடம் போக வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஆரோக்கியத்தை தாமே தருவதாக அவர்கள் போடும் வெட்டி ஸீனைப் பார்க்க சொல்கிறேன்.


சரி, எப்படி முதலீட்டிய சமூகத்தால் நம்மை இப்படி சுலபத்தில் ஏமாற்ற முடிகிறது? நம்முடைய உபரிமதிப்பை திருடுவதுடன் நிற்காமல் நம்மையே முதலாளியாகவும் ஊழியனாகவும் நினைக்க வைத்து பைத்தியமாக்க முடிகிறது? நாம் தாம் அறிவாளிகள் ஆகிற்றே? அங்குதான் பிரச்சினையே வருகிறது

கடைசி விவசாயிபடத்தில் ஒரு அற்புதமான வசனம் வரும். மாயாண்டித் தாத்தா தன் சிறுதுண்டு விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் தரகருக்கு விற்க மறுத்துவிடுவார். அப்போது அந்த தரகர் தன் சகாவிடம் சொல்வார், “அந்தாளுக்கு படிப்பும் இல்ல. படிச்சவன்ன்னா சுலபமா எதையாவது சொல்லி ஏமாத்திரலாம். ஆனால் அந்தாளுக்கு ஒண்ணுமே தெரியாது.”

நம்மை நம் அறிவை வைத்துத்தான் சுரண்டுகிறார்கள். ஏனென்றால் நம் அறிவு அடிப்படையில் பிழையானது. இந்த அறிவு இல்லாத விசயங்களை இருப்பதாக நம்பிய பின் அது ஏன் உள்ளது என நம்புவதற்கான விபரங்களை, தர்க்கங்களைத் தருகிறது. கடவுளை நம்பிய பின்னரே நீங்கள் கடவுளை அறிய முடியும். அன்பை நம்பினாலே அன்பை அடைய முடியும். உழைப்பு என ஒன்றை நம்பினாலே உழைத்து அதை அறிய முடியும். கல்வி, அறிவு போன்றவையும் அப்படியே. தத்துவத்தில் இதைமுன்னறி கருத்தியல்’ / புலன்சாரா அறிவு (a priori knowledge) என்கிறார்கள்


இயற்கையில் மரமும் செடியும் கொடியும் இருக்கின்றன. மழை பெய்கிறது, வெயில் அடிக்கிறது. இவை நம் புலன்வழி தெரிய வரும் பொருட்களாகவே (புலப்பாடுகள் [phenomena]) இருக்கின்றன. புலனுக்கு வெளியே இவை வெறும் பொருட்கள். நாம் இவற்றுக்கு பெயரிடும் போது இவற்றுக்குள் ஒரு ஆதி உருவம் உள்ளது என நம்பத்தொடங்கினோம் (பிளேட்டோ இதை லட்சியக் கருத்து வடிவம் (ideal form) என்றார். ஐரோப்பாவில் பின்னர் இமானுவல் காண்ட், ஹெகல் என கருத்துமுதல்வாதிகள் இதை வளர்த்தெடுத்துச் சென்று அது நவீன மதங்களின், தேசங்களின் உருவாக்கத்தில் போய் முடிந்தது தான் தத்துவ மோசடியின் வரலாறு என்கிறார்கள் நீட்சேயிய, ஹைடெக்கரிய சிந்தனையாளர்கள்.). அதனாலே எல்லா மரங்களும் ஒன்றுபோல இருக்கின்றன என நினைத்தோம். மேலும் நம்மால் தொட்டோ பார்த்தோ கேட்டோ நுகர்ந்தோ சுவைத்தோ அறிய முடியாது. எனில் அந்தபுலப்பாடும்அதைப் புலப்படுத்தும் பொருளும் ஒன்றா? உலகமெங்கும் உள்ள மரங்களும் அவற்றுக்குள் இருக்கும் ஆதி மரமும் ஒன்றா? (மனிதனும் அவனுக்குள் இருக்கும் ஆன்மாவும் அவனை சிருஷ்டித்து இயக்கும் பரமாத்மாவும் ஒன்றா?) இந்த சிக்கலை சரிசெய்யவே அவர்கள் முன்னறிக் கருத்தியலைக் கொண்டு வந்தார்கள். ஆதி உருவங்கள் / கருத்து வடிவங்கள் எப்போதும் உள்ளவை, நம்மால் அவற்றை நம் புலன்களால் மட்டுமே காண முடியும், அவற்றின் சாரத்தை கற்பனை மட்டுமே செய்ய முடியும், அது நமது குறைபாடு என்றனர்.

உலகின் முதல் முன்னறி கருதுகோள் கடவுள். அவர் எங்கே என்று கேட்க முடியாது. அவர் நம் புலன்களுக்கு அப்பாலானவர். அப்பால் இருப்பவர் தானே, இருந்துவிட்டுப் போகட்டும் என நாம் கூறிவிடக் கூடாது என்பதால்அவர் அப்பால் இருந்தாலும் அவர் நம்முடன் இருக்கிறார், நமது அன்றாட செயல்களில் இருந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்என்றார்கள்


நீங்கள் உழைக்கும் போது எதற்காக உழைக்கிறோம் என நியாயமாக கேட்க வேண்டும். சாப்பிட, வீட்டில் வாழ, அடிப்படைத் தேவைகளைப் பார்த்துக் கொள்ள என்பார்கள். அதை என்னால் உழைக்காமலே எப்படியாவது பெற்றுக்கொள்ள முடியும் என்று சொன்னால் உங்களை மிக மோசமாக பழிப்பார்கள். சோம்பேறி, உதவாக்கரை, சுயநலவாதி இன்னபிற பட்டங்களை அளிப்பார்கள். அல்லது உங்களுக்கான உணவும், வாழிடமும் சுலபத்தில் கிடைக்காதபடி பார்த்துக் கொள்வார்கள். முதலீட்டிய ஆதரவாளர்கள் தொடர்ந்து  அரசின் சமூக நீதித்திட்டங்களைஇலவசங்கள்எனப் பழிப்பதைப் பாருங்கள். இதையும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார் - பண்டங்களின் கிடைக்குமையை சந்தையே மர்மமாக கட்டுப்படுத்துகிறது, அதன் மூலம் ஒரு போதாமையை உண்டு பண்ணுகிறது, இந்த போதாமையைக் கொண்டு பண்டங்களை புலன்சாரா தேவையாக (பணம்) மாற்றுகிறது. இலவசங்கள் பண்டங்களின் இருப்பை கட்டுக்குள் வைத்து விடும் என்பதே முதலீட்டியத்தின் பிரச்சினை. அரசு ரேஷன் கடையில் கொடுக்கும்இலவச அரிசி’ 60-80 ரூபாய் தரமான அரசுக்கு இணையாக இருந்துவிட்டால், வர்க்கம் பார்க்காமல் எல்லாருக்குமே அரசு அந்த அரிசியைக் கொடுத்தால் அதோடு அந்த 60-80 ரூபாய் அரிசி காணாமல் போய்விடும். ஏனென்றால் தரம் என்பதே ஒரு புலன்சாரா தோற்றமே, ஒருவித கடவுள் வடிவமே. இதற்கும் நீங்கள் பணியாவிடில் உங்களைத் தூண்டுவதற்காக ஆசையைத் தூண்டுவார்கள். ‘உன் ஆசையை நிறைவேற்ற உழைஎன்று கேட்பார்கள். (“வேலையில்லா பட்டதாரியில்தனுஷ் அமலாபாலுக்கு பிறந்தநாள் பரிசாக ஐபோன் அளிக்க ஒரு மாதம் கால்செண்டரில் வேலை செய்வார்!)

 இக்கடவுளை அவர்கள் நகலெடுத்து இன்றுள்ள நவீன அன்பு, குடும்பம், வேலை, பொருளாதாரம், ஆரோக்கியம், கல்வி என நம்மை இடையறாது உழைக்க வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தினார்கள். இந்த மோசடி உபரி மதிப்பை நம்மிடம் இருந்து ஜேப்படிக்கவே உருவானது என்பதால் நாம் கடும் ஏற்றத்தாழ்வுக்கும், துன்பத்துக்கும் ஆளானோம்நாம் இந்த மோசடியைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதால் இதைவளர்ச்சி’, ‘முன்னேற்றம்என மகத்துவப்படுத்தினார்கள். இதைக் கேள்வி கேட்பவர்களை பிற்போக்காளர்கள், முன்னேற்றத்துக்கு விரோதிகள், பழமைவாதிகள் என்று விமர்சித்தார்கள், வாயை மூட வைத்தார்கள். ஆனால் தமதுமுற்போக்குகருத்தியல், ‘மூலதனக்கடவுளுக்கான தரகு கருத்தியல், தான் பழமைவாதத்தின் அடிப்படை எனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை.


இன்று இதன் அடுத்த கட்டமாக கவனம் கொடுப்பதே ஒரு உழைப்பாக மாறிவிட்டது. உங்கள் நண்பரிடம், காதலியிடம் நீங்கள் அவர்களுடன் இருப்பதாக காட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் பதற்றம் தாளாமல் பிரிந்துவிடுவார்கள். வெர்ச்சுவல் உலகத்தில் இது ஒரு புளூடிக் மேனியாவாகி விட்டது. (இந்தப் பதற்றத்தை நேர்மறையாக எதிர்கொள்ளலாம் எனும் நம்பிக்கை ஊட்டவே பார்க்காமல் கூட காதலிக்கலாம் எனும் வாதத்துடன்காதல் கோட்டைபோன்ற படங்களும், பேசாமல் கூட காதலிக்கலாம் என முரளி வகை படங்களும் 90களில் வந்தன.)


மார்க்ஸ் உபரி மதிப்பு இப்படித்தான் தோன்றுகிறது என்கிறார். நாம் உழைப்பை ஒரு நோக்கத்திற்காக செலவிடும் போது அது உழைப்பாகிறது. அந்த நோக்கம் நாம் வாழ்தற்காக உதவும் ஒரு பொருள் எனும் பட்சத்தில் அது பண்டமாற்றம் ஆகிறது. ஆனால் பண்டமாற்றத்தில் பெரிதாக மோசடி பண்ண முடியாது (முடியும், ஆனால் அதற்கு பண்டங்களுக்குள் ஒரு பொய்யான பயன்மதிப்பை உருவாக்கி, அதுவும் பரிமாற்றத்தின் போது மறைந்துவிடும் எனச் சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டும்.) அதனால் பண்டத்திற்குப் பதில் பணத்தைத் தருகிறார்கள். பணம் என்பது உங்கள் உழைப்பின் மதிப்பின் சிறுபகுதியாகவே உள்ளது. அதாவது பணத்தைத் தருவதன் மூலம் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள். அப்பணத்தைத் தருவதன் வழியாக உங்களுக்கும் உங்கள் பயன்பாட்டுக்கான பொருட்களுக்குமான நேரடித் தொடர்பு சட்டவிரோதமாக்கப்பட்டு பணத்தின் வழியாக மட்டுமே அவற்றை நாட முடியும் எனும் நிலை ஏற்படுத்தப்படுகிறது. .தா., பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் நகரமயமாக்கலை, தொழில்மயமாக்கலை ஊக்கப்படுத்துவதற்காக மக்களின் பயன்பாட்டில் இருந்து ஊர்ப்பொது விவசாய நிலங்களை கையகப்படுத்தின. இது விவசாயிகளை ஏழையாக்கி நகரங்களை நோக்கித் துரத்தியது. நிலமற்றவர்கள், ஏழைகள் தொழிற்சாலைகளில் பணிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவில் முதலில் தொழில்மயமாக்கலைக் கொண்டு வந்தவர்கள் காலனிய ஆட்சியாளர்கள். அவர்கள் இங்கும் அதே வேலையை செய்தார்கள். அவர்களுக்குப் பிறகு வந்த காங்கிரஸ் அரசும் இப்போதைய பாஜக அரசும் தெளிவாக விவசாயத்தை லாபமற்ற நடவடிக்கையாகவும், நகரங்களில் வேலை செய்வதை லாபகரமான தொழிலாக்கவும் தோதான சட்டங்களையும் நடைமுறைகளையும் கொண்டு வந்தன. கிராம வாழ்க்கை பிற்போக்கானது, அங்கிருப்பவர்கள் மூடர்கள், ஆபத்தானவர்கள் எனும் சித்திரத்தை ஊடகமும் அறிவுஜீவிகளும் உருவாக்கி பரப்பினார்கள். இந்த போதாமை இயல்பாகவே ஏற்றத்தாழ்வுகளை அதிகமாக்கியது. காலனிய அரசு துவங்கி சுதந்திர இந்தியாவின் மக்கள் பிரதிநிதி அரசுகள் வரை நம் சுயாதீனத்தைப் பறித்து நம்மை நிரந்தர ஏழைகளாக வைக்கும் தரகு வேலையை சிறப்பாக செய்கின்றன. அதை நாம் கேள்வி கேட்காமல் இருக்க ஜனநாயகம், தேசியவாதம், மாற்றம், முன்னேற்றம் என மாலை சாத்துகிறார்கள். கல்வி, கலாச்சாரம், சமூக மரியாதை என மந்திரம் ஜெபிக்கிறார்கள். ஆரோக்கியம், ஆயுள் நீட்டிப்பு, மரணம் என்று நைவேத்தியம் படைக்கிறார்கள். இலக்கியம், பண்பாடு, சினிமா, ஊடகம், என்.ஜி., சிவில் சமூகம், தேர்தல், விரலில் கறுப்பு மை, மக்கள் பங்களிப்பு என மணியடித்து சாமி தரிசனம் காட்டி தட்டை நீட்டுவார்கள். நம்மிடம் இருந்து இவர்கள் திருடும் உபரி மதிப்பான திருட்டுப் பணமே ஒரு சமூகத்தின், தேசத்தின் மூலதனமாகத் திரள்கிறது. இதை நாம் கேள்வி கேட்காமல் இருப்பதற்காகவே தேசம், சமூக முன்னேற்றம், வளர்ச்சி ஆகிய கருத்தியல்களும், கட்டமைப்புகளும் ஒரு மாற்று தெய்வமாக முன்வைக்கப்படுகின்றன. கடவுள் அருவமானவர். அவரை உருவங்களில் நாம்காணஇயலும். ஆனால் நாம்காணவும்முடியாது. ‘அனுபவிக்கணும்’ (பக்தி). பிறகு இதை அப்படியே பொருளாதாரத்திற்கும், சமூக அமைப்புக்கும், அரசியலுக்கும், ஆட்சிமுறைக்கும், குடும்ப அமைப்புக்கும், தனிமனித அடையாளத்துக்கும் கடத்தி நம்மை முழுமையாக சுரண்டுகிறார்கள். மார்க்ஸுக்கு கடவுள் மீது எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் கடப்புநிலைவாத சிந்தனைப் போக்கின் மீதே அவருக்கு கோபம். அதைமூலதனத்தில்மிகவும் சிறப்பாக விவாதித்து நிறுவுகிறார்.


நாம் உபரி மதிப்பை பொருளாதாரம், சமூக உறவுநிலைகள், தொழிற்சங்கம், ஏற்றத்தாழ்வு எனும் அளவில் மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அதையும் தாண்டி உபரி மதிப்பை எடுத்துச் செல்லும் சாத்தியங்கள்மூலதனத்தில்உள்ளன.


மார்க்ஸ் இதைப் பேசுவதற்கு வெகுமுன்னாலேயே புத்தர் இன்னும் சிக்கலாகவும் முழுமையாகவும் இந்த கடப்புநிலைவாதத்திற்கு ஆப்படித்து, அதுவே மானுட துக்கத்திற்காக காரணம் என்று நிறுவிட்டார். தமிழில் நாம் பௌத்தத்தையும் மார்க்ஸியத்தையும் போதுமான அளவுக்கு இணைத்து விவாதிப்பதில்லை. (.ரா. கிருஷ்ணனின்பௌத்த நோக்கில் மார்க்சியத்தின் எதிர்காலமும் சமூகத்தின் அடிப்படை மாற்றமும்நூலைத் தவிர). இதைச் செய்தால் உபரி மதிப்பின் திருட்டு வடிவங்களான சாதிய ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார அடிப்படையிலான் அசமத்துவம், உறவுக்குள் வரும் கசப்பு, வன்முறை, பிரிவு ஆகியவற்றை நாம் ஓரளவுக்கு குறைக்க முடியும். புத்தரும் மார்க்ஸும் இணைந்தால் அது மிகப்பெரிய வெடிமருந்துக் கிடங்காக மாறும்


நன்றி: உயிரெழுத்து, அக்டோபர் 2023


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...