Skip to main content

பிரிவு வயின் வாழ்க்கை



நம் தமிழ் சமூகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது - நாம் மண உறவின் உளவியலைப் பேசியதற்கு நூறில் ஒரு மடங்கு கூட மண முறிவின் பின்பான உளவியலைப் பேசியதில்லை. அதென்ன நூறில் ஒரு பங்கு, 1% கூட இல்லை. 1% என்ன தமிழில் இதைப் பற்றி ஒரு கட்டுரையைக் கூட நான் இதுவரை படித்ததில்லை. இந்த விசயத்தில் நாம் ஆண் - பெண் பாரபட்சத்தைப் பார்ப்பதில்லை. விவாகரத்துக்குப் பின்பு ஏற்படும் மன அழுத்தம், மனச்சிக்கல்கள், ஆளுமை கோளாறுகள், தொழில் வாழ்க்கையிலும் அந்தரங்க உறவுகளிலும் தோன்றும் பின்னடைவுகள், தனிமை, தற்கொலை என எதைப் பற்றியும் நாம் பேசியதில்லை. பேசத் தெரியாமல் இல்லை. அதை அமங்கலம் என நினைக்கிறோம். நாம் என்னதான் பெரியாரின் மண் என்றாலும் மங்கலமான விசயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என ஒரு வலுவான எண்ணம் நம் ஊடகவியலாளர்களிடமும் முற்போக்கு சிந்தனையாளர்களிடமும் உள்ளது. இன்னொரு சிக்கலும் உள்ளது - மணவிலக்கினால் சொத்தோ, சேமிப்போ பணமாக மாறி புழக்கத்தில் வருமென்பதாலே மணவிலக்கை ஆதரிக்கும் தாராளமய முதலீட்டிய சூழலை அப்படிப் பேசுவது மறைமுகமாக எதிர்ப்பதாகி விடும். அச்சூழலுக்காக ஒரு பிரிவு நடைமுறையை உருவாக்கி வக்கீல்களுக்கு சம்பாதிக்கவும் உதவும் சட்ட அமைப்பை, இந்த மனச்சிக்கலை சமூகத்தில் ஏற்படுத்தும் சட்டத்தை எதிர்ப்பதாகி விடும், இதையெல்லாம் எதிர்த்தால் தாராளவாதிகளுக்கு சமத்துவத்தின் பெயரில் விளக்குப் பிடிக்கும் நம் முற்போக்காளர்களுக்கு மாரடைப்பே வந்துவிடும்.
நான் அண்மையில் மணவிலக்கின் பின்பு முழுக்க சிதைத்து, உருக்குலைந்து போன ஆண்களிடம் அதிகமாகப் பேசி வருகிறேன். அவர்களிடம் பேசுவதில், சிந்திப்பதில் கூட ஒரு தடங்கல், எண்ணங்களில் கோவையற்ற அலைபாய்தல், சொற்களில் போதாமை, அவநம்பிக்கை தெரிகிறது. அவர்கள் எந்தளவுக்கு உள்ளொடுங்கிப் போயிருக்கிறார்கள் என்பதை அது காட்டியது. நான் இதைப் பற்றி ஆங்கிலத்தில் வாசிக்கத் தொடங்கிய போது தான் மணவிலக்கின் பின்பு ஆண்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தம், மனச்சிதைவு, ஆரோக்கிய சீர்கேடுகள் பற்றி உலகெங்கும் நடந்துள்ள ஆய்வுகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. நம் பொதுப்புத்தியில் மணவிலக்குப் பின்பு ஆண்கள் ஜாலியோ ஜிம்கானாவாக குடி, குட்டி, பொறுப்பின்மையின் திளைப்பு என இருக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அவர்கள் தனிமையில், பதற்றத்தில், இருட்டில் தொலைந்து போகிறார்கள். அவர்கள் தம் நண்பர்களிடம் பேசுவதை வெகுவாகக் குறைத்துக்கொண்டு சமூகத்தில் இருந்து ஒதுங்குகிறார்கள். சிலரோ தம் பிள்ளைகளுக்காக உழைக்க வேண்டும் என தம் அழுத்தத்தை மறைத்துக்கொண்டு வேலை வேலை என ஓடுகிறார்கள். சமூக வலைதளங்களில் தாம் உற்சாகமாக, நம்பிக்கையாக இருப்பதாக ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி தப்பிக்கிறார்கள். இன்னும் சிலரோ போதையில் அடைக்கலம் தேடுகிறார்கள். தூக்கமின்றி, சரியான உணவு, உடற்பயிற்சி இன்றி உடல் பருமனாகி, நோய்களால் சூழப்பட்டு அழிகிறார்கள். சிலர் வேலைக்குப் போகாமல் கடன் வாங்கி தம்மையே சபித்துக்கொண்டு முன்னேறாமல் தேங்கி விடுகிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் துயரத்தில் இருந்து தப்பித்தல் முகமாக எதிரில் வரும் எந்த பெண் கிடைத்தாலும் காதலிக்கலாம் எனும் முடிவுக்கு வருகிறார்கள். இயல்பாகவே ஏற்கனவே மனதளவில் சிதைந்துள்ள பெண்களிடமோ ஆதிக்க குணம் கொண்ட பெண்களிடமோ சிக்கிக்கொள்கிறார்கள். ஒரு மணமுறிவுக்குப் பின் அடுத்தடுத்த மணமுறிவுகளை நோக்கி ஆண்கள் பயணிப்பது இப்படித்தான். முக்கியமாக இவர்கள் மனைவி தம்மை விட்டுப் போனதற்கு, தம்மை ஏமாற்றியதற்கு, துன்புறுத்தி ஓட விட்டதற்கு என்ன காரணம் என யோசிக்கிறார்கள். அதற்கு எந்த தர்க்க ரீதியான காரணமும் கிடைக்காது. அதனால் அவர்கள் மனைவியைப் பழிப்பார்கள், பழிவாங்கும் குணத்தை வளர்ப்பார்கள், கோபத்தால் ஆட்கொள்ளப்படுவார்கள், அக்கோபத்தை தம் மீது மட்டுமே காட்ட முடியும் என்பதால் கட்டற்ற சினம் எனும் நோய் அவர்களுக்கு ஏற்படும், அதன் பிறகு அச்சினத்தைக் கடப்பதற்கு கடுமையாக வேலையில் தம்மை ஆழ்த்துவது, ஓய்வற்று ஓடுவது, போதைப்பழக்கத்தில் ஈடுபடுவது, அடுத்தவர்களை வெறுப்பது என உருமாறுவார்கள். ஏன், ஏன் எனும் கேள்வி அவர்களுக்குள் உழன்று கொண்டே இருக்கும்.
என்னை எடுத்துக்கொண்டால் எனக்கு சினம் ஒரு பிரச்சினையாக இருந்ததெனில், பெண்களிடத்தான காரணமற்ற பயம் மற்றொரு சிக்கலாகியது. தொழில்ரீதியான சந்தர்பங்களில் அல்லாமல் பெண்களிடம் நான் பேசுவதே இல்லை. எனக்கு எதிரே பெண்கள் வந்தால் அப்படியே யுடர்ன் எடுத்து விலகிப் போய் விடுவேன். பெண்களிடம் பேசும் போது ஒரு பதற்றமும் ஆண்களிடம் பேசும் போது ஒரு நிம்மதியும் எனக்குள் ஊற்றெடுப்பதை கவனிக்கிறேன். இத்தனைக்கும் மணவிலக்குக்கு முன்பு நான் பெண்களிடம் மகிழ்ச்சியாக உரையாடக் கூடியவனாக இருந்தேன். இப்போது பெண்களைப் பார்க்க என் உபமனம் ஒரு வேட்டை விலங்கைக் கண்டதைப் போல அஞ்சுகிறது. பெண்களும் மனிதர்களே, அவர்கள் பிரத்யேகமாக என்னை தாக்கவோ துன்புறுத்தவோ மாட்டார்கள் என அறிவேன். ஆனால் நமது சமூகரீதியான, சட்டரீதியான அமைப்புகள் பெண்களுக்காக அடியாட்களைப் போல வந்து நிற்கும் போது அவை வதைக்கூடங்கள் ஆகிவிடும் என்பதை நான் நேரடியாக நிறையவே பார்த்துவிட்டேன். காவல் நிலையத்தில் வைத்து மாதக்கணக்காய் அடித்து வதைக்கப்பட்ட ஒருவனுக்கு காவலர்களைப் பார்த்தால் ஏற்படும் உணர்வே எனக்கு இப்போது பெண்களிடத்து வருகிறது. தனிப்பட்ட முறையில் காவலர்கள் நல்லவர்களே, ஆனால் காவல் உடை அணிந்து காவல் நிலையத்துக்குப் போனால் அவர்கள் வேறொரு விலங்காகி விடுவார்கள் தானே! எனக்கு மட்டுமல்ல (வக்கீல்களைத் தவிர) அந்த வதைக்கூடங்களுக்குள் போய் வெளிவரும் ஆண்களில் கணிசமானோருக்கு கசாப்புக் கடையில் இருந்து தப்பித்து வந்த கோழியின் மனநிலையே இருக்கும்.
இன்று ஒரு முக்கியமான எழுத்தாள நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். மோசமான எல்லா குணங்களும் படைத்த வதையாளர் அவரது மனைவி. குழந்தைகளை அடித்து துன்புறுத்துபவர். கணவனை உளவியல் வதை செய்பவர். கணவனின் பணத்தைத் திருடி காதலனுக்கு செலவிடுபவர். இதைப் பற்றி எந்த குற்றவுணர்வும் இல்லாதவர். அவர் தொடர்ச்சியாக தன் கணவனின் தோற்றத்தை கேலி பண்ண சொல்லும் வார்த்தைகளை அவர் குறிப்பிட்ட போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நாம் கணவர்கள் மனைவியை அடித்தும், வசை பாடியும் துன்புறுத்துவதைப் பற்றி பேசுகிறோம். மனைவியர் சில இடங்களில் உடல் ரீதியாகவும், பல இடங்களில் உளவியல் ரீதியாகவும் கணவர்களை மிக மோசமாகத் தாக்குவது, துன்புறுத்துவது உண்டு. நாம் முற்போக்கு வீராச்சாமிகள் என்பதால் இதைப் பற்றி பேசுவதே இல்லை. நாம் சமத்துவம் சமத்துவம் என்று முழங்கிக்கொண்டே அசமத்துவமாக நடப்பவர்கள் என்பதால் ஆண்களின் துன்பங்களைக் கண்டுகொள்வதே இல்லை. ஒரு ஆணின் அடிப்படையான தகுதியை எல்லா விதங்களிலும் அவமதித்து நிராகரிக்கும் போது அவன் மிகவும் மோசமாக சிதைந்து போகிறான். அது அவனை நோயாளியாக்குகிறது. நான் குறிப்பிட்ட நண்பர் இதனால் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்கு மருந்துண்டு வந்தார். அவரது எழுத்து வாழ்க்கையே சீரழிந்து போனது. ஆனால் இதற்கெல்லாம் நம் ஊரில் கேள்வி கேட்கவோ, நியாயம் கோரவோ முடியாது. அதற்கான சமூக கட்டமைப்போ, சட்டங்களோ நமக்கு இல்லை. எங்கு பார்த்தாலும் முற்போக்கு விராச்சாமிகளும் வீராமாமிகளும் அருவாளோடு ஆண்களை நோக்கி கண்ணை உருட்டுகிறார்கள். அவர்கள் இந்த வேட்டை மிருகங்களிடம் இருந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இங்கு தான் நம் சமூகம் மணவிலக்குக்குப் பின்பு ஆண்களையும் பெண்களையும் நடத்தும் விதத்தின் பாகுபாட்டைப் பற்றி பேச வேண்டி இருக்கிறது.
பொதுவாக பெண்களுக்கு சமூகமாக்கல் திறன் அதிகம் (விதிவிலக்குகளும் உளர்.) ஆதலால் அவர்கள் மணவிலக்கின் போது தம் நண்பர்கள், உறவினர்கள், குடும்பம், பெற்றோர், பொதுசமூகம் என ஆதரவை நாடி தம் சமூகமாக்கலை இன்னும் வலுவாக்குகிறார்கள். குழந்தைகளைக் கூட இறுகப் பற்றிக் கொள்கிறார்கள் பெண்கள். இந்த ஆதரவு வளையம் அவர்களை மணவிலக்கின் போதான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்குகிறது. கூடுதலாக முற்போக்கு பெண்ணிய வட்டாரங்களில் உள்ள கதையாடல்கள் அவர்கள் கொலையே பண்ணினாலும் “நீ சரியாதான் கொன்னிருக்கேம்மா, சூப்பர்மா” என அவர்களுக்குத் தட்டிக் கொடுக்கிறது. நீதிமன்றத்திற்கு போகும் போது ஒரு பெண் சட்டென தனக்குள் சிறப்புத் தகுதியை அறிய வந்து உற்சாகமாகிறாள். ஏனென்றால் ஒட்டுமொத்த குடும்பநல நீதிமன்ற அமைப்புமே வடிவேலுவைப் போல பெண்களைப் பார்த்து “கமான் கமான்” என சொல்லிக்கொண்டிருக்கிறது. முந்தைய சமூக அமைப்பில் ஒரு பெண் வயதுக்கு வந்ததும் ஒட்டுமொத்த சமூகமே திரண்டு வந்து “தண்டட்டி கருப்பாயி" என பாடுவதைப் போல இப்போது மணவிலக்கின் போது தான் ஆடு, மாடு படைத்து, விருந்துண்டு கொண்டாடுகிறது. நவீன சமூகத்தில் பெண் ‘சமைவது’ மணவிலக்கின் போதுதான். ஆடு, கோழி, நகை நட்டு பரிசுப் பொருட்களுடன் வரும் மாமன் மச்சான் உறவுகளுக்குப் பதிலாக ஜீவனாம்சத்தை அழுதபடி கொடுக்கிறான் கணவன். இப்படி மணவிலக்கில் ஒரு நவீனப் பெண் ஒரு பீனிக்ஸ் பறவையாக உணர்கிறாள் என்றால் இந்த ஆதரவுகள் எதுவுமே மணவிலக்கான ஆணுக்கு கிடைப்பதில்லை என்பதால் அவன் பாதி உயிருடன் தான் மீள்கிறான்.
மணவிலக்கின் போது ஒரு ஆணான நமக்கு மிக நெருக்கமாக உள்ளவர்கள், நம் பெற்றோர்கள், கூடப்பிறந்தவர்கள் கூட நமக்கு ஆதரவாக சில நேரம் பேச மாட்டார்கள். ஏனெனில் அதற்கான சந்தர்ப்பத்தை இச்சமூகம் வழங்குவதில்லை. ஆண் என்றாலே சைக்கோ கொலைகாரன் எனும் கணக்கில் அவர்கள் பேசிப் பேசி இப்படியான பாசிச சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகள் தான் இதில் இன்னும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் - அவர்கள் சட்டென முதிர்ச்சியாகி, ஒருவித சாமர்த்தியசாலிகளாகி விடுகிறார்கள். ரொம்ப வயசான தாத்தாவைப் போல பேசுகிறார்கள். அம்மா இல்லாட்டில் பரவாயில்ல, நான் ஒண்ணும் மிஸ் பண்ணலப்பா என்று அப்பாவிடமும், அப்பாவைப் பற்றி நான் யோசிக்கிறதே இல்லம்மா, ரொம்ப ஹேப்பியா இருக்கேன், ஐயாம் ஹேப்பி, ஐயாம் வெர்ரி வெர்ரி ஹேப்பி என நிதானமான புன்னகையுடன் கூறுகிறார்கள். ஏனென்றால் மாற்றம், முன்னேற்றம், சமத்துவம் எனும் பெயரில் இங்கு அரங்கேறும் ஒட்டுமொத்த சமூக சைக்கோத்தனத்துக்கும் தாமே பொறுப்பு, தம்மாலே தம் பெற்றோர் பிரிந்தார்கள், தம்மை அவர்கள் வெறுப்பதே அதற்குக் காரணம் என ஆரம்பத்தில் நினைக்கிறார்கள். அடுத்து இதனால் ஒரு நடைமுறை பயனுண்டு எனப் புரிய வருகிறது - தமது தாழ்வுணர்வை விட பெற்றோரின் பதற்றம் அதிகம் எனப் புரிந்துகொண்டதும் அதை தமக்கு சாதமாக பயன்படுத்தி பெற்றோரை சுரண்ட ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் குடும்ப நல வக்கீல்களைப் போன்றே “துட்டு மணி மணி” என மாற ஆரம்பிக்கிறார்கள். இது குழந்தைகள் தம் வயதுக்கு மீறி பெரிய மனிசத்தனம் காட்டுவதன் மோசமான விளைவு - அவர்களிடம் ஒரு சூழ்ச்சியை இந்த ‘முற்போக்கு, சமத்துவம், மாற்றம், முன்னேற்றம்’ சமூக அமைப்பு உருவாக்குகிறது.
இவ்வளவு நோயாளியான சமூகமாக நாம் இதற்கு முன்பு இருந்ததில்லை என நினைக்கிறேன். விவாகரத்தாகும் ஆண்களை விட இச்சமூகத்துக்கே சிகிச்சை தேவை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...