முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதற்கு இப்படி ஒரு மொழி?



இலக்கியத்தில் எல்லாமே கரார்தான். ஒரு நாவல் (அல்லது சிறுகதை) சுமாராக இருந்தால் கூட அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால் சினிமா விசயத்தில் நம் ஆட்கள் அவ்வளவு கரார் இல்லை. ரொம்ப ரொம்ப சுமார் என்றாலே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஓரளவுக்கு சுமாராக ஓடின முற்போக்குப் படமென்றால் அதற்கு உலகமெங்கும் எதாவது விருதுகள், மட்டற்ற புகழ், ஏகப்பட்ட பணம். சிறந்த படமென்றால் சொல்லவே வேண்டாம், அந்த தாஜ்மஹால் என்ன விலை, அதானி சொத்தை விலைக்கு கேளு எனும் ரகத்தில் ரசிகர்கள் குதிப்பார்கள். உலகின் அத்தனை விருதுகளும் உடனே வேண்டும் என்பார்கள். இல்லாவிட்டாலும் கவலையில்லை, ஆயிரம் கோடி வசூல், ஆயிரம் லட்சம் கோடி வசூல் எனப் புளகாங்கிதம் அடைவார்கள், அதனால் தமக்கென்ன லாபம் எனக் கேட்க மாட்டார்கள். பிடிக்காத படத்தைக் கூட திரையரங்கில் கொண்டாடும் ரசிகர்களை நண்பர்களாகப் பெற்றிருக்கிறேன். ஏன் அப்படி செய்கிறார்கள் எனக் கேட்டால் அவர்களுக்கு சொல்லத் தெரியாது. மிக மிக மட்டமான இரண்டு மூன்று தோல்விப் படங்களை எடுக்கும் இயக்குநர்களைப் பார்க்கிறோம். ஒவ்வொரு படத்துக்கும் சம்பளம் என ஒன்றை வாங்கி விடுவார்கள். ரசிகர்கள் மட்டும் ரொம்ப மென்மையாக வலிக்காததைப் போல கலாய்த்து விட்டுப் போய்விடுவார்கள். ஏன் இவ்வளவு மட்டமாக எடுத்து வைத்து ஏமாற்றினீர்கள் என மனம் காயப்பட்டு எந்த பார்வையாளரும் கடுமையாகத் திட்டி நான் பார்த்ததில்லை.

இதுவே இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் ஒரு சிறந்த நாவலை / கதையை நீங்கள் எழுதி 10000 பேர்களுக்கு அது போனால், 50 விமர்சனங்கள் இணையத்தில் வந்தால் பெரிய விசயம். எங்காவது ஒரு சிறந்த நாவலுக்கு விருதுகள் கொடுத்ததுண்டா? தோல்வி அடைந்தால் யாராவது திட்டிக்கொண்டோ விமர்சித்துக் கொண்டோ இருப்பார்கள். ஏதோ அவர்களுடைய சொத்தை நீங்கள் மோசடி செய்து அபகரித்ததைப் போலத் திட்டுவார்கள்.

ஒரு லட்சம் பெறுமதியான விருதுக்கு, அதனால் கிடைக்கும் ஒரு கோடி மதிப்பிலான வீட்டுக்கு அல்லது தேசிய அங்கீகாரம் தரும் விருதுக்கு எவ்வளவு போட்டி, மோதல், அரசியல்! நாற்பதாண்டுகள் தொடர்ச்சியாக பங்காற்றும் படைப்பாளிகள் கூட இதற்காக வரிசையில் நின்றிருக்க வேண்டும். சினிமா இயக்குநர்களுக்கு, நடிகர்களுக்கு அட்டுப்படத்தில் கேவலமாக பங்காற்றினால் கூட இதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறையேனும் மிக சுலபமாக கிடைக்கிறது.

ஒரு சாதாரண மசாலா படத்தை எடுத்த இரண்டு தரப்புகளுக்கு இடையே படத்தயாரிப்பு சார்ந்த ஒரு பணப் பஞ்சாயத்து. அதைப் பற்றி ஒரு மாதம் மொத்த சமூகமும் மாய்ந்து மாய்ந்து யோசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், அதனால் தமக்கு கால் பைசா லாபமில்லை என்றாலும். ஆனால் ஒரு விருது வாங்கும் விசயத்தில் எவ்வளவு சதித்திட்டங்கள், சிக்கல்கள். சம்மந்தப்பட்ட எழுத்தாளர் இந்நேரம் அந்த விருது வந்தால் ஆறுதல் அடைந்து உடல் நலம் இன்னும் மேம்படக் கூடும் என்று ஜெயமோகன் எழுதுகிறார். இப்படியான அவல நிலை உலகில் எந்த மொழியிலும் எந்த எழுத்தாளனுக்கும் இராது.


ஒன்றை சீரியஸாக எடுக்காததால் சதா கொண்டாடுகிறார்கள், விமர்சிப்பதே இல்லை, மற்றொன்றை சீரியஸாக எடுப்பதால் மிக மிக அரிதாக மிகச்சிலரே கொண்டாடுகிறார்கள், கொஞ்சம் ஏமாற்றமானால் கத்தியைத் தூக்கிக் கொண்டு விரட்டுகிறார்கள் என்று விளக்கம் சொல்லலாம்.
ஆம் ஒன்று பொழுதுபோக்கு, வியாபாரம், இன்னொன்று கலையனுபவம், வியாபாரம் அல்லாத பண்பாட்டு இயக்கம். மறுக்கவில்லை, ஆனால் அதற்கு இவ்வளவு வித்தியாசம் வேண்டுமா?

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தால் நான் இதை எழுதவில்லை - இலக்கியத்தில் பெரும் படைப்பாளிகளே சறுக்கும் போது வாசகர்கள், விமர்சகர்களால் கடுமையாகத் துண்டாடப்படுவதைப் பார்க்கும் போது, சினிமாவால் நிலை நேர்மாறாக இருப்பதைக் காணும் போது, ஒரு இடத்தில் சில்லறை விழுந்தால் பிடிக்க ஆயிரம் பேர் புழுதியில் விழுந்து புரள, செத்தால் அது நாற்பது பேருக்கான சேதி என இருக்க, இன்னொரு இடத்தில் பணத்திலே விழுந்து புரண்டு, தும்மினாலே செய்தி எனும் நிலையில் மக்கள் இருப்பதைக் காணும் போது எழுந்த வினா இது.

என்ன கழிசடையான சமூகம் இது! சென்னைக்கு வந்த வெள்ளத்தை விட நூறு மடங்கு பெரிய வெள்ளம் மொத்த தமிழகத்துக்கும் வந்து ஒரு மாதம் மூழ்க வேண்டும்! இப்படி ஒரு மாநிலமே பூமி மீது இருக்கக் கூடாது. எதற்கு இப்படி ஒரு சமூகம், இப்படி ஒரு மொழி! ஆனால் அற்புதமான நெடிய பண்பாடு, மிகச்சிறந்த இலக்கியம் நமக்குள்ளது. நாம் அழிந்தால் அதுவும் அழிந்து போகும். அல்லாவிடில் மனம் உவந்து சபித்து விடலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...