முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விருதுக்காக வேலை செய்வது நம் வேலையா?

 . ராமசாமி சாகித்ய அகாடெமி விருதைப் பெறுவதற்கு எழுத்தாளர்களோ அவர்களுடைய நண்பர்களோ பின்பற்ற வேண்டிய நடைமுறை நுணுக்கங்கள், வித்தைகள், முயற்சிகள் பற்றியெல்லாம் (புத்தகப் பரிந்துரை அனுப்புவது, வாதிடத் தெரிந்த நண்பர்கள் வழியாக நூல்களை இறுதிப்பட்டியலில் இருந்து விருதுக்கு நகர்த்துவது) பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இது ஓரளவுக்கு பெரிய விருதுகளுக்கு எல்லாம் பொருந்தும் என நினைக்கிறேன். குழுக்களால் அல்லது தனிநபரால் தேர்வு செய்யப்படும் விருதுகளே விதிவிலக்கு (விஷ்ணுபுரம் விருது). . ராமசாமி ஒரு வேடிக்கைக்காத தான் சொல்கிறார் என்றாலும் அவர் சொல்வதைப் போல விருது பெறுவதற்கான அடிப்படைகளை சொல்லித் தரும் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரம் இன்னொரு சிக்கலும் உளது. எல்லாரிடமும் இந்த இலக்கிய சமூகமாக்கல், மனிதவள மேலாண்மை ஆகிய இயல்புகள் இருப்பதில்லை, அவர்கள் இத்திறன்களை வளர்த்து சுலபத்தில் ஜொலிக்க இயலாது


சாகித்ய அகாடெமி பிரதான விருதைப் பற்றித் தெரியவில்லை, ஆனால் யுவ புரஸ்காரைப் பொறுத்த வரையில் விருதாளர்கள் சிலருக்கு அப்படி ஒரு விருது எப்படி முடிவு செய்யப்படுகிறது, பெரும்பட்டியல், குறும்பட்டியல் என ஒன்றுமே தெரியாது என்பதை அவர்களுடன் பேசும்போது உணர்ந்திருக்கிறேன். தம்மை அதற்குத் தகுதியானவர்கள் எனக் கருதி முயன்றவர்களும் அல்லர் அவர்கள். அவர்களில் நானும் ஒருவன். என்னுடைய நூலை ஒரு பிரதியைப் பெற்று விபரப்பட்டியலுடன் தில்லிக்கு அனுப்பும்படி போன் அழைப்பு வந்த போது தான் தெரியவே வந்தது என் பெயர் இறுதிப்பட்டியலுக்குப் போயிருக்கிறது என. யார் எப்படி அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. பின்னர் விருது முடிவான செய்தி கசிந்து வந்தது. என்னிடம் அமைதியாக இருக்கும்படி ஒரு எழுத்தாளர் நண்பர் சொன்னார். நான் அவ்வாறே இருந்தேன். கடைசி வரை எனக்கு என்ன நடக்கிறதென்பதே புரியவில்லை. அறிவிப்பு வந்த பின் கோலாகாலம் தான். இதற்கு இடையே ஒரு நண்பர் என்னை போனில் அழைத்து எனக்காக விருதுக்குழுவில் இருந்த மூத்த படைப்பாளி ஒருவர் சண்டை போட்டதாலே எனக்கு கிடைத்தது என்று அந்த எழுத்தாளரிடம் பேச சொன்னார். அப்படி அழைத்து நன்றி தெரிவிப்பது தவறாக இருக்குமென, அதை அவரே அவமானமாக நினைப்பார் என எண்ணி நான் அப்போது அதைச் செய்யவில்லை. இப்போதெனில் செய்திருப்பேன். அந்நண்பர் இன்னொரு செய்தியும் சொன்னார் - பின்னர் வெற்றி இயக்குநராகி விட்ட ஒரு படைப்பாளியின் பெயரைக் குறிப்பிட்டுஅவருக்கும் உனக்கும் தான் போட்டி, அவருக்காக இன்னொரு பெயர் பெற்ற இயக்குநர் மற்றொரு பெயர் பெற்ற மூத்த எழுத்தாளரிடம் பரிந்துரைத்து வேண்டிக் கேட்டதால் கடுமையாக கருத்து மோதல் இருந்தது, கடைசியில் உன் தரப்பே வென்றதுஎன்றார். அந்த இருவருமே எனக்கு நண்பர்கள் தாம். என்று கேட்டுவிட்டு அதை விட்டுவிட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும் - விருது கிடைக்காவிடினும் எனக்கு நஷ்டமில்லை, என் இடத்தை விருது தீர்மானிப்பதில்லை, விருதினால் என்வாசகர் படைஅதிகரிக்கப்போவதில்லை என்று. விருது என்பது ஊரில் சாமிக்கு பாயசம் படைதோ கோழியை பலிகொடுத்தோ படையல் போடுவதைப் போல. படையல் கிடைத்தாலும் இல்லாவிடினும் சாமி சாமி தான்.


என் இலக்கிய நண்பர் ஒருவர் எனக்கு விருது கிடைத்த சில மாதங்களில் நேரடி உரையாடலில் சொன்னார்: “உனக்கு எப்படியோ தெரியாம கொடுத்திட்டாங்க, இனிமே கொடுக்க மாட்டாங்க.” அவர் சொன்னது உண்மையே. நான் முன்பு டமால் டுமீல் என கருத்துக்களை ஏவியபடி இருப்பேன். இப்போது கருத்துக்கள் மீதான என் பிடிப்பு குறைந்துவிட்டது என்றாலும் நான் இப்போதும் கருத்தில்லாதவன் ஆகவில்லை. அகாடெமியின் யுவ புரஸ்காருக்குப் பிறகு பாஷா பரிஷத் கிடைத்தது. ஆனால் அதைக் கடந்து எனக்கு ஒரு விருது கூட கிடைத்ததில்லை. விகடன், உயிர்மை விருதுகள் கூட. என் கூட எழுத வந்தோர் 40-50 விருதுகளாவது - தெருவிளக்கு ரங்கசாமி விருது உள்ளிட்டு - வாங்கிவிட்டனர். எனக்கு இதெல்லாம் கிடைக்காது எனும் யோகநிலையை எட்டிவிட்டேன். சிலருக்கு சில விசயங்கள் வராது. அவர்கள் அப்படி இருந்து விடுவதே நலம்.


இன்னொரு விசயம் - விருதை இலக்காகி எழுதலாமா? கூடாது. விருதை இலக்காகி எழுதாமல் அதற்காக சமூகமாக்கல், அரசியல், முன்னெடுப்பு எல்லாம் செய்ய முடியுமா? முடியாது. செயற்கைத்தனம் வந்துவிடும், பயம் வந்து விடும். மகிழ்ச்சி போய்விடும். நாம் எதற்காக எழுத வந்தோம், விருதுக்காகவா? இல்லை. எழுத்து தரும் மகிழ்ச்சிக்காக, அடையாளத்துக்காக, இடத்துக்காக, உரையாடும் வாய்ப்புக்காக, நம் பண்பாட்டிற்காக, மொழிக்காக. எனில் கடைசி வரை நாம் இவற்றுக்காக மட்டுமே எழுத வேண்டும். அல்லாவிடில் நம் எழுத்து பத்தாயிரம் ரூபாய் ரெட்மி போன் போல ஆகிவிடும், நம் அக விளக்கு அணைந்துவிடும். நம் பாட்டுக்கு எழுதியபடி இருக்க இருட்டான வழியில் தெய்வமோ பேயோ குறுக்கிட்டு விருதைக் கொடுக்க நாம் அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு எழுத்தாணியை கூர்தீட்ட வேண்டும். நாமாகத் தேடிப் போனால் நாம் எழுத்தாளர்கள் அல்லர்.


தனது மற்றொரு பதிவில் . ராமசாமி ஏன் திறனாய்வாளர்கள், விமர்சகர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது தரப்படுவதில்லை எனக் கேட்டிருந்தார். இது முழுக்க நியாயமான கேள்வியே. நான் இதற்கு முன்பும் இதை வலியுறுத்தி இருக்கிறேன். விமர்சகர்களை நாம் ஊக்கப்படுத்தாவிடில் நமது இலக்கியம் கர்ணனின் கைப்பட்டு அறுந்த துரியோதனின் மனைவி பானுமதியின் மேகலையின் மணிகளைப் போல பொலபொலவென உதிர்ந்துவிடும். எடுக்கவும் கோக்கவும் ஆளிருக்க மாட்டார்கள்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.