கொஞ்சம் சுஜாதாத்தனம் கொண்ட டெம்பிளேட் துப்பறியும் நாவல்.
முக்கிய குறைகளென்று பார்த்தால் இது இப்படித்தான் போகும் என ஒரு கணிப்பு இருக்குமே அது நாவல் முடிவில் தவறாமல் நடப்பது. வாசகனை சற்றே ஆச்சரியப்படுத்துவது அவசியம். அது இறுதியில் நடப்பதில்லை. குற்றத்திற்கான காரணங்களை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம். கதைக்கு தேவைப்படாத வசனங்கள், விளக்கங்களை வெட்டிவிட்டு பன்னிரெண்டு மரணங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சென்றிருக்கலாம். நான் படித்தவரையில் ரத்த வாடையே இல்லாத, கதை நிகழும் போது ஒரே ஒரு குற்றம் நிகழும் துப்பறியும் நாவல் இதுதான். அந்த விதத்தில் படு சுத்தமான எழுத்து.
ஆனால் துப்பறியும் முறைமை சார்ந்த பகுதிகள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது சிறப்பு. தன் ஒரே ஒரு வாசகியைக் கண்ட தமிழ் எழுத்தாளனைப் போல கதை கொஞ்சம் கூட விலகாமல் இலக்கை நோக்கி நேராகப் பாய்கிறது. அதிலேயே செம வேகம் கிடைக்கிறது. நாவலின் பாதி பகுதி வரும் போது குற்றத்தை துலக்குவதற்கான பல சாத்தியங்களை உருவாக்குவதும் நம் தசைகளை முறுக வைக்கிறது. மதவாதம், அரசியல் பற்றின பகுதிகளையும் ரசித்தேன், ஆனால் அதை முடிவில் ஒரே பத்தியில் கடந்து செல்லாமல் இன்னும் விரித்திருக்க வேண்டும், அரசியல் எப்போதுமே புறச்சூழலைக் கட்டுப்படுத்தும் அல்லது பயன்படுத்தும். பலன் கிட்டாமல் சுலபத்தில் விட்டுக்கொடுக்காது. அரசியல் கட்சிகளின் அந்த போக்கையும் பரிசீலித்திருந்தால் நம்பகத்தன்மை கூடியிருக்கும்.
கிடைத்தது முதலே கிட்டத்தட்ட மிஷ்கின் ஹீரோவைப் போல தலைநிமிராமல் படித்துக் கொண்டிருந்தேன். புத்திசாலித்தனத்தை கோரும் நல்ல பொழுதுபோக்கு நாவலை விரும்புவோருக்கான படைப்பு. சென்பாலனுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்!

Comments