Skip to main content

பொய்க்குற்றச்சாட்டுகளை அனுமதிக்கும் நடைமுறை

ஒரு மனைவி தன் கணவன் மீது பொய்க்குற்றச்சாட்டைத் தொடுப்பது ஒரு கொடூர செயல் என கொல்கொத்தா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியுள்ளது. ஆனால்
இவ்விசயத்தில் வக்கீலையும் வாதியையும் மட்டும் பழிசொல்வது  சரியல்ல, நீதிமன்றமும் அதன் நடைமுறைகளும் திருமண சட்டமுமே பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு முக்கிய காரணங்கள்:
1) திருமண மற்றும் 498a மாதிரி சட்டங்கள் ஆணையும் பெண்ணையும் சமமாக பாவிப்பதில்லை.
2) திருமண சட்டம் ஒருவரின் கல்விப்பின்னணி, சாதி அதிகாரம், பொருளாதார நிலையை பாலின அடையாளம் அளவுக்கு பொருட்படுத்துவதில்லை. 
3) மனமொத்துப் போகவில்லை எனும் காரணத்துக்காக ஒருவர் விவாகரத்து கோர சட்டம் அனுமதித்தாலும் நீதிமன்றம் அனுமதிப்பதில்லை, குறிப்பாக பிரதிவாதி அதை ஏற்காத போது. அதற்குப் பதில் வழக்கை வருடக்கணக்காய் இழுத்தடிக்கவே நீதிமன்றம் விரும்புகிறது. இதன் விளைவாக வக்கீல்கள் நிறைய பொய்க்காரணங்களை எழுத தூண்டுவார்கள். அடித்தார், துன்புறுத்தினார், பாலின்பம் தரவில்லை என்று கோரினால் தான் விவாகரத்து அளிப்பார்கள் எனக் கூறுவார்கள். குற்றம் சாட்டுபவர் அதைத்தானே சொல்ல நேரிடும்? நாவலாசிரியர்களை விட தீவிரமாக புனைவெழுதுவோர் வக்கீல்களே. ஏனெனில் இச்சூழல் அவர்களை புனைவெழுத்தாளர் ஆக்குகிறது. நீங்கள் ஒரு அலுவலகத்தில் விடுப்பு எடுக்க ஊழியர்களை அனுமதிக்காமல் இருந்தால் அவர்கள் தாத்தா செத்துவிட்டார், அப்பா தவறி விழுந்துவிட்டார், மாரடைப்பு என்று பொய் சொல்லித் தானே விண்ணப்பிப்பார்கள். பொய் சொன்னால் அதற்கு தனிமதிப்பு எனில் பொய் மட்டுமே தான் சொல்வார்கள். அது யாருடைய தவறு?

4) உள்ளே வழக்கை விரைவில் முடிக்காமல் வெளியே செட்டில்மெண்ட் பண்ணப்படுவதை நீதிமன்றம் விரும்புகிறது. செட்டில்மெண்ட் என்றால் பணம் அல்லது சொத்து. இதற்கு பிரதிவாதியைத் தள்ளுவதற்காகவே மோசமான பொய்க்குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. வக்கீல்களுக்கும் இதில் கட்டிங் கிடைப்பதால் அவர்கள் வழக்கை முடிக்க விரும்புவதில்லை. ஒருவர் தன் கணவர் தன்னைக் கொல்லப் பார்த்தார், வரதட்சிணை கேட்டு பெல்ட்டால் அடித்தார் என்று கோரி விட்டு அதை வைத்து பல லட்சங்களை வாங்கி செட்டில்பண்ண முடியுமெனில், குற்றச்சாட்டுகள், விசாரணை கேலிக்கூத்தாகாதா? வரதட்சிணை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய்க் குற்றச்சாட்டை வைத்து மிரட்டி பெருந்தொகையை வாங்க இயலுமெனில் யாராக இருந்தாலும் சபலம் வரும் தானே? சபலப்பட வைப்பது எது சட்டம் தானே?  நீதிமன்றம் தானே? இதைத் தடுக்க முதலில் செட்டில்மெண்ட் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். 

5) பொய் வழக்குத் தொடுப்போரை நீதிமன்றம் சிலநேரம் தண்டிப்பதுண்டு. ஆனால் இதற்கு என தனிசட்டம் இல்லை. வக்கீல் சொல்லித் தந்தது எனில் அவரும் தண்டிக்கப்படுவதற்கு சட்டம் வேண்டும். தகுதி குறைப்பு புள்ளிகளைக் கொண்டு வர வேண்டும். ஒரு அளவுக்கு மேல் புள்ளிகளைப் பெறும் வக்கீல்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற தடை வேண்டும். அப்போது இந்த போக்கு மட்டுப்படும்.

6) ஒரு வழக்கின் போது முதல் கட்டத்திலே மனு போடுவது, புகார் தொடுப்பது, பதில் மனு போடுவது என இல்லாமல் சம்மந்தப்பட்ட ஜோடியுடன் துணை நீதிபதியும் ஆலோசனையாளரும் வக்கீல்கள் இன்றி அமர்ந்து பேசி என்ன பிரச்சினைக் கேட்டறிந்து அதற்குத் தீர்வாக விவாகரத்து கொடுக்கலாமா வேண்டாமா என இரண்டு மூன்று வாரங்களுக்குள் தீர்மானிக்கும், ஒருவேளை அவ்வழக்கு நிஜமாகவே குற்ற நடவடிக்கைகள் சம்மந்தப்பட்டது, ஆதாரங்களும் உண்டு எனில் அதை மட்டுமே விசாரணைக்கு எடுக்கும், எடுத்தால் கண்டிப்பாக தண்டனை அளிக்கும் (செட்டில்மெண்ட் இன்றி) நடைமுறை வர வேண்டும். இதற்கு கீழ்த்தட்டினர் தவிர பிறர் ஒரு கட்டணத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும் வேண்டும் (அப்போதுதான் ஊதிய செலவை, விசாரணைக்கான நேரத்தை நியாயப்படுத்த முடியும்.) இப்போதுள்ளது விவாகரத்து கொடுக்க வேண்டுமா என்பதையே வருடக்கணக்காய் தீர்மானிக்கும் மோசமான நடைமுறை. விவாரத்து வேண்டுமா என்பதை நீதிபதி அல்ல, சம்மந்தப்பட்ட கணவன், மனைவியே தீர்மானிக்க வேண்டும். திருமணத்துக்குள் குற்றங்களை விசாரிப்பதும், ஜீவனாம்சம் வழங்குவதையுமே நீதிபதி பரிசீலிக்க வேண்டிய விசயங்களாக இருக்க வேண்டும். இப்போது எல்லா பிரச்சினைகளையும் ஒரே சட்டியில் போட்டு கொதிக்க வைப்பதால் ஊரில் உள்ள எல்லா குற்றங்களையும் ஒருவர் மீது மற்றவர் ஏற்றி விவாகரத்துக்கு கோருகிறார்கள். நீதிமன்றத்தின் அபத்தமான அணுகுமுறையே பொய்க்க்குற்றச்சாட்டுகளுக்கு பிரதான காரணமாகிறது.

7) திருமண சட்டம் ஒரு கணவனோ மனைவியோ நேரடியாக வழக்காட வேண்டும், அதற்கு வக்கீல் ஒரு ஆலோசகர் மட்டுமே பிரதிநிதி அல்ல என்கிறது. ஆனால் நீதிமன்ற நடைமுறை அப்படி இல்லை. நேரடியாக ஒரு சாமான்யரால் தன் பிரச்சினையை முன்வைக்க முடியாதபடி சட்டத்தின் மொழியும், நீதிமன்ற சடங்குகள் உள்ளிட்ட நடைமுறையும் உள்ளது. ஆகையால் ஒருவரால் தன்னிடத்தில் வக்கீலை மட்டும் பேச வைக்கவும் முடியாது, அவர் தனியாக வழக்கை நடத்தவும் முடியாது. ஆகையால் வக்கீலும் வாதி / பிரதிவாதியும் ஒவ்வொரு ஹியரிங்குக்கும் செல்வது அவசியமாகிறது. இது ஒரு மறைமுக வதையாகிறது. நீதிமன்றம் ஒரு ஆப்பைத் தயாரித்து வா உனக்காகத் தான் ஸ்பெஷலா ஒரு வசதி இருக்கு, வந்து உட்கார்ந்து மாட்டிக்கொள் என அழைப்பதைப் போல இருக்கிறது. இந்நடைமுறையை எளிமையாக்கி வங்கிக்கு சென்று ஒரு வேலையை செய்வதைப் போல வழக்கை நடத்த முடிய வேண்டும். நீதிமன்றமே ஒரு அலுவலரை அமர்த்தி அவர் வழியாக எளிய விவாகரத்து விண்ணப்பங்களைத் தொடுக்க வைக்கலாம். வன்முறை, வரதட்சிணைக் கொடுமை ஆகியவற்றுக்கு வக்கீல் தேவை தான். ஆனால் அவை தனி வழக்குகளாக - விவாகரத்துக்குப் பின்னரே - நடத்தப்பட வேண்டும், விவாகரத்துடன் இணைத்துப் பார்க்க கூடாது.

8) ஜீவனாம்ச விசயத்திலும் ஒரு ஆணை மட்டும் பணம் கொடுக்கக் கூடியவன், பெண் பணம் வாங்குபவள் என்று கருதுவது ஒரு முன்முடிவு, தேய்வழக்கு சிந்தனை. இதை நீதிமன்றம் கைவிட வேண்டும். ஒரே கல்வியறிவும், வேலை வாய்ப்பு சாத்தியமும் உள்ள ஆணையும் பெண்ணையும் ஒரே போல நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் பார்க்கையில் படித்திருந்தும் வேலை பார்க்காமல் இருக்கிற மனைவி ஜீவனாம்சத்துக்காக நாடகம் போடுவதை தடுக்க முடியும். ஆனால் படிப்பறிவில்லாத ஏழைப்பெண்களுக்கு மட்டும் மேற்சொன்ன அனுகூலங்களை சட்டம் வழங்குவது சரிதான். இதை மத்திய, மேல்மத்திய, உயர்த்தட்டு பெண்கள் பயன்படுத்துவது ஒரு சுரண்டல். திருமண சட்டத்தையும் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தையும் கலந்து கட்டி வழக்கை நடத்துவதே இந்த பேதங்களின் அடிப்படை. இது முதலில் மாற வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் மட்டுமா பாதுகாப்பில்லை? அல்லது குடும்பத்தில் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு இல்லையா?

9) குழந்தையை கணவனுக்கு கொடுக்காமல் தண்டிப்பதும் சில நேரங்களில் மனைவியின் நோக்கமாகிறது. அதற்காகவே மிக மோசமான பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள். ஆக, இவ்விசயத்தில் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை கட்டாயமாக அப்பாவும் அம்மாவும் பகிர்ந்துகொள்ள வேண்டும் (அவர்கள் வெவ்வேறு ஊர்களில் வசிக்காத பட்சத்தில்) என சட்டம் வர வேண்டும். அடுத்து, குழந்தையைக் காட்ட அம்மா மறுத்தால் அதற்காக அப்பா நீதிமன்றம் போவது அபத்தமான கொடூரமான நடைமுறை. குழந்தையைப் பார்ப்பதும், வளர்ப்பதும் இருவரின் அடிப்படை உரிமை அவர்கள் குற்றவாளிகளாக அல்லாத பட்சத்தில் என சட்டம் வர வேண்டும். இப்போதைக்கு குழந்தையை வளர்ப்பது பெண்ணின் உரிமையாக மட்டுமே உள்ளது. அந்த உரிமையை கணவனுக்கு அவள் மட்டுமே கொடுக்க முடியும். இந்த பாரபட்சம் ஒரு ஏற்றத்தாழ்வை, பயத்தை ஏற்படுத்துகிறது. சட்டம் பாரபட்சம் இல்லாமல் ஆனால்  தேவையில்லாத / பொய் வழக்குகளை, நேர பண விரயத்தை தவிர்க்கவும், மன உளைச்சலைத் தடுக்கவும் உதவும். இப்போதுள்ள நிலையில் விவாகரத்து என வந்தாலே கணவன் / அப்பாவின் நிலையே வதையாகிறது. உதாரணமாக, ஒருவர் வேலைக்குப் போவதும், தொழில் செய்து சம்பாதிப்பதும் அடிப்படை உரிமை அல்ல. அதை அவர் நீதிமன்றத்துக்குப் போய் தான் அடைய முடியும் என ஒரு சட்டம் இருக்கிறது எனில் இந்த நாட்டில் ஒவ்வொருவரும் நீதிமன்றத்தில் தான் ஆயுள் பூரா குடியிருக்க வேண்டி வரும். (ஏனெனில் அதில் போட்டி உள்ளதே.) திருமணம் என வந்தால் மட்டும் இந்த அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்களைத் தண்டித்து ஒடுக்கி தன் குழந்தையின் மீது அடிப்படை உரிமையுள்ளதை கோராதவிதமாகவே சட்டங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் ஒரு விசாரணையை நேரடியாகவே பார்த்தேன். கணவன் குழந்தையைப் பார்க்கலாம் என தீர்ப்பு. காட்ட முடியாது எனக் கூறி அதற்கான பொய்க் காரணங்களை மனைவி தரப்பு அடுக்குகிறது. குழந்தைக்கு அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை என அம்மா கூறுகிறார். குழந்தையைக் கொண்டு வாருங்கள் என நீதிபதி சொல்ல, குழந்தை நீதிமன்றத்துக்கு வந்தால் மன உளைச்சல் வரும் என மனைவியின் வக்கீல் சொல்கிறார். அது மட்டுமல்ல தீர்ப்பின் படி குழந்தையைக் காட்டினால் அதனால் குழந்தையின் மனம் புண்படும், அதனால் மனைவிக்கு அசௌகர்யம் வரும் என தீர்ப்பை அவமதிப்பதையே நியாயப்படுத்துகிறார்கள். இதெல்லாம் ஒரு விசாரணையா? ஒருவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வருகிறது. அவரை அடைக்க முடியாது, அதனால் மனம் புண்படும், அசௌகர்யம் ஏற்படும் என சிறைத்துறை கூற முடியுமா? தீர்ப்பின்படி நடக்க முடியாது என எந்த வழக்கிலாவது கூற முடியுமா? யாருக்கும் அடங்காத ஜெயலலிதாவையே சிறையில் அடைத்தார்கள்.  ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆண்கள் தீர்ப்பை நிறைவேற்றுவதை தள்ளிப்போடவும் (ஜீவனாம்சம்) பெண்கள் சுத்தமாக மதிக்காமல் இருக்கவும் (குழந்தையை கணவன் சந்திப்பது) முடியும். இதன் நோக்கமே எதிர்த்தரப்பை ஓட விட்டு மனம் வெறுக்க வைப்பதே. குழந்தை விசயத்தில் பெண்கள் அதிகமாக அப்பாவை அலைய விட்டு உளவியல் வதை பண்ணுகிறார்கள். இதையெல்லாம் ஏன் நீதிமன்றம் என்கிறார்கள்? முதலில் ஒரு தீர்ப்பை பின்பற்றாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆக வேண்டும். அடுத்து ஏன் இப்படியான ஒருதலைபட்சமான சட்டங்கள் உள்ளன? அவை உள்ளதால் தானே நிறைவேற்றாமல் இருக்க இவ்வளவு பொய்களை சொல்கிறார்கள்? 

10)  இறுதியாக ஒரு தீர்வு: இது பழங்குடி சமூகங்களில் உள்ள நடைமுறை. இன்றைய இளைஞர்களும் சேர்ந்து வாழும் உறவின் (லிவ் இன்) பெயரில் இதை முயன்று பார்க்கிறார்கள். திருமணமானதும் முதல் ஆண்டு அதை நிபந்தனையற்ற திருமணமாக பதிவு பண்ணாமல், தற்காலிக ஒப்பந்தமாக கருத வேண்டும். ஒப்பந்த காலமான முதலாண்டில் எல்லா பாதுகாப்பு சட்டங்களும் செல்லுபடியாகும், ஆனால் விவாகரத்து கோரத் தேவையில்லை. பிரிந்து போய் விடலாம். ஒப்பந்தத்தை சட்டரீதியாக திருமணமாக வார்ம் அப் காலத்திற்குப் பின் பதிவு பண்ணவில்லை எனில் அது திருமணமாகாது. இப்படியான நடைமுறை வந்தால் 50% மேல் விவாகரத்துகள் முடிவுக்கு வரும். பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதும் குறையும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...