கிட்டத்தட்ட "குணாவின்" அதே கதையமைப்பை கொண்ட “காதல் கொண்டேன்” ஏன் வென்றது? ஏன் "குணா" தோற்றது? ஏனெனில் நாயகனின் நோய்மையின் தோற்றுவாயை அதை எளிமையாக நிறுவியது. அவனுடைய வாழ்வில் நிகழ்ந்த துயரங்களை சித்தரித்த அவனை பாதிக்கப்பட்டவனாக காட்டி அவன் மீது இரக்கத்தை உண்டு பண்ணியது. குணாவின் பாத்திரத்திற்கு அப்படி எதாவது உண்டா? பாலியல் தொழிலாளியின் மகன் எனும் அவமானத்தை தவிர? அப்படி எத்தனையோ பேர்கள் பிறந்திருந்தாலும் இயல்பாக வாழ்ந்து வெல்லவில்லையா? பாலியல் தொழிலில் அப்படி என்ன கொடூரமான பிரச்சினை உள்ளது? ஆக அப்பாத்திர வார்ப்பிலேயே பிரச்சினை. நமக்கு "மூடுபனியிலோ", "சிகப்பு ரோஜாக்களிலோ" ஏற்பட்ட இரக்கம் கூட "குணாவில்" வராதது அதனால் தான்.
"காதல் கொண்டேன்" நோய்மையான காதலை மகத்துவப்படுத்தினாலும் அப்படம் உருவாக்கிய நடைமுறை உலகின் தர்க்கப்படி அது வெற்றிபெற வாய்ப்பில்லை எனக் காட்டி இயல்பை நோக்கி பார்வையாளர்களை மீட்டது. தனுஷின் பாத்திரத்தை ஒரு பித்தனாகவும், ஆபத்தான மனிதனாகவும், உலகில் வாழத்தகுதியற்றவனாகவும் காட்டி, அப்பெண்ணோ காப்பாற்றப்பட வேண்டியவள், நிம்மதியாக வாழத் தக்கவள் எனக் காட்டி கதையை இயக்குநர் செல்வராகவன் செவ்வனே முடித்தார். "மூடுபனிக்கும்" இதை சொல்லலாம். மிகவும் உன்னதமான காதல் இந்த உலகில் சாத்தியமில்லை, அதற்காக நாம் சாக வேண்டியதெல்லாம் இல்லையென்ற படங்கள் மக்களுக்கு விளங்கியதைப் போல "குணா" விளங்கவில்லை. “குணாவில்” யாரும் இயல்பான உலகில் இல்லை. குணா எதற்காக காதலில் விழுகிறான் என்பதும் தெளிவாக நிறுவப்படவில்லை. "குணா" ஒரு கல்ட் கிளாஸிக் அல்ல. அது ஒரு அபத்தமான முயற்சி. மேலும் அப்படத்தில் காதல் குறித்தோ, சமகால வாழ்க்கை குறித்தோ எந்தவொரு தரிசனமும் இல்லை. தன் தாய் பத்தினியில்லை எனும் கவலையில் இங்கு எத்தனை பேர்கள் பெண்களை கடத்தி வைத்து டார்ச்சர் பண்ணுகிறார்கள்? கல்யாணம் பண்ணி வைத்து டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்று எடுத்திருந்தால் கூட நம்பகத்தன்மை இருந்திருக்கும்.
மோசமான திரைக்கதையை வைத்து நல்ல படம் எடுக்க முடியாது. அது Tie Me Up Tie Me Down இல் இருந்து திருடப்பப்பட்ட கதையோ இல்லையோ.
Comments