முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெருத்த அவமானம்



பெருத்த அவமானம்

பெட்ரோ அல்மொதோவரின் 1989இல் வெளியான Time Me Up, Tie Me Down படத்தை காப்பி அடித்து “குணாவை” கமல் எடுத்தார் என்று சொல்வது கமலுக்கு அவமானம் அல்ல. அது அல்மொதோவருக்கே அவமானம். ஏனென்றால் அது “குணாவை” விட பலமடங்கு மேலான சமகாலத்தன்மை கொண்ட படம். “குணாவில்” அடிப்படையான தர்க்க ஒழுங்கே இல்லை. மிகையான கற்பனாவாதத்தைக் கொண்டு வந்து, மத நம்பிக்கைகளுடன் கலந்து, மிகையான காதலையும், அதன் பாலான தியாகத்தையும் காட்டியிருப்பார் கமல். அதனாலே அப்படம் வெல்லவில்லை. “குணாவில்” யாரும் இயல்பான உலகில் இல்லை. குணா எதற்காக காதலில் விழுகிறான் என்பதும் தெளிவாக நிறுவப்படவில்லை. மோசமான திரைக்கதையை வைத்து நல்ல படம் எடுக்க முடியாது. அது திருடப்பப்பட்ட கதையோ இல்லையோ.
அல்மொதோவரின் படத்திலோ ரிக்கி எனும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கை வெறுமையிலே துவங்குகிறது. இறுதிக் காட்சியில் அவன் தன் குடும்ப வீட்டின் இடிபாடுகளை நோக்கிக் கொண்டு நின்றிருப்பான். அப்போது தான் அவனைத் தேடி அவன் காதலி திரும்பி வருவாள். அதுதான் அவன் பிரச்சினை. அதுதான் அவளின் பிரச்சினையும். இருவரும் வாழ்க்கையின் அடித்தளமும் இடிபாடுகள் தாம்.


அவனுடைய வாழ்க்கை அந்த இடிபாடிகளில் இருந்தே துவங்குகிறது. அங்கிருந்து அவன் பார்ப்பதெல்லாம் அபத்தங்களைத் தான். அப்படத்தில் யாருமே இயல்பாக நடந்துகொள்வதில்லை. மனநல மருத்துவமனையின் பிரதான மருத்துவரில் இருந்து சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள், ரோட்டில் வண்டியை பார்க் பண்ணியிருப்பவர்கள், கடையில் பொருள் விற்பவர்கள், தெருவில் போதை மருந்து விற்கும் குற்றவாளிகள் வரை எல்லாருமே அரைப்பைத்தியமாகவே திரிவார்கள். ஏனென்றால் வாழ்க்கை மிகப்பெரிய வெறுமையின் மீது கட்டப்பட்டிருக்கிறது. எதைக் கொண்டு அதை நிரப்பி அர்த்தத்தை காண்பது என்பதே பெரும் சவாலாக இருக்கிறது. நாயகியான போர்ன் நடிகை மெரினாவும் அப்படித்தான். அவளால் செக்ஸிலோ தொழிலிலோ நிம்மதியும் நிறைவும் காண முடியவில்லை. அதனால் தான் தன்னைக் கடத்தும் ரிக்கியிடம் வாழ்வின் பொருளைத் தேடும் அளவுக்கு அவள் இறுதியில் போகிறது. இப்படம் முழுக்க நகைமுரண் மின்சாரம் போல ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு மெரினாவின் பாத்திரத்தைப் பார்க்கும் போது ஓஷோ, ஜக்கி வாசுதேவ், நித்தி போன்றோரின் ஆசிரமங்களில் தம்மை அடிமையாக மாற்றிக்கொண்ட பெண்களே நினைவுக்கு வந்தார்கள். அரசியல் கட்சிக்காக அடித்துக் கொள்கிறவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். தமக்கு அடிப்படையில் நம்பிக்கையில்லாத மதவாதத்தின், தேசியத்தின் பெயரில் கலவரத்தில் ஈடுபடுகிறவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இப்படி எவ்வளவோ சிந்தனைகளை அப்படம் தூண்டுகிறது. ஆனால் இதை நீங்கள் “குணாவுக்கு” சொல்ல முடியுமா? “குணா” இன்று இல்லாத ஒரு பழங்காலத்தின் விழுமியத்தை பேச முயல்கிறது. அப்படம் மட்டுமல்ல கமலின் பல படங்களுக்கும் இது பொருந்தும். அவர் மிக கவனமாக தன் காலத்தின் மனநிலையை, சிக்கல்களை விவாதிக்காமல் வேறெதையோ பேசி ஜல்லியடிப்பார். அதற்குள்ளும் போனால் ஒன்றுமே இருக்காது. கமலை விட வி. சேகர் எவ்வளவோ மேலான இயக்குநர் என்று சொல்வேன் - அவருடைய படங்களில் தன் காலத்தின் சமூக மாற்றங்கள், குடும்ப சிதைவுகள், விழுமியங்களின் நசிவு குறித்த விமர்சனங்கள் இருக்கும். இ.எம்.ஐ, குடி, ஊழல், சுதந்திரத்தின் பெயரிலான பொறுப்பின்மை என நாம் இப்போது நீங்கள் பார்த்தாலும் அட இது சமகாலம் போல இருக்கிறதே எனத் தோன்றும். கமலின் எந்த படத்துக்காக இதை நீங்கள் சொல்ல முடியுமா? “தேவர் மகன்” திரைக்கதை அளவில் நல்ல படம், ஆனால் அது பேசும் சமகாலப் பிரச்சினை என்ன? ஒன்றுமில்லை. “ஹே ராமில்” இருந்து நாம் சமகாலத்திற்கு எதையாவது எடுத்துக்கொள்ள முடியுமா? இஸ்லாமியர் கொடூரமான கொலைகாரர்கள், பலாத்காரம் செய்து துரோகமிழைக்கும் ஆபத்தானவர்கள் என்பதையா? இருந்தும் இந்துக்கள் அவர்களை எதிர்த்து கலவரம் செய்யாமல் மன்னித்து சகித்து போக வேண்டும் என்பதையா? ஏன் பாபர் மசூதி இடிப்பில் இருந்து கமலால் ஒரு படத்தை எடுக்க முடியவில்லை? கமலுக்கு தான் வாழும் காலத்தின் அரசியலைப் பேச மிகுந்த தயக்கம் உள்ளது. அது அவரது இயல்பிலேயே உள்ள பிரச்சினை. அதை அவர் பழைய விழுமியங்களையும் பழைய வரலாற்றையும் கொண்டு மூடி விடுவார். அது அவரது அரசியல் கட்சியின் செயல்பாடுகளிலும் உள்ளது. அதுவே அவரது சினிமாவின் அரசியல் தெளிவின்மையாக நமக்குத் தெரிகிறது. தொழில்நுட்ப சமத்காரங்களைக் கொண்டு அதை அவரால் மறைக்கவும் முடியாது. 


அல்மொதோவரிடம் இம்மாதிரியான குழப்பங்கள் இல்லை. அவர் தான் காணும் உலகின் பிரச்சினைகளை பகடி பண்ணி மரண அடி அடிக்கிறார். அல்மொதோவருக்கு தன் காலம் பற்றி தெளிவான தரிசனம் உண்டு. கமலுக்கு அப்படியான ஒரு தரிசனம் சுத்தமாக இல்லை.

அவரிடம் இருந்து கதையை இவர் திருடி விட்டார் என சொல்வதைப் போல அல்மொதோவருக்கு பெரிய அவமானம் ஒன்றில்லை. விட்டு விடுவோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...