முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதர் உணர்ந்து கொள்ள இது மக்களின் கதையோ உண்மையோ அல்ல


தன் காலத்தின் பிரச்சினை ஒன்றை கமல் பேசினார் என்றால் அது “மகாநதியில்” மட்டும் தான் என நினைக்கிறேன் - பொருளாதார மோசடிகளை ஒட்டிய விழுமியங்களின் வீழ்ச்சி, தீமையின் பரவல். ஆனால் பிரச்சினை தன் வசம் தான், நடப்புலகை தான் புரிந்துகொள்ளவில்லை எனப் புரிந்துகொள்ளும் நாயகன் என்ன பண்ணக் கூடும் என்பதுதான் கதையே. ஆனால் காலம் கெட்டுப் போச்சு எனும் புலம்பல், பாரதியார் கவிதைகள், லட்சியவாதம், பழிவாங்குதல் என கதையை அவர் சில நூற்றாண்டுகள் பின்னுக்கு அழைத்து சென்றுவிடுவார். ஏன் மக்கள் அவ்வளவு எளிமையாக மோசடியில் போய் விழுகிறார்கள் எனும் கேள்விக்கு, அதன் சமூகப்பொருளாதார காரணிகள் என்ன என அவர் சென்றிருந்தால் அது தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான படமாகியிருக்கும். ஆனால் கமல் எல்லா கொடுமைகளுக்கும் ஒரு சில கெட்டவர்களே - புரோக்கர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள், குழந்தைகளுடன் பாலுறவு கொள்பவர்கள் - காரணம் என்றாக்கி கதையை திசைதிருப்பியிருப்பார். உ.தா., தமிழகத்தில் எத்தனை குடும்பங்களில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்கொத்தாவுக்கு கொண்டு போய் பாலியல் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்? பல நூறு பேர்கள் கடத்தப்பட்டிருந்தால் அது செய்தியாகி இருக்குமே. கமல் தன் மகனை இழந்து கழைக்கூத்தாடிகளிடம் கண்டெடுப்பதும் என்னதான் நெகிழ்ச்சியான காட்சியென்றாலும் அது நடக்க சாத்தியமற்றது எனும் உணர்வே ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களுக்கு எழும். ஒரு கொடுங்கனவைப் போன்ற சம்பவங்களின் கோவையே அப்படம். “பராசக்தியில்” சிவாஜியின் பாத்திரம் பிச்ச்சைக்காரனும், பைத்தியமும் ஆவதைப் போல மிகையான ஒன்று. ஆனால் அந்த காலத்து நிலைமையோடு கதையின் பல இடங்கள் ஒத்துப் போனதால் அப்படம் வெற்றி பெற்றது. “மகாநதிக்கு" அப்படி சொல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் ஈர்க்கிற, நான் திரும்பத் திரும்ப பார்க்கிற படமாக அது இருந்தாலும், கதையமைப்பிலும் காட்சியமைப்பிலும் பல சிறப்பான விசயங்கள் இருந்தாலும் நமது வாழ்க்கைக்கும் அப்படத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உண்டு. கமல் தானாக எழுதியோ இயக்கியோ உருவாக்கிய படங்களுக்கு இப்படியான அந்நியத்தன்மை உண்டு - அவை தமிழகத்தில் நடப்பதாகவோ தோன்றாது. “பேசும் படத்தை” எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு மிகவும் பிடித்த படம். ஆனால் அதை என்னால் தமிழ்ப் படமாகவே எடுத்துக்கொள்ள முடியவில்லை. “அவ்வை சண்முகி” தழுவல் படைப்பு, “பம்மல் கெ சம்மந்தம்” - நகைச்சுவை படம் எனப் பார்க்கப்பட்டாலும் அவற்றில் அவர் பாலின அரசியலின் பெயரில் குடும்பங்கள் உடைவதை விமர்சித்திருந்தது பாராட்டத்தக்கது. ஆனால் அப்படங்களிலும் அவர் மேலோட்டமாகவே பிரச்சினையைத் தொட்டிருந்தார். பெண்ணிய இயக்கத்தின் நோக்கம் ஆண்களே வேண்டாம், பெண்கள் தனியாக வாழ வேண்டும் எனப் பேசுவதா? இல்லையே. பெண்ணிய இயக்கம் பொருளாதார சார்பை முன்னெடுத்தபடியே நவீன பெண்களின் பொறுப்பின்மைக்கு, சுயநலத்துக்கு, ஆண்களின் சுரண்டலுக்கு இடமளிக்கிறது என்பதே பிரச்சினை. ஆண்களை ஒட்டுமொத்தமாக கொடுமைக்காரர்களாக முத்திரை குத்துவதும் பிரச்சினை தான். ஆனால் அதைப் பேசாமல் இல்லாத ஒரு பிரச்சினையை மேலெடுத்து நகைச்சுவையாக்கி அந்த விமர்சனத்தையே கமல் காலி பண்ணி விடுவார். இப்படி எல்லாவற்றையும் அரைகுறையாக தொட்டு வைப்பதே அவரது பாணியாக இருக்கிறது. அது வணிக நிர்பந்தங்களால் அல்ல. அவருக்கே உள்ள ஆதாரமான தயக்கத்தினால், அச்சத்தினால் என நினைக்கிறேன்.

கமல் அளவுக்கு தமிழ் வாழ்க்கையில் இருந்து, இந்திய வாழ்க்கையில் இருந்து விலகி நின்று படமெடுக்கிறவர்கள் மிகவும் குறைவு. “தசாவதாரத்தில்” அந்த ரங்கராஜன் ராமானுஜ நம்பி பெருமாளின் சிலைக்காக தன் உயிரை விடுவது எந்த மக்களின் பிரச்சினைக்காக? வரலாற்றில் தமிழர்கள் அதை எந்த ஒடுக்குமுறையுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்? இங்கு எத்தனை ஆழ்வார்கள் அந்த வரலாற்று நினைவோடு இருக்கிறார்கள், அவர்கள் யார்? சொல்லப்போனால் இங்கு சைவத்தை தம் அடையாளமாக பார்ப்பவர்களும், அது வைணவத்தால் ஒடுக்கப்படுகிறது என கவலைப்படுகிறவர்களுமே அதிகம். ஒட்டுமொத்த தமிழ் தேசியமும், அதன் மீது கட்டப்பட்ட திராவிய இயக்கமும், அதன் மீது தோன்றிய வெகுமக்கள் சிந்தனை, பண்பாடும் அ-வைணவத் தன்மை கொண்டதே. இன்னொரு பக்கம், வரலாற்றில் பௌத்த ஆலயங்கள் வைணவர்களால், சைவர்களால் கைப்பற்றப்பட்டு இந்து கோயில்கள் ஆக்கப்பட்டதும், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதே அதிகம். இன்றுள்ள அனேகமான கோயில்களில் அதற்கான சான்று உள்ளது. ஆனால் வைண கோயில்கள் சைவ கோயில்களாக மாற்றப்பட்ட சான்றுகள் உள்ளனவா? எத்தனை நூறு கோயில்கள்? கமல் சிறுபான்மை சாதியினரின் துயரத்தை தாராளமாக படமாக்கலாம். யூதர்கள் அப்படி தம்முடைய மதம், சிக்கல்கள் பற்றி படமெடுப்பதுண்டு. ஆனால் அவர்கள் அதை பொதுப்பிரச்சினையாக காட்டினால் அது மோசடியாகி விடும். கமல் ஒரு சிறுபான்மை வைணவர்களின் ஒரு சிறிய வரலாற்று ஒடுக்குமுறையை ஒரு படத்தின் மையமாக்குவதும், அனைத்து பாத்திரங்களின் அல்லலுக்கும் அதை மையமாக்குவதும், அதை தமிழகத்தை புரட்டிப்போடும் சுனாமியின் விளைவுகளில் இருந்து மீட்புக்கு காரணமாகுவதும் மோசடி தான். அவருக்கு ‘இதுதான் என் அடையாளம், 11ஆம் நூற்றாண்டில் நடந்த சைவ-வைணவ சச்சரவை ஒரு வைணவனாக என் சமூகத்தின் ஒரு வரலாற்று காயமாகப் பார்த்துப் பேசுகிறேன்’ என்று சொல்லும் தைரியம் இல்லை. ஏனென்றால் நம் வரலாறு முழுக்க வைணவர்களின் பெரும் வெற்றிகளையே காண்கிறோம். தமிழகத்திலும் ஐயர்களை விட ஐயங்கார்களே உசத்தி எனும் எண்ணம் உள்ளது. பிராமணர்களே மற்ற எல்லாரையும் விட உசத்தி என்பதே நம் சாதியத்தின் வரலாறு. இது எல்லாரையும் விட உயர்ந்தவர்களாக கருதப்படுபவர்கள் எப்படி ஒடுக்கப்பட முடியும்? அது என்னவிதமான வரலாறு? என்ன சான்று? எத்தனை ஆயிரம் பிராமணர்கள் நம் வரலாற்றில் கழுவிலேற்றப்பட்டார்கள்? பிராமணர்களுக்காக மற்றவர்கள் ஒடுக்கப்பட்டதே இங்குள்ள வரலாறு. இன்றும் ராமர் கோயிலையே பாஜக கட்டுகிறது, சிவன் கோயிலை அல்ல. பாஜகவின் தலைமையைத் தீர்மானிப்பதே பிராமணர்கள் தானே. தமிழகத்தில் திமுக அரசே பிராமண அதிகார வர்க்கத்தின் அறிவுறுத்தலின்படி நடக்கிறது என ஒரு பேச்சு உண்டு. எங்கெங்கு நோக்கினும் வைண ஆதிக்கம் என்பதே எதார்த்தமாக இருக்கும் போது ஒரு வைணவரை பாதிக்கப்பட்டவராக காட்டுவது என்ன விதமான சமூக எதார்த்தம்? இதில் ரங்கராஜன் ராமானுஜ நம்பி தான் நம்பும் கடவுளின் சிலையோடு பிணைக்கப்பட்டு சைவர்களால் (தமிழ் தேசியர்களால் / திராவிடர்களால்) கடலுக்குள் இறக்கப்படும் காட்சியை எதன் குறியீடாகப் புரிந்துகொள்வது? தமிழக வெகுமக்கள் இதனுடன் எப்படி ஒன்றுவது? கமல் தொடர்ந்து தன் படங்களில் பாதிக்கப்பட்டவர்களாக காட்டுவோரை இப்படி எந்த தெளிவும் இன்றி குழப்பமாக வெகு அபத்தமாக நிறுவியிருப்பார்.

கமல் வைணவ பிராமணரை நாயகனாக்குவது அல்ல பிரச்சினை. முக்குலத்தோரை, வன்னியர்களை நாயகர்களாக்கி படங்கள் வந்துள்ளன. தலித்துகளில் குறிப்பிட்ட சாதிகளையும் அவர்களுடைய நிலப்பகுதியையும் வைத்து படங்கள் வந்துள்ளன. அவற்றில் சில படங்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பிரதிநுத்துவ எழுச்சிப் படங்களாக தோன்றும்படி ஒரு சாதியின் கதையை எல்லாருக்குமான குறியீடாக மாற்றியிருப்பார்கள். அதற்கு அவர்களை நாம் வாழும் காலத்தில் வைத்து அவர்களாகவே காட்டி அவர்களுக்கு நடக்கும் நிஜமான அநீதியை கதையின் விசையாக மாற்றியிருப்பார்கள். ஆனால் கமல் “தசாவதாரத்திலும்” சரி “ஹேராமிலும்” சரி ஒரு கற்பனையான புனைவையோ தொன்மத்தையோ அநீதியாக காட்டுகிறார். இந்திய பிரிவினையின் போது தென்னிந்திய பிராமணர்கள் பாதிக்கப்பட்டார்களா? அவர்களுடைய பெண்டிர் இஸ்லாமியரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானார்களா? அப்படி தாக்கப்பட்டாலும் அவரக்ள் பல சாதிகளிலும் இருந்தார்கள். அவர்களில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்டிரும் இருந்தார்கள். வரலாறு முழுக்க அத்தகைய சித்திரங்கள் நிறைந்துள்ளன. சம்மந்தமில்லாமல் ஏன் ஒரு பிராமண வைணவரை இங்கிருந்து கொல்கொத்தாவுக்கு அனுப்ப வேண்டும்?

காந்தியைக் கொல்லத் துடித்தவர்கள் யார்? பிரிவினை கலவரங்களின் போது தம் பெண்டிர் பலாத்காரம் பண்ணப்பட்டதை கண்டவர்கள அல்ல. அது சிலர் வலதுசாரி புனைவுகளில் வந்த கருத்து மட்டுமே. நிஜத்தில் பிரிவினையின் போது மக்கள் தம் வீடுகளை, சொத்துகளை இழந்து அகதிகளாகி ஏதிலிகளாக தெருவில் வசித்தார்கள். இங்கு இஸ்லாமிய பெண்களும் அங்கு இந்துப் பெண்களும் கடத்தப்பட்டது, வலுக்கட்டாயமாக மனைவியாகப்பட்டது இந்த கொடுமைகளின் சிறுபகுதி மட்டுமே. செல்வந்தர்களாக, நிலவுரிமையாளர்களாக இருந்து ஒரே நாளில் ஒன்றுமற்றவர்களாக ஆக்கப்பட்டதே அம்மக்களில் சிலரை அதிகமாக காந்தியை வெறுக்க வைத்ததன் காரணம். காந்தி தேசப் பிரிவினையை ஏற்றுக்கொண்டார் என்பது ஒரு வருத்தம் என்றால், பிரிவினை கலவரங்கள், இழப்புகளுக்குப் பிறகு அவர் பாகிஸ்தானியருக்காக பேசினார் என்பதே கோபத்தின் அளவை பலமடங்காக உயர்த்தியது. அப்போதுதான் இந்துமகா சபையினர் அவரைக் கொல்ல முடிவெடுக்கிறார்கள். கோட்ஸே மட்டுமல்ல வேறு பலரும் தத்தமது குழுக்களுடன் கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதை மனோகர் மல்கோங்கர் தனது “காந்தியைக் கொன்றவர்கள்” நூலில் தெளிவாகவே குறிப்பிடுகிறார். “ஹேராமை” சரியாக எழுதுவதானால் கமல் தன் நாயகனை தென்னகத்து ஐயங்காராக அல்ல, இந்த பிரிவினையின் போது சொத்தையும் செல்வத்தையும் குடும்பத்தையும் இழந்து அனாதையும் அகதியும் ஆக்கப்பட்ட ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக்கி இருக்க வேண்டும். அப்போது அவரது நியாயம் நமக்குப் புரிந்திருக்கும், இஸ்லாமிய வெறுப்பையும் தவிர்த்திருக்கலாம். கதையும் நம்பகத்தன்மை பெற்றிருக்கும்.

ஆனால் அவர் சம்மந்தமில்லாத ஒரு சமூகத்தை, உலகை சேர்ந்தவராக நாயகனை உருவாக்கிய இடத்திலேயே நமக்கும் படத்துக்குமான தொடர்பு அறுந்து விடுகிறது. அவர் பிராமணர் பாத்திரம் என்பதால் அல்ல. அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை, நிகழ வரலாற்றில் சாத்தியமில்லை என்பதாலே. இதையே “தசாவதாரத்திற்கும்” சொல்லலாம். அசலான வரலாற்று / சமகால அநீதியைப் குறிப்பிடும்படி ஒரு கதையை உருவாக்கினால் அதற்கு ஒரு தாக்கம் இருக்கும். உ.தா., சமணர்களின் கழுவேற்றம்.

இதைத்தான் தமிழ் / இந்திய வாழ்க்கையில் இருந்து விலகி நின்று அபத்தமாக சிந்திப்பது, கற்பனையாக ஒப்பாரி வைப்பது என்பது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...