முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைக்கு பக்தி அவசியமா?


கர்நாடக சங்கீதத்தின் உயிர்நாடி பக்தி ரசம், அதை கடவுள் மறுப்பாளர் பாட முடியுமா என எஸ்.எம் கிருஷ்ணாவைப் பற்றின குறிப்பில் சாரு நிவேதிதா கேட்கிறார். இது ஒரு முக்கியமான கேள்வி. நான் கவனித்த வரையில் கிருஷ்ணா மட்டுமல்ல, சஞ்சய் சுப்பிரமணியம், ரஞ்சனி காயத்ரியிடம் கூட நம்மால் முழுமையான பக்தி ரசத்தின் சரணாகதி நிலையைப் பார்க்க முடிவதில்லை. தியாகராஜர் கீர்த்தனைகள் கூட இவர்கள் பாடும் போது காதலாக, பாசமாக, அன்பின் உருக்கமாகவே தெரிகிறது. இது நவீன காலத்தின் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் சாருவின் கருத்தில் என்னைக் கவர்ந்தது கலைக்கும் பக்திக்குமான தொடர்புதான்.
பக்தி என்றால் என்ன? இறைவன் மீதான பற்றா? இல்லை. பக்தி என்றால் மீபொருண்மைவாதம் - எது ஒன்று இவ்வுலகில் இல்லையோ, அதன் பால், அது இவ்வுலகில் இல்லையென்பதாலே பற்று கொள்வது. அதை நோக்கி மனம் ஏகுவது, பொருளுலகின் போதாமை குறித்து இரங்கி, அதை நிவர்த்தி செய்ய இல்லாத ஒரு காலத்தை நோக்கி ஏங்கி மருகுவது, நிகழாத ஒன்று, நிகழ சாத்தியமில்லாத ஒன்றை நோக்கி செயலால் நெருங்க முயல்வது, அணுக அணுக விலகிப் போகும் ஒன்றை அந்த தொலைவின் காரணத்தாலே நேசிப்பது, தன் இயலாமையை எண்ணி மனம் உடைந்து அதையே மகத்துவப்படுத்துவது, கொண்டாடுவது. இதுதான் மறைபொருள் மீதான வெளிப்படையான காமம். இதுவே கடப்புநிலைவாதம். கடவுள் பக்தியான இதுவே கற்பனாவாத காலத்தில் இயற்கை மீதான காதலானது. இதுவே நவீன காலத்தில் காதலுக்காக தவமானது. சமூக மாற்றத்திற்கான தியாகமானது. தானல்லாத மற்றமை, தானல்லாத சமூகம் (எளியோர், பாமரர், சாமான்யர்), தானல்லாத சமூக அமைப்பு (ஜனநாயகம், நீதி, சமத்துவ கனவுகள், வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள்) என மாறியது. சமகாலத்தின் பக்தி தான் ஜனநாயகம். சமகாலத்தின் கடவுள் தான் பிரதமர், ஜனாதிபதி, மக்கள் தலைவர்கள், மக்களாட்சி எனும் மக்களுக்கு அதிகாரமில்லாத ஆட்சிமை முறையைக் கொண்டாடும் மனநிலை. என்ன பிரச்சினை என்றால் நவீன காலத்தில் பக்தி பௌதீக உலகத்தின் மீதான ஒரு போலி மீபொருண்மைவாதம் ஆகிவிட்டது. நமது சுயத்தின் பிரக்ஞையை உடைத்துக்கொண்டு இன்மையை நோக்கி லயிக்க நவீன மனிதர்களான நம்மால் முடிவதில்லை என்பதே பின்நவீனத்தின் பெரிய புகாராக இருக்கிறது. அதனாலே பின்நவீனம் நவீன அரசு, சமூகம், கல்விக்கு முன்பான கற்பனாவாத காலத்தை, செவ்வியல் சிந்தனைகளைக் கொண்டாடுகிறது. கடவுளற்ற பக்திக்கு கடவுள் இருக்கும் பக்தியே மேலானது எனக் கூறுகிறது (பார்க்க கீர்க்கெகாட் மீதான வாசிப்புகள்).
அப்படியே இலக்கியத்துக்கு வருவோம் - இலக்கியம் உள்ளிட்ட கலை வடிவங்களுக்கு கடவுள் பக்தி அவசியமா? ஆம், அவசியமே. நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கடவுளை நம் படைப்பில் ஏற்கிறோமோ மறுக்கிறோமோ தன்னைக் கடந்து தானற்றத்தை நோக்கி கற்பனையை செலுத்துவது கலையின் ஆதார விசையாக இருக்கிறது. அது இல்லாத போது ஒரு படைப்பு உயிரற்றதாக இருக்கிறது. தத்துவார்த்த ரீதியாக பிழையாக உள்ள ஒன்று - கடப்புநிலைவாதம், இல்லாத ஒன்றுக்கான பரவசமான அபத்தமான முயற்சி - கலைக்கு அவசியமாக இருக்கிறது. அது இல்லாத இலக்கியம் எனில் என்னால் இருத்தலியல் கதைகளையும் (ஆல்பர்ட் காமு, சார்த்தர்), வரலாற்றுவாத எழுத்தையும் (தல்ஸ்தாய்), ஓரளவுக்கு மார்க்ஸிய இலக்கியத்தையும் சொல்லலாம். இந்த பொருண்மைவாத இலக்கியங்களில் நம்மை மனம் பேதலிக்க வைத்து உடைய செய்கிற எதுவோ ஒன்று இருக்காது.
பக்தி என்பது இறைவனிடம் அடிபணிவது அல்ல; பருப்பொருட்களாலான இவ்வுலகில் இருந்துகொண்டே சில நொடிகள் இல்லாமல் ஆகிக்கொண்டே இருமையை மீறிப் போவதுதான் ‘பக்தி’. அது தர்க்கரீதியாக பிழையானது. அதனாலே பிழையான சிந்தனை கலைக்கு அவசியம் எனத் தோன்றுகிறது.
கடவுளற்ற பக்தி கூட சாத்தியமே - கற்பனாவாத இலக்கியத்தை விட இது சிறப்பாக நம் சங்கக் கவிதைகளில் - அகப்பொருள் பாடல்களில் - சிறப்பாக தெரிகிறது. தானாக இருந்துகொண்டே இயற்கையில், அன்றாட உலகின் பொருட்களில், செயல்களில் தலைவி தானற்றும் போகிறாள். அதையே காதலாக அவள் முன்வைக்கிறாள்.
பின்நவீன இலக்கியத்தில்? அங்கும் தான் இந்த கடப்புநிலைவாதம் மற்றொரு தோற்றம் கொள்கிறது. அங்கு சாராம்சமான ஒரு பொருள் இல்லையென்றாலும், தொடர்ந்து இருப்பில் இருந்து இன்மை நோக்கி, அமைப்பில் இருந்து அமைப்பின்மை நோக்கி ஒரு தாவல் இருக்கிறது. புக்காவஸ்கியின் “தபால் நிலையம்” நாவலை ஒரு எளிய உதாரணமாக கொள்ளலாம் - அதில் வரும் கதைசொல்லி தன்னை பலவீனமான பாவப்பட்ட ஒருவர் என்று காட்டிக்கொண்டே அதற்கு நேரெதிரான ஒருவராக செயல்படுவார், தன்னைக் குறித்த மிகையான பாவனையை - வலிமையும் தன்னம்பிக்கையும் மிக்க ஆண்மகன் - பண்ணிக்கொண்டே சுயபச்சாதாபம் கொண்ட முதுகெலும்போ சுயமரியாதையோ இல்லாதவராக இருப்பார், அப்படி இருப்பது குறித்து, தன் அவலம் குறித்து பெருமையும் கொள்வார். இதை புக்காவஸ்கி ஒரு அதிர்ச்சியான நகைச்சுவையாக வெளிப்படுத்துவார். இதுவென எண்ணும் போது அதுவாகவும், அதுவெனும் போது இதுவாகவும் இருந்து, அதைக் குறித்த விளக்கங்கள் கொடுக்காமல் இருப்பதும் ஒரு கடப்புநிலைவாதமே. ஆனால் தன்னைக் கடந்து போகும் கடப்புநிலைவாதம் அல்ல, தனக்குள்ளே ஆழ்ந்து செல்லும், அந்த தன்னையே மறுக்கும் கடப்புநிலைவாதம்.
மீண்டும் சொல்கிறேன் - தத்துவார்த்தமாக இது பிழையானது; ஆனால் இப்பிழையின்றி இலக்கியம் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...