Skip to main content

என் பள்ளி அனுபவங்கள் - ஆர். அபிலாஷ்

 டிசம்பர் 2023இல் கனவு ஆசிரியர் இதழில் வெளியான கட்டுரையின் முழுமையான வடிவம்

குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையின் அருகில் உள்ள பத்மநாதபுரம் எனும் கிராமம் என் சொந்த ஊர். என்னுடைய ஆரம்ப கல்வியை அமலா கான்வெண்ட் எனும் கிறித்துவ கன்னியாஸ்திரிகள் நிர்வகித்த பள்ளியில் படித்தேன். அங்கு என்னுடைய உடற்தகுதியைக் காட்டி (நான் ஒரு மாற்றுத்திறனாளி இருப்பதால்) இடமாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு போக நிர்பந்தித்தார்கள். அச்சம்பவம் இன்னும் எனக்கு வியப்பாக இருக்கிறது - அங்கு எனக்கு எந்த விபத்தும் நிகழவில்லை. ஆனாலும் நிர்வாகிகளுக்கு யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் போனால் நான் இருக்கையில் இருந்து தவறி விழுந்துவிடுவேனோ எனும் அச்சம். அங்கிருந்து நான் இந்து வித்யாலயா எனும் மற்றொரு தனியார் பள்ளிக்குப் போனேன். ஏதோ ஒரு விதிமுறைக் குழப்பத்தால் நான் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் முதலில் இருந்து மீண்டும் அமரும் கட்டாயம் ஏற்பட்டது. அது ஒரு சிறிய அழகான பள்ளி. ஆனால் அங்கு எட்டாம் வகுப்புக்கு மேல் இல்லை என்பதால் என்னை தக்கலை உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். இந்த மூன்று பள்ளிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கழிப்பறைகள் இல்லை என்பதால் நாள் முழுக்க நீரருந்தாமல் இருக்கும், சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் எனக்கு அங்கு ஏற்பட்டு பின் அது மறைய நீண்ட காலம் ஆகிற்று.
பெரும் வளாகம், மைதானம், பெரிய சம்புடத்துடன் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து சத்துணவு சோற்றையும் அதில் ஊற்றப்படும் ஆற்றொழுக்கு சாம்பாரையும் மிகுந்த ஆர்வத்துடன் உண்ணும் நீண்ட சிமிண்டு திண்ணைகள். பெரிய சிறைச்சாலையை நினைவுறுத்தும் வரிசை வரிசையான வகுப்பறைகள். பிரம்புடன் நடந்து வரும் தலைமை ஆசிரியரை அஞ்சி அடங்கி ஒடுங்கி செல்லும் மாணவர்கள்.
நான் சென்ற புதிய பள்ளியில் பல நூறு மாணவர்கள் படித்தார்கள். இஸ்லாமியர், கிறித்துவர்கள், அவர்களிடையே வசதியானவர்கள், மத்திய வர்க்கத்தினர், ஏழைகள். விடிகாலையில் வயலுக்கும் தோப்புக்கும் மண்வெட்டியுடன் கிளைக்க சென்றுவிட்டு சாப்பிடாமலே வகுப்புக்கு வருபவர்கள், பிரச்சினைக்குரிய பின்னணியில் இருந்து வருபவர்கள் இருந்தனர். அவர்களுடைய பேச்சும் நடவடிக்கையும் எனக்குப் பழக காலமெடுத்தது. நான் அதுவரை எங்கும் கேட்டிராத கெட்டவார்த்தைகள், விவரணைகளைக் கேட்டேன். பெஞ்சில் ஏறி நின்று வகுப்பறையில் உள்ள பொருட்கள் மீது சிறுநீர் கழிக்கும் வினோத நடத்தைகளைக் கண்டேன். அதே போலத்தான், பார்த்ததுமே என்னை நட்புடன் ஏற்றுக்கொண்டு பழகிய நண்பர்களும் கிடைத்தனர். அங்கு தான் சற்று முரட்டுத்தனமான, அழகான, வெகுளியான பெண்களைக் கண்டேன். என் முதல் பதின்வயதுக் காதல் அங்குதான் மலர்ந்தது.
இஸ்லாமியர், கிறித்தவர்களுடன் நெருங்கிப் பழகியது அதுவே முதன்முறை. எனக்கு அப்போது அவர்களிடம் ஏற்பட்ட நெருக்கமே மாற்றுமதத்தவரைக் கண்டதும் ஒட்டிக்கொண்டு நட்பாகும், மிக வறிய சூழலில் இருந்து வருகிறவர்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் மனப்பாங்கை இப்போது ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறேன். இது அரசுப்பள்ளியின் தனிச்சிறப்புகளில் ஒன்று.
அங்கு ஆசிரியர்கள் கண்டிப்பானவர்கள். அதுவரைப் படித்த தனியார் பள்ளிகளில் அடிக்க மாட்டார்கள். எங்களிடம் தவறிருந்தால் கூட மென்மையாக சொல்லித் திருத்துவார்கள். அங்கு நான் திட்டுவாங்கியதாகவே நினைவில்லை. இங்கோ தினமும் கேள்வி கேட்டு எல்லா மாணவர்களையும் நிற்க வைத்து பிரம்பால் அடிப்பார்கள். தேர்வுத்தாள்களைத் தரும் போது அடி, பேசினால் அடி, ஆசிரியர்களுக்குத் தோன்றும் போதெல்லாம் அடி. ஒரு மாணவி அறிவியல் ஆசிரியரின் மகள். அப்பா தன் வகுப்புக்கு புத்தகத்துடன் வந்தாலே அவள் முகம் இறுக்கமாகிவிடும். கப் சிப்பென்று இருப்பாள். ஆனால் அவளும் தவறாமல் அடிவாங்குவாள். (இன்று மாணவர்களை அடிப்பது குற்றம். அன்று அடிப்பவரே நல்லாசிரியர்.) நான் அடிவாங்கியதற்கு ஒரு காரணம் என் முந்தின பள்ளியில் எனக்கு சரியான கல்வி போதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கடுமையாக உழைக்கத் தொடங்கினேன். ஓராண்டிலேயே வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் நிலையை அடைந்தேன்.
அங்கு பெரும் எண்ணிக்கையில் படித்த மாணவர்கள் பல வர்க்கங்களை, பின்னணிகளை சேர்ந்தவர்கள். இடைவேளைகளின் போது மைதானத்தில் மாணவர்களில் சிலர் மோதிக் கொள்வார்கள். நான் அதுவரை என் பள்ளியில் பார்த்தது மாணவர்கள் சும்மா கையால் அடித்துக்கொள்வது. இது நிஜமான சண்டை. என் கண் முன்னால் ஒரு பையனை பேனா கத்தியால் குத்தியதைப் பார்த்தேன். ஆழமாகப் படவில்லை. அவன் மெதுவாக வயிற்றைத் தாங்கியவாறு நடந்து பள்ளி வளாகத்துக்கு வெளியே போய்விட்டான். யாரிமும் புகார் சொல்லவில்லை. இச்சூழலே பிரம்பு விளையாட்டில்லாமல் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது எனும் எண்ணத்தை ஆசிரியர்களிடத்து ஏற்படுத்தியிருக்கக் கூடும். இன்னொரு பக்கம், அங்கு ஆசிரியர்கள் கூடுதல் அறிவு படைத்தவர்களாக, அருமையாக பாடம் நடத்தக்கூடியவர்களாக, அன்பானவர்களாக இருந்தார்கள். நான் முன்பு பார்த்த தனியார் ஆசிரியர்களை விட தம் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து உருப்பட வேண்டும் எனும் அசலான அக்கறை இவர்களிடம் இருந்தது. படிக்காத மாணவர்களிடையே கொஞ்சமேனும் திறமை உள்ளவர்களைக் கண்டால் திருத்தி நெறிப்படுத்த முயல்வார்கள். அந்த அன்பைக் கண்ட போது அவர்கள் எங்களைத் தம் மாணவர்களாக அல்ல பிள்ளைகளாகவே காண்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன்.
விதவிதமான ஆசிரியர்களை அங்கு கண்டேன். ஒரு இயல்பியல் ஆசிரியர் வெள்ளை கதர் சட்டை, வேட்டி, தோளில் துண்டு அணிந்து பழைய சைக்கிளில் வருவார். கெட்டியான கறுப்புப்பட்டை கண்ணாடி. வகுப்பில் நகைச்சுவையாக கதைகளை சொல்லி ஏகவசனத்தில் பேசி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். எளிமையாக அழகாக அவர் சொல்லித் தந்தவை மறந்துவிட்டன என்றாலும் அந்த அனுபவம் மறக்கவில்லை. கணித ஆசிரியராக வேற்றூரில் இருந்து ஒருவர் வந்தார். எழுபதுகளின் நாயகர்களின் ஸ்டைலில் பங்க், முன் தலையில் சுருட்டிவிட்ட முடி, பெரிய காலர் வைத்த, கறுப்புப் புள்ளிகள் கொண்ட சட்டை அணிவார். எகத்தாளமான உடல்மொழி. அற்புதமான ஆசிரியர். உலகின் மிக சிரமமான பாடங்கள் கூட அவர் சொல்லித் தந்தால் புரியும். ஒருநாள் எங்களுக்கு அசெம்பிளி நடந்துகொண்டிருக்க அதில் பங்கெடுக்க முடியாத நான் தனியாக வகுப்பில் இருந்தேன். அவர் என்னைப் பார்த்து வகுப்புக்குள் வந்து என் தோளில் கையிட்டு ஆதுரமாகப் பேசினார். என்னிடம் ஒரு மனிதர் வந்து ஆதரவாக விசாரித்தது என் வாழ்வில் முதன்முறை அது என்பதால் நெகிழ்ந்து போனேன். அவர் ஒரே மாதத்தில் ஒரு பேருந்து விபத்தில் காலமான போது நாங்கள் மாணவர்கள் துயரம் தாளாமல் அழுதோம். அவருடைய நினைவாகவே நான் ஒரு ஆசிரியரான போது வகுப்பில் தனியாக ஒட்டாமல் இருக்கும் மாணவர்களிடம் சென்று நட்பாக விசாரிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொண்டேன்.
நான் செல்லும் போது இருந்த தலைமை ஆசிரியை கண்டிப்பானவர். இரும்பு மனுஷி. எல்லாரும் பயந்தார்கள். அவரது பதின் வயது மகன் ஒரு பைக் விபத்தில் காலமான போது அவர் மிகவும் ஒடுங்கிப் போய் ஓய்வு வாங்கிக்கொண்டார். எங்களுக்கு அவருடைய மென்மையான பக்கத்தைக் காணக் கிடைத்த போது அவருக்காக பரிதாபப்பட்டோம். அவரிடத்தில் வந்தவர் இன்னும் படுபயங்கரமானவர். அவரிடம் தினமும் பின்பக்கத்தில் அடிவாங்காத மாணவர்களே இல்லை. அடிக்க அடிக்க மாணவர்கள் முன்னோக்கி வளைந்து தப்பிப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும், அதாவது அவரிடம் நாம் சிக்காத வரையில். அவருக்கு முழுவழுக்கை. நீள்வட்ட தலையமைப்பு. அதனால் அவரை மாணவர்கள் ஒரு பழத்தின் கொட்டையை வட்டப்பெயரிட்டு கேலி செய்தனர். அவர் போய்க்கொண்டிருக்கும் போது பின்னிருந்து அழைத்து மறைந்துகொள்வார்கள். அவர் ஒருநாள் எங்கள் வகுப்புக்குள் புகுந்து விசாரணையை நடத்தினார். பயத்தில் எங்களுக்கு சிறுநீர் கழிந்துவிட்டது. அதன் பிறகு ஒருநாள் வகுப்புக்கு வந்து எங்களுடைய எதிர்காலத்தைப் பற்றின நிஜமான அக்கறையுடன் அறிவுரை தந்தார். ஒரு நல்லாசிரியருக்கு தன்னைத் துன்புறுத்தும் மாணவர்களிடம் ஒருபோதும் வெறுப்பு ஏற்படாது என்று புரிந்துகொண்டேன். ஆனாலும் நீண்ட காலமாக என் நெஞ்சில் அவர் பெயருக்குப் பதில் வட்டப்பெயரே நிலைத்தது. அவமதிப்புடன் அல்ல நிறைய அன்புடன்.
அங்கு தான் நான் பல புதிய விசயங்களைக் கற்றேன், புது மனிதர்களை அறிந்தேன், அப்பள்ளி தான் என் ஆளுமையை புடம் போட்ட ஆட்டக்களம்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...