முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டிராபிக் சிக்னல்

நான் அடிக்கடி பார்க்கும் ஒன்று இது. இரண்டு கிறித்தவர்கள் சந்திக்கும் போது தற்செயலாக ஒரு விவிலிய மேற்கோளையோ கதையையோ குறிப்பிட்டு விட்டால் மற்றொருவர் அதன் பொருளை மறுத்தோ திருத்தியோ பேசுவார். தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். இன்னொரு கிறித்தவரும் அங்கு வந்துவிட்டால் அங்கு ஒரு பெரிய சர்ச்சையே எற்படும். சட்டென்று எனக்குள் இருக்கும் அவநம்பிக்கையாளன் விழித்துக் கொண்டாலும் அவர்களுடைய ஈடுபாட்டை நான் எப்போதுமே வியப்பேன். 

ஆனால் நான் ஒரு போதும் பார்க்காதது என்ன தெரியுமா? இரண்டு பேர் சந்திக்கும் போது திருக்குறளை குறிப்பிடுவார்கள். ஆனால் யாரும் அதன் பொருளை மறுத்து விவாதித்து என் வாழ்க்கையில் ஒருமுறை கூட நான் கண்டதில்லை. இத்தனைக்கும் உலகப் பொதுமறை என்கிறார்கள். குறளை சைவ, வைண, பௌத்த, ஜைன பார்வைகளில் மறுத்தும் ஏற்றும் யாரும் சர்ச்சித்து கேட்டதில்லை. என் பள்ளியிலும் எந்த ஆசிரியரும் கேட்டதில்லை. தமிழர்கள் விவிலியத்தை, குரானைக் கற்கும் ஆழத்துடன் குறளைக் கற்பதோ பேசுவதோ இல்லை என்பதே உண்மை. அதன் ஒலியழகைத் தாண்டி அதில் ஈடுபாடு கொள்வதில்லை.

எத்தனை நூறு நூறு உரைகள் வந்துவிட்டன. எத்தனை ஆயிரம் மாணவர்களை மனனம் செய்ய வைத்து அழகு காண்கிறோம், பரிசு கொடுக்கிறோம். ஆனால் ஏன் அதன் பொருள் பற்றின அக்கறை இல்லை? 

வெள்ளத்தனைய மலர்நீட்டம் என ஏன் கூறுகிறார்? ஒன்றை சார்ந்து மட்டுமே உயர்வு என ஏன் கூறுகிறார்? இது dependent co-orginationஆ என்று யாரும் கேட்டுப் பார்த்ததில்லை. ஏன் கல்வியை தகவலாக அன்றி நிலத்தடி நீராக, தொட்டனைத் தூறும் மணற்கேணியாகக் கூறுகிறார்? நவீன கல்வி அப்படி கூறவில்லையே? இப்படி நான் எதை சிந்தித்தாலும் நான் ஏற்கனவே கற்ற குறள்கள் என் மனதுக்குள் உழன்றுகொண்டே இருக்கின்றன. பௌத்தத்தை, நவீன பிரச்சினைகளை என்னால் குறளைத் தாண்டி பார்க்க முடிந்ததில்லை. ஆனால் இந்த கேள்விகளை நான் வெகுமக்களின் அன்றாட உரையாடலில் நான் கண்டதே இல்லை. சிவனடியாரைப் போலத் தோன்றும் வள்ளுவர் ஏன் சிவனைப் பற்றி பேசுவதில்லை எனக் கேட்பதில்லை. மோடியின் உச்சரிப்பை கிண்டல் பண்ணி சிரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.

இந்த உலகில் எந்த ஊரிலாவது மக்கள் தாம் மனனம் செய்த ஒன்றைப் பற்றி யோசிக்கவோ பேசாமலோ இருக்கிறார்களா? ஒரு சமாதானத்துக்காக இந்த விசயங்கள் நம் கூட்டு நனவிலியில், உபமனத்தில் உள்ளன என கூறிக்கொள்ளலாம். ஆனால் நிற்க அதற்குத் தக என்றால் என்னவென்று தெரியாமல் எப்படி நிற்க முடியும்? சிறுபான்மையினர் தன் மறைநூல்களை கற்கும் அளவில் பத்து சதவீதம் கூட ஏன் தமிழர்கள் தம் மறைநூலான குறளை பொருளுணர்ந்து கற்பதோ விவாதிப்பதோ இல்லை?

இசை, இலக்கியம் மட்டுமல்ல ஒரு மறைநூலையும் டிராபிக் சிக்னலைப் போலத் தான் டீல் பண்ணுகிறோம் போல!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...