முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நகரங்களை கூவி விற்பவர்கள்

நாம் கிராமங்களை விமர்சனம் செய்த அளவுக்கு நகரங்களை செய்ததில்லை. கேட்டால் மாற்றம், முன்னேற்றம், மரகதமணி என்கிறார்கள். அப்படியென்ன முன்னேற்றம் வந்துவிட்டது என்பதில் எனக்கு நிறைய ஐயம் உள்ளது - நான் காற்று மாசு, தண்ணீர் பஞ்சம் பற்றியெல்லாம் பேசவில்லை; கட்டிடங்களாக கட்டிக்குவிப்பதால் நேரும் புவி வெப்பமாதல் பற்றிக் கேட்கவில்லை; நான் கேட்பது ஒரு சாதாரண கேள்வி: நகரங்களில் சமத்துவம் இருக்கிறதா? எல்லாருக்குமான தரமான உணவு, எல்லாருக்குமான தரமான தங்குமிடம் உள்ளதா? உழைத்து பணம் சம்பாதித்தால் கிடைக்கும், இது ஒரு லிபரலான வணிக சந்தை என்கிறார்கள். எனில் மறைமுகமாக இங்கு சம்பாதிக்க முடியாதவர்கள் அடிப்படையான உணவு, இட வசதி இல்லாமலே வாழ்ந்தாக வேண்டும் என்கிறார்கள். ஒரு அறையை நான்கைந்து பேர் பகிர்ந்து வாழ்வது, மொட்டைமாடியில் தகர ஷீட்டுக்கு கீழே குடும்பமாக வாழ்வது, வாசலில் சாக்கடை ஓடும் வீடுகளில் வாடகை கொடுத்து வாழ்வது, நடைபாதையில் குழந்தை, அப்பா, அம்மா என உறங்குவது எல்லாம் நகரங்களிலே நான் முதன்முதலாகப் பார்த்தேன். விளையாடுவதற்கு, பொழுதுபோக்குவதற்கு இடமில்லாமல், ஒவ்வொன்றுக்கும் பணம் செலுத்தியே அனுபவிக்க முடியும் எனும் நிலையை இங்கு தான் பார்த்தேன். சரி உழைத்து சம்பாதிக்கலாம் என்றால் அதற்கு சமூக முதலீடு வேண்டுமே? பணம் அடிப்படையாக வேண்டுமே. அப்படியே சம்பாதித்தாலும் தெருவோரத்தில் இருந்து ஒரு குருவிக்கூண்டுக்குப் போக முடியுமே ஒழிய எந்த பெரிய வளர்ச்சியும் இராது. நகரங்களின் வளர்ச்சியைப் பற்றி பேசுவோர் யாருமே அதை வர்க்கரீதியாக விமர்சிப்பதில்லை. அந்த சொல்லையே வெறுக்கிறார்கள். முற்போக்கு அரசியலின் பெயரில் இப்படி விமர்சனமின்றி சந்தை பொருளாதாரத்தை நெஞ்சாரத் தழுவிப் பாராட்டும் இவர்கள் ஒருவித புரோக்கர்கள் என நினைக்கிறேன். 

மேலும் இவர்கள் வேலையாலோ வியாபாரத்தாலோ ஓரளவுக்கு பொருளாதார ரீதியாக நிலைப்பெற்றவர்கள் அல்லது எந்த கவலையுமின்றி இருக்குமளவுக்கு சமூக, குடும்ப ஆதரவு பெற்றவர்கள். மாசம் வாடகைக்கு காசில்லையெனில் எங்கு போவது எனும் நெருக்கடியில்லாமல் வாழ்கிறவர்கள் அல்லர். இவர்கள் பெரும்பாலும் மத்திய, மேல்மத்திய வர்க்கத்தினர். 

உலகின் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு வகைமாதிரி என்றால் அது நகர அமைப்பு தான். வேறெங்காவது பாதுகாப்பு எனும் பெயரில் எல்லா இடத்திலும் காவலாளிகளை இந்தளவுக்கு நிறுத்தி வைப்பார்களா? வேறெங்காவது வேலையில், குடும்பத்தில், உள்கட்டமைப்புகளில் இந்தளவுக்கு ஸ்திரமின்மை இருக்குமா? மழை பெய்தால் இரண்டு வாரத்திற்கு வெளியே போக முடியாது, சாப்பாடு, தண்ணீர் கிடைக்காதே என மக்கள் அஞ்சி ஆவலாதிப்படுவதை நான் நகரத்திற்கு வந்த பிறகே பார்க்கிறேன். மீண்டும் சொல்கிறேன் - இது ஒட்டுமொத்தமான பிரச்சினை அல்ல. பெரிய அரசு அதிகாரிகள், பணக்காரர்களுக்கு நகரம் எப்போதும் சொர்க்கமே. இது வர்க்கரீதியான பிரச்சினை மட்டுமே. நீங்கள் எல்லா இந்திய நகரங்களிலும் இதைப் பார்க்க முடியும். ஜப்பான் மாதிரியான மிக வளர்ந்த நாடுகளின் நகரங்களிலும் இதே அவலங்களை காண முடியும். அண்மையில் கனடாவுக்கு படிக்கவும் வேலை பார்க்கவும் சென்ற இந்தியர்கள் பலர் குடியிருக்க வீடு கிடைக்காமல் சாலையில் தங்கும் நிலை ஏற்பட்டதைப் பற்றி கேள்விப்பட்டேன். அமெரிக்காவிலும் இப்போது பொருளாதார நிலை மோசமான பின் பலரும் வேலையிழந்த நிலையில் திரும்ப இந்தியாவுக்கு வருகிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அங்கு நீண்ட காலமாகவே மிக அதிக வீட்டு வாடகை எனும் அவலம் வானுயர நின்று கொடிகட்டிப் பறக்கிறது. அதனால் மக்கள் நீண்ட தூரம் தினமும் பயணித்து புற நகரத்து வீடுகளுக்குப் போகிறார்கள். கீழ்மத்திய வர்க்கத்தினர் காரில் வாழ்கிறார்கள். இன்சுலின் வாங்க பணமில்லாமல் சாகிறார்கள். இதெல்லாம் ஒரு கிராமத்தில் நடந்தால் ஊரே வந்து அங்கலாய்க்கும். அமெரிக்க நகரம் என்பதால் கண்டுகொள்ள மாட்டார்கள்.

கூடுதலாக தனிமனிதர்களுக்கு எந்த சமூக அடையாளமும் தராத கட்டமைப்பையே நகரங்கள் ஊக்குவிக்கின்றன. என் வீட்டருகே மிக மோசமான சூழலில் கீழ்த்தட்டினர் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டுமே தன் வீட்டுக்கு எதிரேயுள்ள பகுதியில் தினமும் அமர்ந்து ஆடுபுலியாட்டம் ஆடுகிறார்கள். திருமண வைபவங்களை நடத்துகிறார்கள். கோயில் நிகழ்வுக்காக ஆடு வெட்டுகிறார்கள். ஒற்றுமையாக இருக்கிறார்கள். மத்திய, மேல் வர்க்கத்தினரின் குடியிருப்புகளில் சமூகமாக்கத்துக்கு, கேளிக்கை எந்த இலவச வெளிகளும் இருக்காது. அவர்கள் தனிமைப்பட்டு பரஸ்பர வெறுப்புடன் வீட்டுக்குள் வாழ்வார்கள். மேல் வர்க்கத்தினரின் பகுதிக்குப் போனால் கீழ்த்தட்டினரின் ‘வசதிகள்’ அவர்களுக்கும் இருக்கும் - சந்திக்க, கேளிக்கை அனுபவிக்க, கொண்டாட, தம் வெளி மீது உரிமை கொண்டாட அவர்களுக்கும் முடியும். 
இப்படி சில வர்க்கங்களுக்கு மட்டும் வேலை, உள்கட்டமைப்பு, தங்குமிட வசதி, சமூக முதலீடு ஆகியவற்றை நிரந்தரமாக அனுமதிப்பதும், பிறருக்கு இவற்றை தற்காலிகமாக மட்டும் அனுமதிப்புமே நகரங்களின் இயல்பு. இந்த கண்ணாடிக் கதவை யாராலும் சுலபத்தில் உடைக்க முடியாது. 

ஆம் நகரங்களிலே வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சமத்துவமான நியாயமான நிலையான வாழ்க்கையையும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

இதையெல்லாம் யாரும் விமர்சிப்பதில்லையே எனும் விமர்சனம் எனக்கு இருந்தது. சில மாதங்களுக்கு முன் ஒரு கருத்தரங்கின் போது தான் முதன்முறையாக நகரமயமாக்கல் மீதான விமர்சனங்களை ஒரு ஆய்வாளர் தன் உரையில் குறிப்பிடும் போது கேட்டேன். எனக்கு அப்போது ஒன்று நினைவுக்கு வந்தது - எண்பதுகள் வரை நம் இலக்கியத்திலும் இத்தகைய விமர்சனங்கள் உண்டு. உலகமயமாக்கல் ஆரம்பித்த பின்னரே நாம் முழுமையான புரோக்கர்கள் ஆகிவிட்டோம். பாலியல் புரோக்கர்களைப் போன்றே இந்த நகரத்தை எல்லாரிடமும் போய் நைசாகப் பேசி விற்றுக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கும் இதனால் என்ன பயன் எனப் புரியவில்லை. நீங்கள் இரண்டாம் உலகப்போர் காலத்திலான உலக இலக்கியம் முழுக்க நகரங்கள் மீதான புகார்களைப் பார்க்க முடியும். இந்திய இலக்கியத்திலும் பார்க்க முடியும். ஆனால் பின்நவீன இலக்கியமும், அதை ஒட்டிய புதிய எதார்த்த இலக்கியமும் தோன்றிய பிறகே நகரங்களை விமர்சித்தாலே அவர் ஒரு பிற்போக்கு, வளர்ச்சிக்கு எதிரானவர், சமத்துவத்துக்கு எதிரானவர் என கொரில்லா தாக்குதல் தொடுக்கும் போக்கு வளர்ந்துள்ளது. உ.தா., சென்னைக்கு வந்து வென்று வீடு வாங்கியவர்களுக்கு அந்த வாழ்க்கையை கொண்டாடும் மனப்போக்கு இருக்கலாம். ஆனால் அப்படி வெல்ல முடியாதவர்களின் மனப்போக்கு எப்படியானது? நாம் தமிழ் சமூகம், தமிழ் சமூகம் என்று கூறும் போது வெல்ல முடியாதவர்களை பொருட்படுத்துவதே இல்லையே. ஏன்? இப்படி சுயவர்க்க விசுவாசத்துடன் மத்திய, மேல் மத்திய வர்க்கம் இருப்பதே நம்மூரில் முற்போக்குவாதம் ஒரு பக்க சார்பாக இருக்கிறது - அவர்களுக்கு ஏழையென்றால் கிராமத்தில் இருப்பவர்கள். நகரத்தில் ஏழ்மையே இல்லை. நகரத்தில் போதாமையே இல்லை. குப்பை அள்ளி வாழ்கிறவன், சாக்கை விரித்து தூங்குகிறவன், 400 சதுர அடிகளுக்குள் குடும்பமாக வாழ்கிறவர்களே இல்லை. இங்கு நிகழும் இயற்கை அழிப்பை, நீர், காற்று மாசை யாராவது எதிர்த்தால் அவர்களும் இவர்களைப் பொறுத்தவரையில் பிற்போக்காளர்கள். நகரங்களின் விலைவாசி உயர்வை விமர்சித்தால் அவர்கள் முன்னேற்றத்தின் விரோதிகள். 

துரதிஷ்டவசமாக, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளும் சரி, இடதுசாரி கட்சிகளும் சரி நகர வாழ்க்கையை சொர்க்க வாழ்க்கையாக பார்த்தே பழகிவிட்டனர். எதைக் கேட்டாலும் 300 ஆண்டுகளுக்கு முன் சோறே இல்லாமல் கஷ்டப்பட்டோம் தெரியுமா என்கிறார்கள். ஏன் அப்படியே ரெண்டு லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னால் போனால் பதினெட்டாம நூற்றாண்டு கூட சிறப்பாகத் தெரியும். இதெல்லாம் ஒரு லாஜிக்கா? பிடிக்கலைன்னா கிராமத்துக்குப் போ என்கிறார்கள். ஆனால் நான் கிராமம் வேண்டும் என்றா கேட்கிறேன். இந்து மதத்தை விமர்சித்தால் கிறித்துவக் கூலி என்பதைப் போலத் தான் இதுவும். விமர்சிக்கவே கூடாது, பாராட்ட மட்டுமே வேண்டுமெனில் நீங்கள் என்ன கோயில் அர்ச்சகர்களா? நகரம் என்ன கடவுளா? நீங்கள் எல்லாரும் எந்த அக்கிரகாரத்தை சேர்ந்தவர்கள்?  

என்னைப் பொறுத்தவரையில் நகரத்தையே கிராமத்தை விட கடுமையாக விமர்சித்து கட்டுப்படுத்தி சீர்திருத்த வேண்டும், நியாயமான வாழ்க்கையை அனைவருக்கும் பெற்றுத் தர முயலவேண்டும். இதை உலகப் பொதுமையான பிரச்சினையாக கண்டு, இதன் பின்னுள்ள வர்க்க எற்றத்தாழ்வை பேச வேண்டும். விமர்சனமற்ற எதிலும் சொகுசு இருக்கும், சமத்துவம் இராது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...