முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதமும் சர்வாதிகாரமும்: அந்தரங்கத்தில் இருந்து பொதுவெளிக்கு - ஆர். அபிலாஷ் (2)



நீங்கள் கடவுளை வழிபடும் போது உங்களுக்கும் கடவுளுக்குமான ஒரு அந்தரங்கமான தீவிர உறவே அங்கு தோன்றுகிறது. இதன் பெயரே பக்தி. பக்தி இலக்கியம் முழுக்க இதையே பேசுகிறது. வேதங்கள், உபநிடங்களிலும் தனிமனிதனின் ஆன்மாவும், அதற்கும் பரமாத்மாவுக்குமான உறவே முன்னிலைப்படுகிறது. எங்குமே “இந்துக்கள்” இல்லை, “இந்துவே” இருக்கிறார். பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் ஓரிடத்தில் கூட இந்துக்களை தமது செயல்களின் வழி ஒரு பொதுவான பிரஜையாக சித்தரிக்க முயல்வதில்லை. அதாவது நாம் இன்று அறிந்துள்ள அரசியல் ஜீவியான இந்து வேதங்கள், உபநிடங்கள், கீதையில் எங்குமே இல்லை. பக்தியின் அடிநாதமே அதன் அந்தரங்கமான, பொதுமொழியில் கடத்த முடியாத மருளுணர்வு (mystic) தான். இந்த உணர்வுரீதியான இந்துவை அவரது அந்தரங்கமான வெளியில் இருந்து, அந்தராத்மாவில் இருந்து வெளிக்கொணர்ந்து கடவுளிடம் உரையாடாத கடவுளிடம் அரசர் / பிரதமர் வழியாக உரையாடும் இந்துவாக மாற்றுவதே இந்துத்துவ செயல்திட்டம். அதற்கு போகிற போக்கில் தற்காலிக எதிரியாக பயன்படுவோர் மட்டுமே இஸ்லாமியர் எனும் மற்றமையே அன்றி இஸ்லாமியர் இந்துத்துவாவின் இலக்கே அல்லர். அதனாலே பாஜக தொடர்ந்து இந்துக்கள் எப்படி வழிபடுகிறார்கள் என்பதில் தலையிடுகிறது, ஆர்வம் செலுத்துகிறது, அதை வரையறுக்க, வடிவமைக்க முயல்கிறது. வீட்டுக்குள் பூஜையறைக்குள் எப்படி வழிபட வேண்டும் என்பதை சொல்லித் தருகிறது. (இஸ்லாமியரின் போக்குகளைப் பற்றி குறைவாகவே அக்கறைப்படுகிறது.) இவ்வளவு முறைகள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும், இவ்வளவு திரிகள் கொண்ட விளக்குகளை இந்த நேரத்தில் ஏற்றி வைக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லும் போது ‘அப்போது கூட எங்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று ரகசியமாகக் கேட்கிறார்கள். இந்த பிரச்சாரத்தின் போது முழுக்க இஸ்லாமியரும் கிறித்துவர்களும் விலக்கப்படுவது அவர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதாலே. அவர்களுடைய மதங்கள் ஏற்கனவே ஒரு பொதுச்சடங்காகவும் தனிச்சடங்காகவும் அவர்களுடைய இறை உரையாடலை மாற்றி வைத்திருக்கிறது என்பதால் அவர்கள் இந்துச் சடங்குகளைப் பின்பற்றுவதே அவர்கள் இந்துத்துவர் ஆகி தேச முன்னேற்றத்தில் ஈடுபட ஒரே வழியாக இருக்கிறது. இந்து தோற்றத்தை ஏற்று குஷ்பு பொதுவெளியில் தோன்றுவது, வேறு இஸ்லாமிய பாஜக அரசியல் தலைவர்களின் சடங்காச்சாரமான செயல்கள் - இந்துவற்றவர்களும் பொது இந்துவாக தம்மை நிகழ்த்திக் காட்டிக் கொள்வது - இதற்கு உதாரணமாக உள்ளன.
இப்படி இந்துக்களை பாஜக இருவகையாக பகுக்கிறது - 1) உணர்வு வடிவிலான இந்துக்கள், 2) கருத்து வடிவிலான இந்துக்கள். அல்லது 1) அகவயமான இந்துக்கள், 2) புறவயமான இந்துக்கள். பாஜக அகவயமான இந்துக்களை, பக்தர்களை, புறவயமாக, சமூக வயமான இந்துக்களாக உருமாற்ற விழைகிறது. பாஜகவின் நோக்கம் உண்மையில் இந்தியாவுக்கு காவிச் சாயம் பூசுவதோ, வைதீக ஒற்றை அடையாளத்தின் கீழ் இந்துக்களைக் கொண்டு வந்து பன்மைத்துவத்தை அழிப்பதோ அல்ல. முதலில், காவிச்சாயத்தினால் பாஜகவுக்கு தேர்தலிலோ நிர்வாகத்திலோ எந்த லாபமும் இல்லை. பாஜகவின் எழுச்சிக்கு முன்பே கூட இந்தியாவில் காவிமயம் இருந்தது. பாஜகவின் எழுச்சிக்கு முன்பே இங்கு வைதீக-மைய இந்து மத ஆதிக்கம் இருந்தது. இவை இரண்டும் பாஜக ஆட்சிக்கு வர உடனடியாக உதவவில்லை. மேலும் அவைதீக இந்து பன்மைத்துத்தைக் கண்டு பாஜக அஞ்சுவதாகத் தெரியவில்லை, மாறாக அதை எளிதாக ஸ்வீகரிக்க அதற்குத் தெரியும். ஆனால் இந்தியாவின் நகரமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி, அதனால் தோன்றிய மிதமிஞ்சிய ஏழை-பணக்கார வித்தியாசம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப்பொருளாதார நிச்சயமின்மையால் வளர்ந்த தேசியவாதம், மதவாதம் ஆகிய காரணிகளை பயன்படுத்தி அது இந்து மக்களை இந்து எனும் கருத்தின் கீழ் திரட்டியது, புறவயப்படுத்தியது, அந்த கருத்தை கருத்தியலாக்கி, அதன் அரசியல் அதிகார சுவையைக் காட்டி அடிமைப்படுத்தியது, கூடவே நவதாராளவாதத்தின் கேள்வியின்றி ஆதரிப்பது குறித்த கனவைக் கட்டியெழுப்பியது, அக்கனவை ஊழலற்ற இந்தியா, வளர்ந்த தேசமான இந்தியா எனும் லட்சியமாக வடித்துத் தந்தது, இந்து அடையாளம் எனும் கருத்தியலால் கட்டற்ற வளர்ச்சியைக் கட்ட முடியும் என இரண்டு சம்மந்தமில்லாத லட்சிய இழைகளைப் பின்னி கயிற்றரவாக மாற்றியது - இதுவென்றால் அது, அதுவென்றால் இது, கடைசி வரை எதற்காக ஆதரிக்கிறோம் என்று கண்டுபிடிக்க முடியாதபடியான ஒரு புதிர் விளையாட்டாக அது அரசியல் பிரச்சாரத்தை மாற்றியது, ஒன்றுமே புரியாத போது கடந்த காலத் தவறுகளை கற்பனை செய்து அதைத் திருத்தும் விளையாட்டை உண்டு பண்ணி அளித்தது, அப்படித்தான் பாஜக ஆட்சியைப் பிடித்தது, தக்க வைத்தது.
சர்வாதிகாரமும் திரள் மனிதனின் அந்நியமாதலும்:
மேற்சொன்ன புதிர் விளையாட்டு ஒரு அந்நியமாதலின் மீது அமைந்திருக்கிறது. மனிதன் தன்னளவில் தனது அன்றாட வாழ்க்கை, குடும்பம், நட்பு வட்டம், ஊர், சமூகம் எனப் பிணைந்திருக்கிறான். அவன் தனித்தோ அந்நியமாகவோ இருப்பதில்லை. இன்றும் பெரும்பாலான காடுகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு தனிமை, அலுப்பு, அந்நியமாதல் போன்ற மனநிலைகள் கிடையாது என்கிறார்கள். இவை நவீன வாழ்வின் தவிர்க்க இயலாத அங்கங்கள் மட்டுமே. தொழிற்சாலையிலும் பல்வேறு நிறுவனங்களிலும் துண்டுத்துண்டான வேலைகளில் ஈடுபடுத்தப்படும் நவீன மனிதன், பணம் எனும் சுழற்சியில் தன் உழைப்பு எங்கே போய் சேர்ந்து பொருளாக தன்னிடம் வருகிறது எனப் புரியாமல் குழம்பி, அதனாலே தன் உழைப்பில் இருந்து, அதன் பலனான பணத்தில் இருந்து அந்நியப்படுகிறான். அடுத்து அவன் ஒரு மனிதனாக தன் சாராம்சத்தில் இருந்து, விழுமியங்களில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு தனக்குப் புறமே இருக்கும் தேசம் எனும் கருத்தாக்கத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறான். தனக்குள் உள்ள பெரும் வெறுமையை அவன் தேசியவாதத்தால் இட்டு நிரப்ப பார்க்கிறான். இந்த தேசியவாதம் ஒரு கருத்தியலாகி, நிறுவனமாகி, தேசத்திற்காக அல்லாமல் தேசியவாதத்திற்காகவே மனிதர்கள் உழைக்கும் நிலை வரும் போது அங்கு சர்வாதிகாரம் தோன்றுகிறது என்கிறார் ஹானா ஆரெண்ட். இந்தியாவில் கடந்த கால் நூற்றாண்டாக முன்னெப்போதும் இல்லாத தனிமையும், அதன் விளைவான போதாமை, அவநம்பிக்கை, மன அழுத்தம், மன உளைச்சல் மக்கள் ஆட்சிப் படைக்கிறது. தனித்தனியாக வீடுகளுக்குள் பூட்டப்பட்டிருக்கும் மக்களுக்கு டீவி வழியாக பிரதமரும், கார்ப்பரேட் குருக்களும், சாமியார்களும் ஆன்மீக உரை, பூஜை, யோகா, நடனம், கொண்டாட்டம் வழியாக இத்தனிமையைப் போக்க முனைகிறார்கள். அதாவது ஏற்கனவே அந்நியப்பட்டு வெதும்பியிருக்கும் அவர்களைத் தம்மில் இருந்து அந்நியப்படுத்தி, உள்-தனிமைக்கு ஆட்படுத்தி ‘தனியான பொதுவெளிக்கு’ நகர்த்துகிறார்கள். அங்கும் அவர்கள் தனியாகவே இருப்பார்கள், ஆனால் அங்கு தம்மை நிகழ்த்துவதன் வழியாக அவர்கள் ஒரு மாயையான சமூகத்தைக் கண்டடைவார்கள். அவர்களுக்கு அப்போது அசலான சமூகம் அல்ல, அதனிடத்து கருத்தியல் ரீதியாக உருவாக்கப்பட்ட இயக்கமே கிடைக்கும். அதாவது பக்தர்களான இந்துக்களின் சமூகத்தில் இருந்து அந்நியப்படும் அவர்களுக்கு பக்தியற்ற புறவயமான இந்துக்களின் சமூகம், இந்துத்துவர்களின் உலகம் அவர்கள் இடமாற்றப்படுவார்கள். அந்த இயக்கத்தினுள் அவர்களுக்கு என்று உறுதியான அடையாளமும், தெளிவான இலக்கும் அளிக்கப்படும். இந்த இயக்கமே இந்து ராஜ்ஜியம். இதில் இணையும் ஒரு இந்துவுக்கு இதற்கு வெளியே ஒரு உலகமோ, வாழ்க்கையோ சாத்தியம் அல்ல. அவர் முழுமையாக கடவுளை இழந்து விடுவார். அவர் இந்து ராஜ்ஜியத்தில் தனது உறுப்பினர் பதவியைத் தக்க வைப்பதற்காக தன் உயிரையும் கொடுக்க, தன் குடும்பத்தையும் இழக்கத் தயாராகக் கூடும், தமது மரண சாசசனத்தைக் கூட அவர்கள் மகிழ்ச்சியுடன் எழுதக் கூடும். ஐரோப்பிய வரலாற்றின் அடிப்படையில் இதைப் பற்றி சொல்லும் ஆரெண்ட், காந்தம் தன் ஈர்ப்பை இழந்ததும் அதில் ஒட்டியிருந்த துகள்கள் உதிர்வதைப் போல, லட்சியவாத கொள்கைகளின் அடிப்படையிலான இயக்கம் உடைந்ததும் அதன் உறுப்பினர்களாக தம்மைக் கருதி வந்த மக்கள் சர்வாதிகாரத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்து வெளியேறுவார்கள். அதற்கு எதிராகப் பேசவும் கூட தலைப்படுவார்கள் என்கிறார்.
ஆரெண்டின் காலத்தில் இன்றைய இணையமும், சமூக வலைதளங்களும் இல்லை ஆகையால் அவர் அதனால் சர்வாதிகாரம் பெறும் விசையை கணிக்க முடியவில்லை. அவர் குறிப்பிட்ட நகரத்து மனிதனின் தனிமையை இணையமும் திறன்பேசிகளும் தோன்றி பெரும் பதற்றமாக, தாழ்வுணர்வாக, திரிபுணர்வு சார்ந்த மனச்சிதைவாக (paranoia) மாற்றின. ஒரு குடும்பம் இன்று உணவருந்த வெளியே கூட்டமாக வருகிறார்கள் எனில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு திறன்பேசியுடன் தனித்திருப்பது இயல்பான காட்சி. எங்கு பார்த்தாலும் மக்கள் தம் தனிமையைத் தாங்க இயலாமல் போனில் யாருடனாவது பேசிக்கொண்டோ செயலியில் அரட்டை அடித்துக்கொண்டோ இருக்கிறார்கள். இது அவர்களைத் தாம் யாருமற்று ஏதிலிகளாக இருப்பதான உணர்வை இன்னும் அதிகரிக்கிறது. தமக்கு எதிராக உலகமே திரண்டு நிற்பதாக ஒரு பீதி அவர்களுடைய உபமனத்தை ஆக்கிரமித்திருக்கிறது. வெளியே மிகுந்த தன்னம்பிக்கையும் உள்ளுக்குள் மிகுந்த தாழ்வுணர்வுமாக அவர்கள் திரிகிறார்கள். திறன்பேசிகளில் அவர்கள் கண்டடையும் எந்த ஆதாரமும் அற்ற பொய்த்தகவல்கள், சேதிகள், போலியான காணொளிகள், மிகையான பேச்சுக்களை மக்கள் உடனடியாக நம்புகிறார்கள், அவர்களுடைய மிகையான மனநிலைக்கு இந்த பொய்மையும் புரட்டுமே உண்மையாகத் தோன்றுகின்றன. இந்த இணையத்தின், சமூகவலைதளங்களின் பயன்பாட்டை, பேராற்றலை வேறெந்த அரசியல் தலைவரையும் விட முன்பாகவே உணர்ந்துகொண்டவர் என நரேந்திர மோடியைப் பற்றி சொல்வார்கள். அவரும் அவரது கட்சியும் இந்த இணையத்தையும் புதிய ஊடகங்களையும் செவ்வனே பயன்படுத்தியே தம்மை விட பெரும் கட்டமைப்பும் நிதியாதாரமும் கொண்ட காங்கிரஸை வீழ்த்தினர். இணையத்தினால் ஆட்பட்ட மனிதனிடம் பேசும் புதிய மொழி ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். அதுவே சர்வாதிகாரத்தின் பிரத்யேக மொழி. அது மந்திரம் போல இந்தியர்களின் பதற்றத்தை, தமது போதாமை குறித்த பேரச்சத்தைப் போக்கி ஆறுதல் அளிப்பதான தோற்றத்தைக் காட்டியது. (இதுவே உலகம் முழுக்க ஒரே சமயம் நடந்து சர்வாதிகாரிகளின் வெற்றிக்கு வழிகோலியது என்பது சுவாரஸ்யமாகும்.)
இன்னொரு சுவாரஸ்யமான விசயம் நீண்ட காலமாக இந்துக்களை அவர்களுடைய அகவயமான பக்தியில் இருந்து துண்டித்து வெளியே கொண்டு வருவது எப்படி எனும் தவித்து வந்த இந்துத்துவர்களுக்கு நவீன தொலைதொடர்பு மாற்றங்கள் வரப்பிரசாதமாகின. இந்துக்களின் உள்-தெய்வத்தைக் கொன்று அவர்களை தெய்வமற்ற அனாதைகள் ஆக்கின இணையமும் திறன்பேசியும்.
(உயிர்மையில் வெளியான கட்டுரையின் இரண்டாம் பகுதி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.