முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடி எதிர்ப்பாளர்களின் தயக்கம்



அரசியல் பேட்டிகளில் நான் ஒரு விசயத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அரசியல் அதிகாரத்தில் உச்சம் பெற்றவரை துணிந்து நின்று கேள்வி கேட்கும் பாங்கு எதிர்க்கட்சிகளுக்கே குறைந்துவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்-பேச்சை செயல்திட்டமாக வைத்துக்கொண்டு பேசுவதை சொல்லவில்லை. தவறுகளைப் பார்க்கும் போது சோ கால்ட் அறவுணர்வுடன் அதை எதிர்ப்பதை சொல்கிறேன். கடந்த இரு பாராளுமன்ற தேர்தல்களில் பெற்ற வெற்றியைக் கொண்டு மோடி தன்னை ஒற்றை அதிகார பிம்பமாக நிறுவிக்கொண்டார். அதற்கான நிதியை அதானியைக் கொண்டு முறையற்ற வழியில் பல லட்சம் கோடிகளாக சம்பாதித்துக் கொண்டார். நெடுஞ்சாலை, துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் மோனோபோலியாக அதானியைக் கொண்டு செய்ய வைத்து அவருக்கு 15% கொடுத்துவிட்டு மீதியை அவரே வைத்துக்கொண்டார். விமான நிலையம், துறைமுகங்களையும் வாங்கிக்கொண்டார். துறைமுகங்களின் வழி ஆறாக ஒழுகும் போதை மருந்து வியாபாரமும் இப்போது அவரது கட்டுக்குள் இருக்கிறது. இப்படி கண்ணுக்குப் புலப்படாத புலப்படுகிற பல்லாயிரம் வழிகளில் மோடியிடம் பணம் குவிந்துகொண்டே இருக்கிறது. இன்று உலகின் முதல் 5 பெரும்பணக்காரர்களின் பட்டியலில் இருப்பது உண்மையில் மோடி தான். அவர் அடுத்து இப்பணத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் உதிரி தலைவர்களை, எம்.பிக்களை, கூட்டணிக் கட்சிகளை விலைக்கு வாங்கினார். ஜனநாயக அமைப்புகளை மண்டியிட வைத்தார். ஊடகங்களின் பங்குகளை வாங்கி சதா தன் புகழை மட்டும் பாட வைத்தார். அடுத்து இணைய தளங்களை, சமூகவலைதளங்களில் சம்பளத்துக்கும் சம்பளமில்லாமலும் பல லட்சம் பேர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். இவர்களே சமூக வலைதளங்கள் எங்கும் டுரோல்களாக மாறியிருக்கிறார். எந்த மொழியிலும் மோடியை விமர்சித்து கருத்து சொல்லப்பட்டால் இவர்கள் கும்பலாக வந்து உட்கார்ந்து மோடியை ஆதரித்து உளறுவார்கள். ரிப்போர்ட் அடிப்பார்கள். கும்பல் கும்பலாக வருவார்கள். மோடியை நடப்புலகில் நேரடியாக போராட்டங்கள் வழி எதிர்த்தால் காவல்துறை, என்.ஐ.ஏ போன்றவர்கள் வந்துவிடுவார்கள் என்றால், இணையம் வழியாக கதிகலங்கடிக்க டுரோல்களை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனாலே பல யுடியூப் சேனல்களில் கொஞ்சம் பார்த்து பார்த்து தான் விமர்சிக்கிறார்கள்.

பாஜகவில் பல குழுக்கள், ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மோடி மீது கடுப்பில் இருப்பது இந்த தனிமனித பணம், அதிகார குவிப்பை பார்த்து தான். அவர் யாருக்கும் எதுவும் கொடுப்பதில்லை, அவர் யாரையும் நம்பியிருப்பதில்லை என ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார். தோல்வி பயம் வரும் போதெல்லாம் கூட்டணிக் கட்சிகளை நாடுகிறார். ஆனால் கட்சிக்கு உள்ளே அதே அளவுக்கு ஆதரவை அவர் நாடுவதில்லை.

இந்திய வரலாற்றில் இந்தளவுக்கு கட்டுப்பாடின்றி கேள்வியின்றி ஊழல் பண்ணி சில ஆண்டுகளிலேயே பெரும்பணக்காரரான தனிமனித அரசியல் தலைவர் வேறு இல்லை. தன் வசம் எதையும் நேரடியாக வைத்துக்கொள்வதில்லை, குடும்பத்துக்கு எதுவும் செய்வதில்லை என்பதே மோடியின் பாதுகாப்பு அரண். அதாவது பினாமி ஊழல்.

இந்த இரண்டும் சேர்ந்து - அரசாங்க அதிகாரம், கட்டற்ற பணப்புழக்கம் - ஒரு போலியான கடவுள் அந்தஸ்தை மோடிக்கு ஏற்படுத்திவிட்டது. எல்லாம் தற்காலிகம் தான். ஆனால் அவர் மீதான பயமும் ஈர்ப்பும் நிச்சயமானது.

எனக்கு ஆர்வமூட்டுவது மோடி எதிர்ப்பாளர்களிடமும் வெளிப்படும் அச்சம் பொருந்திய ஈர்ப்புதான். “வரும் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் இன்றும் மோடிக்கு மதிப்புள்ளது, மக்கள் அவருக்காக வாக்களிப்பார்கள்” என்று முரணாகப் பேசுகிறார்கள். அது மட்டுமல்ல, தொழிற்துறையில் வீழ்ச்சி, வேலையின்மை, பணவீக்கம், வறுமை பற்றி பேசுவோரும் மோடி-அதானி உறவு பற்றி பேச பரவலாகவே தயங்குகிறார்கள். இந்திரா காந்தியை நெருக்கடி காலத்தில் எதிர்த்தவர்கள் காட்டிய துணிச்சலில் நூற்றில் பத்து மடங்குகூட இன்று மோடி எதிர்ப்பாளர்கள் காட்டவில்லை. அதே இந்திரா காலத்தில் காங்கிரஸுக்குள்ளே கடும் எதிர்ப்பு இருந்தது. நெருக்கடி நிலை வந்த போது அந்த இந்திரா விரோத மூத்த தலைவர்கள் மண்டியிட்டாலும் இன்னொரு பக்கம் வாய்ப்புக்காக காத்திருந்தார்கள். நெருக்கடி நிலை முடிந்ததும் கும்பலாக வெளியே வந்தார்கள். ஆனால் இவை எதுவும் மோடிக்கு நடக்கவில்லை, நடக்க வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் மோடியிடம் உள்ள கட்டற்ற பணமும் அதிகாரமும் இந்திராவிடம் என்றுமே இருந்ததில்லை. மோடி எதிர்காலத்தில் தோல்வியுற்றாலும் அவரிடம் உள்ள பணத்தையும் அதிகாரத்தையும் பிடுங்கவே முயல்வார்களே ஒழிய எதிர்க்க மாட்டார்கள். மோடியைப் போல தம்மையும் குட்டி மோடிகளாக உருவாக்கவே இவர்கள் மனதளவில் ஆசைப்படுகிறார்கள்.
ஒருவிதத்தில் இந்த சீரழிவுகளை இவர்கள் மனதளவில் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் எனத் தோன்றுகிறது. இது ஒரு வினோதமான காலம் - மோடியை ஏற்காதவர்களும் கூட அவருடைய பெரும் மூலதனத்தையும் கடவுளைப் போன்ற அதிகாரத்தையும் மனதுக்குள் விழைகிறார்கள். அதனாலே அவர்கள் மோடி பயன்படுத்திய மோசடி முறைமையை பெரிய அளவில் எதிர்ப்பதில்லை. கேள்வி கேட்பதில்லை. சும்மா அவரை சர்வாதிகாரி என்று சொல்லிக்கொண்டே தனக்கும் சர்வாதிகார ஆற்றல் வராதா என ஏங்குகிறார்கள், அவரிடம் இருந்து சிறிது பிடுங்க முடியுமா என கனவு காண்கிறார்கள். மோடியை ஆதரிப்போரையும் ஆகர்ஷிப்பது அவரது செயலோ சிந்தனையோ அல்ல, அவரிடம் உள்ள இதே பணமும் அதிகாரமும் தான். அதனாலே மோடி தன் பல கோடி மதிப்பிலான விமானம், ஆடைகளைப் பற்றி தம்பட்டம் அடிக்கிறார். குழந்தைகள், பொதுமக்கள், கட்சிக்காரர்களைத் தொடாமல் பேசுகிறார். தன்னைப் போன்ற வெளிநாட்டு ‘அதிபர்களை’ எதிர்கொண்டால் மட்டுமே அணைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார். இதன் மூலம் அவர் சொல்ல வரும் சேதி தான் ஒரு சர்வாதிகாரி என்பதல்ல, தான் ஒரு ஒப்பற்ற சாம்ராட் என்பதையே.

லகானிய பார்வையில் விளக்கினால் மோடி தன்னை நாட்டின் “தந்தையாக” மாற்றிக்கொண்டு விட்டதால் பிரஜைகளான அவரது குழந்தைகள் அவர் மீது மிகுந்த பிரேமையும் அச்சமும் கொண்டிருக்கிறார்கள், அவரைக் “கொன்று” அவராக தம்மை மாற்றிக்கொள்ள விழைகிறார்கள். ஆனால் அது எப்போது எப்படி நிகழும் எனத் தெரியவில்லை. அந்த குழப்பமே அவர்களை அவரை வெளிப்படையாக விமர்சிக்கவிடாமல் தடுக்கிறது. மோடியின் விமர்சகர்களில் ஒரு பகுதியினர் தம்மை இத்தேசத்தின் பிள்ளைகளாக, அரசியல் சட்டத்தின் வழித்தோன்றல்களாக காணாமல் “மோடியை எதிர்க்கும் அவரது பிள்ளைகளாக” தம்மைக் காண்பது துரதிஷ்டவசமானது. யோசித்துப் பாருங்கள் - ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, பிள்ளைகள், சில நேரங்களில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா எல்லாரும் இருப்பார்கள். இவர்களில் ஒருவர் தன்னை அந்த குடும்பத்தின் ‘தலைவராக’ கருதி ஆதிக்கமாக செயல்பட்டு தானே ‘குடும்பம்’ என நினைத்தால், தனக்கு நிகழ்வது குடும்பத்துக்கும், குடும்பத்துக்கு நிகழ்வது தனக்கும் நிகழ்வதாக நினைத்தால், அதையே மொத்த குடும்பத்தையும் நம்ப வைத்தால்? (என்னவொரு முரண்) அந்த குடும்பத்துக்கே பைத்தியம் பிடிக்கும். முழு அடிமைகளாக மாறுவார்கள். அவரைப் பிடிக்காதவர்களால் கூட அவரது தவறை சுட்டிக் காட்டி விமர்சிக்க முடியாது. ஏனென்றால் அது தம்மையே விமர்சிப்பதாக போய் முடியும். மோடி தேசம் குறித்த கற்பிதத்தை தனிமனிதர் சார்ந்ததாக மாற்றியதுடன் நாட்டின் பொருளாதார வெற்றியையும் தன்னுடைய ஊழல் வளமாக மாற்றிவிட்டார். அவரை மோகிக்காமல் வெறுக்க (எதிராளிகள்), வெறுக்காமல் மோகிக்க (சொந்த கட்சிக்காரர்கள்) முடியாது எனும் நிலையை ஏற்படுத்தி விட்டார். (காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர்களிடையே / உபதலைவர்கள் இடையே கூட பா சிதம்பரம் போன்ற வெகுசிலரே இதற்கு விதிவிலக்கு.)

தந்தையின் மீதான பிரேமையை மிகை-எதிர்ப்பால் காட்டும் பிள்ளைகளும் உண்டு. அவர்களுடைய பேச்சில் ‘தந்தையின்’ கொள்கை அல்ல, குற்றங்கள் அல்ல, எளிய ஒழுக்கம், நாணயம், கண்ணியம் போன்ற நடவடிக்கைகளே விமர்சன இலக்காக இருக்கும். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்களை இங்கு குறிப்பிடலாம். அவர்கள் திட்டுவதைப் பார்த்தால் மோடிக்கே உள்ளுக்குள் நான் இவ்வளவு பயங்கரமானவனா என சற்று கெத்தாக இருக்கும்.

இந்த முற்றதிகார உளவியலை முன்பு ஹிட்லரும் முசோலினியும் ஏற்படுத்தி ஆண்டார்கள். முற்றதிகாரம் என்பது ஒருவரை நேரடியாக கட்டுப்படுத்துவதும், கட்டுப்படாதவர்களை காவல்துறையை, ராணுவத்தை வைத்து அச்சுறுத்தி பணிய வைப்பதும் மட்டும் அல்ல. அதை விட சிக்கலானது, ஆபத்தானது.

மோடியிடம் இருந்து விடுபடுவது தேசம் தழுவிய ஒரு கலாச்சார மனநோயில் இருந்து விடுபடுவது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...