அண்மையில் நான் எழுதி முடித்த நாவலான “நிழல் பொம்மையை” மெய்ப்பு பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதில் கதையமைப்பு, பாத்திர அமைப்பு, வர்ணனை என மாற்றங்களையும் செய்தேன். சில தர்க்கப் பிழைகளை களைந்தேன். ஆரம்பத்தில் வரும் சில பாத்திரங்களை கடைசியிலும் கொண்டு வருவது, ஒரு இயல்பு மாற்றத்தை அவர்களிடம் காட்டுவது, சூழல், சீதோஷ்ண நிலை ஆகியவற்றில் தொடர்ச்சியைக் கொண்டு வருவது ஆகிய வழக்கமான வேலைகளையும் செய்தேன். ஒரு கதையில் எதையும் நிகழ்த்தலாம், ஆனால் அதற்கு ஒரு நியாயத்தை ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டால் அதற்கு நம்பகத்தன்மை வந்துவிடும் என்பது என் நம்பிக்கை. இந்த நாவலில் சமூக அளவிலும் அரசியலிலும் உள்ள சர்வாதிகாரத்துக்கும் தனிமனித பிறழ்வுக்கும் உள்ள தொடர்பாக்க கண்ணியைப் பற்றி பேச நினைத்தேன். ஆனால் அதை எப்படி உருவாக்குவது எனும் கேள்வி மெய்ப்பு பார்க்கும் போது எழுந்தது. பின்னர் அதற்காக ஒரு சில காட்சிகளை கூடுதலாக பிற்பகுதியில் சேர்த்தேன். எல்லாவற்றையும் முடித்த பிறகு முந்தின அத்தியாயம் ஒன்றை கடைசி அத்தியாயம் ஆக மாற்றி வைத்தாலே நாவலின் கதையில் ஒரு வளர்ச்சி, மையப்பாத்திரத்தின் வாழ்க்கைப்பாதையில் நிலைமாற்றம் தெரியும் என நினைத்தேன். ஆனால் இது ஒரு தத்துவ நெருக்கடியாக முடிந்தது.
அந்த மாற்றத்தை செய்தால் அது என் கருத்தியலுடன் ஒத்துப் போகாது என்பதால் ஒரு நானாகிய எடிட்டருக்கும் எழுத்தாளருக்கும் இடையில் ஒரு கருத்து முரண் எழுந்தது. நான் எனக்கு உடன்பாடில்லாத ஒன்றை கதைக்காக கொண்டு வரலாமா? இக்கேள்வி எனக்குள் நாவலை எழுத ஆரம்பித்த போதே இருந்தது - முடிவு என்னுடைய கருத்தா அல்லது கதாபாத்திரத்தின் தேடலில் அடையும் அவதானிப்பா? கதாபாத்திரத்தின் படி தான் செல்ல வேண்டும் என நினைப்பது எளிதாக இருந்தது, ஆனால் நடைமுறையில் இது என்னைத் தூங்கவிடாமல் பண்ணியது. இதில் ஒரு முடிவை எட்டவே எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. கடைசியில், எது கதைக்கு சரியோ அதுவே எனக்கும் சரி என என்னையே நம்ப வைத்தேன். செப்டம்பரில் இன்னொரு சுற்று திருத்தங்களை தேவைப்பட்டால் செய்வேன்.
நாவலை முதற்கட்டமாக வாசித்து கருத்து சொல்லக் கேட்டு சில நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தும், பிரிண்ட் அவுட் எடுத்து அஞ்சல் செய்து விட்டவும் பிறகே மானசீகமாக எனக்கும் அதற்குமான உறவு அறுந்ததைப் போலத் தோன்றியது. கிட்டத்தட்ட ஒரு மகள் புகுந்த விட்டுக்குப் போவதைப் போல.
Comments