Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒரு கணிப்பு



கிரிக்கெட்டில் இருவகையான சுழலர்கள் உண்டு - ஒருவகையினர் பந்தைக் காற்றில் சுழற்றி நீண்ட நேரம் மிதக்கவும் (drift) இறங்கவும் (dip) வைத்து அதன் போக்கை, திசையை கணிக்க சிரமாக்கி அதன் வழியாக மட்டையாளரை முறியடித்து வெளியேற்றுவார்கள். பிரச்சன்னா, பேடி, வார்ன், அஷ்வின் இந்த பாணியைச் சேர்ந்தவர்கள். மற்றொரு வகையினர் சந்திரசேகர், கும்பிளே, இன்றைய ஜடேஜா, கார்ன்வெல், நேதன் லயன், ஷோயப் பஷீர் போன்றவர்கள். இவர்கள் பந்தை வேகமாகவும் ஆடுதளத்தில் தளர்வாக உள்ள பகுதிகளில் கூர்மையாகவும் வீசுவார்கள். எப்போதாவது கொஞ்சம் பந்தைத் தூக்கி வீசவும் (flight) செய்வார்கள். ஆடுதளத்தின் மாறுபட்ட தன்மையை பயன்படுத்தி பந்தை எகிற வைத்து ஷார்ட் லெக், பைன் லெக் ஆகிய பகுதிகளில் கேட்ச் எடுப்பார்கள். எல்.பி.டபிள்யூ முறையில் அதிகம் விக்கெட் எடுப்பார்கள். பொதுவாக நல்ல வேகமும், துள்ளலும் கொண்ட, ஆனால் அதிகமான மாறுபட்ட தன்மையில்லாத ஆடுதளங்களில் முதல்வகையினர் சோபிப்பார்கள். அவர்கள் ஆடுதளத்தை அதன் வேகத்துக்காக மட்டுமே நம்பியிருப்பார்கள். குறைவாகத் திரும்பினாலும் சுலபத்தில் விக்கெட் எடுப்பார்கள். முதல் நாள் ஆடுதளத்தில் கூட மூன்று விக்கெட் எடுப்பார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுக்க ஆடுதளங்கள் சுழலர்களுக்கு மெத்தனமாகி வருகின்றன. ஆகையாலே இரண்டாம் வகையினர் இன்று அதிகமாக ஆடி விக்கெட் எடுத்துவருகிறார்கள். இவர்களைப் பார்த்தால் நாம் நல்ல சுழலர்களாக பாவிக்க மாட்டோம். ஆனால் இவரக்ளே இன்றைய மேட்ச் வின்னர்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன்: ஒரு மெதுவான, துள்ளல் குறைந்த ஆடுதளத்தில் நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது. பந்து திரும்புகிறது, ஆனால் மெதுவாகத் திரும்புவதால் அஷ்வினைப் போன்ற மெதுவான, மரபான சுழலர் மட்டையாளரை பந்தின் மிதப்பிலும் திசைமாற்றத்திலும் முறியடித்தாலும் அவர் பின்னங்காலுக்கு சென்று தடுத்தாடவோ ஒற்றை ரன்னுக்கு பந்தை ஸ்கொயர், பாயிண்ட் பகுதியில் தட்டிவிடவோ செய்வார். ஆனால் ஜடேஜாவின் பந்தால் அவர் முறியடிக்கப்பாட்டாலோ அவரால் பின்னங்காலுக்குப் போய் சமாளிக்க முடியாது; பந்தின் வேகம் அதை அனுமதிக்காது. அதனாலே குல்தீப் யாதவ் தன் வேகத்தை 70களில் இருந்து கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் துவக்கத்திற்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது சுழலும் தளங்களில் அவரை ஆடுவது மிகவும் சிரமமாகிவருகிறது. இதை மிகச் சீக்கிரமாகப் புரிந்துகொண்ட மேதையென தோனியைச் சொல்லலாம். அவர் ஒருநாள் சுழலரான ஜடேஜாவை டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தியபோது பலராலும் அதன் தர்க்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மெதுவான துள்ளல் குறைந்த ஆடுதளங்களில் ஜடேஜா அஷ்வினை ஆபத்தானவராக விளங்கினார்.
நான் 2013இல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றை மைதானத்துக்கு சென்று ஆட்டத்தைப் பார்த்தேன். ஆஸ்திரேலியா முதலில் ஆடி 380 அடிக்க இரண்டாவது ஆடிய இந்தியாவுக்காக தோனி பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து கடைசிவரை நின்று இரட்டை சதம் (265 பந்துகளில் 224) அடித்தார். அந்தப் போட்டியில் தான் நான் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஒரு விசித்திரத்தை கவனித்தேன். அவர் பந்தைத் திருப்புவதைவிட திருப்பாமல் இருப்பதே ஆஸி அணித்தலைவர் கிளார்க்கை சிரமப்படுத்தியது. ஜடேஜா எதையும் நுணுக்கமாக கற்பனையுடன் செய்யவில்லை. அவர் ஒரே இடத்தில் பந்தை ‘அடித்துக்கொண்டே’ இருந்தார். அஷ்வினே அன்று பத்துக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்தார் என்றாலும் ரன்களைக் கட்டுப்படுத்தியதிலும் ஆட்டத்தைக் கட்டில் வைத்திருந்ததிலும் அவர் முக்கிய பங்காற்றினார். அந்தத் தொடர் முழுக்க அஷ்வினே அவரை விட அதிக முறைகள் ஐந்துவிக்கெட்டுகள் வீழ்த்தினார் எனினும் ஜடேஜா இரண்டு, மூன்று எனத் தொடர்ந்து விக்கெட்டுகள் எடுத்துக்கொண்டே வந்து தொடரின் கடைசியில் தில்லியில் நடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் (ஆடுதளம் மோசமானபோது) ஐந்தாவது விக்கெட்டுகள் எடுத்தார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அத்தொடரில் அஷ்வின் 29 விக்கெட்டுகள் எனில் ஜடேஜா 24 விக்கெட்டுகள். இதைத்தான் நான் தோனியின் ஜீனியஸ் எனக் கருதுகிறேன்.
கடந்தமுறை இங்கிலாந்து இந்தியாவுக்கு டெஸ்ட் தொடர் ஆடவந்தபோது இங்கு ஆடுதளங்கள் போதுமானபடிக்கு நீர்த்தெளிக்கப்படாமல் அதிகமாமல் திரும்பும்படி அமைக்கப்பட்டன. இம்மாதிரி ஆடுதளங்களில் (மெதுவான ஆடுதளங்களைப் போன்றே) பந்தை அதிகமாக மெதுவாக சுழற்றுகிறவர்கள் அல்லர், சுழற்றாமல் வேகமாக வீசுகிறவர்களே வெல்வார்கள். இங்கிலாந்து இதைக் கணித்து வேகமாய் பந்தை ஆடுதளத்தில் ‘அடிக்கிற’ சுழலர்களாக ஷோயப் பஷீரையும் ஹார்ட்லியையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஜடேஜாவின் பாணியில் வீசி விக்கெட்டுகளை அள்ளினார். அஷ்வினும் ஜடேஜாவும் இணைந்து அத்தொடரில் 45 விக்கெட்டுகள் எடுத்தால், இந்த இளைஞர்களோ 39 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
வரும் ஈராண்டுகளில் அஷ்வினும் ஜடேஜாவும் ஓய்வுபெற இருப்பதால் அஷ்வினின் இடத்தை குல்தீப்பை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அடுத்த ஜடேஜாவாக யார் இருப்பார் எனும் கேள்வியெழுந்துள்ளது. இந்தப் பின்னணியில் யோசிக்கையில் அண்மையில் துலீப் கோப்பை போட்டியொன்றில் நான் கண்ட மும்பையை சேர்ந்த ஆப் ஸ்பின்னர் தனுஷ் கோட்டியானே அந்த நபர் என்று தோன்றியது. அவர் ஆறடிக்கு மேல் உயரமாக இருக்கிறார். பந்தை வேகமாக ‘அடிக்கிறார்’. எகிற வைக்கிறார். பெரும்பாலான மட்டையாளர்களால் அவரது திரும்பும் பந்தை சுதாரித்தாட முடியவில்லை. வேகம் அதை அனுமதிக்கவில்லை. கடந்த ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக நன்றாகப் பந்துவீசினார். இத்தனைக்கும் அவரிடம் வழக்கமான சுழலர்களிடம் உள்ள லூப், டிரிப்ட் எல்லாம் கிடையாது. ஆனால் அந்த காலத்து ஜடேஜாவைப் பார்ப்பதைப் போலுள்ளது. (சுமாரான தொழில்நுட்பம் கொண்டவர் எனினும் நிறைய ரன்கள் அடித்தார். ஒரு போட்டியில் பத்தாவது எண்ணில் ஆட வந்து சதமும் அடித்திருக்கிறார்.) கோட்டியான் துளு மொழி பேசும் குடும்பத்தை சேர்ந்தவர். கர்நாடக மாநிலத்தில் பிறந்து மும்பைக்கு சென்றவர். அவரது தகப்பனார் டிவிஷன் கிரிக்கெட் ஆடியவர்.
இந்தியாவில் இப்போது உருப்படியான ஆப் ஸ்பின்னர்களும் கிடையாது. அடுத்த பத்தாண்டுகளில் ஆடுதளங்களில் இன்னும் தளர்ச்சியடையுமே ஒழிய வேகம்பெறாது. குல்தீப்பின் பாணி பந்துவீச்சு எல்லா ஆடுதளங்களிலும் எப்போதும் எடுபடாது. அக்ஸரும் பந்துவீச்சாளராக நல்ல ஆட்டநிலையில் இல்லை. மேலும் இருவரும் இடதுகை சுழலர்கள் வேறு. அவருக்குப் பதிலாக சாய் கிஷோரை எடுக்கலாம். அவரும் இடதுகையாளரே. இவர்களுக்கு அடுத்துள்ள கால்சுழலர்கள் டி20யில் மட்டும் நன்றாக வீசக்கூடியவர்கள். ஆகையால் வரும் ஆண்டுகளிலும் கோட்டியான் தொடர்ந்து மும்பைக்காக நன்றாக வீசினால் நிச்சயமாக இந்தியாவுக்காக டெஸ்ட் ஆடுவார் என்றும், அப்படி ஆடினால் ஒரு கலக்கு கலக்குவார் என்றும் தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...