முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தைகள் குறித்த குறிப்புகள் 2 - பெண்களும் குழந்தைகளும்

குழந்தைகள் விசயத்தில் அதிகமாக முட்டாளாக்கப்படுவது பெண்களே. என்னை மிகவும் வியப்படைய வைப்பது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அனேகப் பெண்ணியவாதிகள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதோ பெண்களைக் குழந்தைப் பெறவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதோ இல்லை என்பதே (அரசின்மைவாதியான பெரியார் மட்டுமே விதிவிலக்கு). ஐரோப்பிய பெண்ணியவாதத்தை எடுத்துக்கொண்டால் ஷுலாமித் பயர்ஸ்டோன் பெண்கள் ஒருநாள் குழந்தைப்பேறை எந்திரங்களிடம் விட்டுவிடவேண்டும் என்று கனவு கண்டார். சிமன் டி பூவர் தாய்மையின்பக்திகுறித்து தனதுஇரண்டாம் பாலினம்நூலில் தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவை - தாய்மையின் காரணமாகவே பெண்கள் நிரந்தரமாகத் தம் பௌதீக அடையாளத்தை இழப்பதுடன், தம்மைக் கடந்து தம் உடலைத் தரிசிக்கும் ஒரு தெய்வீக நிலைக்குத் தள்ளப்படுவதாகவும், இதுவே மிக மோசமான அடிமைத்தனம் என்றும் கூறினார் அவர். உதாரணமாக, நம்மால் ஒரு தாயின் பாலியல் இச்சையை ஒருபோதும் கருதமுடியாது. பாலியல் பௌதீகமானது என்பதால் பெண்ணைத் தன் பௌதீக உடலைக் கடந்துச் செல்லத் தூண்டும்வகையில் தாய்மை எனும் கருத்துருவாக்கம் ஏற்பட்டது. ஒரு கல்லை அதன் அசலான நிலையை மறுத்து கடவுளாக ஆக்குவதைப் போல பெண் தன்னை மறுத்து தாய் தெய்வமாக்கப்பட்டாள். தாய்மையெனும் கடப்புநிலையின் வழியாக அவள் தனது பாலியல் இச்சையை மறுத்து தன்னை மீறிச்செல்ல வேண்டும் என சமூகம் கோரியது. இதுவே ஆணாதிக்கம் என்று பூவர் விளக்கினார். ஆனால் ஆட்ரியன் ரிச்சோ குழந்தைகளை ஆணாதிக்க மனநிலைப்படிப் பரிசீலிக்கும்போதே அது அடக்குமுறையாகிறதே ஒழிய, அடிப்படையில் குழந்தைப்பேறோ வளர்ப்போ பெண்களுக்குப் பாதகம் அல்லவென்றார். பேட்ரிஷியா ஹில் காலின்ஸ், ஆலிஸ் வாக்கர், மிரியம் ஜான்ஸன் போன்றவர்களில் இருந்து நமது அம்பை வரை இந்த தாய்மை-ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களே. சிமன் டி பூவரின் கருத்துக்கள் பின்னிலைப்பெற்று தாய்மை-ஆதரவு பெண்ணியமே இன்று கோலோச்சுகிறது.

ஆண்களின்றி வாழலாம் என்று கோரும் பெண்ணியவாதிகள் கூட இன்று குழந்தைகளின்றி வாழலாம் என்று பிரச்சாரம் செய்வதில்லை. இது மிக மிக வினோதமானது - ஆண்களை விட நவீனப் பெண்களை மிகமோசமாக சுரண்டுவதும், அவர்களுடைய உடல், மன ஆரோக்கியத்தைச் சீரழிப்பது குழந்தைகளே. குழந்தைகளை நேரடியாகச் சாட முடியாதபோது பெண்கள் மொத்த கோபத்தையும் ஆண்களிடம் காட்டுகிறார்கள். ஏன் குழந்தைகள் தமது நேரத்தை, பணத்தை, ஆரோக்கியத்தை சுரண்டும் ஒருவித ஒட்டுண்ணிகள் எனும் உண்மை பெண்களுக்குப் புரிவதில்லை? ஏன் குழந்தைகள் விசயத்தில் அவர்களால் சுயநலமாக இருக்கமுடிவதில்லை? என்னதான் பல பெண்கள் சொந்த அம்மாவையோ மாமியாரையோ சிலநேரங்களில் கணவனையோ குழந்தை வளர்ப்புக்குப் பயன்படுத்தி தப்பித்துவிட்டாலும் பெரும்பான்மையினருக்கு குழந்தை கழுத்தில் சதா தொங்கும் தூக்குக்கயிறுதான். அவர்கள் கண்ணுக்குத்தான் அது புலப்படுவதில்லை

அண்மையில் தாயான எனது தோழி ஒருவர் தன் ஆறுமாதக் குழந்தையுடன் தன் வேலைசார்ந்த பணிகளுக்காக பயணித்து, குழந்தையையும் வேலையையும் சேர்ந்து சமாளிக்கமுடியாமல் திணறுவதைக் கண்டபோது மேற்சொன்ன கேள்வி எனக்குள் எழுந்தது. பெண்களுக்கு குழந்தையின் முக்கியத்துவம்தான் என்ன?

குழந்தை ஒரு சமூக கௌரவத்தைகுடும்ப அதிகாரத்தை பெண்களுக்கு அளிக்கிறது.

சிலநேரங்களில் குடும்பத்துக்குள் பேரம் பேசி தம்வசம் முடிவெடுக்கும், கணவனைப் பணியவைக்கும் அதிகாரத்தை வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் இதுவும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உதவாது.

வாழ்க்கையில் அர்த்தம் இருப்பதாக ஒரு பிரமையைக் கொடுக்கிறது.

மிக முக்கியமாக, குழந்தைகளே தேசியத்தின் அடித்தளம். பெண்கள் தம்மைத் தேசத்தின் பிரநிதியாக உணர குழந்தைகள் உதவுகிறார்கள். இதனாலே தேசியத்திற்கும் பெண்ணியத்துக்கும் ஒரு நுணுக்கமான தொடர்பு உள்ளது. தேசியம் குடும்பம் என்பது அரசியல் அலகு என்று நினைக்கும். தேசப்பற்றைக் காட்ட குடும்பமே விளக்கேற்ற வேண்டும் என்று மோடி கேட்பது இதனாலே. குடும்பம் என்பது அரசியல் கருத்தியல் என்பதே பெண்ணியத்தின் அடிப்படையும். குடிமைச் சமூகத்திற்கான விழுமியங்களை குடும்பத்திலும் எதிர்பார்க்கவேண்டும் என்று ஜான் ஸ்டுவர்ட் மில் கோரியது இதனாலே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் காதல் அவர்களை அடிமை-ஆண்டான் மனநிலையைக் கொண்டாட வைக்கலாம். ஆனால் இதைப் பெண்ணியம் கடுமையாக எதிர்க்கும். அரசியல் சரிநிலையை அந்தரங்கமான தளங்களில் பின்பற்றக் கேட்கும். இப்படிக் குடும்பத்தை அரசியல்மயமாக்கும் போது குழந்தைகளே எதிர்காலப் பிரஜைகளாக அதற்கு அத்தாட்சியாக மாறுகிறார்கள். அவர்கள் குடும்பத்தை ஒரு குட்டித் தேசமாக்குகிறார்கள். தாய் தேசத்தாயாகிறாள் (‘பாரத மாதா’). இந்த இறையாண்மை அதிகாரமும் பெண்களை நுணுக்கமாக இயக்குகிறது. ஆணுக்கு ஒருபோதும் கிடைக்காத அரசியல் அதிகாரம் பெண்ணுக்கு தாய்மை வழியாகக் கிடைகிறது. இதனாலே வளர்ந்துவரும், வளர்ந்த தேசங்களில் தாய்மைக்கு எதிராகப் பேச பெண்ணியவாதிகள் துணிவதில்லை. அவர்கள் தேசிய புரோஜெக்டின் முகவர்களாகத் தம்மை மாற்றிக்கொள்கிறார்கள்.

ஆனால் இதற்காக பெண்கள் இழப்பவை எவை?

உடல் எடை அதிகரித்து, ஹார்மோன் குளறுபடிகள் நேர்ந்து, மன அழுத்தம் ஏற்பட்டு சீர்குலைகிறார்கள்.

பாலூட்டுவது, உணவூட்டுவது, குளிப்பாட்டி வளர்ப்பது என நிறைய நேரத்தை வீணடிக்கிறார்கள். (இந்தப் பணிகளை ஆண்களும் தாய்மையுணர்வால் செய்து முட்டாளாகிறார்கள்.)

 முதல் சில ஆண்டுகள் வேலை, குழந்தைவளர்ப்பு என சமாளிக்கத் திணறுகிறார்கள். இதனால் வேலையிடத்தில் நெருக்கடி அதிகரிக்கிறது. நிச்சயமாக அவர்களுடைய பதவியுயர்வு, தனிநபர் வளர்ச்சி சில வருடங்களாவது பின்னோக்கி செல்கிறது

மெல்லமெல்ல இளமைக் கரைந்துவிட்டதாக தன்னிரக்கமும் பதற்றமும் கொள்கிறார்கள்.

இவ்வளவும் செய்தும் நமது குழந்தைகள் நன்றியுணர்ச்சியுடன் இருப்பதோ வளர்ந்த பின்னர் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள முயல்வதோ இல்லை. அவர்கள் வயதான பெற்றோரை சார்ந்தே இளமையிலும் இருக்கிறார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் கணிசமான கல்யாணமாகாத இளம்பெண்களும் ஆண்களும் தமது 40, 50 வயதுவரை பெற்றோருடனே வாழ்வதாக ஒரு புள்ளிவிபரம் உண்டு. இந்தியாவிலும் நகரங்களில் இந்தப் போக்கு வளர்ந்துவருகிறது.


இவ்வளவு பாதகங்கள் இருந்தும் நம்மைக் குழந்தைகள் கட்டிப்போட நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களும் ஒரு காரணமோ என்று தோன்றுகிறது - நமது குடல் நுண்ணியிர்களே நமது பிள்ளைகளிடமும் அனேகமாக இருக்கின்றன. இயற்கைப் பேறின்போதும் அம்மாவின் பிறப்புறுப்பின் வழியாகவும் ஒரேவிதமான உணவை உண்பதாலும் இது நிகழ்கிறது. இந்த நுண்ணியிர்கள் நம் மூளையைக் கட்டுப்படுத்தும் திறன்பெற்றவை. நமது பிள்ளைகள் நம் நுண்ணுயிர்களின் சந்திதிகளின் வீடுகள். ஆக நாம் நமதுப் பிள்ளைகளை நேசித்து தியாகம் செய்தாலே இந்த நுண்ணியிர்கள் அடுத்தடுத்த தேகங்களில் வழிவழியாகத் தழைக்கமுடியும்

இப்படி, குழந்தைகளைப் பயன்படுத்தி தேசியமும் நுண்ணுயிர்கள் பெண்களை ஏமாற்றிவிடுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...