முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமோகன்: இலக்கிய ஹிட்லர்


 

நினைவில் இருந்து சொல்கிறேன். தவறாக இருக்க வாய்ப்பு உண்டு. வாசகசாலை அமைப்பையும் அவர்கள் நடத்தும் விமர்சன கூட்டங்களையும் மிக மோசமாக ஜெயமோகன் விமர்சித்து எழுதினார். இன்று அவர்களை விருந்தினர் என்று அழைக்கிறார். வாசகசாலை ஒரு அமைப்பாக வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது சான்று என எடுக்கலாமா??


- MMuralidhar Balaprakash

ஜெயமோகன்: இலக்கிய ஹிட்லர்

ஜெயமோகன் 'வாசக சாலையை' செரித்துக்கொள்கிறார் - பல அரசியல் / வணிக அமைப்புகள் செய்வதுதானே. இந்த சிறிய அமைப்புகளையும் நாம் குற்றம் சொல்லமுடியாது. அவர்களுக்கு இத்தகைய செரிப்புகளால் அதிக கவனமும் புத்தக விற்பனையும் கிடைக்கும். நஷ்டத்தில் இருப்பவர்களுக்கு இது பெரிய விசயம். கடனில் இருப்பவர்களை கொத்தடிமைகளாக பண்ணையங்கள் வாங்கிக்கொள்வதைப் போல இது நிகழ்கிறது. அவர்களுக்குப் பாவம் வேறுவழியில்லை. வாங்கிய திட்டுகளை மறந்து சேர்ந்துகொள்ள வேண்டியதுதான். உடனே ஜெயமோகன் வா.சா எவ்வளவு மகத்தான இலக்கிய அமைப்பு என்று நீண்ட கட்டுரையொன்றை எழுதுவார். ஜெயமோகனின் எழுத்தென்பது அவரது மூளையிலிருந்து நேரடியாகப் பாய்வது. அவர் எழுதும்போது மனசாட்சி குறுக்கே வரவே செய்யாது. யாரைக்குறித்து அவதூறு செய்தாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அதே நபர்களை கட்டியணைத்துப் பாராட்டி எழுதினாலும் நீ சொல்வது பொய்யல்லவா என்று அவரது மனசாட்சி கேட்காது. அவரது மனசாட்சிக்கே அவரைப் பார்த்தால் அவ்வளவு பயம். அதையும் திட்டி நூறு அவதூறு பக்கங்கள் எழுதிவிடுவார். அதனால் ஜெயமோகனின் மனசாட்சி பல பத்தாண்டுகளாக மௌனமாக கண்ணீர்வடித்தபடி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஜெயமோகனுக்கே தான் நடத்துவது இலக்கிய அமைப்பல்ல, பண்பாட்டு அதிகார இயக்கம், இலக்கிய கார்ப்பரேட் இயக்கம், அரசியல் இயக்கம் எனத் தெரியும். இன்னும் இரு பத்தாண்டுகளில் தமுஎசவைக் கூட, அனேகமான தமிழ் இதழ்களையும் கூட விஷ்ணுபுரம் செரித்துக்கொண்டால் ஆச்சரியப்படமாட்டேன். மிகச்சில இயக்கங்கள், பதிப்பகங்கள் மட்டும்தான் கடைசிவரை வெளியே இருப்பர். அதாவது சற்றே கார்ப்பரேட்தனமான கட்டமைப்பு, முதலீடு, செயல்திட்டம், சர்வதேசத் தொடர்புகள் உள்ளவர்கள் மட்டுமே விஷ்ணுபுரத்தின்பக்கம் சாயாமல் இருக்கமுடியும்.

ஜெயமோகன் இதை ஒரு பெருமைக்குரிய காரியமாகவே பார்ப்பார். ஒருகாலத்தில் சு.ரா இருந்ததைப்போல, அவரைவிட உயரமான இடத்தில் அவர் இலக்கியச்சூழலில் இருக்கவிரும்புகிறார். சு.ரா எழுதியும், இதழ் நடத்தியும், தன் அன்பாலும் அறிவுமதிப்பாலும் அதை சாதித்தார் என்றால் ஜெயமோகன் தன் இயக்கபலத்தைக்காட்டி சு.ராவையும் கடந்து ஒரு 'இலக்கிய மோடியாக' மாறவிரும்புகிறார்.

தன் அமைப்பினரும் சீடர்களும் கடுமையாக உழைத்தும், தீவிரமாக வேலைசெய்தும் தவிர்க்கமுடியாத சக்திகளாக மாறிவருகிறார்கள், இன்று தமிழ் இலக்கியத்தை விஷ்ணுபுரம் இன்றி ஓரங்குலம் கூட நகர்த்தமுடியாது என்று பெருமையடிப்பார் ஜெயமோகன். ஆனால் அவருக்கே தெரியும் அது பொய்யென்று. அறிவாற்றலோ, எழுத்தாற்றலோ, செயற்திறனோ அல்ல கட்டமைப்பும், ஒழுங்கான சீரான நிகழ்ச்சிகளும், விருது, பதிப்பு, கட்டண உரை போன்ற இதர கவர்ச்சிகளும், நெட்வொர்க்கும், சினிமா தொடர்புகளும் சேர்ந்தே அவர்களை முக்கியமான இயக்கமாக்குகிறது. அதாவது ஒரு ஈவெண்ட் மெனேஜ்மெண்ட் கம்பெனியின் இடம் தமிழ் நவீன இலக்கியத்தில் இருந்தது - அந்த வெற்றிடத்தை இவர்கள் வந்து நிறைவுசெய்தார்கள்.

நாம் இந்த விசயத்தில் விஷ்ணுபுரத்தையும் ஜெயமோகனையும் மட்டும் விமர்சிக்காமல் எந்தமாதிரி சூழல் அவர்களுக்கான தேவையை உருவாக்குகிறது என்று யோசிக்கவேண்டும் - கடந்த சில பத்தாண்டுகளில் வளர்ந்துவரும் நாடாக இந்தியா முற்றதிகாரத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. 1930-40களில் ஜெர்மனியில் நடந்தது இன்று தமிழ் இலக்கியச் சூழலில் நடக்கிறது. அன்று ஜெர்மானியரக்ள் தம்மை உலகின் தலைசிறந்த இனம் என்று சொல்லிக்கொள்ள பிரமாண்டத்தை வழிபட்டார்கள். கார் உற்பத்தி, சாலையமைப்பு என்று வேறெந்த நாடுகளில் அப்போது இல்லாத வசதிகளைக் காட்டிப் பெருமைப்பட்டுக்கொண்டார்கள். இதற்கான செல்வத்தை சம்பாதிக்க எந்த அண்டை நாட்டையும் பிடித்துக்கொள்ளையடிக்கலாம், மற்றமையினரைக் கொத்துக்கொத்தாகக் கொல்லலாம் என்று நினைத்தனர். சமூகம் ஏழை-பணக்காரர் எனக் கடுமையாகப் பிளவுபட்டிருந்தது, பணவீக்கம் மோசமாக இருந்தது, கடும் தனிமையாலும், மனபிரமைகளாலும் ஜெர்மானியர் பீடிக்கப்பட்டிருந்தனர், அவர்களுக்கு தம் நிஜத்தின் வலியை மறக்க ஒரு கனவுலகம் தேவைப்பட்டது, அதுவே நாஜிக்கட்சி சித்தாந்தம் என ஹேனா ஆரெண்ட் எழுதுகிறார். இந்த சமூக உளவியல் பிரச்சினைகள் இந்தியா முழுக்க மத்திய வர்க்கத்திற்கு ஏற்பட்டதாலே அவர்கள் மோடியைத் தேர்ந்தெடுத்தனர். தமிழ்நாட்டில் அப்பிரச்சினைகள் இயல்பாகவே உள்ளன - குறிப்பாக விரைவில் நகரமயமாகி, நிறைய முதலீடுகளையும், நிச்சயமின்மையையும் எதிர்கொள்ளும் புலங்களில் விஷ்ணுபுரம் சுலபத்தில் வளர்கிறது. பாஜகவும் கூட கிராமங்களை விட நகரங்களில் அதிக செல்வாக்கு பெற்ற கட்சியே. விஷ்ணுபுரமும் அப்படியே. நாஜிக்கட்சியும் அன்று அப்படியே இருந்தது. ஜெயமோகன் இங்கு ஒரு மோடியாக செயல்படுகிறார் - அவர் அதே இயக்கவலிமையை, பணவலிமை, செல்வாக்கு, தொடர்புகள், பண்பாட்டு அதிகாரத்தைக் காட்டி மிரட்டுகிறார்; தன் 'கட்சியில்' சேராவிட்டல் வேறுபோக்கிடமே இல்லையென இளம், மூத்த படைப்பாளிகள் பலரையும் நம்பவைத்து தன்வசம் வரவைக்கிறார். ஹிட்லரின் நாஜிக் கட்சியும் இப்படித்தான் எதிர்க்கட்சியினரைக் கூட செரித்துக்கொண்டு தனிக்காட்டு ராஜாவாக இருந்தனர். அவர்களைக் கொள்கைரீதியாகக் கடுமையாக எதிர்ப்பவர்கள் கூட நாஜிக்கட்சிக்கும், நாஜி அரசுக்கும் வெளியே செயல்படவே முடியாதபடி எல்லா செயல்பாடுகளையும் ஒற்றைப்புள்ளியில் குவித்தார்கள். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வீழ்ந்தபின்னரே அவர்களால் தலைதூக்க முடிந்தது. ஜெயமோகன் இன்று விஷ்ணுபுரத்தைவிட்டால் தமிழ் இலக்கியத்திற்கு வக்கில்லை என்று பீற்றுவதைப்போலத்தான், அன்று ஹிட்லரும் தனது இந்த முற்றதிகாரத்தைப் பெரும் சாதனையாக நினைத்து பெருமைகொண்டவர்தான்.

பெரிய வேடிக்கையென்னவென்றால் அவர் இத்தனை ஊழல்களையும் செய்துவிட்டு தன்னை விமர்சிக்கிறவர்களை சமூகவலைதளத்தில் வம்படிப்பவர்கள், பொறுக்கிகள் என்று இடுப்புக்கு கீழே அடிப்பார். அறிவுஜீவிகள் என்றால் வெளிநாட்டிலிருந்து என்.ஜி.ஓ நிதியைப் பெற்று பொறுக்கித் தின்னும் துரோகிகள் என்றும், இலக்கியவாதி என்றால் அற்ப லாபத்துக்காக தன்னை எதிர்க்கிறார்கள் என்றும் கூறுவார். இப்போதெல்லாம் அவர் இலக்கியவாதிகளைத் திட்டுவதில்லை; அவர்கள் அவரை விமர்சிப்பதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டு விட்டர்கள். அதனால் தன்னை விமர்சிக்கும் இலக்கியவாதிகள் யாராவது ஒன்றிரண்டு பேர்கள் இருந்தால் அவர்களை இலக்கியவாதியே அல்லர் என்று கூறிவிடுவார். இது எப்படி இருக்கு? கவனித்துப் பார்த்தால் இதையெல்லாம் 90 ஆண்டுகளுக்கு முன்பே ஹிட்லர் செய்திருக்கிறார். அவரது "மெயின் கெம்ப்" முழுக்க இப்படியான மட்டையடி சாடல்கள், போலிப் பிரச்சாரங்கள், மற்றமையினரை வரையறுக்கும் வெறுப்பு வாசகங்களே இருக்கும். அதன்பிறகு மோடியின் கீழ் பாஜகவினரும் தம்மை விமர்சிப்பவர்களை தேசத்துரோகிகள், அயல்நாட்டுக் கூலிகள், பேதைகள் என்று அழைத்தனர். இவர்களின் இலக்கியத் தொடர்ச்சியே ஜெயமோகன்.

இந்த சமூக உளவியல் வியாதிகள் ஒருநாள் தீரும். அதன்பிறகு ஒருநாள் மேற்கிந்திய கம்பெனியையையும், அதை விழுங்கிய சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய அரசையும் போல விஷ்ணுபுரம் உடைந்துபோகும். அதுதான் உலக இயல்பு.

பி.கு: இந்தக் குறிப்பை ஜெயமோகன் படித்தால்கூட நான் அவரைப் பாராட்டியதாகவே கருதுவார். அதனால் நான் இதை அவருக்காகவோ அவரது சக-நாஜிக்கட்சியினருக்காகவோ எழுதவில்லை.

- ஆர். அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...