முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளர் கர்வமாக இருக்கவேண்டுமா?




நமக்கு சில நேரங்களில் பேச்சுவார்த்தையின் நுணுக்கம் புரிவதில்லை - இரு தரப்பும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு பேசி ஒரு கைகுலுக்கும் புள்ளிக்கு வரவேண்டும். பிளேட்டோ தன் டயலாக்ஸ் நூலிலே இதை நிறுவியிருப்பார். சாக்ரடீஸ் தான் கருத்தியல்ரீதியாக உடன்படாத ஒருவரிடம் விவாதிக்கும் முன்பு அந்த எதிர்த்தரப்பின் சிறப்புகளை எடுத்துரைத்துவிட்டே கேள்விகளைக் கேட்பார். இதைப் பார்க்க புகழ்ச்சியைப் போலத் தெரியும். ஆனால் இது அதுவல்ல. இது எதிர்தரப்பின் கதவுகளைத் திறந்து அவரை நம் பக்கம் இழுப்பது. இதை நமது இந்திய தத்துவ மரபிலும் காணமுடியும். முதல் எதிர்த்தரப்பின் கருத்துக்களை, சாதனைகளைத் தொகுத்துச் சொல்லிவிட்டு தாம் உடன்படாத விசயங்களுக்கு வருவார்கள். "நீலகேசி" நல்ல உதாரணம். நவீன இலக்கியம் தோன்றியதும் எதிர்த்தாடுவது முக்கிய மரபாகியது. எதிர்த்தரப்பை எள்ளி நகையாடுவது, முழுக்க மறுப்பது என. ஆனால் இது உரையாடலுக்கான உத்தியல்ல, இது மற்றமையை உருவாக்கி திரள் சேர்ப்புக்கான உத்தி. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. துரதிஷ்டவசமாக எழுத்தாளர்கள் எல்லா இடங்களிலும் முறுக்கிக்கொண்டு எதிர்த்தாடிக்கொண்டு இருக்கவேண்டும் எனும் மூடநம்பிக்கைத் இதனால் தோன்றியது. இதை இலக்கியவாதியின் கர்வம் என நாம் வரையறுக்கிறோம். முரட்டுத்தனம் வேறு கர்வம் வேறு. சில சந்தர்பங்களில் நாம் அரசியல் நோக்கில் திரளை நம் பக்கம் சேர்க்க முரட்டு அடி அடிக்கலாம், சமரசமற்றுப் பேசலாம். ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் இது அவசியமில்லை. ஒன்று கண்ணியம், இன்னொன்று பிரச்சாரத்துக்கான வீரம், வெளிப்படைத்தன்மை. நம்மூரில் சிலர் கண்ணியத்தை, பேச்சுவார்த்தையை கோழைத்தனம் எனக் கருதுகிறார்கள்
இவ்வளவு பெரிய முகாந்திரம் எதற்கெனில் அண்மையில் எழுத்தாளர்கள் சிலர் இணைந்து அரசிடம் கோரிக்கையொன்று வைத்தோம். அதற்கு வைத்த மனுவில் ஆளும் அரசு கடந்தகாலத்தில் மொழிக்காகவும் இலக்கியத்துக்காகவும் செய்த பங்களிப்புகளைக் குறிப்பிட்டோம். அவை வரலாற்றுத் தகவல்களே, இட்டுக்கட்டப்பட்டவை அல்ல. வேறு கட்சியெனில் சுத்தமாக மதிக்கமாட்டார்கள், இவர்கள் தமிழுக்கான சிறப்பு அந்தஸ்து, மாநிலம் முழுக்க புத்தக விழா, எழுத்தாளர்களுக்கு இல்லம் என பல விசயங்களைச் செய்திருக்கிறார்கள். கடந்த முதல்வருக்கும் இன்றைய முதல்வருக்கும் இதிலொரு தொடர்ச்சி உண்டென்று சொல்லிவிட்டு எங்களுடைய முக்கியமான பங்களிப்புகளையும் குறிப்பிட்டு எதிர்காலத்தில் நிம்மதியாக வாழவும், வாழ்க்கையையும் நடத்தவும் உதவி தேவைப்படுவதாக கேட்டிருந்தோம். இதுதான் உரையாடலின் முறைமை. இதை ஊடகத்தில் படித்த ஒரு நண்பர் என்னைத் தொடர்புகொண்டு என்ன எழுத்தாளருக்கான கர்வம் இல்லாமல் அவர்களைப் பாராட்டிவிட்டு உதவி வேண்டியிருக்கிறீரே என்று கேட்டார். நான் சொன்னேன், "நாங்கள் மட்டுமே மேலானவர்கள் என்று சொல்லி எவரிடமும எதையும் கேட்க முடியாது. சொந்த மனைவி, பிள்ளையிடம் கூட இன்று யாரும் தவௌலத்தாகப் பேச முடியாது. இன்னொருவரை மதித்து ஏற்றுக்கொண்டு அவர்களிடம் நம் பெருமையையும் போதாமையையும் சொல்வதே உலகம் தழுவிய மரபு. அவர்களை நாம் மதிக்காவிடில் அவர்கள் ஏன் நம்மை மதிக்கப்போகிறார்கள். இதை எதையும் எதிர்பாராமலே இந்த அரசு, அமைச்சர், அதிகாரிகள் முதற்கொண்டு மிக கௌரவமாக எங்களை நடத்தும்போது நாங்களும் அவர்களிடம் கண்ணியமாக மதிப்பளித்துப் பேசுவதே நாகரிகம். இதன்பெயர் கூஜா தூக்குவதல்ல. இது உரையாடல் உத்தி."
சமூகத்துக்கு முழுக்க வெளியே இருந்தாலோ பெரும் செல்வந்தராக இருந்தாலோ (இரண்டுமே ஒன்றுதான்) ஒழிய நீங்கள் வெற்றுத் திமிருடன், தௌலத்தாகப் பேசிக்கொண்டு திரியமுடியாது. நமக்குத் தகுதியுள்ள ஒன்றைக்கூட கேட்டுத்தான் பெறவேண்டும். ஒப்பாரிகூட வைக்கலாம், தப்பில்லை என்பது என் பார்வை. எழுத்தாளர் அரசையும், நிறுவனங்களையும் எதிர்ப்பதில்தான் அவரது திமிரும் ஆணவமும் இருக்கவேண்டும், பேச்சில் அல்ல. ஆனால் எழுத்தாளருக்கு நிமிர்வு வேண்டும் எனச் சொல்லும் ஜெயமோகனையும் அவரை ஒத்தவர்களும் எழுத்தாளர் அரசையோ நிறுவனங்களையோ எதிர்க்கக்கூடாது, பொதுச்சமூகத்தில் மட்டும் முரட்டுக்காளையாகத் திரியவேண்டும், ரோட்டில் எதிரே வரும் மாமாவையோ தாத்தாவையோ காலரைப் பிடித்து உலுக்கி "நான் யாருக்கும் முதுகுவளைக்காத எழுத்தாளன், எவனையும் மதிக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, புத்தகம் வாசிக்காத அற்பப் பதிரே நான் யாரெனத் தெரியுமா, எனக்கு முன்னால் வந்து நிற்கிறாயோ எனக்கே அட்வைஸ் பண்ணுறாயோ?" எனக் கத்தவேண்டும் என்கிறார்கள். இம்மாதிரி முட்டாள்தனத்தில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்தாளர் பொதுசமூகத்தில் கண்ணியமாகவும் பணிவாகவும் தன் நடத்தையில் இருக்கவேண்டும், எழுத்திலும் எதிர்ப்பரசியலிலும் மட்டுமே சமரசமற்றுத் திமிராக இருக்கவேண்டும். அப்போதும் கூட தாம் எதிர்க்கும் நிறுவனம் ஒன்றிடம் உரையாடும்போது கண்ணியமாகப் பேசவும் பொதுப்புள்ளியைக் கண்டடையவும் முயலவேண்டும்.
செயல்பாட்டில் எதையும் சாதிக்காமல் நடத்தையில் மட்டும் உதார்விடுவது மிகப்பெரிய கோழைத்தனம்! மேலும் நடத்தையில் யாருடனும் ஒட்டாமல், எல்லாரையும் அவமதிக்கும்படியாகப் பேசுவது முற்றதிகாரத்தின் பண்பு. கோழை முற்றதிகாரிகளே அப்படி நடந்துகொள்வார்கள் என்பது வரலாறு. இப்படியான திமிரான பேச்சையும் மனதைப் புண்படுத்தும் நடத்தையையும் கொண்டே அவர்கள் பிறரை அச்சுறுத்தி தமக்கு அடிமையாக்கி முற்றதிகார குழுக்களை உருவாக்குவார்கள் அல்லது அதற்கான சூழலை உண்டுபண்ணுவார்கள். தம் பேச்சுக்கும் கருத்துக்கும் ஆதாரமே தேவையில்லை, தாம் யாருடனும் உரையாடத் தேவையில்லை என நம்புவார்கள். உரையாடலை முறிப்பதே முற்றதிகாரத்தின் முதல் படி. நம் ஊரில் ஓஷோவிலிருந்து ஜக்கிவரை, இந்திராவில் இருந்து மோடிவரைப் பாருங்கள். இப்படித்தான் 'கர்வமாக' இருந்தார்கள், இருக்கிறார்கள். இலக்கியத்தில் முன்பு ஜெயகாந்தன், அடுத்து நம் ஆசான். விமர்சனத்தில் வெங்கட் சாமிநாதன் உள்ளிட்டவர்கள். இவர்கள் யாருமே வலதுசாரி சிந்தனைகளை, மதவாதத்தை, முதலீட்டியமும், தாராளவாதமும் அரசையும் மதத்தையும் பயன்படுத்தி மக்களைச் சுரண்டுவதைக் கேள்விகேட்காதவர்கள். அதேநேரம் பண்பாட்டுரீதியாக 'அறத்தை' நிறுவி அதை நடைமுறையில் இருந்து விலக்கியவர்கள். மதம், தேசியம், இறையாண்மை போன்ற விசயங்களில் Status quoவைப் பாதுகாக்க செண்டிமெண்டான எழுத்தைப் பயன்படுத்தியவர்கள். ஆனால் இன்னொரு பக்கம் இடதுசாரிகளும் சமூக சீர்திருத்தவாதிகளும் இப்படி 'கர்வமாக' இருந்ததில்லை. எதிர்த்தரப்புக்கு மதிப்பளித்து உரையாடுவதும் கொடுத்து வாங்குவதும் மக்களுக்கு அணுக்கமாக இருப்பதே அவர்களுடைய பாணி. பாரதியும் பு.பியும் கூட பல்வேறு விட்டுக்கொடுத்தல்களின் ஊடேதான் வாழ்ந்தார்கள். 'பெரிய ரௌடிகள்', 'தாதாக்கள்' கூட பண்பாகவும் நாகரிகமாகவுமே உரையாடுவார்கள். திமிராக அல்ல.
அதனாலே எழுத்தாளர் எல்லாரிடமும் கர்வம் காட்டவேண்டும் எனும் இந்தத் தரப்போ பொருட்படுத்தத் தேவையில்லை. கூடவே எழுத்தாளருக்குத் திமிர் வேண்டும், மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு நடக்கவேண்டும் எனும் கதையாடலையும். முரட்டுத்தனம் ஒரு தகுதியல்ல. சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பொருட்படுத்துவோர் அப்படி இருக்கமாட்டார்கள். அரசும் நமது சமூகத்தின் பகுதி. அரசை எதிர்க்கும்போதே அரசிடம் கண்ணியமாகவும் பணிவாகவும் உதவியும் நாடலாம். நம் வரிப்பணம் தானே அரசு. தாராளமாகக் கேட்கலாம். கேட்கக் கூடாது என நினைக்கும் எலைட், முற்றதிகார மனநிலை நமக்கெதற்கு? இது இறங்கிவருவதல்ல, யாருக்குமே மேலாக நிற்க முயலாதது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...