ஆர்.எஸ்.எஸ்காரர்கள் முன்பு இந்து வித்தியாலயா போன்ற பள்ளிகளில் பாபர் மசூதி இடிப்புப் படங்களைக் கொண்டுபோய் காட்டுவார்கள். "அமரன்" அப்படியான ஒரு இந்துத்துவப் பிரச்சாரப் படம்தான். படம் முழுக்க காஷ்மீரிகள் தொடர்ந்து எப்படிக் காட்டப்படுகிறார்கள் பாருங்கள். அவர்கள் சிறுபான்மையான தீவிரவாத ஆதரவாளர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களையே திரைமொழியில் நிறைக்கிறார்கள், திரும்பத்திரும்பக் காட்டுகிறார்கள். அமைதியை விரும்பும் மக்கள் அங்கங்கே வந்துபோகிறார்கள். இதுவே பிரச்சாரப் படங்களின் உத்தி. நடுநடுவே வரும் காதல் காட்சிகளைத் தவிர மிச்சமெல்லாம் முழுக்க விஷமப் பிரச்சாரம்.
இதை நேரடியாக மோடியும் அமித் ஷாவுமே தயாரித்திருக்கலாம். எதற்கு சோனி பிக்சர்ஸ், கமலை எல்லாம் கூட்டுவந்தார்கள் எனப் புரியவில்லை.
இப்படத்தை தமிழ்நாட்டில் இஸ்லாமியர் தீவிரமாக எதிர்க்காதது அவர்கள் எந்தளவுக்கு neutralize ஆகியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதன் ஆபத்து என்னவெனில் நாளை தமது மதத்தின் அடையாளத்தின் பெயரில் சிறுபான்மையினர் தெருவுக்கு வரவே முடியாது, அவர்கள் முஜாஹிதீன்களாக பெரும்பான்மைத் தமிழர் மனத்தில் தோன்றுவார்கள் என்பதே.
ஒரு காட்சியில் ராணுவத்தினரை கல்வி புகட்டுவது, மக்களுக்கு உதவுவது ஆகிய பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள். அதை அவ்வளவு கேலியாகக் காட்டுகிறார்கள். அதாவது ராணுவம் என்றால் யாரையாவது கொன்றுகொண்டே இருக்கவேண்டுமாம், இல்லாவிட்டால் கேவலமாம். உண்மையில் அப்படத்தில் அவர்கள் செய்கிற ஒரே உருப்படியான, நேர்மறையான, மக்களுக்குப் பயனுள்ள காரியம் அதுதான். மக்களை மக்களே கொன்று தின்னுவது எப்படி வீரமாகும்?
இப்படத்தை தமிழர்கள் வெற்றியடைய வைத்திருப்பது சினிமா எவ்வளவு ஆபத்தான கருவி, எவ்வளவு மக்கள் விரோதக் கருவி எனக் காட்டுகிறது. உன்னதமான சமூகத்தில் சினிமா இப்படி ஆளும் அரசின் கருத்தியல் பிரச்சாரக் கருவியாக இருக்காது. இப்போது நாம் வாழ்வது சீர்கெட்ட சமூகத்தில். சீர்கெட்ட சமூகத்தில் அழுகிய புண்ணில் இருந்து வடியும் சீழைப் போன்ற படங்கள்தாம் வரும். இப்படியான படமெடுப்பவர்களுக்கும் சோனாகாச்சியில் மாமாப் பணிபுரிவர்களுக்கும் வித்தியாசமில்லை.
Comments