முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதகஜராஜா எனும் பேய்ப்படம்

 


அப்படி என்னதான் இருக்கிறது, 13 ஆண்டுகள் தாமதமாக வந்த ஒரு படம் எப்படி பிரம்மாண்ட வெற்றி பெற்றதெனத் தெரிந்துகொள்ளவே பார்க்க சென்றேன். முதல் அரைமணி நேரத்தில் புரிந்துபோனது. நகைச்சுவை மட்டுமல்ல, இப்போது வெளிவரும் அரசியல் சரித்தன்மை மிக்க, முற்போக்கு பாவனை, woke படங்களின் மீதான வெறுப்பையே இப்படத்தின் வெற்றி மூலமாக மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய படங்களில் நீங்கள் வறட்டுத்தனமான உணர்ச்சிகளையும் போலியான பரபரப்பையுமே காணமுடிகிறது, அவை பெரும்பாலும் நகரமயமான சூழலில் ஆண்மையற்ற நாயகர்களையும், பெண்மையற்ற நாயகியரையுமே காட்டுகின்றன. கதையில் எந்த உணர்ச்சி ஒன்றுதலும் இருப்பதில்லை, காமம் துளியும் இல்லை, அப்படி வந்தாலும் அக்காமம் துய்க்கக் கூடியதாக அல்லாமல் பிளாஸ்டிக்காக உள்ளது. போலியான சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்டவர் அரசியல் என உணர்ச்சிப்பெருக்கான ஒன்றை உருவாக்கி அதை வைத்து கதை வெறுமையாக உள்ளதை மறைக்கிறார்கள். நாயகன் ஆயிரம் பேர்களை பீரங்கியால் சுடுவது, எந்திரத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேதிரிவது என வன்முறையிலும் பிளாஸ்டிக் தன்மை அதிகமாகிவிட்டது. கொல்பவர்களும் கொல்லப்படுபவர்களும் மனிதர்கள் அல்ல எனும் பிம்பத்தை மக்கள் மனத்தில் விதைக்கும்போது இந்த வீடியோ கேம் தன்மையைத் தாண்டி அசலான படமொன்றை மனிதர்கள் சண்டையிடும், பெண்ணுடலுக்கு ஆசைப்படும், அற்ப ஜோக் அடிக்கும் படமொன்றைப் பார்க்க மக்கள் தவிக்கிறார்கள் அதனாலே தற்செயலாக மிகமிகத் தாமதமாக வெளியான, டிரெண்டுக்கு வெளியே இருக்கும் இப்படத்தை ரசித்துக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக திரையரங்கில் சந்தானத்தின் ஆபாச ஜோக்குகளுக்கு ஆண்களும் பெண்களும் சிரிப்பதைக் கண்டபோது எனக்கு அவர்களுடைய ரசனை குறித்து கோபம் வரவில்லை. தமிழிலுள்ள வறட்சியை நினைத்து வருத்தமே ஏற்பட்டது


கடந்த 8 ஆண்டுகளில் குறிப்பாக தமிழ் சினிமாவின் போக்கு வெகுவாக மாறி வெகுஜன மக்களின் ரசனையில் இருந்து விலகிவிட்டது. மொபைலில் இன்ஸ்டா பார்க்கிற, கேம் விளையாடுகிற இளைஞர்களைத் தவிர யாரும் படம்பார்க்க மாட்டார்கள் எனும் மனநிலை தோன்றியதில் சமூகவலைதளத் தாக்கத்தால் 'அர்பன் ரசனைப்' படங்கள் பரவலாகிவிட்டன. அப்படங்களில் எல்லாரும் சும்மா பப்பில் நடனமாடுவார்கள், அல்லாவிட்டால் அரசியல் சரித்தன்மையுடன் வசனம் பேசுவார்கள், அல்லது புரட்சி செய்வார்கள். காதல், சண்டை, சாகசம், நகைச்சுவை எல்லாம் பின்னுக்குப் போய்விட்டன. பல வயதுகளில் இருக்கும் மக்களை திரையரங்குக்கு கொண்டு வரலாம் எனும் நம்பிக்கை இயக்குநர்களுக்குப் போய்விட்டதால் சிறுமி கற்பழிக்கப்படுவதை விகாரமாக மிகையாகச் சித்தரித்து உணர்ச்சிகளைத் தூண்டி படங்களை ஓடவைக்கும் நிலைக்குப் போனார்கள். நகரத்தைத் தாண்டி, 'ஒடுக்கப்பட்டவர்களைத்' தாண்டி, விக்டிம்களைத் தாண்டி, வேறற்றுப் போகாத, சிறுநகர, கிராமத்து மக்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மறந்துவிட்டார்கள். காதலோ, சண்டையோ சாகசமோ மண்டையை சுவரில் மோதி ரத்தத்தை சிதறடிப்பது, தொடர்ந்து கத்திக்கொண்டே இருப்பது, அண்ணன் தங்கையின் கழுத்தை அறுப்பது, தம்பி அண்ணனைக் கத்தியால் குத்துவது, மகன் அம்மாவைக் கல்லைப் போட்டுக் கொல்லுவது, காட்சிக்கு காட்சி யாரையாவது கொன்று புதைத்துக்கொண்டே கூலாக ஓட்டலில் வேலையும் செய்வது போன்ற விசயங்கள் இன்றி கதைசொன்னால் கவனிக்க மாட்டார்கள் என நம்பினார்கள். ஆனால் இயல்பாக மக்களிடம் உள்ள நட்பு, உறவுகளிடத்துள்ள பிடிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்ஞ்ம்மல் பாய்ஸ் போன்ற படம் இங்கே சக்கை போடுபோட்டது. இம்மாதிரியான போக்கை நீங்கள் பேய்ப்படங்கள் விசயத்தில் பார்க்க முடியும். அதாவது சனடைப்படம், குடும்பப்படம், காதல் படம் எனப் பார்த்து மக்கள் அலுத்துப் போகும்போது ஒரு பேய்ப்படம் வந்து மக்களை அசரடிக்கும், பெரிய ஹிட்டடிக்கும். இப்போதுள்ளுள்ள அலுப்பான செயற்கையான சூழலைப் பயன்படுத்தி அவ்வாறு ஹிட்டடித்த 'பேய்ப்படம்' தான் "மதகஜராஜா" (அதன் பழமையே அதன் பேய்.)


பேயென்றால் என்ன? இல்லாத ஒன்று இருப்பது. அது நிச்சயமாக இல்லையெனத் தோன்றும்போது நமக்கு பயம் அதிகமாவது. அந்த பயத்தில் இன்பம் தோன்றுவது. அந்த இன்பமே பீதியை அதிகப்படுத்துவது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பான பழைய டிரெண்டுகள், பாலியல் இரட்டை வசனங்கள், மாமியார் ஜோக், மச்சினிச்சி ஜோக், பொறுப்பின்மை, விக்டிம்மாகவோ பாதிக்கப்பட்ட குழுவைச் சேராமலோ இருக்கும், எந்த அடையாளமும் இல்லாமல் காட்டப்படும் நாயகன், தன் உடலை போகிக்கும் படி பார்வையால் அழைக்கும் பெண்கள், அவர்களைப்பொறுப்பற்றுரசிக்கும் ஆண், நாயகனே பாதிக்கப்படுபவனாக அல்லாமல் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுபவனாக இருப்பது, நண்பனைக் காப்பாற்ற போராடுவது, பிரியவிருக்கும் மனைவியை கணவனுடன் சேர்த்து வைப்பது, பிரிந்து போன காதலியை பொறாமையைத் தூண்டி ஈர்ப்பது என ரொம்ப காலாவதியான உணர்ச்சிகள், நம்பிக்கைகள், போக்குகள் இப்படத்தில் வரும்போது நமக்கு இல்லாத ஒன்று மீண்டெழுந்து வருவதைக் காணும் திகைப்பும் மகிழ்ச்சியும் வருகிறது. இதே படத்தை சுந்தர் சியோ வேறு இயக்குநரோ இன்று எடுத்திருந்தால் நாயகி நாயனைடேய் வாடா போடாஎன்று அழைப்பதாகவும் நாயகன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவள் பின்னாலே அலைவதாகவும், அதை எண்ணி நண்பனிடம் புலம்புவதாகவும் எடுப்பார்கள். ஆனால் இப்படத்தில்மனைவியை வாடிபோடின்னு கூப்பிடாமஎன்று ஆரம்பித்து ஒரு வசனம் வருகிறது. இன்று அப்படி நகைச்சுவை வைத்தால் சமூகவலைதளத்தில் பேயாக முடியை விரித்துப் போட்டுக்கொண்டு திட்டுவார்கள் என்று பயந்து இயக்குநர்கள் தவிர்ப்பார்கள். ஆனால் திரையரங்கில் மக்கள் அதை ரசித்து சிரிக்கிறார்கள். (சமூகவலைதளப் பூச்சாண்டிகளை, அரசியல் சரிநிலைப் போலிப் போராளிகளைப் பூச்சிமருந்தடித்துக் கொல்வது எவ்வளவு அவசியம் என எனக்கு அப்போது தோன்றியது.)  அஞ்சலியும், வரலட்சுமியும் இன்றைய நாயகியரைப் போல ஒல்லிக்குச்சியாக இல்லாமல் தொப்பை காட்டினாலும் அவர்களுடைய உணர்ச்சிகளும், அவர்களிடம் விஷால் காட்டும் உடல்மொழியும் நமக்கு ரொம்ப இயல்பாகத் தெரியும் அளவுக்கு இன்றைய நாயக, நாயகியர் ஏதோ அண்ணன், தங்கையைப் போல காமமின்றி நடிக்கிறார்கள்.


 அதேபோல, கைத்தறித் தொழிலாளர்கள் சார்ந்த காட்சியொன்று போகிற போக்கில் இப்படத்தில் வருகிறது. அதுவே இன்றைய படத்தில் வந்தால் அரைமணிநேரம் ஆவணப் படம் போல சாயத்தொழில், கைத்தறித்தொழிலின் அவலம் பற்றிக் காட்சியமைத்து பத்து நிமிடம் சமூகநீதி வசனம் பேசி நம்மைச் சாகடித்திருப்பார்கள். இப்படத்தில் அது தேவையான அளவுக்கு காரச் சட்னி அளவுக்கே வருகிறது. இயக்குநர் போராளி வேடம் போடவில்லை. இதெல்லாம் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.


அதுதான்மதகஜராஜாவின்வெற்றி. மிக மிக பலவீனமான (தூள் படத்தை நினைவுபடுத்தும்) கதையமைப்புகளும் காட்சிகளும் அபத்தமான லாஜிக்கும் இருந்தாலும் அதன் அப்பட்டமான புத்திசாலித்தனமில்லாத எளிமை மக்களை ஈர்க்கிறது. ஆனால் இதுபேய்தான்”. நாம் இனி இப்படியான படங்களைப் பார்க்க வாய்ப்பே இல்லை. புத்திசாலித்தனமான, மிகையான, போராளித்தனமான நாயகர்களும் நாயகியரும், கிராபிக்ஸ் சண்டைக் காட்சிகள் மிகுந்த, லாரி நிறைய மக்களை கவிழ்த்துப் போட்டுக் கொன்று ஒப்பாரி வைத்து உணர்ச்சியைச் சுரண்டி அதை அறம், முறம் எனப் பேசும் படங்கள் திரும்ப வரும். இயல்புக்கு மீள்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.