"விருதுகள் எல்லாம் புனைவுகளுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பது போன்ற எண்ணம் எப்படித் தமிழ்ச் சமூகத்திற்குள் ஊடுருவியது என்று தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்த்தாலே புனைவல்லாத நூல்கள்தான் அதிகம் எழுதப்படுகின்றன என்பது தெரியும். எத்தனையோ துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறை சார்ந்தும் பல்வேறு நூல்கள் வருகின்றன. இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் புனைவல்லாத நூல்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுக்கே மிகுதியான வாசகர் உள்ளனர்." - பெருமாள் முருகன்
###
எனக்கு பெருமாள் முருகனின் இக்கருத்துடன் மிகுந்த உடன்பாடுண்டு. புனைவுடன் புனைவல்லாத எழுத்தையும் சமமாக மதிக்கும் ஒரு சமூகமே சமநிலை கொண்டதாக, அறிவில் சிறந்ததாக இருக்கும். புனைவல்லா எழுத்தாளர்களில் தத்துவம் குறித்து எழுதிய பெர்ட்னெண்ட் ரஸலின் நடை மிக நயமானது, சிலாக்கியமானது, வைரம் போல மின்னுவது. நீட்சேயின் மொழி நெருப்பால் எழுதப்பட்டதைப் போன்றிருக்கும். தமிழின் சிறந்த புனைவல்லாத நடை துள்ளலும் விளையாட்டுத்தனமும் நக்கலும் கிண்டலும் மிக்கதாக இருக்கும் - புதுமைப்பித்தன், சுஜாதாவில் இருந்து சாரு வரைச் சொல்லலாம். சுஜாதா நவீன கவிதையின் உத்தியை தன் உரையை எழுத பயன்படுத்தினார். ஆனால் மேற்கே உள்ளதைப் போன்ற சிந்தனை ஆழம் மிக்க புனைவல்லா எழுத்தாளர்களை நாம் அதிகமாக உருவாக்கவில்லை. நமது சிறந்த புனைவல்லா எழுத்தாளர்கள் ஒன்று புனைவுக்கும் கவிதைக்கும் அரட்டைக்கும் நடுவிலுள்ள வெளியில் வசித்தவர்கள் அல்லது பத்திரிகைத்தனமாக வறட்சியாகவோ "வணக்கம்" என நிர்மலா பெரியசாமித்தனமாக மிகையுடன் எழுதியவர்கள். தமிழில் இப்போதும் பல்வேறு துறைகள் சார்ந்து எழுதவதற்கான மொழியோ கலைச்சொற்களோ கூட இன்னும் உருவாகவில்லை. வேறு இந்திய மொழிகளில் சுத்தமாக கலைச்சொற்களே இல்லை. இதையெல்லாம் சரிசெய்ய புனைவல்லா எழுத்தாளர்களை நிறைய ஊக்கப்படுத்த வேண்டும், விருதுகள், அங்கீகாரம் அளிக்கவேண்டும்.
- ஆர். அபிலாஷ்
Comments