முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கியமும் தீமையும் - ஜார்ஜ் பத்தாய்



கேள்வியாளர்: இலக்கியமும் தீமையும் பிரிக்க முடியாபடி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையா?


ஜார்ஜ் பத்தாய்: தீமையில் இருந்து இலக்கியத்தைப் பிரித்துவிட்டால் அது அலுப்பூட்டுவதாகும். இலக்கியம் அடிப்படையில் பரிதவிப்பைப் பேசுவது. பரிதவிப்பு ஒன்று நிச்சயமாக தவறாகவே போகும் எனும்போது தோன்றுவது. தவறாகப் போவது தீமையாகிறது. நான் இதை எளிமைப்படுத்திச் சொல்கிறேன் என்றாலும் இப்படிப் புரிந்துகொள்ளலாம்: நீங்கள் வாசகரிடம் எல்லாம் தீமையில் போய் முடியுமென்றோ அவர்கள் படிக்கும் கதையில் அவர்கள் அக்கறை கொள்ளும் பாத்திரங்கள் தீமையான முடிவை நோக்கிப் போகிறார்கள் என்றோ காட்டும்போது அவர்கள் இதமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவான நெருக்கடிதான் இலக்கியத்தை சுவாரஸ்யமாக்குகிறது.


கேள்வியாளர்: இலக்கியம் தீமையைப் பற்றியது என்றால் அதை எழுதும் எழுத்தாளர் தாம் செய்வது தவறு எனும் குற்றவுணர்வை அடைவதுண்டா? 


ஜார்ஜ் பத்தாய்: உண்டு. இலக்கியம் எழுதுவது ஒரு வேலையாக அதனால்தான் இருக்க முடியாது.


கேள்வியாளர்: அப்படிக் குற்றவுணர்வு கொண்ட படைப்பாளிகளின் பெயர்களைச் சொல்ல முடியுமா?


ஜார்ஜ் பத்தாய்: இருவரைச் சொல்லலாம். அவர்களைப் பற்றி என் நூலில் எழுதியிருக்கிறேன். ஒருவர் போத்ரிலியர். அவர் தனது கவிதைத் தொகுப்புக்கு "தீமையின் மலர்கள்" எனத் தலைப்பிட்டதே இதனால்தான். அடுத்து காப்கா. அவர் தான் எழுதுவதே தீமை எனும் உணர்வைக் கொண்டிருந்தார். ஏனென்றால் வாழ்க்கையை வியாபாரச் செயல்பாடுகளில் ஈடுபட்டு சம்பாதிக்க பயன்படுத்தாமல் எழுதச் செலவிடுது தீமையானது என்று அவரது குடும்பத்தினர் அவருக்கு உணர்த்தியபடியே இருந்தனர்.    


கேள்வியாளர்:  எழுதுவது குற்றமெனக் கருதப்பட்டால் போத்லியருக்கும் காப்காவுக்கும் எழுதுவதே பொறுப்பற்ற செயலாகிறதுதானே... 


ஜார்ஜ் பத்தாய் குறுக்கிட்டு: அவர்களது குடும்பத்தினர் தாம் அவ்வாறு கருதினர்.


கேள்வியாளர்: இந்த குற்றவுணர்வே குழந்தைத்தனமானது எனும்போது காப்காவும் போத்ரிலியரும் இலக்கியம் எழுதுவதை குழந்தைத்தனமானது எனக் கருதினார்களா?


ஜார்ஜ் பத்தாய்: அவர்கள் தமது பெற்றோர் முன்பு ஒரு குழந்தையைப் போல உணர்ந்தார்கள் என்பது இதைத் தெளிவாக்கும். அவர்கள் சேட்டைகள் செய்து அதனால் குற்றவுணர்வு கொள்ளும் குழந்தையைப் போல உணர்ந்தனர். ஏனென்றால் அக்குழந்தை தனது பெற்றோர், அவனுக்கு மிகவும் பிடித்தமான பெற்றோர், அவன் ஒருபோதும் செய்யக்கூடாது என்று சொன்னதையே அவன் செய்து வந்தான். இதுதான் அதன் ஆகத்தீவிரமான பொருளில் தீமையாக இருக்கிறது.


கேள்வியாளர்கள்: எழுத்தாளர்கள் எழுதும்போது குற்றவுணர்வு கொள்கிறார்கள் எனில், இலக்கியமே குழந்தைத்தனம் என்றாகிறது அல்லவா?


ஜார்ஜ் பத்தாய்: இலக்கியத்தின் அடிப்படையாக சிறுபிள்ளைத்தனம் உள்ளது. நமக்கு இலக்கியம் மீதுள்ள பெருமரியாதைக்கு, எனக்குள்ள பெருமதிப்புக்கு, இது முரணாக இருக்கலாம். ஆனால் இது மிக அடிப்படையான, ஆழமான உண்மையென்று கருதுகிறேன். இலக்கியம் உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்து பார்த்தாலே உங்களுக்கு விளங்கும் (கீழான பார்வையில் இருந்து என்று நான் குறிக்கவில்லை).  


கேள்வியாளர்: பாலின்ப எழுத்து பற்றி நூலொன்றை எழுதியிருக்கிறீர்கள். பாலின்ப இலக்கியமும் குழந்தைத்தனமானதுதானா?


ஜார்ஜ் பத்தாய்: இலக்கியம் பாலின்ப எழுத்தில் இருந்து அவ்விதத்தில் வேறுபடுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் பொதுவாக பாலின்ப எழுத்திலுள்ள குழந்தைமையைப் புரிந்துகொள்வது அவசியமானது என நினைக்கிறேன். பாலின்ப கிளர்ச்சியை அடைவது தடைசெய்யப்பட்ட விளையாட்டை ஆடுவதாக ஒரு குழந்தை கற்பனையில் திளைப்பதைப் போன்றது. பாலின்ப கிளர்ச்சியின்பால் பெரும் ஈர்ப்பு கொள்வது தன் பெற்றோர் முன் ஒரு குழந்தை இருப்பதைப் போன்றது. தனக்கு எதாவது நடந்துவிடுமோ என அவன் அஞ்சுகிறான். அஞ்சுவதற்கான காரணம் சரியாக கிடைக்கும்வரை அவன் நிறுத்தப் போவதும் இல்லை. இயல்பான வளர்ந்தவர்கள் செய்வதை செய்தால் மட்டும் அவனுக்குப் போதாது, அவனுக்கு பீதியடைய வேண்டும். ஒரு குழந்தையாக எப்போது வேண்டுமெனினும் சாடப்படலாம், தாள முடியாத அளவுக்குத் தண்டிக்கப்படலாம் எனும் தீவிர அச்சத்தை அவன் உணர வேண்டும். 


கேள்வியாளர்: நீங்களும் நானும் பேசுவதைப் பார்க்கும்போது குழந்தைத்தனத்தை நீங்கள் கண்டிப்பதாக உணர்வு ஏற்படலாம். அதனாலே நாம் உங்கள் நூலின் தலைப்புக்குப் போக வேண்டும் என நினைக்கிறேன்: "இலக்கியமும் தீமையும்". நீங்கள் அதில் இலக்கியத்தையோ தீமையையோ கண்டிக்கவில்லை. அதிலுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?


ஜார்ஜ் பத்தாய்: அது ஒரு எச்சரிக்கை. இலக்கியம் ஆபத்தானது என அது சொல்கிறது. ஆனால் அதை உணர்ந்தபின்னர் அதைத் துணிந்து எதிர்கொள்வதே சரியானது. இலக்கியமெனும் தீமையை நாம் துணிந்து நேர்கொள்வது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதை நீங்கள் சந்திக்கவில்லை எனில் நீங்கள் மனிதராகவே இருக்க முடியாது எனும்படியான மிகப் பெரிய, அசலான ஆபத்து அது. இலக்கியத்தில் மனிதனைக் குறித்த முழுமையான் பார்வையை நாம் பெறுகிறோம்.  மனித இயல்பின் பின்னுள்ள வன்முறையைக் காணாமல் வாழ்வதற்கு இலக்கியம் நம்மை அனுமதிக்காது. ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களும், அந்த வகைமையைச் சேர்ந்த பிற படைப்புகளும் இதற்கு உதாரணமாகும்.  

மிக மோசமான நிலையைக் காட்டி அதை எதிர்கொள்ள நமக்குக் கற்றுத் தருவது இலக்கியமாகும். சுருக்கமாக, இந்த விளையாட்டை ஆடுகிறவருக்கு அது ஏற்படுத்தும் திகிலை முறியடிக்கும் ஆற்றலை இவ்விளையாட்டே அளிக்கும்.


(1958இல் ஜார்ஜ் பத்தாய் அளித்த டிவி நேர்முகத்தின் தமிழாக்கம் - ஆர். அபிலாஷ்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...