முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலியின் தடுமாற்றம்

விராத் கோலி தில்லிக்காக ரஞ்சி ஆட்டத்தில் 6 ஓட்டங்களில் அவுட் ஆன காணொளியைப் பார்த்தேன். நியுசிலாந்து டெஸ்ட் தொடர் முதலே அவரிடம் ஒரு பிரச்சினையை கவனிக்கிறேன் - அவர் பந்தின் நீளத்தை சரியாகப் பார்ப்பதில்லை. சில நேரங்களில் பந்தின் திசையையும் கணிப்பதில்லை. இந்த பந்து ஆறாவது குச்சியில் விழுந்து உள்ளே வருகிறது. அதை கோலி கவர் டிரைவ் செய்யும் நோக்கில் மட்டையைத் தூக்கிக் கொண்டு லெக் ஆண்ட் மிடிலில் நிற்பதைப் பாருங்கள். உள்ளே வரும் பந்தை யாரும் அப்படி விரட்ட மாட்டார்கள். அதுவும் பந்துவீச்சாளர் குச்சிகளுக்கு நேராக வரும்போது பந்து நேராகவோ உள்ளாகவோ தாம் வரும். இது பாலபாடம்.

சரி அதையும் விடுவோம். பந்து ஸ்விங் ஆகாது என்று அவர் நினைத்தால் கவர் பகுதியில் ஆடும்படி அவரது தலை முன்னங்காலை நோக்கி கவர் பக்கமாகத் தானே போக வேண்டும். ஆனால் கோலியின் தலை அவரது இடப்பக்கம் சரிகிறது. மட்டையின் இறக்கமோ கீப்பரின் பக்கமிருந்து கீழே வருகிறது. அது கவர் டிரைவுக்கானது என்றால் ஷாட் நேரான டிரைவுக்கானது. இப்படி அவர் ஒரு ஷாட்டை அடித்தால் கையும் தலையும் வேறிரு ஷாட்களுக்காக தயாராகின்றன. முக்கியமாக அவர் பந்தின் திசையை பந்து விழும் முன்னரே கால்வினாடியில் கணிக்கிற திறனை இழந்துவிட்டார். எப்போதாவது அவரது பார்வையும் தலையும் காலாட்டமும் சரியாக அமையும்போது அழகான ஷாட்களை ஆடுவார். மற்ற சமயங்களில் பந்தை டி ராஜேந்தர் தன் நாயகியைப் பாடல் காட்சியில் லவ் பண்ணுவதைப் போலத்தான் அடிக்கிறார். 

பிரச்சினை ஆட்டநிலையிலோ கவனத்திலோ இல்லை. அவரது பார்வையில் ஏதோ பிரச்சினை உள்ளது. திராவிட்டுக்கும் அவரது ஓய்வுக்கு முன்பான ஓராண்டு காலத்தில் இப்பிரச்சினை தோன்றியது. ஆனால் அவர் மீண்டு வந்தார். நியுசிலாந்தின் ரோஸ் டெய்லர், தென்னாப்பிரிக்காவின் ஹஷீம் ஆம்லாவுக்கும் கண் பிரச்சினை ஏற்பட்டு ஆட்டத்தை பாதித்தது. விராத் கோலியின் இப்பிரச்சினையைப் பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன்னரே கபில் தேவ் ஓரிடத்தில் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. 

சிலநேரங்களில் இம்மாதிரி குறைகளுக்கு நேரடித் தீர்வு இல்லையென்றால் வீரர்கள் அதை வைத்துக்கொண்டே ஆட முயல்வார்கள். தம் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பார்கள். பிடிவாதமாக முயன்று கொண்டே இருப்பார்கள். ஒருவேளை கோலிக்கும் நடப்பது அதுவாக இருக்கலாம். 

பாவமாக இருக்கிறது! இவரைப் போய் ஏன் ரசிகர்கள் திட்டுகிறார்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.