ஜனவரி 2025 உயிர்மை இதழில் நண்பர் யுவகிருஷ்ணா எழுதியுள்ள “எத்தனை பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்?” எனும் கட்டுரை அடிப்படையான பிழையைக் கொண்டது. பெண்கள் அதிகமாக வேலைக்குப் போவதாகத் தெரிவது ஒரு தோற்றப்பிழை, உறுதிப்படுத்தல் பாரபட்சம் என்று சொல்லும் அவர் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெரும்பாலான பெண்களுக்கு நல்ல வேலைகள் கிடைப்பதில்லை, அவர்கள் குறைவான ஊதியமுள்ள பணிகளிலே இருக்கிறார்கள் என்கிறார். முதலில், இந்த வாதத்தை ஆண்களுக்கும் பொருத்திப் பார்த்தால் பல்லிளித்துவிடும்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 80% மேல் மக்கள் முறைசாரா பணிகளிலே உள்ளார்கள் என்பது புள்ளிவிபரம். அவர்களில் கணிசமானோர் ஆண்களே என்று யுவ கிருஷ்ணா சொல்வதாக எடுத்துக்கொண்டால் இந்தியாவில் பெரும்பாலான ஆண்கள் கல்வியற்றவர்களாக இருந்து அடிப்படையான பாதுகாப்போ வருமானமோ இல்லாத பணிகளில் இருக்கிறார்கள், உலகமயமாதலும் நவீன மாற்றங்களும், சமூகநலத்திட்டங்கள் வீழ்ச்சி அடைந்துவிட்டன என்றாகும். இந்த அவலச் சூழலில் பெண்கள் மட்டுமென்ன எல்லாரும் ஐ.ஐ.டியில் படித்து இன்போஸிஸில் சேர்வார்களா? அவர்களும் குட்டையில் மட்டைகள்தாமே.
இம்மாதிரிக் கட்டுரைகளின் பிரச்சினை இவை பெண்களை ஒட்டுமொத்தமாக ஒற்றைப்படையான கூட்டமாகப் பார்க்கிறது என்பதே. பெண்களை அவர்களது கல்வி, வேலைப் பங்களிப்பு ஆகியவற்றைப் பொறுத்து நாம் சாராம்சப்படுத்தவே முடியாது - வர்க்கரீதியாகப் பார்ப்பதே சரியானது. இந்தியாவில் நாம் சாதி-ரீதியாகப் பார்ப்பது இன்னும் நல்லது. உதாரணமாக, உலகம் முழுக்க இன்று பள்ளிப் படிப்புத் தேர்வில் அதிகமாக வெல்கிறவர்கள் பெண்களே. உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் சேர்கிறார்கள் எனத் தரவுகள் சொல்கின்றன. இதைக் குறித்து இந்திய இதழ்களிலே கட்டுரைகள் வந்துள்ளன. ஆனால் இதையும் பொத்தாம்பொதுவாகச் சொல்ல முடியாது. நகர்ப்புறத்திலும் கிராமப்புறத்திலும் இந்த எண்ணிக்கை மாறுபடும். முக்கியமாக, வர்க்கரீதியாகப் பார்த்தால் மத்திய, மேல்மத்திய, மேற்தட்டுப் பெண்கள், மத்திய, உயர்சாதிப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் நிறுவனங்களில் வெள்ளைக்காலர் வேலையில் இருப்பார்கள். ஆனால் கீழ்த்தட்டைச் சேர்ந்தவர்கள் மிகக்குறைவாக இருப்பார்கள். உ.தா., வருடத்திற்கு ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் பெற்றோரின் பெண் குழந்தைகள் இன்போசிஸிஸில் அனேகமாக இருக்கவே மாட்டார்கள். அதேபோல உயர்பதவியிலும் பெண்களின் எண்ணிக்கையில் சாதிரீதியான வித்தியாசம் இருக்கும். மேலை நாடுகளை எடுத்துக்கொண்டால் வெள்ளையினப் பெண்களுக்கும் கறுப்பினப் பெண்களுக்கும் வேலை, கல்வியில் பிரதிநுத்துவத்தைப் பொறுத்தமட்டில் பாரித்த வேறுபாடு இருக்கும்.
இது ஏன் முக்கியமென்றால் பாலினங்களில் வர்க்கத்தையும் சாதியையும் பொறுத்து அதிகாரம் மாறும். மேல்மத்திய, மேற்தட்டுப் பெண்கள் நூறு பேரை எடுத்துக்கொண்டு அவர்களை கீழ்மத்திய வர்க்க, கிழ்த்தட்டைச் சேர்ந்த நூறு ஆண்களுடன் ஒப்புக்கொண்டால் பெண்களே அதிக வாய்ப்புகளையும் அனுகூலங்களையும் கொண்டிருப்பார்கள்.
யுவகிருஷ்ணா இங்கு குறிப்பிடும் பாரபட்சம் இன்று அமைப்புசாரா தொழிலாளிகளுக்கு, உடலுழைப்புப் பணியாளர்களுக்கே பொருந்தும். இந்த வேலைகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் அலுவலகப் பணிகளில் பெண்கள் அதிகமாகவும் அமைப்புசாரா பணிகளில் ஆண்கள் அதிகமாகியும் வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அமைப்புசாரா, அதிக ரிஸ்கையும் உடலுழைப்பையும் கோரும் பணிகளில் ஏழைப்பெண்களே பங்கெடுக்கிறார்கள். அப்பணிகளில் இருக்க பொதுவாக விரும்புவதில்லை. லாரி ஓட்டுபவர்களாகவும், தொழிற்சாலையில் கடுமையான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபடவும் பெண்கள் விரும்புவதாகவும் அதைச் சமூகம் தடுப்பதாகவும் யுவ கிருஷ்ணா காமிடி பண்ணுகிறார். இது உண்மையெனில் தூய்மைப் பணியாளர்களாக பெண்கள் எப்படி இருக்கிறார்கள்? இதைப் புரிந்துகொள்ள யார் அப்பெண்கள் (சாதி, வர்க்கம்), அப்பணியை ஏற்க அவர்களின் உத்தேசம் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். வடக்கிந்தியாவில் பட்டம் பெற்றவர்களும் கட்டுமானப்பணிகளுக்குப் போவதாக செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் தென்னிந்தியாவிலோ வடக்கிலோ பட்டம் பெற்ற ஒரு பெண் அவ்வளவு சீக்கிரம் - வாழ்வதற்கான அடிப்படை வசதியுள்ளதெனில் - தன் தகுதிக்குக் குறைவான பணிக்குச் செல்லமாட்டாள். ஏனென்றால் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமெனும் அழுத்தம் ஆண்களுக்கு உள்ளதைப் போல பெண்களுக்கு இல்லை. வேலையிழந்ததால், கடன் தொல்லையால் தற்கொலை செய்த எத்தனையோ ஆண்கள் உண்டு, ஆனால் மிகமிக அரிதாகவே அத்தகைய பெண்களைப் பார்க்க முடியும். அதேபோல, முடிதிருத்தும் பணியிலும் அதிக சம்பளம் வரும் மேற்தட்டு, மேல்மத்திய தட்டு சலூன்களிலே பெண்கள் இருக்கிறார்கள். கீழ்த்தட்டில் அல்ல. சாரத்தில் பத்தாவது மாடியில் இருந்து தொங்கும் கட்டுமானப் பணியில் இருக்க மாட்டார்கள். விபத்து நேர வாய்ப்புள்ள பணிகளில் இருக்க மாட்டார்கள் (ஏனென்றால் அறிவியல்பூர்வமாகவே எதிர்காலத்தைப் பரிசீலித்து தீர யோசித்து முடிவெடுப்பதில் பெண்கள் ஆண்களை விட திறனானவர்கள்.). ஒரு பெண் இதைச் செய்வதாக முன்வந்தால் யாரும் தடுக்கப் போவதில்லை. யார் செய்தாலும் வேலை நடக்க வேண்டுமென்றே முதலாளி நினைப்பார். பெண்கள் ஸொமொட்டோ டெலிவரி செய்வதை யார் தடுக்கிறார்கள்? ஆனால் தமக்கு இயலுமென்றாலும் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்யத் தயங்குவார்கள். எங்காவது நகரத்தில் பெண்கள் மலக்குழியில் இறங்கிப் பணிசெய்வதையோ விஷவாயு தாக்கிச் சாவதையோ பார்த்திருக்கிறார்களா?
கீழ்மத்திய வர்க்கத்திலோ கீழ்த்தட்டிலோ கூட பெண்கள் ஒன்று அடிப்படைப் படிப்பை படித்துவிட்டு சின்ன வேலைகளுக்குப் போகிறார்கள். அல்லது கல்யாணம் பண்ணிக்கொண்டு வீட்டுச்செலவுக்கான உபரிப் பணத்துக்காக பத்துப்பாத்திரம் தேய்க்கிறார்கள்.
மேலும் இதையும் வர்க்கரீதியாகவே பார்க்கவேண்டும் என்பேன். ஏனென்றால் இது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது. கீழ்த்தட்டில் இப்பணிகளையும் செய்யப் பெண்கள் முன்வருவார்கள். முன்பு ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களும் மலம் அள்ளும் பணியைச் செய்ததுண்டு.
மேற்கில் நடந்த ஆய்வில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பெண்கள் அதிகமாக பள்ளி /பட்டப்படிப்பை முடிப்பதால் ஆண்களே ஆபத்தான, அதிக துன்பமான, கடும் உழைப்பைக் கோரும் பணிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆண்களே விரைவில் உடல்நலிந்து இறந்தும் போகிறார்கள் (இது குடியினால் மட்டுமல்ல). இதை நீங்கள் இந்தியாவுக்கும் பொருத்தலாம்.
இந்தச் சூழலில் குறைவான ஊதியமுள்ள கடுமையானப் பணிகள் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன என்பது அபத்தமான வாதமாகும்.
இதை வைத்து பெண்கள் வேலையிடத்தில் இல்லை எனக் கூறுவதும் புள்ளிவிபரத்தைத் திரித்துப் பேசுவதாகும். எவ்வர்க்கப் பெண்கள் எம்மாதிரிப் பணிகளில் குறைவாகவோ கூடுதலாகவோ உள்ளனர், அவர்கள் எம்மாதிரிப் பணிகளை ஏற்க விரும்புகிறார்கள், ஏற்க விரும்பவில்லை என ஆராய்ந்து பேச வேண்டும்.
அடுத்து, இச்சூழல் வெகுவிரைவில் மாறும் என நினைக்கிறேன் - இந்தோனேஷியாவில் பட்டப்படிப்பை முடித்து கொத்தனாராக வேலைபார்க்கும் இளைஞர் ஒருவரின் நேர்முகத்தைப் பார்த்தேன். "கடைகளிலோ சிறிய நிறுவனங்களிலோ நின்று செய்யும் வேலைக்குப் போனால் மாதம் 12,000-15,000 கொடுப்பார்கள். ஆனால் கொத்தனார் பணியில் நான் அச்சம்பளத்தை இரண்டு வாரங்களில் ஓவர் டைம் செய்து சம்பாதிப்பேன்." என்று தன் விருப்பத்தேர்வின் காரணத்தை அவர் சொன்னார். பொருளாதாரம் நலிவடைந்து வேலைகளும், ஊதியமும் குறையும்போது இத்தகைய முடிவுகளைப் படித்த பெண்கள் இனி எடுத்தாலும் நான் வியப்படைய மாட்டேன். ஏனென்றால் வேலைச்சந்தைக்குள் வந்து சம்பாதிப்பதன் ருசியைக் கண்டுவிட்ட நிலையில் பொருளாதாரம் நலிந்து வேலைகள் குறையும்போது, பணவீக்கமும் செலவுகளும் அதிகமாகும்போது வெள்ளைக்காலர், நீலக்காலர் வேலைதான் வேண்டும், பிரச்சினையில்லாத வேலைபோதும் எனக் கோர மாட்டார்கள். இந்தப் போக்கை இப்போதே காண ஆரம்பித்துவிட்டோம். இங்கு வேலையில் பாலின பேதம் உள்ளதாக சொல்லப்படுவது நிஜம் அல்ல. மாறாக வேலைத்தேர்வில், அத்தேர்வைச் செய்வதற்கான சமூகப் பாதுகாப்பில் 'பாலின பேதம்' உள்ளது. பணம்தான் பல்வேறு போக்குகளைத் தீர்மானிக்கிறது, சமூக அமைப்பல்ல. ஏனென்றால் சமூக அமைப்பும், அதன் கதையாடல்களும் முதலீட்டியத்தின் தேவைக்கேற்பவே உருவாக்கப்படுகின்றன.
இன்னொரு பிரச்சினை உள்ளது:
‘பொதுவான பெண்கள்’ என்றிங்கு யாருமில்லை. பொதுவான வாழ்க்கையும் இல்லை. ஒரு பெண் சோபாவில் கால் நீட்டி இருக்க இன்னொரு பெண் பத்துப் பாத்திரம் தேய்க்கிறாள். இருவருமே ஒரேமாதிரி ஒடுக்கப்பட்டவர் அல்லர். உயர்த்தட்டைச் சேர்ந்த ஜெயம் ரவி விவகாரத்தில் மனைவியை ஒடுக்கப்பட்டவர் என்று கூறமுடியாதல்லவா? மேல்மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த அதுல் சுபாஷின் மனைவியும் அவரது தற்கொலைக்குப் பின்னர் 'ஒடுக்கப்பட்ட பெண்' அல்ல. நீதிபதியே கூட இதை ஏற்க மாட்டார். இன்று நான் மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தேன். தினமும் காலையில் எழுந்து தோசை சுட்டு டப்பாவில் போட்டு எடுத்து வருகிறேன், இந்த அமைப்புக்குள் நான் சுரண்டப்படுகிறேன் என்று அவர் சொன்னார். ஆள்வைத்துக்கொள்ள வேண்டியதுதானே என்று நான் கேட்டால் “நாங்க ஆர்த்தெடக்ஸ். நாங்களே தான் செய்யணும்” என்றார். இவரையும் மாதம் 10,000-20,000 சம்பாதிக்கும் பெண்ணையும் நான் ஒப்பிட மாட்டேன். முன்னவரை நான் ‘பாதிக்கப்பட்ட பெண்’ எனும் பட்டியலுக்குள்ளே கொண்டு வரமாட்டேன். ஆனால் அவர்தான் அதிகமாக தான் அதிகமாக அதைக் கோருவார்.
ஆகையால் நாம் சூழலை, சந்தர்ப்பத்தை, வர்க்க நிலையை, சாதியதிகாரத்தைக் கருதியே பாலினத்தை இன்று வரையறுக்க முடியும். அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் எப்படி இருக்கிறார் எனும் கருதுகோளுக்கு நிஜவாழ்க்கையில் எந்த மதிப்பும் இல்லை என்பதே உண்மை. யாரும் இங்கு 'பொதுவான பெண்ணோ ஆணோ' அல்ல (பொது அடையாளத்தில் இருப்பவர்களிடமே மொத்த அதிகாரமும் உள்ளதால் அவர்கள் தனியடையாளத்தை அழிக்க நினைக்கிறார்கள்.). பொதுவான ஆண் / பெண் ஒருவித கற்பிதம், உத்தேசம். அதில் உறுதிப்படுத்தல் பாரபட்சம் (confirmation bias) தோன்ற வாய்ப்பதிகம். ஆனால் நடைமுறையில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட தனித்துவமான வாழ்க்கையையே வாழ்கிறோம். அதைப் பொதுவான உத்தேச பிம்பத்துடன் பொருத்த முடியாது. யுவகிருஷ்ணா எழுதியுள்ளதைப் போன்ற கட்டுரைகளை ஆயிரக்கணக்கில் கடந்த அரைநூற்றாண்டாக நாம் தமிழில் எழுதி வருகிறோம். ஆனால் பெண்களுக்கான பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்துவது இன்றும் ஏழை, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களல்ல. மேற்தட்டு உயர்சாதிப் பெண்கள்தாம் (மேற்குலகில் வெள்ளையினப் பெண்கள்). ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வரும்போது நாம் ஏழை, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களையே பரவலாகக் குறிப்பிடுவோம்.
இப்படி, பெண்களின் உரிமைப் போராட்டத்தை வர்க்க, இன-ரீதியாகப் பார்க்காமல் விடுவதால் ஆதிக்கவாதப் பெண்கள் அதன் பலன்களை ஆட்டையப் போடுவதைப் பற்றி கறுப்பினப் பெண்ணியம் பேசியுள்ளது. அவர்கள் அதனால் பெண்ணியத்தின் இடத்தில் womanism என்பதைக் கொண்டு வந்தனர். கறுப்பினப் பெண்கள் தனிமனிதர்கள் அல்ல, அவர்களுக்கு குடும்பமும், சமூகமும், தேவாலயமும் எப்படி முக்கியமாக இருக்கிறது, வெள்ளையினப் பெண்களின் பார்வையில் இருந்து மட்டும் பெண்ணியம் பாகுபாட்டைப் பார்ப்பதாலே அசலான பாகுபாடு தோன்றுவதாக எவ்லின் ஹேமண்ட்ஸ், ஆலிஸ் வாக்கர், ஏஞ்சலா டேவிஸ் கூறினர். குறிப்பாக, விர்ஜினியா வூல்பின் "எனக்கான ஒரு அறை" எனும் கட்டுரையில் அவர் ஒரு பெண்ணாக தனக்கு எழுத்துலகில் இடமே இல்லை, அதைத்தானே புதிய மொழியொன்றை உருவாக்கி கடமைக்க வேண்டியுள்ளது எனக் கூறினார். இதை விமர்சித்த வாக்கர் 18, 19 ஆம் நூற்றாண்டிலே மகத்தான கறுப்பினப் பெண் கவிகள் இருந்துள்ளனர், அவர்கள் எழுதியது பெண்மொழி அல்லவா, அவர்கள் வாழ்ந்த அடிமை வாழ்க்கையும் அதை மீறி எழுதியதும் ஏன் வூல்பின் கண்ணிற்படவில்லை என்று கேட்டார். இந்தியாவிலும் பெண்ணியம் மார்க்ஸியத்துக்கும், தலித்தியத்துக்கும், சாதி, மத ஒழிப்பு இயக்கங்களுக்கு வெளியே நகர்மயமான மேற்தட்டு, ஆதிக்கச் சமூகப் பெண்களாலே உருவாக்கப்பட்டது என்பது தலித் பெண்ணியவாதிகளின் வருத்தம். "Some scholars and activists have been responsible for making caste only valid. They have transformed the caste question into the Dalit question alone. As such, they have completely ignored the relationality between Suvarnas and Dalits.
They're remarkably silent on Suvarna anxieties about caste sociality, which serve to mark other Indian communities as violent, anti-national, and foreign. They are thus complicit in perpetuating the myth of perceived unmarkedness as castelessness and thereby becoming casteless and burdening Dalits with caste. The larger society has also invisible eyes to contributions of Dalit women and suppressed her ideas and intellectual activism. As a result, many Dalits are frustrated and angry that some Suvarna scholars build their careers in Dalit studies, without serious engagement with Dalit lives, or commitment to Dalit politics and social change." என்று ஷைலஜா பாயிக் சொல்வதை கவனியுங்கள். பாலின பேதங்களை, சாதியை மறைத்துப் பேசுவதன் வழியாக "குறிக்கப்படாத" அடையாளமற்ற சமூகமொன்றை வெளியே உருவாக்கி சாதியமைப்பை வலுப்படுத்தும் பணியைத்தான் சூத்திரப் பெண்ணியவாதிகளும், அவர்களுடைய அமைப்புகளும் செய்து வருவதாக ஷைலஜா கூறுவது முக்கியமானது. அவர் சொல்வதைப்போல தலித் நிலையை, தலித் எழுத்தைப் பற்றிப் பரவலாகப் பேசி, எழுதி கல்விப்புலத்தில் தலித் துறைகளில் ஆதிக்க சாதியினரே இருக்கிறார்கள். அதாவது முதலில் பொதுமைப்படுத்தி, சாதி, வர்க்க அடையாளக் குறிகளை ஒழித்து பாதிக்கப்பட்டவர்களைக் காணாமல் அடிக்கிறார்கள். அடுத்து அவர்களுக்கு உரித்தான இடத்தை இவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். தமிழில் கவனித்தோமானால் கபளீகரப் பணியைச் செய்பவர்கள் மத்தியசாதி, ஆதிக்கச் சாதி ஆண்களே. அவர்களுக்கு அடுத்தபடியாகவே மத்திய, மேற்தட்டு ஆதிக்கச் சாதிப் பெண்கள் வருகிறார்கள். அல்லது செல்வாக்கு மிக்க பணக்கார தலித் பெண்கள் (மீனா கந்தசாமி நல்ல உதாரணம்). இந்தச் சிக்கல்கள் ‘முன்னேற்றப் பாதையில்’ வரும் இயல்பான தடைகள் அல்ல. இவை அடையாளமற்ற சாராம்சப்படுத்தப்பட்ட பாலினக் கதையாடல்களின் விளைவேயாகும். ஒட்டுமொத்தமாக பாலின மக்களை ஒற்றை அடையாளத்துக்குள் அடக்கி முடிவுக்கு வரும்போது நடக்கும் அதிகாரச் சுரண்டலும் கருத்தியல் ஊழலுமாகும்.
கடந்த அரைநூற்றாண்டாக பத்திரிகைகளிலும் காட்சி ஊடகத்திலும் பேசப்பட்ட பொதுவான பாலினக் கதையாடல்களைக் கொண்ட‘மொட்டையான’ கட்டுரைகளின், புனைவுகளின் விளைவாகவே இன்று முன்னவரை (வாய்ப்பு வசதியில்லாத பெண்களை) வைத்துப் பின்னவர் ( வாய்ப்பு வசதியுள்ள) சலுகைகளைப் பெறுகிறார்கள். எதிர்காலத்தில் முன்னவர்களில் சிலர் - அதிர்ஷ்டத்தால், உழைப்பால் - நீந்தியேறி மேல்சமூகத்திற்கு வந்து சலுகைகளை அனுபவித்தாலும் பாதிக்கப்படும் பெண்கள் கீழ்த்தட்டில் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால் வர்க்கப்பிரச்சினையை பாலினப் பிரச்சினையாக திசைதிருப்பி நாம் ஒரு கூட்டத்தினரை மட்டும் குளிர்காய விடுகிறோம்.
Comments