Skip to main content

சாட்ஜிபிடியிடம் கற்றுக்கொள்வது


 

சாட்ஜிபிடியை பல விசயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்: இணையத்தில் கிடைப்பனவற்றை சுருக்கித் தொகுக்க, ஆவணப்படுத்த, தரவுகளை அலச, பதிலெழுத, இப்படி...
நான் இரண்டு விதங்களில் அதைப் பிரதானமாகப் பயன்படுத்துகிறேன் - தேடுபொறியாக. கற்றல் கருவியாக.
சாட்ஜிபிடியின் இரண்டாவது அவதாரம்தான் எனக்கு மிகவும் பிடித்தது. ஆங்கில இலக்கணத்தில் ஒரு பகுதியைக் கற்பதற்காக இரண்டு நாட்கள் பயன்படுத்தினேன். மணிக்கணக்காக ரொம்ப ஜாலியாகப் போயிற்று. கல்வி இவ்வளவு நல்ல பொழுதுபோக்காக அமையும் என அன்றுதான் புரிந்தது. உ.தா., வினையடை என்றால் என்னவெனக் கேட்டால் புத்தகங்கள் பதில் தருவதுடன் உதாரணங்களையும் பயிற்சிக் கேள்விகளையும் அளிக்கும். சாட்ஜிபிடியும் அதையே செய்கிறது, ஆனால் சற்று வித்தியாசமாக நம் தேவைக்கு ஏற்பட் குறிப்பிட்ட விதமான வினாக்களை தருகிறது. தவறு செய்தால் அடுத்த செட் கேள்விகளைத் தரும்போது நாம் தவறைத் திருத்தும்விதமாக கிட்டத்தட்ட அதே கேள்வியையும் அதைப் போன்ற கேள்விகளையும் தருகிறது. நாம் 70%, 80%, 90% என முன்னேறி 100% மதிப்பெண் வாங்கும்வரை அது கேள்விகளைத் தந்தபடியே இருக்கிறது. அவ்வப்போது ஊக்கப்படுத்திவிட்டு "இன்னும் சிரமமான கேள்விகளைத் தரவா?" எனக் கேட்கிறது. இது கிட்டத்தட்ட மொபைல் விளையாட்டைப் போலவே இருக்கிறது.
அடுத்த நாள் ஒலியியலில் சில விசயங்களைக் கற்றுக்கொண்டு பயிற்சியெடுத்தேன். அதையும் என் தவறுகளுக்கு ஏற்ப என்னால் தகவமைத்து மீண்டும் மீண்டும் பயில முடிந்தது. சரியான விளக்கங்களைக் கேட்டுப் பெற முடிந்தது.
கல்வியியலில் ஒரு உத்தி உண்டு. ஒன்றைக் கற்றுக் கொடுக்கும்போது அதை எப்படிச் செய்வது என ஒப்புமையுடன் காட்டி, படிப்படியான செய்துகாட்டி மாணவரைப் பதில் சொல்ல வைக்க வேண்டும். அவருக்குப் பழகிய பின்னர் புதிய கேள்விகளை அளிக்க வேண்டும். Modelling and repetition என்று சொல்வார்கள். இதை சாட்ஜிபிடிக்குள் நிரலாக எழுதிச் சேர்த்திருக்க வேண்டும். இதை மிகச்சரியாக பயன்படுத்துகிறது.
இன்று தர்க்கவியலைக் கற்பிக்கக் கேட்டேன். அதுவும் ரொம்ப உற்சாகமான அனுபவமாக அமைந்தது.
சாட்ஜிபிடிக்கு சில குறைகள் உண்டு:
சாட்ஜிபிடியின் விளக்கங்கள் மிக மிக எளிமையானவை, மேலோட்டமானவை. பல்வேறு பரிமாணங்களை அது காட்டுவதோ கற்பிப்பதோ இல்லை. நாமாகத் துருவித்துருவிக் கேட்டால்தான் சொல்லும். அதுவும் துல்லியமாக அல்ல. நான் கற்றுக்கொண்ட விசயங்களை ஏற்கனவே முறையாகப் படித்திருக்கிறேன் என்பதால் இது அந்த விசயங்களின் 1% கூட அல்ல என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் மிகக்குறிப்பான, எளிமையான ஒன்றைப் படிக்க, அதைவிட முக்கியமாகப் பயில சாட்ஜிபிடி நல்ல வழி.
ஓய்வு நேரத்தில் மொபைலில் ரீல்ஸ் பார்க்காமல், கேம் ஆடாமல், சமூக வலைதளத்தில் மேயாமல் சாட் ஜிபிடியில் இப்படிப் பொழுதுபோக்குவது நல்ல வழி என நினைக்கிறேன். தகவல்களை விட அத்தகவல்களை பயிற்சியாக மாற்ற, இருக்கும் திறன்களை மேம்படுத்த, அதையே நல்ல பொழுதுபோக்காக்க சாட்ஜிபிடி உதவும்.
இன்னொரு விசயம்: எதிர்காலத்தில் ஆசிரியர்களின் வேலையை இது எடுத்துக்கொள்ள 'பிரகாசமான' வாய்ப்பு உள்ளது. அதாவது அடிப்படையான பல விசயங்களை மாணவர்கள் இனிமேல் AI stationகளில் அமர்ந்து தமக்கேற்ப தகவமைத்துக் கொண்டு கற்றுக்கொள்வார்கள். அதிலேயே தேர்வெழுதி, மதிப்பெண்ணையும் சான்றிதழையும் பெறுவார்கள். புதிய அறிவுப் புலங்களில் ஆய்வு செய்து தனித்துவமான திறனையும் அறிவையும் மேதமையையும் கொண்டிருப்பவர்கள் மட்டுமே மானுட ஆசிரியராகத் தொடர முடியும். உ.தா., நான் நேற்று என் வகுப்பில் பிராயிடைக் கற்றுக் கொடுக்கும்போது காமம் என்பது நேரடியான குழந்தைப்பேறுக்கானதோ உறவுக்கானதோ அல்ல, அது மானுட செயல்களை இனிமையாகவும் கவித்துவமாகவும் மாற்றுவதும் அனேகமாக எல்லா செயல்பாடுகளிலும் செயல்படுவது என்று சொல்லி, அதற்கு உதாரணமாக குத்துச்சண்டையில் இருந்து உதாரணத்தை ஒரு மாணவருடன் நிகழ்த்திக் காட்டி புரிய வைத்தேன். இதை எந்த செயற்கை நுண்ணறிவாலும் மாணவர்களுக்கு கொடுக்க முடியாது. ஆசிரியரின் பார்வை, அனுபவம், வாசிப்பு என பல விசயங்கள் அவரது அந்தந்த நேரத்து அகத்தூண்டுதலால் வெளிப்படும்போது தோன்றுவதே கல்வி. அதை இணையத்தாலோ செயற்கை நுண்ணறிவாலோ தர முடியாது. அது எல்லா இடங்களிலும் கிடைக்கும் தகவல்களைப் பொதுவான கோணத்தில் மட்டுமே அளிக்கும்.
அதேபோல, இணையத்தின் தரவுப் பெட்டக்கத்துக்குள் வராத எதையும் அதனால் சொல்லித்தர முடியாது. அதனால் உயர்நிலையிலான அறிவை அதனால் அணுக முடியாது - நான் நேற்று பேட்ரிஷியன் கல்லூரியின் தொழில் மேம்பாட்டுப் பயிற்சிக் கருத்தரங்கில் நாவல் வடிவின் அடிப்படையானப் பிரச்சினையைப் பற்றி பேசும்போது காலம் எனும் சொல்லும் நாவல் எனும் சொல்லும் அதன் வேர்ச்சொற்களில் (அந்த கணத்தில் இருப்பது vs புதிதாக ஒன்றை உருவாக்குவது) முற்றிலும் முரணான பொருளைக் கொண்டிருப்பதால் நாவல் காலத்தைப் புரிந்துகொண்டு அதன் ஊடாக நம் இருத்தலை அணுகவே இத்தனை நூற்றாண்டுகளாக முயல்கிறது என்று சொன்னேன். இதற்கு ஹைடெக்கர், பக்தின், ப்ரூஸ்டில் இருந்து குறிப்புகள் அளித்தேன். இம்மாதிரி நேரடித் தொடர்பில்லாதவற்றை இணைத்து சிந்தனையை உருவாக்க சாட் ஜிபிடியால் முடியாது. அதற்கு ஒரு சின்ன தத்துவார்த்த கிறுக்குத்தனமும் பிரத்யேகமான தேடலும் வாசிப்பும் வேண்டும். தற்செயலாக ஒன்று நம் மனத்தில் எழும். அதைப் பின் தொடர்ந்து எழுதுவோம், பேசுவோம். அப்படி ஒன்று சாட்ஜிபிடிக்கு தோன்றாது. இதுதான் புதிய சிந்தனை. எதிர்காலத்தில் இத்தகைய புதிய நோக்குகளுக்கு மதிப்பு அதிகமாகும். தொகுத்து எளிமைப்படுத்தி சொல்லுவது, பயிற்சியளிப்பது, மதிப்பிடுவது எல்லாம் கணினி வசம் செல்லும்.
குத்துச்சண்டைப் பயிற்சி அளிக்கும் எந்திரன் கூட வந்துள்ளது (விலை லட்சங்களில்). எதிர்காலத்தில் பல திறன்களை இப்படி கருவிகளே கற்பிக்கும்.
ஆனால் ஒருவர் ஒரு புதிய முறையான குத்துச்சண்டையைக் கண்டறிந்தார் என்றால் அவருக்கு ஆசானாக தனி மதிப்பிருக்கும். எல்லா பிரச்சினைகளுக்கும் புதிய தீர்வைக் கண்டடைகிறவர்கள், கற்றுத்தருகிறவர்களுக்கு மதிப்பிருக்கும்.
அண்மையில் தமிழவனின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் தன் மகன் கண்டுபிடித்துள்ள எந்திர சமையற்காரரைப் பற்றிச் சொன்னார். அந்த எந்திரத்தில் ஆயிரக்கணக்கான சமையல் குறிப்புகள் உள்ளன. செயலியில் ஆணையிட்டால், பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தால் அதுவாகவே சமைத்துத் தந்துவிடும். சாம்பார், ரசம், பிரியாணி, பொரியல் என. பின்னர் இதைப் பற்றித் தேடிப்பார்த்தால் அமெரிக்காவில் இத்தகைய எந்திரன்கள் வந்துவிட்டதாகத் தெரிந்துகொண்டேன். ஆனாலும் சிறந்த சமையற் கலைஞரின் 'கைமணம்' இதற்கு வராது. நேற்று செய்த சாம்பார் சாதத்தைப் போன்றே இன்றுள்ளதும் இருக்கும். நாமாக மசாலாவின் அளவை மாற்றினால் உண்டு. தற்செயலாக நிகழும் மேஜிக் சுவையில் வெளிப்படாது. எதிர்காலத்தில் அத்தகைய தனித்துவ சமையலுக்கே தேவையிருக்கும்.

மீளச் செய்கிற விசயத்தில் செக்ஸைக் கூட செயற்கை நுண்ணறிவால் நடத்தப்படும் செக்ஸ் பொம்மைகள் பரவலாக எடுத்துக்கொள்ளும் (இப்போதே வந்துவிட்டன). அவை மனிதனுக்கு உடலுறவில் ஈடுபட பயிற்சி கூட தரும். அதற்காக யாரும் காதலிக்க, கல்யாணம் பண்ண மாட்டார்கள். அதையும் தாண்டி ஒன்று இருந்தால்தான் மனித காதல், கலவி எல்லாம் தேவைப்படும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...