முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மயிரிழையில் வென்ற இந்தியா



டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். ஆனால் இங்கிலாந்து 5-14 வரையிலான ஓவர்களில் மட்டமாக ஆடி சுழலர்களுக்கு தேவையில்லாமல் விக்கெட் கொடுத்ததாலே சமநிலையற்ற பந்துவீச்சைக் கொண்ட இந்திய அணியிடம் தொடரை இழந்தது என நினைக்கிறேன். இந்த இந்திய அணியின் தேர்வு மிகச் சொதப்பலானது என அணித்தலைமையே ஏற்றுக்கொள்வார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒரே வேகவீச்சாளருடன் ஆடினார்கள். ஹர்த்திக் துவக்க ஓவர்களிலும் கடைசி ஓவர்களிலும் ரன் கொடுக்காமல் வீசுவார் என நம்பி களமிறங்கினார்கள். முக்கியமான கட்டத்தில் ஹர்த்திக்குக்கு காயம் ஏற்பட்டிருந்தால், சுழலர்களுக்கு இந்தளவுக்கு விக்கெட் விழாவிடில் இந்தியா கடைசி 5 ஓவர்களை யார் வீசுவது எனத் தெரியாமல் தத்தளித்திருக்கும். அம்மாதிரியான நெருக்கடிகளை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. துபேவும் ஹர்த்திக்கும் இருக்கும்போது இந்தியாவுக்கு அக்ஸர் பட்டேல் தேவையில்லை. ஆனால் அவர் துணைத்தலைவராக இருப்பதால் அவரை எல்லா போட்டிகளிலும் ஆட வேண்டிய தேவையிருந்ததால் அணியின் சேர்க்கையே குழப்பமாகியது. ஆனால் இதே அணியமைப்பை வரும் தொடர்களில் கொண்டு போனால் நிச்சயமாக அடிவாங்குவார்கள். 10-17வது ஓவர்கள் வரை பந்துவீச (ஹர்ஷித் ரானா, அர்ஷதீப் போன்ற) நல்ல வேகவீச்சாளர் நிச்சயமாகத் தேவை.

இங்கிலாந்தைப் பொறுத்தமட்டில் உடலை நோக்கி ஆர்ச்சர், வுட், கார்ஸ் ஆகியோர் பவுன்சர்கள், குறைநீளப் பந்துகளை வீசும் உத்தி என்னை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அதேநேரம் சென்னையிலும் (கூடுதல் பவுன்ஸ்) ராஜ்கோட்டிலும் (ஏற்ற இறக்கமான பவுன்ஸ்) ஆடுதளம் இந்த உத்திக்கு உதவியாக இருந்ததைப் போல கொல்கொத்தா, பூனே, மும்பையில் இருக்கவில்லை. ஒரே பவுன்சர் செயல்திட்டத்தை ஆடுதளத்தின் மாறுதல்களைக் கருத்திற் கொள்ளாமல் அவர்கள் எல்லா மைதானங்களிலும் முயன்று பார்த்தது முட்டாள்தனமானது. உ.தா., கடைசிப் போட்டி நடந்த மும்பையில் ஆடுதளம் சற்று மெத்தனமாக இருந்ததால், இரு பக்க எல்லைக்கோடுகள் 60 மீட்டரே இருந்ததால், வேகமாக அரைக்குழி வீசுவது எடுபடவில்லை. அதற்குப் பதிலாக பந்தைக் குத்தி மட்டையாளரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு குறைநீளத்தில் மெதுப்பந்துகளை அதிகமாக வீசியிருந்தால், குச்சிகளுக்குள் அல்லது காலை நோக்கி பந்துகளை வைத்திருந்தால் இவ்வளவு அதிகமான ரன்களை பவர்பிளேயிலோ பின்போ கொடுத்திருக்க மாட்டார்கள். ஆர்ச்சரும் வுட்டும் ஒரே மாதிரி வேகமாக ஷார்ட்டாக இங்கும் வீசியது சொதப்பலாகியது. சூழலைக் கணித்து சரியாகத் திட்டமிடாமல் வந்ததைப் போலத் தோன்றியது. அதே போல இந்தத் தொடர் முழுக்கவே இடதுகை மட்டையாளர்களுக்கு அவர்களுடைய வேகவீச்சாளர்களுக்கு சரியாக வீச வரவில்லை. வலதுகை மட்டையாளருக்கு உள்ளே வரும் ‘பக்கிள்’ பந்துகள் இடதுகை மட்டையாளருக்கும் அதே போல உள்ளே தலைக்கு வரவில்லை, மாறாக வைடாக சென்றது. அல்லது அவர்கள் ஸ்டம்பைக் காட்டி சுற்றினால் அவர்களைப் பின் தொடர்ந்து பந்தை உள்ளே குறைநீளத்தில் வீசவில்லை. அவர்களிடம் இடதுகை வேகவீச்சாளர் இல்லாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அபிஷேக் ஷர்மாவிடம் இப்படித்தான் சிக்கிக் கொண்டார்கள். அவரால் காலில் விழும் அரைக்குழிப் பந்தை பேக்வெர்ட் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸர் அடிக்க முடியும் என்றாலும் அந்த ஒரு திசையில் மட்டும் அவரை அதிகமாக ஆட வைத்திருந்தால் அவர் தடுமாறியிருப்பார். அபிஷேக்கின் அடிக்கும் அரைவட்டம் கவர், பாயிண்ட், நேரான பவுண்டரிகளே. இங்கிலாந்து வீச்சாளர்கள் அங்குதான் அதிகப் பந்துகளையும் கொடுத்தார்கள். அதேபோலத்தான் துபேயும் திலக்கும் குச்சிகளை விட்டு அடித்தபோது அவர்களால் வீசும் இடமளிக்காமல் முடக்க முடியவில்லை. அதாவது சாம்ஸன், சூர்யா ஆகியோர் விலகி நின்று மட்டையை வீசும்போது அவர்களுடைய தலைக்கோ விலாவுக்கோ வீச முடிந்த அவர்களால் இடதுகையாளர்களுக்கு அதைச் செய்ய இயலவில்லை. இதுவே இத்தொடரின் முடிவை இந்தியாவுக்குச் சார்பாக மாற்றிய மற்றொரு காரணி.

கடைசியாக அவர்கள் சுலபத்தில் வருணின் பந்துவீச்சை அதிக ரிஸ்க் எடுக்காமல் தள்ளிவிட்டு மற்ற வீச்சாளர்களை இலக்காக்கியிருந்தால் இவ்வளவு விக்கெட்டுகளை இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் தப்பித்திருக்கலாம். கடைசி 5 ஓவர்களில் - அர்ஷதீப்பைத் தவிர சரியான கடைசி ஓவர் வேகவீச்சாளர்கள் இல்லாத - இந்தியாவை சாத்தியிருக்கலாம். ஏனோ அதையும் அவர்கள் செய்யவில்லை. அதாவது மேட்ச் அப்பில் சொதப்பினார்கள்.

இந்தியாவுக்கு அதிர்ஷ்டகரமாக ஒரு டி20 தொடர் மடியில் வந்து விழுந்திருக்கிறது! கம்பிருக்கு இது ஒரு தற்காலிக ஆறுதல். சூர்யாவுக்கு மகுடத்தில் மற்றொரு இறகு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...