முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையின் நீட்சியான சினிமா

 



சேரனின் "மாயக்கண்ணாடி" படத்தைப் பற்றி நேற்று நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து தூண்டப்பட்டு உடனடியாக யுடியூபில் பார்த்தேன். ஒரு காலகட்டத்தின் அடிப்படையான பொருளியல், அறவியல் சிக்கல் என்றொன்று இருக்கும் - நடத்தை ஒழுக்கம், விழுமியங்களில் நம்பிக்கை ஆகியன இல்லாமல் போவது, பேராசை மனிதனை ஆட்கொள்வது, பிடிவாதமாக ஒரு உறவில் நிலைப்பதால் தோன்றும் துன்பமும் கடைசியில் அதுவே நம்மைக் காப்பாற்றுவது என. "மாயக்கண்னாடி" இவ்விசயங்களை எடுத்துப் பேசுவதால் மிக முக்கியமான படம்தான். அதை எப்படி இத்தனை நாட்களாகப் பார்க்காமல் இருந்தேனென்று தெரியவில்லை. கிட்டத்தட்ட "மகாநதியின்" இன்னொரு பரிமாணம் என்பதாக இப்படத்தைப் பார்க்கிறேன்.

அந்தப் படம் ஏன் சரியாகப் போகவில்லை எனப் புரிந்தது.

நகைச்சுவைப் படமாக ஆரம்பித்து துன்பியலாகி அப்படியே சமூக விழிப்புணர்வுப் படமாகிறது. இதனால் படம் பார்ப்பது போன்றே இல்லை, ஏதோ ராமாயணம், மகாபாரதம் போல இருக்கிறது. எதாவது ஒரு வகைமைக்குள் படத்தை நிறுத்தியிருக்கலாம்.

நாயகனுக்கு என்று உடனடியான தேவை (immediate want) இல்லை. அது அவனது அம்மா ஆஸ்பத்திரிக்குச் செல்லும்போதே வருகிறது. அப்படியொன்றை ஆரம்பத்திலேயே கொன்டு வந்திருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது துல்லியமான நேரடியான want அல்ல. எதற்கான, எப்போது எனும் கேள்விக்கு அது பதில் அளிப்பதில்லை. இதனால் படத்தின் முதல் 1 மணிநேரமும் இலக்கின்றி அலைகிறது. 'கிரிப்' இல்லை.

இதனாலே படத்தின் முடிவு நன்றாக இருந்தாலும் நாயகன் கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பாடம் தனியாக இருக்கிறது.

ஆனாலும் எனக்கு இந்தப் படத்தின் காதல் காட்சிகள் பிடித்திருந்தன - சுற்றுவதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுவது, பணமில்லாமல் ஷாப்பிங் போவது, போன் வாங்கியதும் இருவரும் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் எனக்கு பல நினைவுகளை மனதில் கொண்டு வந்தன. அதேபோல, சேரன் அணியும் சட்டை, கறுப்புக் கண்ணாடி, முடியை சிலுப்புவது, எதார்த்துக்கு வெளியே நிற்கும் அலட்சிய பாவம், திமிராக இருப்பதான பாவனைக்குப் பின்னால் இருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு எல்லாம் ஒரு சமூகத் தரப்பை அப்படியே கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்தன. நான் என் கல்லூரிக் காலத்தில் இப்படி நிறைய பேர்களைப் பார்த்திருக்கிறேன்.

ஐ.டி வேலைகள், ரியல் எஸ்டேட் நமது பொருளாதார நிலையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தபின்னர், நன்மை, தீமை, அறம் குறித்த கேள்விகளை, நலிந்தவர்களின் கதைகளை, அவதிகளைப் பேசுவதை சினிமாவில் கடந்த இருபதாண்டுகளில் தவிர்த்து வருகிறோம். அதனிடத்தில் போலி சமூக நீதிப் படங்களை எடுத்துக் குவிக்கிறோம் - கொத்தனார் தன் கரண்டியை அவமதித்தவரை சட்டபோராட்டத்தால் முறியடிப்பது, பத்துப்பாத்திரம் தேய்க்கும் பெண் கூகிளில் பொறியியலாளராவது, கோழிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டு கோழிகள் கருகிச் சாக, அவற்றில் ஒன்று தப்பி வந்து சமூகத்தைக் கேள்வி கேட்டு கலகம் செய்வது இப்படி ஏராளமான கதைகள்; யார் மாட்டினாலும் பாதிக்கப்பட்டவராக்கி கண்ணீர் மல்க படமெடுக்கிறோம் - ஆனால் இன்றுதான் "மாயக்கண்ணாடி" வகையான படங்களை இன்னொரு கோணத்தில் நாம் எடுக்க வேண்டும். அவ்வளவு குழப்பங்களும் குற்றங்களும் மலிந்த காலம் இது; இமையத்தின் "வாழ்க வாழ்க" நாவலில் பணத்துக்காக அரசியல் கூட்டத்துக்குப் போவோர் பற்றின பகுதி வரும். இப்படி ஏராளமான சீரழிவுகள் மிகுந்த காலம் இது. சீமான், திருமுருகன் காந்தி, அண்ணாமலை மாதிரியானவர்கள் பிரமாதமான கதைக்கான கச்சாப்பொருள் அல்லவா! நேற்றுதான் இன்போஸிஸிலில் ஒரேயடியாக 500 பேர்களை வேலையை விட்டுத் தூக்கியிருக்கிறார்கள். அவர்கள் எங்கு போவார்கள்? என்ன ஆவார்கள்? திருப்பரங்குன்றம் சர்ச்சையிலேயே செமையான ஒற்றை வரி உள்ளது. நெஞ்சை நக்கும் லட்சியவாதம் இல்லாமல் இதில் ஈடுபடும் மத்திய வர்க்கத்தினருக்கு என்னவாகிறது என்பதே கதை இங்கு - ஏனோ நிகழுலகில் தோன்றும் சிக்கல்களை, நெருக்கடிகளைக் கதையாக்குவதில் இன்றைய இயக்குநர்களுக்கு தயக்கம் உள்ளது. அதனிடத்தில் போலியான சமூக நீதிக்கதைகள், மிகையான வன்முறையைக் கொண்டு நிரப்புகிறார்கள். மனதில் ஒட்டாத நூறு நூறுப் படங்கள்.

ரெண்டாயிரம் வரை தமிழ் சினிமா எதார்த்தத்துக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தது என "மாயக்கண்னாடியைப்" பார்த்தபோது தோன்றியது. அன்று தவறிழைப்பவன், குற்றம் புரிபவன் ஒன்று கொடூரமான வில்லன் அல்லது நாயகனேதான். இன்று அது அரூபமான சமூக அமைப்பு அல்லது யாராலும் அடையாளம் காண முடியாத ஒரு மற்றமை. இந்த மற்றமை நம்மிடம், நமக்குள் இல்லவே இல்லை, ஆனால் இருக்கிறது என குழப்பமாக படத்தை எடுப்பார்கள். நமது சாதி ஒழிப்புப் படங்களில் சமூகத்தை இரண்டாகப் பிளந்து தீமையான ஒரு பகுதியை எங்குமே இல்லை, படம் பார்ப்பவர்கள் எல்லாரும் பாதிக்கப்படுபவர்களே என தோற்றத்தை உண்டு பண்ணுவார்கள். அதாவது மற்றமையை ஒட்டுமொத்த சமூகமும் தனக்கு வெளியே காணும் வகையில் படத்தின் அமைப்பு இருக்கும். இந்த போலித்தனம்தான் இபடங்களின் விசை. முன்பு ஆதிக்கசாதியின் பிரதிந்தியாக ஒரு நாயகன் தோன்றி மாமன் மச்சானுடன் பங்காளிச் சண்டையிடுவான். சரி, தவறு எல்லாமே ஒரே இடத்தில்தான். அதில் ஒரு களங்கமின்மை இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் நாயகன் பாதிக்கப்படுபவனாக, அப்பாவியாகவும், களங்கமற்றவனாகவும் இருப்பதால், அவனுக்கு எதிர்த்தரப்பாக உள்ளோரும் அவ்வாறே கல்மனம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். நாயகனிடம் சிறிது குற்றமோ வில்லனிடம் சிறிது நன்மையோ இருப்பதில்லை (பா. ரஞ்சத்தின் "அட்டக்கத்தி" மட்டுமே விதிவிலக்கு). பார்வையாளர்களால் கறுப்பு வெள்ளையாக உள்ள இந்த இரு தரப்பிடமும் தம்மை உணர முடியாது. ஆகையால் அவர்கள் தாமே பாதிக்கப்பட்டோர் என நம்ப ஆரம்பித்து தம்மையே ஏமாற்றி படத்தின் நோக்கத்தையும் அவமதிக்கிறார்கள். இந்த 'அவமதிப்பே' இன்று சினிமாவின் வெற்றியாகிறது. "மாயக்கண்ணாடியில்" நாயகன் குமார் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என உணர்த்தி விடுகிறார்கள். ஆனால் அதை இயக்குநர் அரசியலாக்கி லாபம் தேடுவதில்லை. அவன் தொடர்ந்து தோற்கும்போது இதற்கு "இச்சமூகம் தான் இதற்குக் காரணம்" என்று சாடுவதில்லை (படத்தின் வில்லனான கடத்தற்காரன் தான் அப்படிப் பேசுகிறான்). அவனே அவன் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம். நாயகன் தன் பிரச்சினைகளுக்கு புறச்சமூகத்தைக் காரணமாக்கும்போது கதைக்குள் இருந்து நம் வெளியே வந்து பிரச்சாரத்துக்குள் நுழைகிறோம். இதுவே இன்றைய சமூக விமர்சனப் படங்களின் முக்கிய பிரச்சினை. அதில் நாயகனிடமோ கதைசொல்லியிடமோ நேர்மையில்லை. தப்பித்தல்வாதமும் சுரண்டல் மனப்பான்மையுமே இருக்கிறது.
இன்றைய சமூக சினிமா போலி டாஸ்மாக சரக்கு போல, போலி சாமியார் போல, போலி தமிழ் தேசியம் போல ஆகிவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.