முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிடிக்காதவற்றை விட்டு விடுங்கள்

இலக்கிய விமர்சனம் செய்வதில் எனக்கொரு கொள்கை உண்டு - பிடிக்காத நாவல்களைப் படிக்கக் கூடாது. கடிந்து எதிர்வினையாற்றக் கூடாது. தேறுமா என்பது முதல் பத்து பக்கங்களிலே தெரிந்து போகும். அப்படியே எடுத்து வைத்துவிடலாம். அதையும் மீறி இன்னொரு ஐம்பது பக்கங்கள் முயன்று பார்ப்போம் எனத் தோன்றினாலும் அதற்கு மேல் போகக்கூடாது. உலகில் நாம் வாசிப்பதற்கு கோடிக்கணக்கான நல்ல நூல்களும் ஆயிரக்கணக்கான சிறந்த நூல்களும் உள்ளபோது நீங்கள் இப்படித் தவிர்த்தாலும் கூட நட்டமில்லை. அப்படியே பிடிக்காத நூலை கடைசி வரை தம் கட்டிப் படித்தாலும் கடுங்கோபத்தில் எழுத்தாளரை ரத்தவெறியோடு தாக்கக்கூடாது. யாரும் மோசமான படைப்பை வேண்டுமென்றே எழுதுவதில்லை. சில நேரங்களில் அப்படி நிகழ்ந்துவிடும். எதிர்பார்த்தது எழுத்தில் அமைந்து வராது. சிலநேரங்களில் விளையாட்டுத்தனமாக துணிச்சலாக கவித்துவமாக எழுதுகிறோம் என கதையை கோட்டை விடுவோம். மொழி வன்மை இல்லாதவர்களுடைய எழுத்தில் வாக்கியப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருக்கும். சரியாக திருத்தாதபோது லாஜிக் மீறல்கள் வரும். ஒன்று அந்த எழுத்தாளருக்கு நாவலைச் செப்பனிட நேரமிருக்காது. அல்லது அனுபவமோ அறிவோ இருக்காது (வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார்.) பலரும் ஏதோ குண்டு வெடிப்பின் நடுவே காதலிக்கு முத்தம் கொடுப்பதைப் போலத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நேரமில்லை, வசதியில்லை, சிலருக்கு அமர்ந்து நிம்மதியாக எழுத இடம் கூட இல்லை. ஆயிரம் பிரச்சினைகள், அவதிகள் நடுவே ஒன்றை எழுதி பிரசுரிப்பார்கள். இவர்களில் 99.99% பேர்கள் முழுநேர எழுத்தாளர்கள் அல்ல. ஆகையால் இவர்கள் (இதில் நானும் அடக்கம்) தவறிழைத்தால் மன்னித்து விட்டுவிட வேண்டும். பிரமாதமாக வந்தால் பாராட்டிக் கொண்டாட வேண்டும்.
என்னுடைய அண்மை நாவலான நிழல் பொம்மையை (400 பக்கங்கள்) நான் இருபது நாட்களுக்குள் எழுதினேன் (சரியாகச் சொன்னால் 18 நாட்கள்.) காலையில் உட்கார்ந்தால் நள்ளிரவு மூன்று மணிவரை எழுதுவேன். ஏனென்றால் அந்த சிறு விடுமுறைக் காலம் முடிந்தால் நாவலில் கைவைக்கவே நேரமிருக்காது என்று அறிந்திருந்தேன். விடுமுறையில் வரும் ஜெயில் கைதி சில நாட்களுக்குள் தன் வெளியுலகை அனுபவித்துத் தீர்த்துவிட முயல்வதைப் போல. ஆனால் அத்துடன் நிற்கவில்லை. அதை மூன்று முறை திருத்தினேன். அதற்கு பல இரவுகள் தூங்காமல் இருக்க வேண்டி வந்தது. நான் அதைச் செய்வேன் - நான் அடிப்படையில் எழுத்தைப் பொறுத்தமட்டில் ஒரு கிறுக்கன். நான் எதையும் விட்டுக்கொடுப்பேன். ஆனால் கடந்த சில மாதங்களாக என் வேலை இரவு 12 மணிவரை நீள்வதால் இப்போது அந்த நாவலைத் திருத்தும் வேலை வந்திருந்தால் அதைச் செய்திருக்க மாட்டேன். அதாவது இரவெல்லாம் முழித்திருக்கத் தயாராக இருந்தாலும் முடியாத நிலை. என்னைப் போல பல படைப்பாளிகள் இருப்பார்கள். நாங்கள் அரசு வேலையை 9-5 செய்துவிட்டு குடையை கக்கத்தில் இடுக்கி சமாதானமாக வீட்டுக்கு வந்து சாய்வு நாற்காலியில் படுத்து எழுதும் அவகாசமும் சொகுசும் இல்லாதவர்கள். அது நேரம் நிறைய இருந்த 80களின் பொற்காலம். இன்று புத்துலகில் எல்லாரும் கார்ப்பரேட் அடிமைகள்தாம். இவ்வளவு உழைத்தும் கூட நாளை நிர்கதியாகி விடுவோமோ என அஞ்சுகிறவர்கள். எங்களால் இவ்வளவுதான் எழுத முடியும். எங்களுக்கு இச்சமூகம் திரும்ப பணமாகத் தருவதில்லை. மற்ற மொழிகளில் நடப்பதைப் போல எழுதுவதற்கான நிதிநல்கைகள் கூட தமிழில் இல்லை. பதிப்பகங்களுக்கு லாபம் குறைவதால் அவர்கள் பிரதியை செம்மையாக்கம் செய்யும் ஆசிரியர்களையோ பிழைத்திருத்துநர்களையோ வேலைக்கு இருத்துவதில்லை. அப்படியே எழுத்துப் படியை லே அவுட் பண்ணி பிரசுரித்து விடுகிறார்கள். எழுத்தாளர்தான் பிழைதிருத்துநராகவும் செம்மையாக்குபவராகவும் இருக்க வேண்டும். என்னுடைய நாவலை நா. முருகேச பாண்டியன் அச்சுப்பிரதியில் சில ஆயிரம் எழுத்து, ஒற்றுப்பிழைகள் திருத்தி அனுப்பித் தந்தார். அத்திருத்தங்களை மென்பிரதியில் உள்ளிடவே எனக்கு சில வாரங்கள் ஆயிற்று. அடுத்து நான் சில முறைகள் படித்து மேலும் சில ஆயிரம் பிழைகளை நுணுகிப் பிடித்து திருத்தினேன். இதெல்லாம் முதுகொடிக்கிற வேலை.
இந்த உண்மையை நன்கு தெரிந்ததால்தான் நான் எவ்வளவு மோசமாக எழுதப்பட்ட நாவலையும் படித்து கொலைத்தாண்டவம் ஆடுவதில்லை. எழுதுவதே சாதனையாகும்போது நன்றாக எழுதுவது கொடுப்பினை அவ்வளவுதான். நாம் ஒரு சமூகமாக நாவலாசிரியர்களைப் பொருட்படுத்தி ஆதரிக்க வேண்டும். வாசகர்கள் சங்கமொன்றை உருவாக்கி பணம் திரட்டி ஒரு நூலாக்கத்துக்கு கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் தரமான நாவலையும் எதிர்பார்க்கலாம். நான் 300-400 ரூ கொடுத்தேன், எனக்கு ஏன் இவ்வளவு சுமாரான படைப்பைக் கொடுத்தீர்கள் என்று கேட்பது நியாயமல்ல. ஏனென்றால் அப்படி வாங்கியவர்களே சிலர்தான், பலர் அல்ல. வார இறுதி நாட்களில் ஒரு இலக்கிய கூட்டத்துக்குப் போகவே அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவர் தன் ஓய்வு நேரத்தை முழுக்க அள்ளிக்கொடுத்து பெரிய நூலொன்றை எழுதுகிறார். அதைச் சாடுவது நியாயமல்ல. இது திறமையோ, அக்கறையோ சம்மந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இந்த சூழல் சம்மந்தப்பட்டது. பணமும் நேரமும் உள்ள வாசகர்கள் இணைந்து அறக்கட்டளைகள் உருவாக்கினால் மட்டுமே இச்சூழலை மாற்ற முடியும். அதை கேரளாவில் செய்கிறார்கள். அறக்கட்டளைகளும் ஊடகங்களும் முதலாளிகளுமாக இணைந்து பல்வேறு விருதிகளை அறிவிக்கிறார்கள், வருடம் முழுக்க விழாக்களை நடத்துகிறார்கள். இங்கே நாம் ஈரோடு மகேஷ்களை மட்டும் ஊக்கப்படுத்துகிறோம். இதற்கிடையில் நாம் அதிக ஜி.எஸ்.டி நிதியை ஒன்றியத்துக்கு கட்டுகிறோம் எனப் பீற்றிக்கொள்ளவும் செய்கிறோம். (மேய்ப்பது எருமை, அதிலென்ன பெருமை?) இலக்கியத்தையோ கலையையோ மதிக்காமல் பணம், சொத்து, கேளிக்கை என வாழும் சமூகம் முன்னேறிய சமூகம் அல்ல, காட்டுமிராண்டி சமூகம். ஒழிய வேண்டிய சமூகம். சரி. அதை விடுங்கள்.
நீங்கள் இந்த எழுத்தாளர்களை இயக்குநர்களுடன் ஒப்பிடுங்கள். ஒரு சிறிய கதை வரியை திரைக்கதையாக உருவாக்க அவர்களுக்கு தனி அணி உள்ளது. விவாதிக்க ஆட்கள் இருக்கிறார்கள். என்னிடம் எத்தனையோ முதல் படமெடுக்கப் போகும் இயக்குநர்கள் தம் கதையைக் குறிப்பிட்டு கருத்துக் கேட்கிறார்கள். நான் சாவகாசமாக வழிகாட்டுகிறேன். அப்போது எனக்கு எழும் கேள்வி ஏன் இதை அறிமுக நாவலாசிரியர்கள் செய்வதில்லை என்பது. ஏனென்றால் உதவி கேட்கும் பண்பாடே எழுத்தாளர்களுக்கு இல்லை. கேட்டால் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறோம். அல்லது ஈகோ தடுக்கிறது. அல்லது குழப்பி விடுவார்கள் என அஞ்சுகிறோம். சினிமாவுக்கு உள்ள மவுசு காரணமாகவும் அணியாக இயங்குவதில் உள்ள பயிற்சி காரணமாகவும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் கேட்கிறார்கள். தயாரிப்பாளர் கிடைத்தால் அவர்களுக்கு எல்லா விசயங்களிலும் உதவுவதற்கு நிபுணர்கள் வருவார்கள். அவர்கள் இவர்களை திறம்பட ஒருங்கிணைத்தால் போதும். எல்லாருக்கும் சன்மானமும் உண்டு. ஒரு மோசமான படத்திற்குப் பின்னால் கூட இவ்வளவு பெரும் மனித ஆற்றல் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு நாவலாசிரியர் நாவலின் ஒற்றை வரி, கதாபாத்திர உலகம், கட்டமைப்பு ஆகியவற்றை திட்டமிடுவது, எழுதுவது, திருத்துவது என எல்லா வேலைகளையும் தன்னந்தனியாக செய்ய வேண்டும். அடித்தளம் இட்டு, செங்கல் வைத்து சுவரெழுப்பி வெள்ளையடித்து பால் காய்ச்சுவது வரை அவரே செய்கிறார். அதனால்தான் சினிமாவை விமர்சிக்கிற பாங்கில் நாவலை விமர்சிக்கக் கூடாது.
இலக்கிய ஆகிருதி, மிகை மதிப்பீடு என நான் நினைப்பதெல்லாம் மிகச்சிறிய வட்டத்துக்குள் நடப்பவையே. நெருங்கிப் போய் பார்த்தால் சம்மந்தப்பட்டவர் மிகவும் பலவீனர்களாக இருப்பார்கள். வருத்தம், போதாமை, மன அழுத்தம், தன்னிரக்கத்தின் முடிச்சே பாராட்டப்படும் எழுத்தாளர்கள் எனும்போது சொற்ப கவனம் பெறுவோர் எப்படி இருப்பர்? அவர்களைப் புண்படுத்தலாமா? பாராட்டாவிட்டால் பரவாயில்லை, திட்டாமல் இருக்கலாம்.
குறிப்பு: இதை நான் எனக்காக எழுதவில்லை. கடந்த சில ஆண்டுகளாக காணும் சில நாவலாசிரியர்களுக்கு வரும் கடும் விமர்சனங்களைப் பார்த்து எழுதுகிறேன். விமர்சிக்கையில் கொஞ்சம் கருணையும் குற்றவுணர்வும் வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...